”சனாதனம் என் கொள்கை. அதற்காக பதவி விலகவும் தயார்” என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியுள்ள நிலையில், பெருந்தலைவர் காமராஜருக்கு கோவில்கள், நாத்திகம், கடவுள், வேண்டுதல்கள், புராணம், இதிகாசம், மதப் பண்டிகைகள்..ஆகியவை பற்றி எல்லாம் என்ன மதிப்பீடுகள் இருந்தன என்பதற்கு இதோ ஆதாரங்கள்;
தலைவர் காமராஜரோடு நெருங்கி பழகியவர் சீர்காழி பெ.எத்திராஜ். ஒரு நெடிய பயணத்தில் அவர் காமராஜரோடு அருகிருந்து பார்த்தும், கேள்விகள் கேட்டும் பெற்ற விளக்கங்கள் இங்கே தரப்படுகிறது;
தலைவர் காமராஜர் தஞ்சை மாவட்ட சுற்றுப்பயணத்தில் வந்தபோது ஒருபழம்பெருமை வாய்ந்த பாழடைந்த கோயிலை பார்த்தார். அது சிதிலமடைந்து கிடந்தது. சுற்றுபுற மதில்கள் உடைந்த நிலையில் பிரகாரம் திறந்து கிடந்தது. கோவில் குருக்கள் எப்போதாவது வந்து பூஜை செய்து, மணி அடிப்பார்.
சற்று எதிர்பராமல் தலைவர் கோவிலுக்கு சென்றுவிட்டார். நாங்களும் அவருடன் சென்றுவிட்டோம். தலைவர் கோவிலில் உள்ள கல்வெட்டுகளை எல்லாம் பார்த்தார். புதராக மண்டிக் கிடந்த சாசனங்கள் எல்லாம் துடைத்துவிட்டு பார்த்தார். பலிபீடம், கொடிமரம், நந்தி இவைகளையெல்லாம் உற்று கவனித்தார். அவரது ஒவ்வொரு செய்கையையும் நாங்கள் வியப்பாக பாரத்தோம்
எனக்கு தலைவரை பற்றி நன்றாக தெரியும் தலைவர் கோவில்களில் கொடுக்கும் பிரசாதங்களை வாங்கிக் கொள்வார். விபூதி பூசிவிட்டால் மறுக்க மாட்டார். பரிவட்டமும் கட்டிக் கொள்வார். தீபாரதனை தொட்டுக் கொள்வார். கோவிலை விட்டு வெளியில் வந்தவுடன் பழம், தேங்காய்முடி, பூ மாலைகளை பக்கத்தில் இருப்பவர்களிடம் கொடுத்து விடுவார். கேட்டால், கோவில்களில் செய்யும் மரியாதையை வாங்கிக்கணும் அதுதான் மனிச நாகரிகம். குருக்கள், அறங்காவலர், ஊர்சனங்கள், மனசு புண்படக் கூடாது இல்லையா….” என்பார்.
அப்போது அந்த கோவிலின் குருக்களும் அறங்காவலரும் வந்துவிட்டனர். பிரகாரத்தை சுற்றி வந்த தலைவர் குருக்களை பார்த்து, ”இந்த கோவிலை கட்டி எவ்வளவு காலமாச்சு?” என்றார்.
குருக்களும், நிர்வாகிகளும் பதில்இல்லாமல் விழித்தனர்.
”ஏன்ய்யா குருக்கள் நீங்க எவ்வளவு காலமா இந்த கோவில்ல பூஜை செய்றீங்க..இந்தக் கோவில பத்தின தல வரலாறே உங்களுக்கு தெரியாதா?” என்றார்.
குருக்கள், கோவில் நிர்வாகிகள் எல்லோரும் ஆடிப் போனார்கள்..!
தலைவரே அவர்களுக்கு சொன்னார்; இந்தக் கோவிலைக் கட்டி எண்ணூத்து எழுவது வருஷத்துக்கு மேலாகுது. சோழ மதேவி இறையிலியா கொடுத்த நிலங்கள் தான் இந்தக் கோவிலும் சுற்றி உள்ள நிலங்களும், இந்த ஊருமே! இதிலே இருந்து வருகிற வருமானத்துல தான் சாமிக்கு பூஜை,புனஸ்காரமெல்லாம் பண்ண வேண்டும். குத்தகைதாரர் அளக்கிற பகுதி நெல்ல வாங்கித் தான் சாமியாரடியார்களுக்கும், தேவரடியார்களுக்கும், பூக்குடலை தூக்குகிறவர்களுக்கும் சம்பளம் போடனும். சாமி நிலத்தை விவசாயம் பண்ணி சாப்பிட்டுகிட்டு இருக்கிறவங்க சரியா கோவிலுக்கு தருவதில்லை போலும். அதனால தான் சாமி இருட்டில கிடக்குதுன்னேன்…’’ என்று காமராஜர் பேசப் பேச அத்தனை பேரும் அதிர்ந்து நின்றபடி கேட்டனர்.
