உண்மையின் உக்கரத்தை சகிக்க முடியாத ஆட்சியாளர்கள் தங்களின் பதட்டத்தை இந்த ரெய்டிலும், கைதிலும் வெளிப்படுத்தி உள்ளனர். இதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருமே பாஜக அரசுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்கள். உண்மைகளை பேசி, அரசை கதிகலங்க வைத்தவர்கள். இந்த கைதின் பின்னணி என்ன..?
அக்டோபர் 3 ஆம் தேதி அதிகாலை 6 மணிக்கு தில்லி காவல்துறை நியூஸ் க்ளிக் என்ற ஆங்கில இணைய இதழ் ஆசிரியர் மற்றும் மூத்த பத்திரிக்கையாளர்கள், அரசியல் விமர்சகர்கள்.. என பத்துக்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்களின் வீடுகளில் சோதனை நடத்தினர். அவர்களது கைபேசி மற்றும் லேப்டாப் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை பறித்து உள்ளனர் . பத்து மணி நேரத்திற்கும் மேலாக காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
எதற்காக இந்த ரெய்டு மற்றும் நீண்ட நேர காவல் விசாரணை என்ற கேள்விக்கு உறுதியான பதிலை புது தில்லி காவல்துறை அறிவிக்கவில்லை. கடந்த ஆகஸ்ட் மாதம், நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் வந்த ஒரு கட்டுரையில், நியூஸ் கிளிக் இணையம் சீனாவின் புகழ் பரப்பும் ஒரு அமைப்பிடம் இருந்து பண உதவி (funding) பெற்றதாக கூறப்பட்டதை ஒட்டி தில்லி காவல்துறை ஒரு வழக்கை பதிவு செய்ததாம்! அதனை தொடர்ந்தே இந்த ரெய்டு மற்றும் வழக்கு பதிவு மற்றும் நீண்ட நேர விசாரணை எல்லாம் நடைபெற்றதாம்.
இந்த பத்திரிக்கை நிறுவனத்தின் மீது தில்லி காவல்துறை ஆகஸ்ட் 17 பதிவு செய்த வழக்கு சட்டவிரோத செயல்களை தடுக்கும் கருப்பு சட்டமான ‘உ பா’ வாகும். பிரிவுகள் 13,16, 17 மற்றும் 22, ஆகியவற்றோடு, இந்திய தண்டனை சட்டம் IPC பிரிவு 120 B ( சதிச் செயலில் ஈடுபடல்) பிரிவு 153 A ( மக்களிடையே விரோதத்தை வளர்த்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
யார், யார் மீது இந்த ரெய்டுகள் பாய்ந்தன… என்று பார்த்தால், இந்த இணைய இதழின் நிறுவனரும் ஆசிரியருமான திரு. பிரபீர் பூர்காயஸ்தா, பத்திரிக்கையாளர்களான பரஞ்சோய் தாகுர்தா, அபிசார் ஷர்மா, அனுந்தியோ சக்கரபர்த்தி, ஊர்மிலேஷ், பாஷா சிங், சுமேதா பால், அரித்ரி தாஸ் மற்றும் நையாண்டி எழுத்தாளர் சஞ்சய் ராஜாவுரா ஆகியோர் மீதும், அவ் அலுவலகத்தில் பணி புரியும் அலுவலர்களையும் இந்த ரெய்டு விட்டுவைக்கவில்லை.
இதை தவிர 30 இடங்களுக்கும் மேலாக சோதனை நடந்ததாக தெரிகிறது. மனித உரிமை ஆர்வலரும், மோடியின் ‘ சிம்ம சொப்பனமுமான திருமதி தீஸ்தா செத்தல்வாட் வீட்டிலும் (மும்பை) பிரபல விஞ்ஞானி டி. ரகுநந்தன் வீட்டிலும் , மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் திரு. சீத்தாராம் யெச்சூரி வீட்டிலும் காவல்துறை நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர் !
37 ஆண்களையும், 9 பெண்களையும் ரெய்டு என்ற பெயரில் சோதனைக்கும், நீண்ட நேர விசாரணைக்கும் பின்னர் நிறுவன ஆசிரியர் திரு. பிரபீர் பூர்காயஸ்தா மற்றும் மேலாளர் அமீர் சக்கரபர்த்தி ஆகிய இருவரும் உ பா. சட்டத்தின் (பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்) கீழ் கைது செய்யப்பட்டனர் . இரவு 8.30 மணி அளவில் மற்றையோர் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.
இந்த பத்திரிக்கையாளர்களெல்லாம் இந்திய மக்களிடையே விரோதத்தை வளர்க்குமளவிற்கு என்ன எழுதி விட்டனர்? என்ன பயங்கரவாத செயல்களில்களில் ஈடுபட்டனர்?
இவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகெளெல்லாம்,
” நீங்கள் விவசாய போராட்டம் பற்றி ஏதும் எழுதினீர்களா?’’
”குடியுரிமை திருத்த சட்டத்திற்கெதிராக கிளர்ந்தெழுந்த போராட்டத்தை பற்றி ஏதும் எழுதினீர்களா?”
என்ற இரு கேள்விகள் தான் மீண்டும், மீண்டும் கேட்கப்பட்டன என்று 40க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் சோதனை, விசாரணைகளுக்குப் பின் கூறியுள்ளனர்.
அபிசார் ஷர்மா ( மக்கள் சார்பில் பேசியவர்);
இவர் இளம் பத்திரிக்கையாளர், இவரது யூ டியூப் சேனலுக்கு 3 மில்லியன் (30 லட்சம்) சந்தாதார்கள் உள்ளனர்! ‘கோடி மீடியா’ எனப்படும் அரசுக்கு ஜால்ரா போடும் ஊடகங்கள் பேசாத விஷயங்கள் பற்றி மக்களுக்கு எடுத்துரைப்பார். சமீபத்தில் தில்லியில் நடந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை – Old Pension Scheme- திட்டத்தை அமுல்படுத்தக் கோரி, புது தில்லி ராம் லீலா மைதானத்தில் பல லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் திரண்ட பேரணி பற்றி – இதை பற்றி ’மெயின் ஸ்ட்ரீம் மீடியா’ வாய் திறக்க மறந்த போது, அதைப் பற்றி விரிவாக பேசினார். பீகாரில் வெளியான சாதிவாரி கணக்கெடுப்பை பற்றியும், அதன் முக்கியத்துவத்தை பற்றியும் அகில இந்திய அளவில் இத்தகைய கணக்கெடுப்பின் அவசியத்தை பற்றியும் ரெய்டு நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன் விளக்கியிருந்தார்.
பரஞ்சோய் குகா தாகுர்தா( அம்பானி, அதானியை கதறவிட்டவர்);
மூத்த பத்திரிக்கையாளர் 2ஜி காலத்திற்கு முன்பிருந்தே அம்பானி, அதானி ஊழல்களை தோலுரித்து காட்டியவர், இன்றும் தொடரந்து அதானியின் ” தில்லு முல்லுகளையும், எப்படி அதானியின் ஒப்பந்த மீறல்களை எதிர்த்த மாநில அரசின் வழக்குகளை நீதியரசர்(?) அருண் சின்ஹா அமர்வு தொடர்ந்து அதானிக்கு ஆதரவாக தீர்ப்புகள் கூறி இந்திய மக்களுக்கும், மாநில அரசுகளுக்கும் பெரும் நட்டத்தை நியாயப்படுத்தி அதானியை “கொழுக்க ” வைத்தார் என ஆதாரபூர்வமாக எழுதிய மிகச் சிறந்த மூத்த பத்திரிக்கையாளர். இவர்மீது அதானி நூறு கோடி நட்ட ஈடு கோரி “குஜராத்” நீதி மன்றத்தில் வழக்கும் தொடுத்து மிரட்டப்பட்டார் . கடைசியாக அதானி ஹரியானா மாநில மின்வினியோக கம்பெனிகளுடன் போட்ட ஒப்பந்தத்தை மீறி அதிக கட்டணம் அதானி பவர் குழுமம் வசூலிப்பதை அம்பலப்படுத்தி ட்வீட் செய்துள்ளார்.
அனிந்த்யோ சக்கரபர்த்தி; ( மோடியின் அதானி, அம்பானி பக்தியை சொன்னவர்)
சுறு சுறுப்பான பத்திரிக்கையாளர். அரசியல், பொருளாதாரம் அயலுறவு போன்ற விஷயங்களை பற்றி தொடர்ந்து விமர்சனங்களை நியூஸ் கிளிக்கில் எழுதி வருபவர்.
