வித்தியாசமாக எடுக்கப்பட்ட வெப் தொடர்!

-  பீட்டர் துரைராஜ்.

சட்டம், வாதங்கள், நீதிமன்றம் என்ற பின்னணியில் விதவிதமான வழக்குகளை எடுத்து கொண்டு, அதில் நீதிக்கான போராட்டத்தை விறுவிறுப்பாக காட்டும் இது போன்ற வித்தியாசமான கதைக் களங்களை எடுப்பதே மகிழ்ச்சியளிக்கிறது. அதை நாடகத்தனமில்லாமல் யதார்த்தமாகவும், சுவாரஷ்யமாகவும் எடுத்துள்ளது வியப்பளிக்கிறது!

இயக்குனர் ஷெபாலி பூஷன் இயக்கத்தில் அமேசான் பிரைமில் வெளிவந்துள்ள பத்து எபிசோடுகள் கொண்ட வெப் தொடர் தான் ‘Guilty Mind’. ஒவ்வொரு எபிசோடிலும், முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்படுவது வெகு சுவாரஷ்யமாக எடுக்கப்பட்டுள்ளது.

வழக்கறிஞர்கள் தீபக் ராணா மற்றும் கஷாஃப் குவாஸ் கதாபாத்திரத்தில் வருண் மித்ரா மற்றும் ஷ்ரியா பில்கோன்கர் ஆகியோர் வெகு நேர்த்தியாக நடித்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் தொழில் போட்டியுடன் கூடிய காதல், ரொமான்ஸ் என கதைக்குள் தென்றலாய் காதலை நுழைத்து ரசனையை கூட்டி உள்ளார் இயக்குநர்.

கொலை, கொள்ளை, மோசடி, பாலியல் வன்முறை போன்ற குற்றங்கள் எதுவாக இருந்தாலும், அதைச் செய்வதற்கு, ஒருவருக்கு காரணம் இருக்க வேண்டும். இதனை  ‘mens rea’ என்று சட்டத்தில் கூறுவார்கள். இந்த லத்தீன் வார்த்தையை  guilty mind என்று  ஆங்கிலத்தில் சொல்லலாம். இதற்கு  குற்றமனம் என்பது பொருளாகும். இந்த குற்ற மனநிலையை நிரூபிக்கவில்லை என்றால், கொலையே நடந்தாலும்  குற்றவாளி என ஒருவரை நீதிமன்றம் கருதாது. அமேசானில் இப்போது ஓடிக்கொண்டிருக்கும் இந்தித்தொடர் guilty minds. நீதிமன்ற நடவடிக்கைகளை யதார்த்தமாக இந்தத் தொடர் காட்சிப்படுத்துகிறது. சட்டவாதத்திற்கும், அறவியலுக்குமான விவாதமாகக் கூட இதை நாம் பார்க்க முடியும்.

கல்லூரி மாணவன் ஒருவன் டாக்சியில் பயணித்து, அதன் ஓட்டுநரை மூர்க்கமாக குத்தி கொலை செய்துவிடுவான். அந்த இளைஞனுக்கும் ஓட்டுநருக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.  வீடியோ விளையாட்டுகளை தொடர்ந்து விளையாடி, ஒருவித மயக்கநிலையில் நடந்த சம்பவம் இது. எனவே இவன் அனுதாபத்திற்கு உரியவன் என்று அவனுக்காக நீதிமன்றத்தில் வாதிடுகிறாள் அவளது வழக்கறிஞரான கஷாப் க்வாசி.  குற்றவாளி மீது நமக்கு அனுதாபம் வருகிறது. அவனது பெற்றோர்களைப் பார்க்கையில் வருத்தம் ஏற்படுகிறது. முதல் வழக்காக இது வருகிறது. இதில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட 50 நிமிடங்கள் செல்கிறது. ஒவ்வொன்றிலும் ஒரு வழக்கு பேசப்படுகிறது. ஆரம்பத்தில் சற்று மெதுவாகப் போனாலும், ரசிக்கும்படியாக வழக்குகள் வருகின்றன. நமக்கு சட்டம் குறித்த புரிதலை இது கொடுக்கும்.

இந்தத் தொடரின் மையச்சரடாக ஒரு கொலை வழக்கு தொடர்ந்து வருகிறது. மிகுந்த ஆராய்ச்சிக்குப் பிறகு யதார்த்தத்தை ஒட்டி எழுதப்பட்ட கதை. சினிமாத்தனம் சிறிதும் இல்லாத வகையில் நீதிமன்றக் காட்சிகள் வருகின்றன.

இதில் வரும் கதாநாயகியான கஷாப் சட்டக் கல்லூரியில் படிக்கும்போதே சிறை சென்றவள். சோசலிச எண்ணம் கொண்டவள். உச்சநீதிமன்ற நீதிபதியின் மகள். அவள் எடுக்கும் வழக்குகள், கிராமத்தின் தண்ணீரை உறிஞ்சி குளிர்பானம் தயாரிக்கும் நிறுவனத்திற்கு எதிராக, மகப்பேறு விடுப்பு கொடுப்பதைத்  தவிர்க்க திருமணமான பெண்களை வேலைக்கு எடுக்காத நிறுவனத்திற்கு எதிராக உள்ளன. இந்தப் பாத்திரத்தில் ஷ்ரேயா பில்கனோகர் நடிக்கிறார்.

எதிராக வழக்கு நடத்தும்  தீபா ரானா என்பவன் ஒரு பிரபல சட்ட நிறுவனத்தின் வழக்கறிஞர். சாதாரணக் குடும்பத்தில் இருந்து மேலே வந்தவன். வழக்கில் தன் கட்சிக்காரர் வெற்றி பெறுவதே குறிக்கோள் என்பதை நினைக்கும் ஒருவன். இவனும், கஷாபும் எதிர் எதிராக பெரும்பாலும் வாதாடுகிறார்கள். இருவரும் ஒரே கல்லூரியில் படித்தவர்களும் கூட. இவர்களுக்கு இடையேயான வாதங்கள் நன்றாக உள்ளன.

