வரும் தேர்தலில் பாஜகவுக்கும், திமுகவுக்கும் தான் நேரடி மோதலாம். தனித்து கூட்டணி அமைத்தே அனைத்து தொகுதிகளிலும் வெல்வார்களாம்…! சண்டைகள், சர்ச்சைகள், அதிரடி வெறுப்பு பேச்சு, கூட்டத்தை கூட்டும் திறமை.. ஆகியவற்றால் பாஜக வளர்கிறதா? அண்ணாமலை பாஜகவை வளர்த்து விட்டாராம்! உப்புக் கல் வைரமாகுமா..?
கூட்டத்தை கூட்டிக் காட்டியதன் மூலம் தன்னைத் தான் பெருந் தலைவராக நினைக்கிறார் அண்ணாமலை. எப்போதும் பேசுபடு பொருளாக சர்சையை ஏற்படுத்துவதால் தலைவராகிவிட்டதாக நினைத்துக் கொள்கிறார். உண்மையில் தனக்கென்று உண்மையான ஒரு நட்பு வட்டத்தைக் கூட ஏற்படுத்த முடியாத தனி மரமாகவே அண்ணாமலை வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது தான் கள யதார்த்தம். அவர் நிழல் கூட அவரை நம்ப மறுக்கும் அளவிலான நம்பகத் தன்மை அற்றவராகத் தான் அந்தக் கட்சியில் உள்ளவர்களே அவரை கணித்து வைத்துள்ளனர். அவரை தலைவர் பதவியில் இருந்து மேலிடத்தில் தூக்கிவிட்டார்கள் என்றால், அவர் பக்கத்தில் நிற்க யாரும் இருக்க மாட்டார்கள். யாரும் சீண்டாத அனாதையாகிவிடுவார்!
நேச சக்தியாக இருந்த அதிமுகவை வலிந்து எதிரியாக்கிக் கொண்டார் அண்ணாமலை. இதன் உண்மையான காரணம், வல்லமை மிக்க கொங்கு வேளாள சமூகம் தற்போதைய நிலையில் முழுமையாக எடப்பாடி பழனிச்சாமியை தாங்கி பிடித்து உள்ளது. அண்ணாமலையை ஏற்க மறுக்கிறது. ஆகவே, எடப்பாடி பழனிச்சாமியை பாஜகவின் அகில இந்திய தலைமையைக் கொண்டு பலவீனப்படுத்தினால் மட்டுமே தனக்கு எதிர்காலம் என நம்புகிறார் அண்ணாமலை!
எடப்பாடி பழனிச்சாமி ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதி காக்கிறார் என்பதைக் கொண்டு அவரை பலவீனமானவராக மதிப்பீடு செய்வது பிழை என்றே நினைக்கிறேன். ஆழமாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டதாலேயே அவர் பதட்டமில்லாமல் அமைதி காக்கிறார் என்றே தோன்றுகிறது! தனக்கு நெருக்கமான தோழமை சக்திகளை அவர் எல்லா தளங்களிலும் பெற்றுள்ளதாகவே எனக்கு தகவல்கள் கிடைக்கின்றன.
திராவிடக் கட்சிகள் மீதான வெறுப்பில் பாஜக தலைமை செய்த அதீத முட்டாள்தனம் தான் அண்ணாமலையை தமிழக பாஜக தலைவராக்கியது!
அந்தக் கட்சியில் எத்தனையோ அனுபவஸ்தர்கள், அறிவானவர்கள், அனைவரையும் அரவணக்கும் அன்பு கொண்டவர்கள் இல்லையா என்ன?
அதிகாரம், பணபலம் ஆகியவற்றின் பக்கபலத்துடன் இங்கிதமே இல்லாத இறுமாப்புடன் அண்ணாமலை தத்துபித்தென்று உளறுவதை எல்லாம் பிராமாதப்படுத்தி புகழாரம் சூட்டி உப்புக் கல்லை வைரமாக்கத் துடிக்கின்றன சில ஊடகங்களும், அறிவு ஜீவிகளும்!
சமீபத்தில் ஒரு பெண் பத்திரிகையாளர் அண்ணாமலையிடம் டெல்லி செல்வதற்கு முன்பு ஒரு கேள்வி கேட்டார்.
அந்தக் கேள்வியில் கொந்தளித்து போன அண்ணாமலை, ”இங்க வாங்க சிஸ்டர்… கேமரா முன்பு வாங்க…. இப்படிப்பட்ட கேள்வி கேட்டது யாருன்னு மக்களுக்கு தெரியணும்” என மிரட்டலாகப் பேசி மீண்டும், மீண்டும் அழைத்து வலியுறுத்தினார்.