இவருடைய விமர்சனங்கள் பெரும்பாலும் இந்துத்துவ முரடர்களுக்கு ” தலைவலியை” கொடுப்பதாக இருக்கும் , எனவே இவரை ” வலது சாரிகள்” எப்பொழுதும் காரணமின்றி வசை பாடுவர். ஜூலை மாத்தில் இவர் ஒரு கட்டுரையில் புதிய பொருளாதாரக் கொள்கைகளினால் -neo liberal reforms- 1982ல் தொடங்கி பயனடைந்தவர்கள் மேல்தட்டில் உள்ள 20% பேர்தான் என்றும் குறிப்பாக 1% உள்ள பெரும் பணக்கார முதலைகளே இதில் பெரும் பயனடைந்தனர். அடிமட்டத்தில் உள்ள மக்களில் 40% சதவிகித மக்கள் இந்த சீர்திருத்தங்கள் நடந்தேறவில்லையென்றால் ஒன்றும் கெட்டுப் போயிருக்க மாட்டார்கள் என்றும், இடையில் உள்ள நடுத்தர மக்களில் 40% சதவிகிதத்தினர் கூட இந்த சீர்திருத்தங்களினால் எந்த பயனும் பெறவில்லை என்பதை பல புள்ளி விவரங்களுடன் பதிவு செய்துள்ளார். இப்படித்தான் ‘சூட் பூட்’ பொருளாதாரம் ‘சூட் பூட்’ சர்க்காரால் ‘சூட் பூட்’ சமூகமாக மாற்றப்பட்டது! இதனால், பயனடைந்தது அதானி மற்றும் அம்பானி போன்றவர்களே என்று வாதிட்டவர் இந்த சக்கரபர்த்தி.
ஊர்மிலேஷ் மோடி;( ஆர்.எஸ்.எஸ்சை அம்பலப்படுத்தியவர்)
எழுத்தாளரும் மூத்த பத்திரிக்கையாளருமான இவர் அரசுக்கெதிராகவும் ஆர்.எஸ். எஸ்க்கு எதிராகவும் உண்மை நிலவரங்களை எடுத்துரைப்பவர், ‘மன்தன்’ என்ற நிகழ்ச்சியை தொடர்ந்து நியூஸ் கிளிக் இதழில் நடத்தி வருபவர் . இறுதியாக ரெய்டுக்கு முன்னால் பீகாரில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின் முக்கியத்துவம் பற்றியும் , நித்திஷ் குமாரின் ” சாணக்கியதனத்தையும் ” பாராட்டியவர், இதன் மூலம் அகில இந்திய அரசியலில் ஏற்படும் மாற்றத்தையும், மோடியின் போலிதனத்தையும் விலாவாரியாக விவரித்து நிகழ்ச்சி நடத்தியவர்.
திருமதி. பாஷா சிங்;( நையாண்டி விமர்சகர்)
நியூஸ் கிளிக் தளத்தில் ” கோஜ் கபார்” (எப்படி இருக்கிறீங்க) என்ற நிகழ்ச்சியில் இன்றைய இந்திய மக்களின் நிலை பற்றி விளக்குவார் திருமதி. பாஷா சிங். சமீபத்தில், எப்படி அனைத்து அரசு திட்டங்களிலும் மோடி பெயர் திணிக்கப்பட்டுள்ளது. அதன் ” பொருந்தா பொருத்தத்தை” விமர்சித்து இருப்பார் . இந்நிழ்ச்சிக்கும், இவருக்கும் நாற்பது லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடவேண்டிய விஷயம்.
சோகெயல் ஹாஷ்மி; ( வரலாற்று ஆய்வாளர்)
பாஜக அரசு எப்படி எல்லாம் காந்திய அடையாளங்களை அழிக்கிறது என தொட்ரந்து அம்பலப்படுத்தி வரும் வரலாற்று ஆய்வாளர். மிகச் சமீபத்தில் அக்டோபர் இரண்டாம்தேதி இந்துத்துவ வாதிகள் எப்படி துடைப்பத்தோடு காந்தி ஜெயந்தியை “கொண்டாடினர்” என்று விமர்சித்திருந்தார். எழுத்தாளரும், படத் தயாரிப்பாளருமான சோகெயல் ஹாஷ்மி மோடி அரசுக்கும், இந்துத்துவ சித்தாந்தத்திற்கும் எதிராக செயல்படுபவர். மிகச் சிறந்த வரலாற்று ஆய்வாளரும் கூட.
சில தினங்களுக்கு முன் மோடிமத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் சென்ற பொழுது, சாது ரவிதாசரை பற்றியும், பக்தி இலக்கியம் பற்றியும் தப்பு தப்பாக பேசி தன்னுடைய வரலாற்று அறியாமையை மோடி எவ்வாறு வெளிப்படுத்துகிறார் என்று மற்றொரு எழுத்தாளரான நிலஞ்சன் மகாபாத்யாயாவோடு நடந்த விவாதத்தில் தோலுரித்து காட்டினார்.
நியூஸ் கிளிக் ஆசிரியர் பிரபீர் பூர்காயஸ்தா; ( முற்போக்காளர்)
இத்தகைய பத்திரிக்கையாளர்கெல்லாம் பங்களிப்பு செய்யும் நியூஸ் கிளிக் இதழும், அதன் ஆசிரியர் பிரபீர் பூர்காயஸ்தாவும் சந்தேகமின்றி மோடி எதிர்பாளர்கள் தான் . ஆனால் அது கொள்கை வழிப்பட்ட எதிர்ப்பே ஆகும்.
