அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு ஏற்றமா? ஏமாற்றா?

சாவித்திரி கண்ணன்

இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஜனநாயகத்தின் பெயராலும், சமூக நீதியின் பெயராலும் நடக்கும் தமிழகத்தில் நடக்கும் படு அயோக்கியத்தனமான ஒன்று தான் 7.5% உள் ஒதுக்கீடாகும்! இதை ஆதரிக்கும் அரசியல் கட்சிகள் கள யார்த்தம் தெரியாமல் கண்மூடித்தனமாக அரசு பள்ளி ஏழை,எளிய மாணவர்கள் பலன்பெற வேண்டும் என்ற கோணத்தில் ஆதரிக்கின்றார்களேயன்றி, ’’ உண்மையிலேயே பெற வாய்ப்புள்ளதா?’’ என யோசிக்கவேயில்லை!

பொதுவாகப் பார்த்தால் கவர்னரின் காலதாமதம் நமக்கு ஒரு பெரும் கோபத்தைத் தான் ஏற்படுத்தும்! ஆனால், நாம் கோபப்பட வேண்டியது கவர்னரின் மீதல்ல! கல்வித்தரத்தை அரசு பள்ளிகளில் கழிசடையாக்கி வைத்துள்ள நம் ஆட்சியாளர்களின் மீது தான்!

அரசு பள்ளிகளில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் பல ஆண்டுகளாகப் பூர்த்தி செய்யப்படாமல் உள்ளது. அரசு பள்ளிகளின் சுகாதாரச் சூழல்களோ படுமோசம்! குடிதண்ணீர் கிடையாது,கழிவறை வசதியில்லை! தரமான கல்விக்கு வாய்ப்பற்ற நிலை! இதையெல்லாம் மறைக்க, திசை திருப்பத் தான் இந்த 7.5% அறிவிப்பு!

நான் வைக்கின்ற கேள்வி இது தான்! ப்ளஸ் டூ முடித்துவிட்டு வரும் மொத்த மாணவர்களில் 41% அரசு பள்ளி மாணவர்கள் எனும் போது, அவர்களில் 7.5% மட்டும் மருத்துவ கல்விக்கு வாய்ப்பு பெற்றால் போதும் என்று எப்படி நீங்கள் முடிவுக்கு வந்தீர்கள்?

அதென்ன, மருத்துவ கல்வி மட்டும் தான் உசத்தியா? உயர் பொறியியல் படிப்புக்கான JE எனப்படும் ஐ.ஐ.டிக்கும், என்.ஐ.டிக்குமான நுழைவுத் தேர்வுக்கு ஏன் தரவில்லை!

NATA  எனப்படும் சி.ஏ எனப்படும் ஆடிட்டர் படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு ஏன் தரவில்லை?

CLAT எனப்படும் ஆர்கிடெக்சர் படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு ஏன் தரவில்லை?

சட்டக் கல்விக்கு ஏன் தரவில்லை? இவை யாவற்றிலுமே அரசு பள்ளி மாணவர்கள் மிகவும் பின் தங்கித்தானே உள்ளனர். நாளைக்கு யாராவது இதைச்  சொல்லி வழக்கு போட்டால் கோர்டில் நிற்காதே…! உணர்ச்சிகரமான அரசியலை ஒதுக்கி வைத்து யார்த்தங்களைப் பார்ப்போம்.

அந்த நிலையில் இந்த 7.5% உள் ஒதுக்கீடு அந்தரங்கத்தில் தொங்கவிடப்படும்! மற்றொரு பக்கம் மற்ற மாநிலங்களில் இல்லாததைச் சுட்டிக் காட்டி மத்திய அரசும் நிராகரிக்கும்! காலப் போக்கில் நீட்டைப் போல இந்த பிரச்சினையும் நீட்டி இழுத்தவண்ணம் இருக்கும்! இது ஓட்டுபொறுக்கி அரசியலின் வாக்குவங்கியாக மாறும்…!

