செத்தால் தான் திரும்பி பார்ப்பார்களா ஆட்சியாளர்கள்?

-சாவித்திரி கண்ணன்

ஏழு நாட்களாக வெயில், மழை பாராமலும், இரவு பகல் பாராமலும் இடை நிலை ஆசிரியர்கள் போராட்டம் நடக்கிறது. இதுவரை 130 க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்துள்ளனர். பிரச்சினை என்ன என்பதைக் கூட புரிந்து கொள்ளக் கூட முன் வராத கல்வி அமைச்சரையும், முதலமைச்சரையும் பெற்றுள்ளோமா.. ?

‘ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி’ என்ற சொலவடை உண்டு. அதை இன்றைய நிலைமைக்கு ஏற்ப சொல்ல வேண்டுமானால், ‘ஊருக்கு இளைத்தவன் அரசு பள்ளி அசிரியர்’ என்று தான் சொல்ல வேண்டும். எல்லா அரசு திட்டங்களுக்கும் புள்ளி விபரம் சேகரிப்பது தொடங்கி, கற்றலுக்கு தொடர்பில்லாத அரசாங்க செயல்பாடுகள் எல்லாவற்றையும் ஆசிரியர்கள் தலையில் தான் கட்டுகிறார்கள்! ஆனால், வாழத் தகுதியில்லாத ஊதியம்! வாட்டி எடுக்கும் அரசின் நடவடிக்கைகள்! கேட்க நாதியில்லாத நிலை.. என்ற சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது, ஆசிரியர் சமூகம்.

‘சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினரும்,

பணி நிரந்தரம் செய்ய கோரி பகுதிநேர மற்றும் ஒருங்கிணைந்த சிறப்பு ஆசிரியர்கள் சங்கத்தினரும்,

‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் போட்டி தேர்வு நடத்த கூடாது என வலியுறுத்தி, தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் சங்கத்தினரும்,

மூன்று முப்பெரும் பிரிவுகளாகப் போராடி வருகின்றனர்.

ஆணும், பெண்ணும், குழந்தைகளுமாக தங்களின் குடும்பத்தினருடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர் ஆசிரியர்கள். பல ஆசிரியர்களுக்கு சக்கரை வியாதி உள்ளது, ரத்த கொதிப்பு உள்ளது, ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ளன.சில பேர் அறுவை சிகிச்சை செய்தவர்களாக உள்ளனர். போராட்டம் நடக்கும் இடத்தில் அடிப்படை வசதிகள் கூட நிறைவாக இல்லை. கொசுத் தொல்லைகள், இரவில் மழை வந்தால், உட்காரவோ,படுக்கவோ முடியாமல் நிற்கும் அவலம்..! என பல சோதனைகளை, வேதனைகளை அனுபவித்த வண்ணம் தலை நகராம் சென்னையில் நடக்கும் இந்தப் போராட்டத்தை எட்டிப் பார்க்க கூட நேரமற்றவர்களாக முதல்வரும் கல்வி  அமைச்சரும் உள்ளனர்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ல் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு தரப்புக்கு அடிப்படை ஊதியம் 8,370 என நிர்ணயிக்கப்பட்டது. மற்றொரு பிரிவினருக்கோ 5,200 என நிர்ணயிக்கப்பட்டது. ஒரு நாள் வித்தியாசத்தில் வேலை நியமனம் பெற்றதில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இருதரப்பிலும் ஒரே கல்வித் தகுதி, ஒரே வேலை, பக்கத்து, பக்கத்து வகுப்பறைகளில் வேலை பார்க்கும் நிலை என இருக்கும் போது ஏன் இந்தப் பாகுபாடு?

இப்படி ஒரு முட்டாள்தனமான அணுகுமுறை வேறு எந்த மாநிலத்திலேனும் உண்டா? சமூக நீதி பேசும் அரசுக்கு இந்த சமச் சீரற்ற ஊதிய முரண்பாடு புரியவில்லையா? இந்த முரண்பாட்டை சுட்டிக் காட்டிய பிறகேனும், களைந்திருக்கலாம். ஆனால், சுமார் 14 ஆண்டுகால நீண்ட நெடிய போராட்டங்கள் நடத்தியும், நீதி கிடைத்தபாடில்லை. இதனால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தனைக்கும் தேர்தல் வாக்குறுதியாக, ”இந்த முரண்பாட்டை ஆட்சி பொறுப்பேற்றதும் களைவோம்” என்றது திமுக. மேலும் அதிமுக அட்சியில் இது போன்ற போராட்டம் நடத்திய போது அன்று ஓடோடி வந்து ஆசிரியர்களிடையே நின்று ஆறுதல் கூறி, ”உங்களுக்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் நியாயம் கிடைக்கும்” எனச் சொல்லி, தேர்தல் வாக்குறுதியாகவும் வெளியிட்டு 30,000 இடை நிலை ஆசிரியர் குடும்பங்களின் ஓட்டுகளை அறுவடை செய்தவர் தான் இன்றைய முதல்வர் ஸ்டாலின். இதனால், இந்த அப்பாவி ஆசிரியர்கள் திமுக வெற்றி பெறவும் வாக்கு சேகரித்தனர்.

