எமர்ஜென்ஸியை விஞ்சியது இன்றைய பாஜக ஆட்சி!

-ச.அருணாசலம்

இன்றைய அரசியல் சூழல், இந்திரா காந்தியின் எமர்ஜென்சி காலத்தை விஞ்சுகிறது!  இந்த அசாதாரண சூழலை “தி இந்து” நாளிதழ், ‘இது ஒரு அறிவிக்கப்படாத அவசரநிலை’ என எழுதியுள்ளது. பலவிதங்களில் ஒப்பிட்டு பார்க்கையில், ‘இன்றைய சூழல் அறிவிக்கப்படாத அவசர நிலையே’ என இந்த கட்டுரை விவரிக்கிறது;

இன்று நிலவும் சூழலை இந்திராகாந்தியின் 1975-1977 எமர்ஜன்சி காலத்தோடு ஒப்பிடுவது சரியா? என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.

வெளிப்படையாக பிரகடனப்படுத்தப்பட்டு, சில உரிமைகளையும், சுதந்திரங்களையும் மக்களுக்கு மறுத்த, அந்த இரண்டாண்டு  காலமும்,  இப்பொழுது கடந்த  ஒன்பது ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்படும் அரசின் செயல்பாடுகளும் ஒன்றா?

ஊனப்பட்டுள்ள ஊடக சுதந்திரம்;

அன்று பத்திரிக்கைகள் அரசால் கட்டுப்படுத்தப்பட்டன. ஆனால், இன்றோ ஊடகங்கள் அரசால் விலைக்கே வாங்கப்பட்டுள்ளன. அவை, தனித் தன்மையை இழந்து அரசின் ஊதுகுழலாகவே மாறிவிட்டன. அவற்றினுடைய ஆசிரியர் மற்றும் ஆங்கர்கள் அரசு (மோடி) புகழ் பாடுவதையும், எதிர்கட்சிகளை சாடுவதையும், சிறுபான்மையினர் மீது வெறுப்பை வளர்ப்பதையும் ஒரு புனிதமான  பணியாகவே விரும்பி செய்கின்றனர்.

தணிக்கை முறை ஏதும் இல்லாமலேயே , அரசு விரும்பாத செய்திகளை இருட்டடிப்பு செய்து, வெடித்து கிளம்பும் போராட்டங்கள் மற்றும் விமர்சனங்களை செய்தியாக்காமல் அரசு புகழ் பாடுவதையே செய்திகளாக்கும் கலையை இன்றைய இந்திய ஊடகங்கள் சிறப்பாக வெளிப்படுத்துகின்றனர்.

நன்றி; The Hindu Centre

உண்மை நிலவரங்களை எடுத்துரைக்கும் நிருபர்களுக்கோ, பத்திரிக்கையாளர்களுக்கோ இன்று பெரிய ஊடகங்களில் ( அச்சு மற்றும் தொலைகாட்சி ஊடகங்கள்) வேலையில்லை. இணையவழி ஊடகங்களே இன்று உண்மையை ஓரளவேனும் இந்திய மக்களுக்கு தெரிவிக்கின்றன. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால், சிறு சிறு இணைய ஊடகங்களும், தங்களுடைய வீச்சை வெளிப்படுத்துகையில் அரசின் கோபத்திற்கு ஆளாகின்றனர். அடக்குமுறைகளுக்கும் ஆளாகின்றனர்.

உண்மையை கூறுபவர்களை அச்சுறுத்துவது, முடக்குவது, பழி போடுவது, மீறினால், பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் கைது செய்வது எல்லாம் இன்று வாடிக்கையாகிவிட்டது. சித்திக் கப்பான், பி.பி.சி. ஆவணப்படம் (குஜராத் கலவரத்தில் மோடியின் பங்கு பற்றி) நியூஸ் லாண்டரி , தி வயர், தற்போது நியூஸ் கிளிக் போன்ற இணைய ஊடகங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள் பத்திரிக்கையாளர்கள் இந்த தாக்குதலுக்கு ஆளாகி உள்ளது ஜனநாயகச் சீரழிவைத்தான் காட்டுகிறது.