சட்டசபையில் 110 விதிகளின் கீழ் அவசரச் சட்டமாக விவாதமின்றி கொரானா காலத்தில் கொண்டு வரப்பட்டதே இந்த உள் ஒதுக்கீடு! இந்தியாவில் மற்ற எந்த மாநிலமும் இது போன்ற சட்டத்தைக் கொண்டுவரவில்லை. அரசு பள்ளி மாணவர்களைக் கீழ் நிலையிலும், தனியார் பள்ளி  மாணவர்களை உயர் நிலையில் வைத்தும் ஒரு அரசே  பார்க்குமென்றால், அரசு பள்ளிகளை அரசே கீழ் நிலையில் வைத்திருப்பதை ஒத்துக் கொண்டதாகத் தான் அர்த்தமாகும்! சரியான கல்வியை கற்பித்தால் எல்லா குழந்தைகளும் உன்னத நிலைக்கு உயர்வார்களே!

தற்போது வெறும் 0.15% அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களே மருத்துவக் கல்லூரிக்குள் நுழைய முடிகிறது என்ற நிலையில், அதாவது வெறும் ஒற்றை எண்ணிக்கையிலான மாணவர்களே மருத்துவ வாய்ப்பு பெறுகின்றனர் என்ற சூழலில், சுமார் 300 மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது பெரிய விஷயமாகத் தெரியவில்லையா? இதை எதிர்ப்பதும்,மறுப்பதும் அநீதியல்லவா? என்று கேட்கத் தோன்றலாம்.

# ஏன் உள் ஒதுக்கீடு தந்து தான் அந்த  300  இடங்களை அரசு பள்ளி மாணவர்களுக்குப் பெற்றுத் தர முடியுமா? அரசு பள்ளி மாணவர்களுக்குத் தரமான கல்வி, தகுதி வாய்ந்த ஆசிரியர்கள், சிறப்பான கல்விச்சூழல் ஆகியவற்றை  உத்திரவாதப்படுத்த ஏன் சிறிதளவு கூட முயற்சிக்க மறுக்கிறீர்கள்?

# மருத்துவ கல்விக்கான மாணவனுக்கு பிசிக்ஸ்,கெமிஸ்டிரி,பயாலஜி ஆகிய மூன்று பாடங்கள் தான் முதன்மையானது. பெரும்பாலான அரசு மேல் நிலை பள்ளிகளில் இந்த மூன்று பாடங்களுக்கும் ஆசிரியர்களே கிடையாது. தேர்வுக்கு தயாராகும் மூன்றில் ஒரு மாணவன் ஆசிரியரில்லாமலே தானாக படித்து தேர்வு எழுதுகிறான்.

# நீங்கள் கேட்டுள்ளது நீட் தேர்வில் உள் ஒதுக்கீடு! அரசு பள்ளி மாணவர்களில் எத்தனை பேரை நீட்டுக்கு தயார்ப்படுத்துகிறீர்கள்? இலவச நீட் பயிற்சி மையங்கள் 412  ஏற்படுத்தினீர்கள். அதற்கு தகுதியான ஆசிரியர்களை தரவில்லை! பள்ளிக்கூட ஆசிரியர்களையே பயிற்சி அளிக்க சொன்னீர்கள் 19,355 மாணவர்கள் இதில் பயிற்சி எடுத்தும் ஒருவரைக் கூட உங்களால் வெற்றி பெற வைக்க முடியவில்லை என்றால், இது தான் பயிற்சி மையங்களின் யோக்கியதை! பயிற்சி மையங்களும் பாதி நாட்கள் கூட நடப்பதில்லை! நீங்கள் மாணவர்களை தயார்ப்படுத்தாமல் செய்யும் அழிச்சாட்டியங்களை மறைக்க ஒதுக்கீடு தீர்வாகுமா?

# பெரும்பாலான அரசு பள்ளி மாணவர்கள் தமிழில் தான் நீட் தேர்வு எழுதுகிறார்கள்! ஆனால் அவர்கள் தமிழில் தேர்வுக்கு தயாராகக் கூடிய புத்தகம் எதையும் தமிழக அரசு இது வரை உருவாக்கவில்லை. அரசு பள்ளி  மாணவர்கள் எக்ஸாம் எழுதுவதற்குத் தேவையான மெட்டிரியல்களைக் கூட தரத் துப்புக் கெட்ட நிலையை மாற்ற மனமில்லை. எனில், உள் ஒதுக்கிடு 7.5% என்ன பயன் தரப் போகிறது.

