அரசியலையே முதலீடாக்கிய ஆகப்பெரும் கார்ப்பரேட்!

-சாவித்திரி கண்ணன்

ஜெகத்ரட்சகன் சொத்து விபரங்கள் இவர் ‘தமிழகத்தின் அதானி’ எனச் சொல்கிறது! திமுகவின் கஜானாவாக அறியப்படும் ஜெகத்ரட்சகன் இனியும் திமுகவில் செல்வாக்குடன் தொடர்வாரா?  பாஜகவை நோக்கி நகர்வாரா? அல்லது பொருளாதார பேரம் நடத்தி பாஜக தலைமையை சரிகட்டிவிடுவாரா..? 

15 க்கு மேற்பட்ட கல்லூரிகள், நட்சத்திர ஹோட்டல்கள், உயர்தர மருத்துவமனைகள், நிலக்கரி சுரங்கம், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, மதுபான தொழிற்சாலை.. என அரசியலையே முதலீடாக்கி மிகப் பெரிய கார்ப்பரேட் ஆன ஜெகத்ரட்சகன் மக்களுக்கு செய்தது என்ன?

ஜெகத்ரட்சகன் சம்பந்தப்பட்ட 70 இடங்களில் ஐந்து நாட்களாக ரெய்டுகள் நடந்தன! இதில், சவீதா கல்லூரியின் பிணவறையில் 19 மூட்டைகள் நிறைய கரன்சிகள் கைப்பற்றப்பட்டதாக பரபரப்பாக வெளியான தகவலும், கிலோ கணக்கில் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக வெளியான தகவலும் எந்த அளவு உண்மை எனத் தெரியவில்லை. வருமான வரித் துறையினர் கைப்பற்றப்பட்ட விவகாரங்களை அதிகமாக கசியவிடவில்லை. அதிகாரபூர்வமாக 4.50 கோடி ரொக்கமும், 2.7 கிலோ தங்கமும், விலை உயர்ந்த வெளிநாட்டு வாட்சுகள் ஏழும் கைப்பற்றப்பட்டதாக பத்திரிகை செய்திகள் சொல்கின்றன.

விழுப்புரம் அருகே பண்டிச்சேரி செல்லும் வழியில் உள்ள வழுதாவூர் என்ற சின்னஞ்சிறு ஊரில் வறுமையுள்ள குடும்பத்தில் பிறந்தவர் தான் ஜெகத்ரட்சகன். மாணவப் பருவத்திலேயே திமுகவில் இருந்தவர். செங்கல்பட்டு மாணவரணியின் செயலாளராக 1971 களில் வலம் வந்த ஜெகட்ரட்சகன் அந்த நாட்களில் திருச்சி செளந்திரராஜனின் அணுக்க உதவியாளராக இருந்துள்ளார்.

எம்.ஜி.ஆர் அதிமுகவை உருவாக்கிய போது, அதிமுகவிற்கு வந்த ஜெகத்ரட்சகன் ஆர்.எம்.வீரப்பனால் அரசியலில் வளர்த்தெடுக்கப்பட்டவர். ஜெயலலிதாவுடன் ஆரம்பத்தில் முரண்பட்டவர் பின்பு சமாதானமானார். பிறகு வீர வன்னியர் பேரவை என வன்னியர் அடையாளத்தை தன்னுடைய அரசியல் துருப்பு சீட்டாக்கினார். இதனால், டாக்டர் ராமதாசை எதிர்கொள்ள கலைஞர் இவரை பயன்படுத்திக் கொள்ள திமுகவில் இணைத்துக் கொண்டார்.

1984 தொடங்கி நாற்பது ஆண்டுகளாக எம்.பி, மத்திய அமைச்சர் போன்ற டெல்லி அதிகாரமையத் தொடர்பை வணிகத்திற்கு பயன்படுத்தி, தமிழகத்தின் மிகப் பெரிய கார்ப்பரேட்டாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். இவர் நடத்தும் கல்லூரிகளில் பேராசிரியர்களுக்கு வாழமுடியாத அடிமாட்டுச் சம்பளம் தான் தந்து கொண்டிருக்கிறார். ஆனால், மாணவர்களிடமோ லட்ச,லட்சமாக நன்கொடையும் கல்விகட்டணமும் பெறுகிறார்.