நன்றி; ’தி டெலிகிராப்’

அன்று அவசரநிலை காலத்தில் எதிர்கட்சியினர் கைது செய்யப்பட்டனர், காரணமின்றி, சிறையில் அடைக்கப்பட்டனர் , பிணைகள் மறுக்கப்பட்டன, காரணம் அன்று ” மிசா” Maintenance   of Internal Security Act நடைமுறையில் இருந்தது.

எதிர்கட்சி தலைவர்களும், தொண்டர்களும் மிசாவில்  கைது  செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். அரசியல் சாசனம் அளித்திருந்த உயிர், மற்றும் உடமைக்கான உத்திரவாதங்களை ” அவசர நிலை ” தற்காலிகமாக நீக்கியது.

பத்திரிக்கைகள் தணிக்கை ( censorship) செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அப்பொழுதிருந்த ஒரே வானொலியான ஆல் இண்டியா ரேடியோ மற்றும் அப்பொழுதிருந்த தூர்தர்ஷன் ஆட்சியாளர் புகழைப் பாடின.

பிரதமராக இருந்த இந்திராவின் 20 அம்ச திட்டங்கள் மிகப்பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. சஞ்சய் காந்தி தன் பங்கிற்கு “ஐந்து அம்ச” திட்டங்களை அறிவித்தார். அரசு இயந்திரமும், அரசு அதிகாரிகளும் இதை நிறைவேற்ற தலைகீழாக நின்று பாடுபட்டனர்.

ஆனாலும், இந்த அத்துமீறல்கள், அடக்குமுறைகள், வக்கிரங்கள் எல்லாம் இரண்டு ஆண்டுகளே நீடித்து இருந்தன. 1977ம் ஆண்டு இந்திரா காந்தி உலக நாடுகளின் விமர்சனத்திற்கு பயந்து,  எமர்ஜன்சியை வாபஸ் வாங்கி, சுதந்திரமான தேர்தல் நடத்த முன் வந்தார் . இதன் மூலம் தன்னை  மீண்டும் “ஜனநாயகவாதியாக ” சித்தரிக்க முனைந்தார். கைதான அரசியல் தலைவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

சிறுமைப்படுத்தப்படும் சிறுபான்மையினர்;

ஆனால், மோடியின் ஒன்பதாண்டு கால ஆட்சியில் சிறுபான்மையினர் மீது அவர்களது உணவு மற்றும் நடை உடைகளை காரணம் காட்டி  தாக்குதல் நடத்துவதும் , தாக்கியவர்களை சட்டத்தின் முன்  நிறுத்தாமல் தாக்கப்பட்டவர்களை கைது செய்வதில் ஆரம்பித்த போக்கு
சிறுபான்மையினரை இந்துமத அனுதாபிகள் யார் வேண்டுமானாலும் தாக்கலாம் , அவர்கள் மீது சட்டம் பாயாது என்ற (impunity) போர்வையை மோடி அரசு கொடுக்கிறது.


அதே வேளையில் சிறுபான்மையினர் தங்களுடைய உரிமைகளுக்காக கூட்டமாக கூடி குரல்எழுப்பினாலே, அதை தேச விரோத செயலாக சித்தரித்து வன்முறையை அவர்கள் மீது கட்டவிழ்த்து, அவர்கள்மீது கலவர வழக்குகள் பதிவு செய்து சிறையிலடைப்பதும் அவர்களது வாழ்விடங்கள் (வீடுகள், கடைகள்,வணிக கூடங்கள்) புல்டோசரால் தரை மட்டமாக்கப்படுவதும் மோடியின் கட்சியான பா ஜ க ஆளும் மாநிலங்களில் அன்றாட நிகழ்வாக நடக்கின்றன.

இந்திய மக்கள் தொகையில் 17 சதவிகிதத்திற்கும் மேலாக உள்ள சிறுபான்மையினர் சமமான உரிமைகளை இந்தியாவில் (இந்து ராஷ்டிரத்தில்) கோரமுடியாது என்ற அரசியல் நிலைபாட்டை மோடி அரசு எழுதப்படாத சட்டமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. இச்செயல் இந்திய அரசியல் சாசனத்திற்கெதிரான செயல் தவிர வேறென்ன?