இதற்குள் குருக்கள்மார் சிலர் வந்து,” பிரசாதம்,பொங்கள், வடை எல்லாம் தயாரா இருக்கு”ன்னாங்க..
உடனே தலைவர், ”சாமியை இருட்டில போட்டுட்டு, ஆசாமியெல்லாம் சாப்பிட்டு கிட்டு இருக்கீங்க.. பொங்கல், வடை எல்லாம் ஏழை ஜனங்களை கூப்பிட்டுக் கொடுங்க…” என அறிவுறுத்திவிட்டு வெளியே வந்தார்.
அடுத்த ஊர் போவதற்காக தலைவர் காரில் ஏறவும், நானும் அவரோடு சேர்ந்து கொண்டேன். கடவுள் நம்பிக்கை, மதம், இதிகாசங்கள், புராணங்கள், சாதி ஏற்றத் தாழ்வுகள் ஆகியவை குறித்து அவர் என்ன நினைக்கிறார் என அறிய வேண்டும் என்ற என்னுடைய நெடு நாளைய ஆசையை அன்று நிறைவேற்றிக் கொள்ள கேள்விகளை அடுக்கினேன்.
கடவுள் இருக்கார்னு உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?
இருக்கு, இல்லை என்பதைப் பற்றி எனக்கு எந்தக் கவலையும் கிடையாதுன்னேன். நாம செய்யறது நல்ல காரியமா இருந்தா போதும். பக்தனா இருக்கிறதை விட யோக்கியனா இருக்கணும். அயோக்கியத்தனம் ஆயிரம் பண்ணிட்டு கோவிலுக்கு கும்பாபிஷேகம் பண்ணிட்டா சரியா போயிடுமா?’’
கடவுள் விஷயத்துல உங்க கொள்கையும், நேரு கொள்கையும் ஒண்ணாயிருக்கும் போல இருக்கே?
‘அக்னாடிஸ்டு’ன்னு ( agnostism- அஞ்ஞானவாதம்) சொல்றியா? நேரு ரெண்ட பத்தியும் கவலைப்படாதவர் தான். ஆனா.. மனிதனை முன்னேற்றணும், சமூகம் வளரும்ணுகிறதில அவரு கவனமா இருந்தார். அதுக்கு மதமோ, கடவுளோ தடையாக இருந்தால், அதை தூக்கி குப்பையில போடணும்கிற அளவுக்கு அவர் தீவிரவாதி. சாதாரண மனிதனை கைதூக்கிவிடணும் தானே எல்லா மதமும் சொல்கிறது. சமுதாயத்துல பேதம் போகணும், ஏற்றத் தாழ்வு போகணும் தானே மகான்களும் சொல்றாங்க. ஆனா, இன்னைக்கு நம்ம மதங்கள் அதைப் பற்றி கவலைப்படுதான்னேன்…?
ஆண்டவன் என்று ஒருத்தரு இருந்திருந்தா இந்த அயோக்கியதனத்தை எல்லாம் ஒழிச்சிருப்பாரே..? தன்னோட எல்லா பிள்ளைகளையும், மேல் சாதி, கீழ் சாதின்னு படைத்திருக்க மாட்டாரே..?
”மேல்சாதி, கீழ் சாதி என்பதெல்லாம் இடையில வந்த திருட்டு பயக பண்ணியதுன்னேன்! சுரண்டித் திங்கிறதுக்காக சோம்பேறி பசங்க செய்த ஏற்பாடுன்னேன்! எல்லோரும் அம்மா வவுத்துல பத்து மாதம் இருந்து தானே பிறக்கிறான். அதுல என்ன பிராமணன், சூத்திரன்? ரொம்ப அயோக்கியத்தனம்” என்றார் காமராஜர்.
நீங்க ஏன் உங்களை நாத்திகவாதியாக சொல்லிக் கொள்ளவில்லை?