தேர்தல் பத்திரங்கள் எனப்படும் எலெக்டோரல் பாண்ட்ஸ் திட்டம் என்பது சட்டமயமாக்கப்பட்ட லஞ்சம் என்பதில் ஆணித்தரமாக நிற்பவர் பிரபீர் பூர்க்காயஸ்தா. இவரது இளமைக் காலங்களில் இந்திராவின் எமர்ஜன்சி காலத்திலும் இதைப் போன்றே ” கைது” செய்யப்பட்டவர். முற்போக்கு சிந்தனையாளர். இவ்விதழை மக்கள் மொழியான இந்தியிலும் நடத்தி வருகிறார்.
இந்த ஆண்டு உண்மையில் இந்தியாவின் பேச்சு மற்றும் எழுத்து சுதந்திரத்திற்கும் ஏன், இந்திய பத்திரிக்கை சுதந்திரத்திற்கும் ஒரு கருப்பு ஆண்டு என்றே கூறவேண்டும்.
பத்திரிக்கை சுதந்திரத்தின் உலக நாடுகளின் தர வரிசை பட்டியலில் இந்தியா இப்பொழுது 161 வது இடத்தில் உள்ளது. பட்டியலில் உள்ள 180 நாடுகளில் இந்தியாவின் தரம் 161வது இடத்திற்கு சரிந்துள்ளது . இந்த சரிவு 2015 முதலே தொடங்கி இன்று விமர்சனங்களை முன் வைக்கும் பத்திரிக்கைகளை முடக்க பயங்கரவாத சட்டங்கள் பயன்படுத்தும் நிலைக்கு தாழ்ந்துள்ளது . இது மோடி மகாத்மியத்தை தவிர வேறென்ன?
வகுப்புவாதத்தையும் ,மத வெறியைநும் அப்பட்டமாக தூண்டி மக்களை பிளவு படுத்தும் ஊடகங்களையும் , அதன் பங்களிப்பாளர்களை- வெறுப்பு வியாபாரிகளாக வலம் வரும் அரனாப் கோஸ்வாமி, நாவிகா, போன்றோரை தட்டிக்கொடுத்து வளர்க்கும் மோடி அரசு
ஆட்சியின் குறைபாடுகளை சுட்டிக் காட்டும் பத்திரிக்கையை முடக்குவதும் அவர்கள் மீது பயங்கரவாத தடுப்பு சட்டங்களை ஏவி கைது செய்வதும் கண்டிக்கத்தக்க செயல் என பத்திரிக்கையாளர் சம்மேளனம், டெல்லி பிரஸ் கிளப், எடிட்டர்ஸ் கில்ட் ஆப் இன்டியா மற்றும் பல்வேறு பத்திரிக்கையாளர் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்திய அரசியல் அமைப்பையும், சட்டபூர்வ நடைமுறையையும் உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு உச்ச நீதி மன்றத்திற்கு உள்ளது. சுதந்திரத்தின் மீதான இந்த தாக்குதலை, மோடி அரசின் ஒருதலைபட்சமான சட்ட பிரயோகத்தை உச்சநீதிமன்றம் கண்டும், காணாமல் போகுமா?, தடுத்து நிறுத்த முன்வருமா போன்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுகின்றது.
அம்பானி, அதானிக்கு ஒரு நீதி
சாமான்ய இந்தியனுக்கு ஒரு நீதி,
வெறுப்பை விதைப்பவர்களுக்கு ஒரு நீதி ,
மோடியை கேள்வி கேட்பவர்களுக்கு ஒரு நீதி,
இந்துத்துவ அமைப்புகளுக்கு ஒரு நீதி
மற்றவர்களுக்கு ஒரு நீதி,
பா ஜ க வினருக்கு ஒரு நீதி
மற்றவர்களுக்கு ஒரு நீதி
மேல் சாதிக்கார்ர்களுக்கு ஒரு நீதி,
தலித், பழங்குடியினர் மற்றும் சிறு பான்மை மக்களுக்கு ஒரு நீதி
என்று பாரபட்சம் காட்டும் பாஜக அரசின் செயல்பாடுகளை இப்பொழுதும் இந்திய மக்கள் புரிந்து கொள்ளாவிட்டால், விடிவு காலம் வெறும் கனவாய் போய்விடும்.
கட்டுரையாளர்.ச.அருணாச்சலம்
Shame on the so- called democratic government of India. 2024 election is the only way to save democracy.