ஏவல் நாய்களாக மாறிய காவல் அமைப்புகள்:


இந்திய குற்றப் புலனாய்வு அமைப்புகளான சி.பி.ஐ, அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை, போன்றவற்றை சுதந்திரமாக செயல்படவிடாமல் ஆளுங்கட்சியை எதிர்ப்பவர்களை வழிக்கு கொண்டுவர “ஏவல் நாய்களாக” பயன்படுத்தப்படுகின்றன. சமுதாயத்தில் நடக்கும் சட்டப்புறம்பான நிகழ்வுகளை இனங்கண்டு , புலன் விசாரணை செய்து, சட்டத்தை மீறியவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டிய இந்த புலன் அமைப்புகள் இன்று பெரும்பான்மைவாதம் பேசியும் ஆளுங்கட்சியான பா ஜ க வின் எதிரிகளை பந்தாடுவதற்கும், விலைக்கு வாங்குவதற்கும், பொய்வழக்குகளால் முடக்குவதற்கும்  பயன்படுத்தப்படுகின்றன என்பது நேஷனல் ஹெரால்டு வழக்கு முதல் நேற்று கைது செய்யப்பட்ட ஆம்ஆத்மி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய்சிங் கைது  வரை தொடர்கிறது.

அடக்குமுறைச் சட்டங்கள்;

இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தது போல் பயங்கரவாத தடுப்பு சட்டம் (உ பா UAPA) பணமோசடி தடுப்பு சட்டம் PMLA , ஐ.டி. சட்டம், தரவுகள் பாதுகாப்பு சட்டம் (Data protection Act) போன்றவற்றில் எல்லாம் திருத்தங்கள் என்ற பெயரில் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள், இந்தியக் குடி மக்களுக்கு அரசியல் சாசனம் அளித்துள்ள உரிமைகளை பறிப்பதாகவும் , பாதிக்கப்பட்ட நபர் தன்தரப்பு நியாயத்தை கூற வாய்ப்பில்லாமல், குற்றம் சாட்டப்பட்டதாலேயே உரிமையற்றவர்களாகவும், குற்றவாளிகளாகவும் சித்தரிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. பாதிக்கபட்டவர்கள் நீதி கேட்டு நீதி மன்றங்களை நாடினால், நீதிமன்றங்கள் தலையிடமுடியாத அளவிற்கு சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது இயற்கை நீதிக்கு மட்டுமல்ல, எந்த வகை நீதிமுறைக்கும் ஏற்புடைய நடைமுறை அல்ல.

ஆக, குற்ற புலனாய்வு அமைப்புகளை ஆயுதங்களாக மாற்றியதோடன்றி , சட்டங்களையே ‘அடக்குமுறை  ஆயுதங்களாக’ (coercive weapon)  இந்த மோடி அரசு மாற்றியுள்ளது .வேதனை.

சுயாதீனமில்லா நீதிதுறை!

இந்திரா காந்தியின் அவசரநிலை காலத்தில் கொள்கை உறுதியுடைய நீதித்துறை committed judiciary தேவை என ஆளுங்காங்கிரஸ் தலைவர்கள் கோரி வந்தனர் . நீதித்துறை அரசியல்சாசனத்திற்கு விசுவாசமாக இல்லாமல், ஆளுபவர்களின் ” ஆணைகள் மற்றும் விருப்பங்கள் ” அடிப்படையில் செயல்படுவதை இது குறிக்கிறது. இந்தப் போக்கை எதிர்த்து அன்று ‘பார் அன் பெஞ்ச்’ என்று சொல்லக் கூடிய நீதிபதிகள் மற்றும் வழக்குரைஞர்கள் மத்தியில் விமர்சனங்களும், சலசலப்புகளும் எழுந்தன.