ஆனால், ஆட்சி பொறுப்பேற்று இரண்டரை ஆண்டுகளாக முதலமைச்சரை சந்திக்கப் பல முறை முயன்றும் ஆசிரியர் சங்க தலைவர்களால் சந்திக்க முடியவில்லை. சென்ற ஆண்டு டிசம்பர் மாதமும் இதே போல ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதம் நடத்தி தங்களை வருத்திக் கொண்டனர். அப்போது சுமார் 300 ஆசிரியர்கள் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அதைத் தொடர்ந்து அதிகாரிகள் அழைத்து பேசினார்கள்.

முதலமைச்சரோ இந்த பிரச்சினையை தீர்க்க  மூன்று நபர் குழு ஒன்றை அமைத்து மூன்று மாதத்தில் அறிக்கை தரச் சொல்லி அக்கறை காட்டுவது போல பாவனை செய்தார். அப்பாவி ஆசிரியர்களும் அதை நம்பி மனம் குளிர்ந்து போராட்டத்தை வாபஸ் பெற்று வீடு திருப்பினர். இதோ 10 மாதங்கள் ஆயிற்று! எந்த முன்னேற்றமும் இல்லை. பிரச்சினையை தள்ளிப் போடவும், சூட்டைத் தணித்து ஆறவிடவும் ஆட்சியாளர்கள் செய்த தந்திரம் தான் இந்த குழுவை ஏற்படுத்தி ஆலோசனை கேட்பது எல்லாம்!

இது ரொம்ப எளிதான பிரச்சினை! மூன்று மாதங்கள் வரை இதில் ஆய்வு செய்ய ஒன்றுமில்லை. இதை விளக்க வேண்டுமானால், பசியோடு வந்த இரு நபர்களுக்கு இலைபோட்டு ஒரு இலையில் மூன்று இட்லியும், மற்றொரு இலையில் இரண்டு இட்லியும் வைக்கப்படுகிறது.

”ஐயா, இந்த பாகுபாட்டைக் களையுங்கள்” என்று கேட்டால்,

”ஓ! அப்படியா உங்க பிரச்சினை என்ன என்பதை கேட்டறிய குழு போட்டுள்ளேன். அறிக்கை வரட்டும் சொல்கிறேன்…”

என தள்ளிப் போட்டுக் கொண்டே சென்றால்.. என்ன பொருள்?

பரிதாபத்துக்குரிய பகுதி நேர ஆசிரியர்கள்;

ஓவியம், இசை, கைவினைப் பொருட்கள், விளையாட்டு, தையல், வாழ்க்கை கல்வி என கிரியேடிவ்வான கலைகளை கற்றுத் தரும் ஆசிரியர்களை பல ஆண்டுகளாக பகுதி நேர ஆசிரியர்கள் என்ற பெயரில் வெறும் 10,000 ரூபாய் சம்பளத்திற்கு வைத்துள்ளது அரசு. இந்த ஆசிரியர்களின் சம்பளம் என்பது ஒரு துப்புறவு தொழிலாளியின் சம்பளத்தை விடவும் குறைவானதாக உள்ளது. இப்போதெல்லாம் கட்டிடப் பணிகள் செய்யும் உடலுழைப்பு தொழிலாளிகள் கூட ஒரு நாள் கூலியாக ஆயிரம் முதல் இரண்டாயிரம் வரை பெறுகின்றனர்.

இந்த நிலையில் மாணவர்களுக்கு கலைகளை போதிக்கும் ஆசிரியர்களை வறுமைக் கோட்டில் வைத்துள்ளது அரசு. முதலில் இந்தப் பணியை ஏன் பகுதி நேரம் என சுருக்குகிறீர்கள்? முழு நேரமாக்கி, கவுரவமாக இருபதோ, இருபத்தி ஐயாயிரமோ தந்தால் தான் இன்றைக்கு குறைந்தபட்ச கவுரவத்துடனாவது வாழமுடியும்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசங்கள் என்பதாக ஒன்றையடுத்து ஒன்றாக வருடா வருடம் யோசித்து சுமார் 14 வகை பொருட்களை தருகிறது அரசு! தற்போது காலை உணவு திட்டமும் சேர்ந்துள்ளது. இதில் நடக்கும் ஊழல் முறைகேடுகளில் கிடைக்கும் பணமும், ஓட்டு பொறுக்கும் நோக்கமும்  தான் இலவச திட்டங்களின் பின்னுள்ள அரசியல் நோக்கங்களாகும். இது போன்று அரசு நிதியை அள்ளிவீசி, மக்களை கையேந்துபவர்களாகவே தொடர்ந்து வைக்க நினைக்கும் அரசுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை வழங்க வேண்டும் என்ற அடிப்படை அறம் புரியுமா என்ன?

எப்படியும் காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் போது, இந்த ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்லத் தானே வேண்டும்…! அது வரை போராடிப் போராடி அலுத்துப் போகட்டுமே என நினைக்கிறதோ, என்னவோ அரசு! இப்படி ஒரு போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது… என்ற பிரக்ஜை கூட இல்லாதவர்களாக முதல் அமைச்சரும், கல்வி அமைச்சரும் நடமாடிக் கொண்டுள்ளனர். ஏதேனும் விபரீதம் நிகழ்ந்து ஒன்றிரண்டு உயிர்கள் போராட்ட களத்தில் பலியானால் தான் ஆட்சியாளர்கள் திரும்பி பார்ப்பார்களா என்ன?

அற வழிப் போராட்டத்தை அலட்சியப்படுத்துவது ஆணவத்தின் உச்சமாகும். கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் வயிறெரிந்து கொடுக்கும் சாபம் ஆட்சியாளர்களையும், அவர்களது குடும்பத்தையும் சும்மாவிடுமா?

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time