# இந்த 7.5% ஓதுக்கீட்டை அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் என்றில்லாது,அரசு உதவிபெற்று தனியார்கள் நடத்தும் பள்ளிகளுக்கும் என்று விரிவுபடுத்தி உள்ளீர்கள்! ஆக,இதன் பலன்களை இந்த தனியார் நடத்தும் அரசு உதவிபெறும் பள்ளிகள் 90% த்திற்கும் அதிகமாக இந்த ஒதுக்கீட்டின் பலன்களை அறுவடை செய்து விடுவார்கள்! இவற்றில் தற்போது அதிக கல்விக்கட்டணம் தந்து சேரும் ஒரளவு வசதியான வீட்டுப்பிள்ளைகள் தான் படிக்கிறார்கள். இன்னும்  தங்கள் கல்விக்கட்டணத்தை உயர்த்திக் கொள்ள இந்த பள்ளிகளுக்கு இது வரப்பிரசாதமாகும்!

# இந்த உள் ஒதுக்கீடு மூலம் பலன் பெறப்போவது வெறும் 300 மாணவர்கள் தான்! இதில் பெரும்பகுதி அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு போக எஞ்சியுள்ள சில இடங்களை பெரு நகரங்களில் சிறப்பாக செயல்படும் விரல்விட்டு எண்ணத்தக்க அரசு பள்ளி மாணவர்கள் எடுத்துக் கொள்வார்கள்! ஆக, நாம் நினைப்பது போல கிராமப்புறத்தில்  உள்ள அரசுப்பள்ளிகளின் மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு நடைமுறையில் கிடைக்காது! ஏனென்றால்,அவனுக்குத் தான் முக்கிய பாடங்களுக்கே ஆசிரியர்கள் கிடையாதே! மேலும் அவனுக்கு நல்ல பயிற்சியும் தரப்படுவதில்லை! அவன் தமிழில் மட்டுமே எழுத தயாராக இருப்பதால் நீங்கள் தேர்வுக்குத் தமிழில் தயார்படுத்திக் கொள்ளும் புத்தகங்கள் தரவில்லை.

# இதை விட மோசமான ஒரு அம்சம் என்னவென்றால், ஆறாம் வகுப்பிலிருந்து அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தான் இந்த ஒதுக்கீடு என்று அரசு அறிவித்ததால் இந்த ஆண்டு புதிதாக ஆறாம் வகுப்பில் மட்டும் அதிக மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அதாவது ஐந்தாம் வகுப்பு வரை தனியார்ப் பள்ளியில் படித்துவிட்டு, இந்த ஒதுக்கீட்டைப் பெறுவதற்காக மாணவர்கள் வருகின்றனர். இவர்களில் பலர் வசதியான குடும்ப பின்புலத்திலிருந்து வந்துள்ளனர் என தெரிய வருகிறது! ஆகவே, இந்த ஒதுக்கீட்டால், ஏழை, எளிய மாணவர்கள் பலன்பெற முடியாது.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு அரசு பள்ளிகளில் 70 லட்சம் மாணவர்கள் படித்தார்கள்.ஆனால்,தற்போது அது  46 லட்சமாகச் சுருங்கியுள்ளது. அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தின் மீதான நம்பகத்தன்மை வெகுவாக குறைந்து வருவதையே இது துல்லியமாகக் காட்டுகிறது. நம்பகத்தன்மையை மீட்டெடுக்க முயற்சி பண்ணாமல், நீங்கள் ஏன் ஒதுக்கீடு தந்து திசை திருப்ப பார்க்கிறீர்கள்! இந்த உள் ஒதுக்கீடு அரசு பள்ளி மாணவர்களுக்கு சாதகமான அணுகுமுறையல்ல, அவர்களை என்றென்றும் அழுத்திவைக்கச் செய்யும் சதியாகும்! இப்போது சொல்லுங்கள் தேவை உள் ஒதுக்கீடா? உண்மையான அக்கறை கொண்ட தரமான கல்வியா?

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time