இன்று நீதித்துறையின் நிலைமை அதைவிட மோசமாக உள்ளது என்பது நீதிமன்ற தீர்ப்புகளில் இருந்து நாம் அறியலாம் . 2ஜி வழக்குகளில் சிம்ம கர்ஜனையாக முழக்கமிட்ட நீதி துறை 2015 முதல் சிறு முனகல் கூட இல்லாது அரசு நடவடிக்கைகளை ஆதரிப்பதில் முதன்மையாக உள்ளது. முன்னாள் உச்ச நீதி மன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா காலத்தில் நடந்த மருத்துவ கல்லூரி வழக்கு, நீதிபதி லோயா மரண (கொலை?) வழக்கு, குஜராத் கலவரம் தொடர்பான வழக்குகள் இந்த போக்கை படம்பிடித்துக் காட்டுகின்றன.

நீதியைத் தொலைத்த நீதிபதிகள்;

அன்றிருந்த நான்கு மூத்த நீதிபதிகள்- ரஞ்சன் கோகோய், குரியன் ஜோசப் , செல்லமேஸ்வர் மற்றும் மதன் பி. லோகுர் – நீதிபதி தீபக் மிஸ்ரா நீதித்துறையை நடத்தும் விதம் இந்திய ஜனநாயகத்தையே ஆட்டுகிறது என்று 2018ல் கூறியது நீதிமன்றங்கள் ஆளுங்கட்சி கண்ணசைவில் செயல்படுகின்றன என்பதை உலகிற்கு காட்டியது.

அதைவிட ஆச்சரியமாக தீபக் மிஸ்ராவிற்கு பின் பொறுப்பிற்கு வந்த நீதிபதி . ரஞ்சன் கோகோய் உறையிலிட்ட கடித நடைமுறைகளை (sealed cover jurisprudence) அனுமதித்து ரபேல் பேர வழக்கில், சி.பி.ஐ இயக்குனர் வழக்கு , தேர்தல் பத்திர வழக்குகளில் அரசின் ஊதுகுழலாக மாறி, இயற்கை நீதிக்கு புறம்பாக நடந்தது அவசரநிலை கால நீதிபதிகளின் செயலைவிட மோசமானது.

நீதிபதிகள் திபக் மிஸ்ரா, ரஞ்சன் கோகாய்

காஷ்மீரை துண்டாடி பிரிவு 370ஐ ரத்து செய்ததை எதிர்த்த வழக்கு, ஆள் கொணர்வு மனு தொடர்பான வழக்கு , குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்த வழக்கு ஆகியவற்றை கிடப்பில் போட்டு, அரசிற்கு அனுசரணையாக நடந்தவிதம் , பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு இவை யாவும் சரணடைந்த  நீதித்துறையை நமக்கு காட்டுகிறது.

இதற்கு கைமாறாக ராஜ்யசபை உறுப்பினர் பதவி ரஞ்சன் கோகோய்க்கு கிடைத்தது. மக்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டிய நீதி துறை தனது கண்காணித்து காக்கும் பொறுப்பை தட்டி கழிப்பதை பல்வேறு தீர்ப்புகளில் நம்மால் காணமுடிகிறது. நீதிபதிகளின் விசுவாசம் அரசியல் சாசனத்தின் மீதல்லாமல் “தர்ம சாஸ்திரங்களின் ” மீது இருப்பதை வழி நெடுக காண முடிகிறது. ஆட்சியரின் நீதிபதி நியமனச் செயல்களின் -Judicial Appointment- மூலம் இதற்கு வழிவகுத்து வருகின்றனர். இதெல்லாம்
அவசர நிலை காலத்தில் கூட இல்லாத தீங்குகள் ஆகும்.

அத்துமீறல்களில் அதிகார வர்க்கம்;

கமிட்டட் ஜுடீசியரி போலவே, கமிட்டட் பியூரோக்ரசி யும் இன்று வளர்த்தெடுக்கப்படுகிறது. அதிகார வர்க்கம் அனைத்து மக்களுக்கும் பொதுவாக செயல்படுவதை மறந்து விட்டு ஆளுங்கட்சியின் சித்தாந்தத்திற்கு “சலாம்” போடும் கூட்டமாக அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர் . இந்தப்போக்கு கடந்த ஒன்பதாண்டுகளாக Reward and Punishment பாலிசி மூலம் மோடி அரசால் வார்த்து எடுக்கப்படுகிறது.