நான் ஒரு சமுதாயத் தொண்டன். நாத்திகவாதி, ஆத்திகவாதி எல்லோருக்கும் சேவை செய்கிறவன். எனக்கு எதிரே வருபவனை மனுஷன்னு தான் பாக்கிறேனே தவிர, அவனை பிராமணன், சூத்திரன்னு பார்ப்பதில்லை. அப்படி எவனும் என்கிட்ட பேசிட்டு வரவும் முடியாது. நான் பொதுவானவன். ஒரு கோவிலை நிருவாகம் பண்ண நிதி கொடுக்க வேண்டியது ஆட்சியாளருடைய கடமை. அந்தக் கோவிலிலே ஆறு கால பூசை நடக்குதா? விளக்கு எரியுதா..? என பார்க்க வேண்டியது ‘கவர்னன்ஸ்’ செய்யறவங்களோட கடமை. தனிப்பட்ட முறையில நான் கோவில், பூசை, புனஸ்காரம்னு அலையுறதில்லை. மனிதனோட அன்றாடக் கடமைகள் தான் முக்கியம்னு நெனைக்கிறவன் நான். அபிஷேகம் பண்ணுவதற்காக கொடம்,கொடமாக பாலை வாங்கி வீணாக்குவதைவிட, பசியில துடிக்கிற ஏழை குழந்தைகளுக்கு தரணும்னு நினைக்கிறவன் நான்..’’ என்றார்.
அப்படியானா…. நீங்க பல தெய்வ வழிபாட்ட வெறுக்கிறீங்களா…. இல்லே, தெய்வ வழிபாட்டையே வெறுக்கிறீங்களா….?”
“லட்சுமி, சரஸ்வதி, பார்வதி, முருகன், விநாயகர், பராசக்திங்கிறதெல்லாம் யாரோ ஓவியர்கள் வரைஞ்சி வச்ச சித்திரங்கள். அதையெல்லாம் ஆண்டவன்னு நம்மாளு கும்பிட ஆரம்பிச்சிட்டான். சுடலைமாடன், காத்தவராயன்கிற பேர்ல அந்த வட்டாரத்துல யாராவது பிரபலமான ஆசாமி இருந்திருப்பான். அவன் செத்தும் கடவுளாக்கிட்டான் நம்மாளு. கடவுள்ங்கிறவரு கண்ண உருட்டிகிட்டு, நாக்கை நீட்டிகிட்டு தான் இருப்பாரா…? “அரேபியாவிலே இருக்கிறவன் ‘அல்லா’ன்னான். ஜெருசலத்தல இருக்கிறவன் ‘கர்த்தர்’னான் அதிலேயும் சில பேரு மேரியக் கும்பிடாதேன்னான். கிறிஸ்தவ மதத்திலேயே ஏழு, எட்டு ‘டெனாமினே ஷன்’ உண்டாக்கிட்டான். மத்திய ஆசியாவிலிருந்து வந்தவன், அக்கினி பகவான், ருத்ரன், வாயு பக வான்னு நூறு சாமியச் சொன்னான். நம்ம நாட்டு பூர்வீகக் குடி மக்களான திராவிடர்கள், காத்தவ ராயன், கழுவடையான், முனியன், வீரன்னு கும்பிட்டான். எந்தக் கடவுள் வந்து இவன்கிட்டே ‘என் பேரு இது தான்னு சொன்னான்….? அவனவனும் அவனவன் இஷ்டத் துக்கு ஒரு சாமிய உருவாக்கினான். ஒவ்வொரு வட்டாரத்துல உருவான ஒவ்வொரு மகானும் ஒரு கடவுள உண்டாக்கி, எல்லாரும் தன் கட்சியில சேரும்படியா செஞ்சான்!
அப்படியானால் உங்களுக்கு புராணம், இதிகாசம் போன்ற விஷயங்களில் நம்பிக்கையோ, ஈடுபாடோ கிடையாதோ..?
புராணம், இதிகாசமெல்லாம் அந்த காலத்துல மகான்கள் எழுதி வச்சது. பாரதம், ராமாயணத்துல நல்ல விஷயங்கள் மனுஷனுக்கு இருக்கு. பாவத்துக்கு பயப்படணும், புண்ணியத்தை செய்யணும். கெட்டவன் அழிந்து போவான். நல்லவன் வாழ்வான்னு சொல்லப்பட்டிருக்கு. மண்ணாசை, பெண்ணாசை கூடாது. அடுத்தவன் மனைவியை தப்பா பார்க்கக் கூடாதுன்னு எச்சரிச்சாங்க. இதையெல்லாம் மனுஷன் எடுத்துக்கணும். அரசாங்கம் போடுற சட்ட திட்டங்கள் மட்டும் மனிதனுக்கு போதாது. தீமையை செஞ்சவனுக்கு சட்டத்துல தண்டனை உண்டு. தீமையை நினைக்கிறவனுக்கு தண்டனை உண்டா? ‘மனசாலயும் தப்பு நினைக்காதே’ன்னு நம்ம இதிகாசங்கள் சொல்லுது.
அந்த இதிகாசங்களிலும் பல நம்ப முடியாத விஷயங்கள், மூட நம்பிக்கைகள் மலிந்து கிடக்கிறதே?”
