உணவு வணிகமானது பசி தீர்க்கும் புனிதப்பணி! ஆனால், வணிகப் பேராசையில் இன்றைக்கு தரமற்ற உணவகங்கள் அதிகரித்துள்ளன. எதையெல்லாம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டுமோ, அவை இன்றைக்கு அத்தியாவசியமாக மாறியுள்ளன! ஆகவே, அடிக்கடி ஹோட்டலில் சாப்பிடுபவர்கள் சிலவற்றை கவனத்தில் கொள்வீர்களாக;
தரமற்ற உணவை சாப்பிட்டதால் சில இடங்களில் வாந்தி, மயக்கம் மருத்துவமனையில் சேர்ப்பு மற்றும் ஒரு சில உயிரிழப்புகளை அடுத்து, சமீப காலமாக உணவுத் துறை அதிகாரிகள் ஹோட்டல்களுக்கு ‘விசிட்’ அடித்து உணவுத் தரத்தை ஆய்வு செய்து அக்கறை காட்டி வருகிறார்கள்!
உணவுத் துறை அதிகாரிகள் என்பவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் கண்ட்ரோலுக்கு வரும் உணவகங்களில் பொதுவாக எந்த சோதனையிலுமே ஈடுபடாமல், மாதாமாதம் கையூட்டு வாங்கி செல்பவர்களாகவே இருந்தனர்! மக்கள் எவ்வளவு புகார் கொடுத்தாலும், இவர்கள் சட்டை செய்ய மாட்டார்கள்!
ஆனால், தரமற்ற உணவகங்களால் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்படும் செய்திகள் அதிகமாக வரத் தொடங்கியதை அடுத்து, உணவகங்களில் சோதனைகள் நடத்தி நடவடிக்கைகள் எடுக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இந்த வகையில் தற்போது சுமார் 19,000 உணவகங்களில் சோதனைகள் நடத்தியதில், சுமார் 2,000 க்கு மேற்பட்ட தரமற்ற உணவகங்களை நடத்தியுள்ளனர் என நோட்டீஸ் வழங்கி அபராதங்களும் விதித்து உள்ளனர். இதில் சுமார் 600 உணவகங்களை சீல் வைத்து மூடியுள்ளனர். இத்தனை ஆயிரம் கிலோ இறைச்சியை கீழே கொட்டினோம். இவ்வளவு உணவை கைப்பற்றி அழித்தோம் என்றெல்லாம் சொல்கிறார்கள். இத்தனை நாட்களாக இப்படி கீழே கொட்ட வேண்டியதைத் தான் மக்கள் தேடிச் சென்று தங்கள் வயிற்றில் கொட்டி வந்தனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆனால், நடவடிக்கை எடுக்க வேண்டிய உணவகங்களும், மூடி சீல் வைக்க வேண்டிய உணவகங்களும் மிக அதிகம் உள்ளன. ‘நாங்கள் நடவடிக்கை எடுத்தோமாக்கும்’ எனக் கணக்கு காட்டுவதற்காக வெறும் 12 சதவிதமான உணவகங்களை மட்டுமே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர் எனத் தெரிய வருகிறது.
அசைவ உணவகங்கள் என எடுத்துக் கொண்டால், மொத்தமாக இறைச்சியை வாங்கி வைத்து நாள் கணக்கில் அதை ரெப்ரிஜிரேட்டரில் வைத்து சமைக்கும் உணவகங்களே அதிகம் உள்ளன! ஒரு சில ஹோட்டல்களில் ஒரு மாதம் வரைக்கும் இதை வைத்து பேணுகிறார்கள்! இது உடல் நலத்திற்கு மிகவும் கேடானது.
காரணம், இறைச்சி என்பது இறந்த விலங்குகளின் சடலமாகும். அதனை எவ்வளவுக்கு எவ்வளவு சீக்கிரமாக சமைத்துவிட முடியுமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நல்லதாகும். நாட்கள் செல்லச் செல்ல எவ்வளவு தான் பிரிட்ஜில் வைத்தாலும், அது கெட்டுப் போகவே செய்யும். அதை நோய்க்கிருமிகள் ஆக்கிரமிக்கவே செய்யும்.