கஷாப் மீது தீபக்கிற்கு ஈர்ப்பு உள்ளது. ஆனால், இவளது கறான பார்வை, இளமைக் காலத்தில் இவள் மீது இவரது குடும்ப உறவினர் ஒருவராலேயே நடந்த சீண்டல் போன்றவை இவர்கள் உறவைப் பாதிக்கின்றன. உச்சநீதிமன்ற நீதிபதியான  இவளுடைய தந்தையிடம், வலதுசாரி அரசியல்வாதி ஒருவரின் நீண்ட கால கொலை வழக்கு ஒன்று வருகிறது. அதன் முடிவு பாரதூரமான அரசியல் விளைவுகளை ஏற்படுத்தும். இவர் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவதூறு பரப்புவது எளிதாக உள்ளது. என்ன நடந்தாலும்  வழக்கின் தன்மைக்கேற்ற தீர்ப்பு வழங்குவதில் அவர் உறுதியாக இருக்கிறார். ஆனால் அவரது மகனுடைய நடத்தை அவருக்கு  நெருக்கடியைத் தருகிறது. இந்த சம்பவங்கள் எதார்த்தமாக வருகின்றன. இதற்கு IMDb  7.2 புள்ளி கொடுத்துள்ளது.

தீபக் ராணா இருக்கும் சட்ட நிறுவனத்தில்,  இவனோடு இருக்கும் சக வழக்கறிஞர் இவனை விரும்புகிறாள். இவள் வெளிநாட்டில் படித்தவள். அந்த சட்ட நிறுவனத்தின் குடும்பத்தைச் சார்ந்த பங்குதாரர் கூட. அவளுடைய வாக்குரிமை இவனது முன்னேற்றத்தை பாதிக்குமா ? அந்த நிறுவனத்திற்குள் பணிபுரிபவர்களிடையே நிலவும் போட்டி, பார்வை, உள்ளரசியல் போன்றவையும் வருகின்றன. பெரிய நிறுவனம் என்பதால் முழுக்கவும் அறத்திற்கு எதிராக  இருக்கும் என்பதும் அவசியமில்லை. ஷெபாலி பூஷன், ஜெயந்த் திகம்பர், சோமால்கர் இணைந்து இயக்கியுள்ளனர். வசனங்கள் இயல்பாக உள்ளன.

பேசப்படும் வழக்குகள் வித்தியாசமாக உள்ளன. இவை  பல்வேறு நீதிமன்றங்களில் நடக்கின்றன. ஒரு இயக்குனர் அறிமுக நடிகையிடம் பாலியல் வன்புணர்வு செய்கிறார். விருப்பம் இல்லாவிட்டாலும் கட்டாயத்தால் அதற்கு உடன்பட்ட நடிகை கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகிறார். ஐந்து வருடங்கள் கழித்து, இவள் பிரபலமாகிவிடுகிறாள். இவளுக்கு ஒரு சமூக ஏற்பு ஏற்பட்டுவிடுகிறது. இப்போது அவர் மீது இந்த நடிகை வழக்கு தொடுக்க முடியுமா? அப்படி தொடுத்தால், அதற்கு வெற்றி கிடைக்குமா? என்பதற்கு இந்த எபிசோட் விளக்கமளிக்கிறது.

ஒரு பிரபல பாடகர் பாடியதை, கணிணி மூலம் மாற்றி  எடுக்கப்படும்  பாடலுக்கான உரிமையை பாடகர் கோர முடியுமா ? செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி ஒரு கார் தயாரிக்கப்படுகிறது. அது ஏற்படுத்தும் விபத்திற்கு யார் பொறுப்பு ?  செயற்கை கருத்தரிப்பில் ஆண் குழந்தைக்காக நடக்கும் குற்றங்கள் என்ன ?  பகாசுர கம்பெனியை எதிர்த்து வழக்கு நடத்தும் சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன ?  அத்தகைய நிறுவனங்களையும், கிராம விவசாயிகளையும் ஒரே தட்டில் பார்ப்பது  சரியா ?  தான் பணிபுரியும் நிறுவனம் மக்களுக்கு எதிராக இருந்தால் தென்படும் சிக்கல்கள் எத்தகையவை !

செயலி மூலம் உறவுகளைத் தேடும் இளைஞர்களுக்கு, அவர்கள் விரும்பும் விதத்தில் பதில் வருகிறது. ஒரே மாதிரியான பெண்களின் பதில் வருவதைக் பார்த்த பிறகு, ஏமாற்றப்பட்டது தெரியவருகிறது. இப்போது ஏமாந்து போன இளைஞர்கள் வழக்குத் தோடுத்தால் அவர்களுக்கு என்ன நிவாரணம் கிடைக்கும். வழக்கின் போக்கை மாற்றுவதில் ஊடகங்களுக்கு பங்கு உள்ளதா இல்லையா? அதை எப்படி பயன்படுத்திக் கொள்வது. இப்படி பல வழக்குகள் வருகின்றன.

இந்த தொடரின் இரண்டாம் பாகம் விரைவில் வெளிவரவுள்ளது. ‘தற்போது இந்தியில் நல்ல படங்கள் வருகின்றன’ என்று திரைவிமர்சகரான யமுனா ராஜேந்திரன் குறிப்பிட்டது இந்த தொடரை பார்க்கும்போது நினைவுக்கு வந்தது.

விமர்சனம்;  பீட்டர் துரைராஜ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time