அந்தப் பெண்ணை கேமிராவின் முன்பு அறிமுகப்படுத்த நினைத்ததன் மூலம் ‘இந்துத்துவ, பாஜக கூலிப்படைகளுக்கு என்னை ஆத்திரப்படுத்திய கேள்வியை கேட்டது இந்தப் பெண் தான்’ என காட்டித் தந்து தண்டிக்க விரும்பியே அண்ணாமலை அவ்வாறு செய்துள்ளார்.
அந்தப் பெண் கேட்ட கேள்வி இது தான்;
”தமிழக பாஜக தலைவராக இல்லாத பட்சத்தில், நீங்கள் பாஜகவில் தொடர்வீர்களா?” என்பது தான்!
அண்ணாமலை அதிமுகவை கடுமையாக விமர்சித்து கூட்டணி சிதைவுக்கு காரணமாகியுள்ள நிலையில், அவரது கட்சித் தலைவர் பதவி பறிக்கபடலாம் என பரவலான பேச்சு மக்கள் மத்தியில் இருந்த நேரத்தில், இது போன்ற கேள்விகள் ஊடகவியலாளர்களிடம் எழுதுவது என்பது இயல்பானதே!
இந்தக் கேள்விக்கு கூலாக, ”உங்கள் ஊகங்களுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. பொறுத்திருந்து பாருங்கள்” எனச் சொல்லி இருக்கலாம்.
பொதுவாக பதில் சொல்ல முடியாத சங்கடமான கேள்விகளை எதிர்கொள்ளும் போது, சாதுர்யமாக பதில் சொல்வதில் தான் அரசியல் தலைவர்களின் சாமார்த்தியமே உள்ளது.
ஆனால், அனுபவமின்மை மட்டுமின்றி, ஆணவமும் சேர்ந்த கலப்படமாக இருக்கும் அண்ணாமலை எல்லாவற்றுக்கும் ஆத்திரப்பட்டு, பிரஸ் மீட்டை கலகக் கச்சேரியாக்கிவிடுகிறார். எவ்வளவு மாற்றுக் கருத்து கொண்டவர்களையும் கூட, தன் பதில்களால் வென்றெடுப்பதில் தான் தலைவர்களின் ஆளுமை பண்பே வெளிப்படுகிறது. அந்த வகையில் ராஜாஜி, அறிஞர் அண்ணா போன்றோர் இன்று வரை அன்றைய பத்திரிகையாளர்களால் நினைவு கூறப்படுகிறார்கள்.
”அரசியல் என்பது எனக்கு முழு நேரப் பணியல்ல” என்கிறார் அண்ணமலை. இதைவிடக் கேலிக் கூத்து வேறு இருக்க முடியுமா? ஒரு கட்சியின் தலைவராக பொறுப்பில் உள்ளவர் அரசியலை ‘பார்ட் டைம்’மாக பார்க்க வாய்ப்பே இல்லை. அரசியல் என்பது 24 மணி நேரமும் விழிப்புணர்வோடு செய்ய வேண்டிய பணியாகும். இல்லையென்றால், கூட இருப்பவனே குழி தோண்டி புதைத்து விடுவான். உண்மையில் அண்ணாமலை அரசியலை முழு நேரப் பணியாகத் தான் செய்கிறார். ஆனால், ஏதோ தான், ‘முழு நேர விவசாயி’ போல பொய் பாவனை செய்கிறார்.
‘சொல்வது அப்பட்டமான பொய்’ என்பது அவருக்கு நன்கு தெரிந்தாலுமே கூட, அதை அடித்துப் பேசுகிறார். ”வெள்ளைக் காக்கா தான் பறந்தது. உங்க கண்களுக்கு தெரியவில்லை என்றால் உங்க கண்ணில் தான் கோளாறு” என ஒரே போடு போடுகிறார். மறுப்பவனோடு மல்லுக்கட்டி போராடி களைப்பை ஏற்படுத்திவிடுகிறார். அத்துடன் மறுப்பவனை குற்றவாளியாகவும் பொதுத் தளத்தில் பேசிவிடுகிறார். இதைக் கொண்டு அண்ணாமலை வெற்றி பெற்றதாக அவரது அடி வருடி ஊடகங்களும், அறிவு ஜீவிகளும் புகழ்கிறார்கள்!
பாஜகவில் இருக்கும் மூத்த தலைவர்களுக்கும், ஓரளவு விவரமானவர்களுக்கும் அண்ணாமலையின் தகிடு தத்தங்கள் தெரிந்தாலும், அமைதி காக்கிறார்கள்! அண்ணாமலை ஊழல் செய்யும் இன்றைய திமுக அமைச்சர்கள் சிலரிடம் அவ்வப்போது மாமுல் வாங்குவதாக சில பத்திரிகையாளர்கள் என்னிடம் சொல்லும் போது நான் ஆச்சரியப்பட்டுள்ளேன்.