பல ஹோட்டல்களிலும் இவை கெட்டுப் போனது தெரியாமல் இருக்க, வாசனை அயிட்டங்களையும், மசாலாவையும் அதிகமாக சேர்த்து சமைக்கின்றனர். இதனால் சாப்பிடுபவர்கள் எளிதில் கண்டுபிடிக்க முடியாது. இதன் விளைவுகள் சாப்பிட்டவர்களுக்கு உடனே தெரியாவிட்டாலும், தீடிரெனத் தெரிய வரும் என்றே மருத்துவர்கள் கூறுகிறார்கள்!
இதே போல கெட்டுப் போன ஆயிலைக் கீழே கொட்டாமல் பயன்படுத்தும் முறை பல உணவகங்களில் நடக்கிறது. கெட்டுப் போன ஆயில் என்றால், குறிப்பிட்ட அளவுக்கு ஒரு ஆயிலைக் கொதிக்க வைத்து பூரியோ, பஜ்ஜியோ அல்லது அப்பளமோ சுட்ட பிறகு, அந்த எண்ணெய்யை கண்டிப்பாக கீழே கொட்டி விட வேண்டும். அதை தோசை ஊற்றுவதற்கோ, தாளிப்பதற்கோ பயன்படுத்தக் கூடாது. ஆனால், பல உணவகங்கள் இதை கடைபிடிப்பதில்லை. இன்னும் சில உணவங்கள் இந்த ஆயிலை ரோட்டோரக் கடை நடத்துபவர்களுக்கு குறைந்த விலைக்கு விற்றுவிடுகிறார்கள். ‘இந்த கெட்டிப் போன எண்ணெய் தான் புற்று நோய்க்கு அடித்தளமிடுகிறது’ என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்!
இவை தவிர, கலப்பட பொருட்களை, தரமற்ற மசாலா பொருட்களை பயன்படுத்தும் உணவங்களும் உள்ளனர். நெய் பயன்படுத்தி செய்ய வேண்டிய இனிப்புகளையும், பொங்கல் போன்றவற்றையும் டால்டாவைப் பயன்படுத்திவிட்டு குறைவாக நெய்யை பயன்படுத்தி நெய்யிலே செய்தது என விளம்பரப்படுத்துவர்கள் மிக அதிகம். ’மிகப் பிரபலமான அல்லது மிக மதிப்பை பெற்ற உணவகங்களும், ஸ்வீட் ஸ்டால்களுமே கூட இதற்கு விதிவிலக்கில்லை’ என்கிறார்கள். என்ன, டால்டா பயன்படுத்தும் சதவிகித அளவு வேண்டுமானால், வேறுபடலாம் என்கிறார்கள்! டால்டா என்பது மாரடைப்புக்கு உத்திரவாதம் அளிக்கக் கூடியது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.
அவ்வளவு ஏன்? தரமான தேனீர் குடிக்க விரும்பினால், அதுவே இன்று ஒரு சவால் தான்! பல தேனீர் கடைகளில் கலப்பட தேனீர் தூளைத் தான் பயன்படுத்துகின்றனர். பல தேனீர் கடைகளில் தரமான டீத்தூள் கொஞ்சம், தரமற்ற டீத்தூள் கொஞ்சம் என கலந்து பயன்படுத்துகின்றனர். உழைக்கும் தொழிலாளர்களின் ஒரே ஆறுதலாக இருக்கும் தேனீர் தூளில் மரத்தூளையும், சாயத்தூளையும் கலந்த தேனீர் தயாரிக்கும் போது அதைக் குடிப்பவர்களுக்கு தொண்டை புற்று நோய் ஏற்படுகிறது என மருத்துவ ஆய்வுகள் சொல்கின்றன. எனினும் சரிபாதிக்கு மேற்பட்ட தேனீர் கடைகளில் தரமற்ற டீத்தூளைத் தான் பயன்படுத்துகின்றனர்.