இவர்கள் ஆளுங்கட்சியின் அத்துமீறல்களுக்கு துணைபோவதோடு, பொய்களை பரப்பியும் தவறான தகவல்களை, புள்ளிவிவரங்களை அளித்தும் உண்மையை மூடி மறைக்கின்றனர். வெளிப்படைத் தன்மை மறைந்து அரசின் செயல்கள் அனைத்தும் மர்மமாக , ரகசியமாக நடைபெற வழி வகுத்துள்ளது.

அடிமைக் கூடாரங்கள்;

சுயாதீன அமைப்புகளான தேர்தல் ஆணையம் சி ஏ ஜி , சி வி சி , மனித உரிமை ஆணையம், செபி போன்ற அமைப்புகள் ஆளுவோரால் பல் பிடுங்கப்பட்டு ” ஆமாம் சாமி” களால் அல்லது முதுகெலும்பு இல்லாதாரால் இட்டு நிரப்பப்பட்டு, இன்று அடிமைக் கூடாரமாக காட்சி அளிப்பதை அனைவரும் அறிவர் .

இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி ஆணையம், பாட புத்தக ஆணையம் ஆகியவற்றில் இந்து பெரும்பான்மைவாதிகளை ஆளும் கட்சி சித்தாந்த அடிவருடிகளை கொண்டு நிரப்பிவருவது சத்தமில்லாமல் நடந்தேறுகிறது.

ஒன்றிய பாதுகாப்பு சக்திகளான  பி.எஸ்.எஃப் , சி.ஆர்.பி.எஃப், போன்றவற்றின் தலைமை பொறுப்புகள் மதச்சாயத்தை தூக்கிப் பிடிப்பவர்களுக்கு தரப்படுகிறது. அங்கு கொடுக்கப்படும் புதிய விளக்கங்கள் இந்திய இறையாண்மையை மதப்பெரும்பான்மையுடன் இணைத்து அறிவுறுத்தப்படுகிறது. சிறு பான்மை மக்கள் மீதும், தலித் மற்றும் பழங்குடி மக்கள் மீதும் விரோதம் பாராட்டுவதை ஊக்குவிக்கும் விதத்தில் பயிற்சிகள், அறிவுறுத்தல்கள் கொடுக்கப்படுகின்றன.

இப்படி ஒட்டுமொத்தமாக நீதித்துறை, அதிகார வர்க்கம், பாதுகாப்பு படைகள் , பல்கலை கழகங்கள், அறிவுசார் அமைப்புகள் அனைத்தையும் இந்து பெரும்பான்மை வாதத்தின் நாற்றங்கால்களாக மாற்றி வருகிறது மோடி அரசு . எந்த சத்தமும் இல்லாமல், எந்த அறிவிப்பும் இல்லாமல் உரிமைகள் பறிக்கப்படுகின்றன, கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. கேள்வி கேட்போர் சிறையில் அடைக்கப்படுகின்றனர். இன்று ஜனநாயகமும், அரசியல் சாசனமும் சிதைக்கப்படுகிறது. உரிமைகள் மறுக்கப்படுகின்றன. உண்மைகள் குழி தோண்டி புதைக்கப்படுகின்றன. இந் நிலையோடு ஒப்பிடும் பொழுது, அவசரகால அத்து மீறல்கள் எல்லாம் சிறுபிள்ளை விளையாட்டு என்றே கூற வேண்டும்.

ஆர்.எஸ்.எஸுன் ஆக்டோபஸ் கரங்கள்;

இந்திராவிற்கு அரசு எந்திரம் தவிர, அன்று ஆதரவாக இருந்தது சஞ்சய் காந்தி தலைமையிலான இளைஞர் காங்கிரஸ் பட்டாளம் மட்டுமே.

ஆனால், இன்று சற்றே எண்ணிப்பாருங்கள், மோடிக்கு ஆதரவாக ஆக்டோபஸ் போல் பல்லாயிரங்கரம் கொண்ட ஆர் எஸ்.எஸ்., விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தள் போன்ற பல்வேறு சங்கி அமைப்புகள் இன்று களத்தில் உள்ளனர். இவர்கள் சட்டத்தை கையிலெடுத்துக் கொண்டு “நீதி”களும் வழங்குகின்றனர்.