அண்ணாமலையின் பிரஸ் மீட் சென்றாலே பத்திரிகை நிருபர்களுக்கு அவமானங்களும், மனச் சோர்வும் ஏற்படுகிறது. பணியின் பொருட்டு இடர்பாடுகளை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியதாக உள்ளது. பத்திரிகையாளர்களை நட்பு சக்தியாக்கிக் கொள்வது என்பது அரசியல் கட்சித் தலைவர்களுக்கு இருக்க வேண்டிய அடிப்படை பண்பாகும்.
மறுபுறம் சில ஊடக முதலாளிகள் அண்ணாமலை என்ன செய்தாலும் அதை வரவேற்று புளகாங்கிதப்படுகிறார்கள்! மேற்படி பெண் நிருபர் சம்பந்தப்பட்ட நிகழ்வில் பாலிமார் தொலைகாட்சி ‘பத்திரிகையாளர்களை விளாசித் தள்ளிய அண்ணாமலை’ என தலைப்பு கொடுத்து இந்த நிகழ்வை கொண்டாடுகிறது.
இதே போல அண்ணாமலையை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் அஜந்தாவை தினமலர் நாளிதழும், தினத்தந்தி நாளிதழும், தினத்தந்தி தொலைகாட்சியும் நாளும் அரங்கேற்றுகின்றன. அண்ணாமலை எவ்வளவு அரைவேக்காட்டுத்தனமாக நடந்து கொண்டாலும், அருவெறுக்கத் தக்க வகையில் நடந்து கொண்டாலும்.. மேற்படி ஊடகங்கள் மிகவும் புளகாங்கிதமாக புதுப் புது அர்த்தம் கற்பித்து, வாசகர்களை மூளைச் சலவை செய்து அண்ணாமலைக்கு ஒரு ஏற்பு நிலையை சமூகத்தில் உருவாக்க அரும்பாடுபடுகின்றன. இதன் மூலம் இந்த ஊடக முதலாளிகளை பாஜக அரசு விலை பேசி வைத்துள்ளது என்பதை நாம் யூகிக்கலாம். அண்ணாமலையின் பிரஸ்மீட்டில் தங்களின் நிருபர்கள் அவமானப்பட நேர்ந்தாலும் கூட, அதை பொருட்படுத்தாமல் அண்ணாமலையை கொண்டாடுகின்றன, மேற்படி ஊடக நிறுவனங்கள்!
ஒரு அநீதியையோ, கொடூரத்தையோ புனிதப்படுத்தி மீண்டும், மீண்டும் பேசுவதன் மக்களை மயக்கி ஏற்கச் செய்வது என்பது வரலாற்றில் பாசிஸ்டுகள் கடைபிடித்த தந்திரமாகும். இதைத் தான் போலிச் சாமியார்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள். போலிச் சாமியார்கள் தங்களுக்கு பலியாகும் பக்தர்களையே, தங்களை பரப்புரை செய்பவர்களாகவும் மாற்றி ஈவு இரக்கமில்லாமல் சுரண்டிக் கொழுப்பார்கள்! அந்தப்படி தான் அண்ணாமலையின் அடாவடித்தனங்களையும், அரைவேக்காட்டுத் தனங்களையும் சிலாகித்து எழுதவும், பேசவும் ஒரு பெரும் அறிவுஜீவிக் கூட்டம் அடிவருடி வேலை செய்து வருகிறது!
Also read
‘இதன் மூலம் எதிர்காலத் தமிழ் சமூகத்திற்கு மிக மோசமான ஆபத்தான ஒரு தலைமையை இவர்கள் திட்டமிட்டுத் திணிக்கிறார்கள்’ என்பது தான் அதிர்ச்சியும், கவலையும் அளிக்கிறது. இதை தடுத்து, ‘இந்த அட்டுழியங்களை அம்பலப்படுத்த திரானியற்றவர்களாக என்பதைவிட, ஆன்ம பலம் அற்றவர்களாக திராவிடக் கட்சித் தலைமைகள் உள்ளன’ என்பது தான் இன்றைய யதார்த்தமான நிலவரமாகும்.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
நிகழ்வை….. நேரடியாக பத்திரிகையாளர்கள் சந்திக்கும் ஆணவத் தலைமைப் போக்கை உணர்த்தியது. உற்ற கோணம்.. உரிய பார்வை… முன்பை விட ஊடக உரிமையாளர்கள் குறிப்பிட்ட நோக்கோடு அணுகுமுறை.. எந்த விதத்திலும் அவர்களைச் சார்ந்து பணி ஆற்றுவோரைக் காப்பாற்றாது.