இது தவிர பயன்படுத்தவே கூடாத ‘வினிகேர்’ என்ற ஒன்றை சோறு வெள்ளைவெளென்று இருப்பதற்காக பயன்படுத்துகின்றனர். சில ஹோட்டல்களில் அதிகமாக உணவு எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காக சுண்ணாம்பு போடுகின்றனர். இதனால் சாப்பிடுபவர்களுக்கு ‘அல்சர்’ ஏற்படுவது பற்றி இவர்கள் பொருட்படுத்துவதில்லை.
தோசை மாவு புளித்து போனதென்றால், அதைக் குப்பையில் கொட்டுவதே சாலச் சிறந்ததாகும். ஆனால், பெரும்பாலான உணவகங்களில் அப்படி கொட்டுவதில்லை. அதில் சோடா மாவு கலந்து தோசை சுட்டுவிடுகிறார்கள்! இது வாயு பிரச்சினைகளுக்கு வாய்க்கால் போட்டு கொடுக்க வல்லதாகும்
அடுத்ததாக சாம்பார், குழம்பு மற்றும் கார வகைகளை செய்வதற்கு அஜிணமோட்டோவை பயன்படுத்துகின்றனர். இது மிகக் கெடுதலாகும். அதாவது, எம்.எஸ்.ஜி எனப்படும் அஜினமோட்டோ எனும் ‘மோனோ சோடியம் குளுட்டமேட்’. என்பது உணவுக்குச் சுவை கூட்டும் ஒரு வேதியல் பொருளாகும். ஆரம்பத்தில் வாடிக்கையாளர்களைக் கவர வேண்டும் என்னும் வணிக நோக்கத்தில் அசைவ உணவுகளில் மட்டுமே இதை கலந்தார்கள். இன்றோ, இதை பயன்படுத்தாத உணவே இல்லை எனுமளவுக்கு சகலத்திலும் சேர்க்கிறார்கள். இதில், சாதாரண உணவகத்தில் இருந்து பைவ் ஸ்டார் ஹோட்டல் வரை விதிவிலக்கில்லை எனலாம். ஆஸ்துமா, சுவாசப் பிரச்சினை, செரிமானப் பிரச்சினை, தூக்கமின்மை, நெஞ்சுவலி, அல்சர், மூலநோய், குழந்தைப்பேறின்மை உடல் பருமன், நீரிழிவு, உயர் ரத்தஅழுத்தம், மாரடைப்பு, குடல் புற்றுநோய் என பலவற்றுக்கும் அஜிணமோட்டோ வித்திடுகிறது என பல மருத்துவ ஆய்வுகள் வந்துவிட்டன!
Also read
பேக்கிங் செய்யப்பட்ட பிராண்டண்ட் சிப்ஸ்களில் சோடியம் பை கார்பனேட், ஹைட்ராகிஷன் சல்பேட் ஆகியவை கலக்கபடுகின்றன. இவை அலர்ஜி. சளி.ஆஸ்த்துமா, கேன்சர் ஆகியவற்றுக்கு வித்திடும். பேக்கரி அயிட்டங்களில் சேர்க்கப்படும் ஜாம், ஜெல்லி, சீஸ் போன்றவற்றில் ரசாயன பென்சோட் உள்ளது. இது ஒரு பூச்சிக் கொல்லி. இது சிறுநீரகத்தை பாதிக்கும்.
எப்போதாவது ஹோட்டல் என்றால் தவறில்லை. ஆனால், அடிக்கடி ஹோட்டலில் சாப்பிடுபவர்களுக்கு நாம் சொல்வது ஒன்று தான்; நீங்க ஹோட்டல்களில் சாப்பிடுவது உங்களுக்கான விருந்தல்ல, அது காலனுக்கு நீங்கள் தரும் விருந்தாகும்!
தொடர்ந்து எடுக்கும் ஹோட்டல் உணவால், சிறுகுடல் சின்னாபின்னப்பட, பெருங்குடல் பிதுங்கித் திணற, கல்லீரல் கதிகலங்க, மண்ணீரல் மன்றாட, எதுக்களிப்பால் நெஞ்சு நிலை தடுமாற வழி வகுத்துக் கொள்கிறீர்கள்.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
Leave a Reply