”எது எது ஆகாதோ அதையெல்லாம் விட்டுட வேண்டியது தான். எத்தனை ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி எழுதி வைக்கப்பட்ட விஷயங்கள் அவை! இன்னிக்கு அவை எல்லாம் எப்படி அப்படியே பொருத்தும்னேன்? சமுதாயத்துல அன்னைக்கு இருந்த நடைமுறையை வைத்து எழுதி இருப்பாங்க. சாரத்தை எடுத்துக் கொண்டு சக்கயை தூக்கிப் போடணும்னேன்…” என்றார்.
நீங்க பண்டிகையை கொண்டாடுவீங்களா ?
”நான் தீபாவளியை கொண்டாடுனதுமில்ல, எண்ணெய் தேய்த்து குளிச்சதுமில்ல. புதுசு கட்டுனதுமில்ல, பொங்கல் மட்டும் தான் நம்ம பண்டிகைன்னேன். நம்ம சமூகம் விவசாய சமூகம். ஆக, பொங்கல் நம்ம கலாச்சாரத்துடன் ஒட்டிய விழான்னேன்” என்று விளக்கினார்.
‘மதம் என்பதே மனிதனுக்கு அபின்’ என்ற கருத்தோட உங்களுக்கு உடன்பாடா?
நான் தீ மிதி, பால் காவடி, அப்படின்னு போனவன் இல்லை. பெத்த தாய்க்கு சோறு போடாதவன் மதுரை மீனாட்சிக்கு தங்க தாலி வைத்து படைக்கலாமா? ஏழை வீட்டுப் பெண்ணுக்கு ஒரு தோடு, மூக்குத்திக்கு கூட வழியில்ல. இவன் லட்சக்கணக்கான ருபாயில வைர ஒட்டியாணம் செய்து காலியாத்தா இடுப்பில கட்டிவிடறான். கறுப்பு பணம வைத்திருப்பவன் திருப்பதி உண்டியலில் கொண்டு போய் கொட்டறான். அந்தக் காசில ரெண்டு பள்ளிக்கூடம் கட்டிக் கொடுக்கலாமில்ல. பல பேரு சாமி குத்தம் வரும்னு பயந்துகிட்டு என்னென்னவோ செய்கிறான். மதம் மனிதனை பயமுறுத்தி வைத்துள்ளது. தன்னம்பீகையை வளர்ப்பது தான் முக்கியம். படிச்சவனே இப்படி முட்டாளா இருக்கிறான்.
Also read
கோவில், பிரார்த்தனை, நேர்த்திக்கடன் கழிப்பதுன்னு ஏதாவது உங்களுக்கு அனுபவம் இருக்கா?
சின்னப் பையனா நான் இருந்தப்போ விருது நகரிலே பத்திரகாளியம்மன் திருவிழா நடக்கும். அந்தக் கோவில் சிலைக்கு ஒரு நாடாரே பூசை செய்வார். அதிலே நான் கலந்துகிட்டிருக்கேன். 1930க்கு முன்னாலே சஞ்சீவரெட்டியோட திருப்பதி மலைக்கு போனேன். அவர் மொட்டை போட்டுகிட்டார் என்னையும் போட்டுக்கச் சொன்னார். நானும் போட்டுக்கிட்டேன். அப்போறம் யோசித்து பார்த்தேன். ‘இவையெல்லாம் வேலையத்த வேலை’ன்னு தோணிச்சு. ‘போயும், போயும் கடவுள் தலைமுடியத்தானா கேக்கிறாரு..?’ ன்னு விட்டுட்டேன். தலையில இருக்கிற முடியை எல்லோரும் தருவான். ஆண்டவனுக்காக தலையை கேட்டால் தருவானா…?” என குலுங்கி, குலுங்கி சிரித்தார்.
மனிதர்களுக்கு வழிபாடு, பிரார்த்தனை எல்லாம் முக்கியம்னு சொல்றாங்களே?
அடுத்த மனுசன் நல்லா இருக்கணும்கிறது தான் வழிபாடு.
ஏழைகளுக்கு நம்மாலான உதவிகளை செய்யணும்கிறது தான் பிரார்த்தனை!
இதுல நாம சரியாக இருந்தால்..தெய்வம் என்ற ஒன்று இருந்தா, அது நம்மளை வாழ்த்தும்னேன்’’ என்றார்.
ஆதார நூல்; ‘ஆகட்டும் பார்க்கலாம்’
ஆசிரியர்; திரு. வீரபாண்டியன்
தூரிகை பதிப்பகம்
சென்னை 600020
போன்; 24413728
மிகவும் நேர்த்தியான நினைவு கூறல் கர்ம வீரர் காமராசர் அவர்கள் மிகச் சிறந்த அஞ்சலி. கட்டுரையாளருக்கு வாழ்த்துகள். வாழ்க “அறம்”. வளர்க “அறம்”.