ஊடகத்துறையிலும், சமூக வலைத்தளங்களிலும் மோடி பக்தர்கள் மாற்றுக் கருத்துக்களை இருட்டடிப்பு செய்ய, உண்மையைக் கூறுவோரை  தாக்க, பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றனர் .ட்ரோல் ஆர்மி, வாட்ஸ் அப் வாரியர்ஸ் என்று அழைக்கப்படும் இந்துத்துவ கூலிப் படைகள் செய்யும் அட்டகாசத்தை அமெரிக்காவின் ” “வாஷிங்டன் போஸ்ட்” தோலுரித்துக் காட்டியுள்ளது.

அதிகாரமற்ற அமைச்சரவை;

காபினெட் என்றழைக்கப்படும் அமைச்சரவை அதன் சாரத்தை இழந்து தலைமை அமைச்சரின் அலுவலக தொங்குசதையாக மாற்றப்பட்டுள்ளது. அதிகாரங்கள் ஒரே மனிதரிடம் குவிக்கப்பட்டு, பாராளுமன்றமும், அதன் நடைமுறைகளும் பந்தாடப்படுகிறது. யார், யாருக்கு பதில் கூற வேண்டும் என்ற விவஸ்தையே இன்று இல்லை.

நீதியை வளைப்பது , தீர்ப்பு சாதகமாக இல்லாவிட்டால் அதை உதாசீனம் செய்து அவசரசட்டங்கள் இயற்றுவது ( புது தில்லி சீரமைப்பு சட்டம், தேர்தல் ஆணைய நியமன சட்டம், அமலாக்கத்துறை இயக்குனர் நியமனம்) போன்றவையெல்லாம் இந்திராவும் செய்யத் துணியாத செயல்கள்.

இறுதியாக இந்திரா காந்திக்கு மனமாச்சரியங்கள், ஏதேச்சதிகார பண்புகள் இருந்தது, ஆனால் மதச்சார்பு இருந்ததில்லை, பெரும்பான்மைவாதத்தை ஒருபோதும் ஏற்றுக் கொண்டவரல்ல அவர். மக்களை சமயத்தின் அடிப்படையில் பிளவு படுத்தி அரசியல் ஆதாயம் அடைந்தவருமல்ல.

ஆனால், இன்று இந்திய அரசியல்அமைப்பையே, இந்திய ஜனநாயக செயல்பாட்டையே சிறுமைப்படுத்தி, சின்னாபின்னமாக்கி ஒரு இந்து பெரும்பான்மை ஆளுமையை நிலைநாட்ட இன்றைய ஆட்சியாளர்கள் எடுக்கின்ற  பல்வேறு செயல்கள் நம்மை இருண்ட காலத்திற்கு இட்டுச் செல்கின்றன.

ஒற்றை ஆட்சியை நோக்கிய பயணமா?

அரசியலரங்கில் பாஜவைத் தவிர, ஏனைய கட்சிகளை ஒழித்துக்கட்ட விரும்பும் மோடி அரசு பாராளுமன்ற ஜனநாயகத்தை சிதைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஒற்றை ஆட்சி முறை நோக்கி, பயணிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.
ஒரே தேசம், ஒரே தேர்தல், ஒரே மொழி, என்பவை பாரதம் என்ற தேசத்திற்கான ‘ராஜ பாட்டைகளாக’ உருவெடுத்துள்ளன. ஜனநாயகத்தையும், சமத்துவத்தையும், சம நீதியையும் விற்றுவிட்டு,  பழமை நிறைந்த பாரதத்தை நோக்கி நடைபோட இந்தியர்கள் தயாரா? என்ற கேள்விக்கு ”இல்லை” என்ற பதில் எப்போது வரும்?

அன்றைக்கு இந்தியாவை மீட்க காந்தியவாதி ஜெயப்பிரகாஷ்  நாராயணனை காலம் வழங்கியது. இன்றைக்கு யார் எதிர்கட்சிகளை ஒன்றிணைத்து பாஜகவை வீழ்த்தும் மையப் புள்ளியாக இருக்க போகிறார் என்பதை காலம் தான் தீர்மானிக்கும்.

கட்டுரையாளர்;ச.அருணாசலம்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time