இவர் நடத்தும் கம்பன் விழா, மார்கழி பெருவிழாக்களில் தமிழறிஞர்கள், புலவர்கள், எழுத்தாளர்களை அழைத்து பேச வைத்து, தன்னையும் புகழ வைத்து  நல்ல சன்மானங்களும், பரிசில்களும், விருதுகளும் தருவார்.

தமிழகத்தின் மிக முக்கிய மதுபான தொழிற்சாலையான எலைட் டிஸ்டில்லரிஸ், ஏ.எம்.பிரவுரிஸ் ஆகியவற்றை காஞ்சிபுரம் மாவட்டம் தேவரியம்பாக்கம் மற்றும் இளையனூர் வேலூரில் நிறுவியுள்ளார்!

2019 ஆம் ஆண்டு சில்வர் பார்க் இண்டர்நேஷனல் என்ற சிங்கப்பூர் நிறுவனம் இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு வர்த்தகத்தில்  ரூ.27,000 கோடி முதலீடு செய்வதாக இலங்கை முதலீட்டு வாரியம் அறிவித்தது. அதன் இயக்குநர்களாக சென்னையைச் சேர்ந்த ஜெகத் ரட்சகன், நிஷா, ஜெகத்ரட்சகன் சந்தீப் ஆனந்த், ஜெகத்ரட்சகன் அனுசுயா உள்ளிட்டோர் இருப்பதாக பதிவு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இயக்குநர்களில் ஒருவரான சந்தீப் ஆனந்த்  ஜெகத்ரட்சகனின் மகன், நிஷா அவரது மகள், அனுசுயா அவரது மனைவி ஆவார்.

இப்படி அரசியலையே வணிக முதலீடாக்கி,

ஒரு பக்கம் சமூக நீதி பேசும் திராவிட அரசியல்,

மறுபக்கம் ஆழ்வார் மையம் என்ற ஆன்மீக முகம்,

வன்னியர் என்ற சாதி அரசியல்,

மற்றொரு பக்கம் கல்வி தொடங்கி சாராயம் வரை சகல தொழில்களிலும் முதலாளி..

என சுயநலத்தோடு 40 ஆண்டுகளாக வலம் வந்துள்ளார். இப்படியான ஒருவரால் எப்படிமக்கள் நலன் சார்ந்து சிந்திக்கவோ, திட்டமிடவோ,செயல்படவோ முடியும். அரசியலில் இருந்தும், பொது வாழ்வில் இருந்தும் அப்புறப்படுத்தப்பட வேண்டிய நபரான இவர் திமுகவுக்கு தேர்தல் நேர கஜானாவாக இருப்பதால் தொடர்ந்து கோலோச்சுகிறார். பல்லாண்டுகாலமாக அரக்கோணம் தொகுதியில் பணபலத்தாலும், சாதி பலத்தாலும், கட்சி, மற்றும் கூட்டணி பலத்தாலும் வெற்றி பெற்ற ஜெகத்ரட்சகன் அந்த தொகுதிக்கோ, தமிழ்நாட்டிற்கோ எந்த நன்மையையும் செய்ததில்லை.

ஜெகத்ரட்சகனின் அக்கார்டு நட்சத்திர ஹோட்டல்!

இடைப்பட்ட காலத்தில் பாண்டிச்சேரி முதலமைச்சராக ஆவதற்கு காய் நகர்த்தினார் ஜெகத்ரட்சகன். ஆனால், பாண்டிச்சேரி அரசியல்வாதிகளை விலைபேசி வந்த பாஜக, இவருக்கு எச்சரிக்கை தந்தவுடன் அப்படியே ‘ஜகா’ வாங்கிவிட்டார். பாஜகவின் மதவாத அரசியலுக்கு எதிராக துரும்பைக் கூட கிள்ளிப் போடாதவர் ஜெகத்ரட்சகன். ஏனென்றால், ஒரு மிகப் பெரிய கார்ப்பரேட்ரானவர் அதிகார மையத்துடன் இணக்கம் பாராட்டவிட்டால் இல்லாமலாக்கப்படுவார் என்பதே அரசியல் மற்றும் வணிகத்தின் பாலபாடமாகும். ஆகவே, ஜெகத்ரட்சகனை பொறுத்த வரை திமுக தலைமை குடும்பத்திற்கு மிக நெருக்கம் என்றாலும், பாஜகவின் மேல்மட்டத்துடன் மிக இணக்கமாகவே இருந்து வந்துள்ளார்.

எனினும், பாஜகவின் அழித்தொழிப்பு அரசியலில் ஈவு, இரக்கம் என்பதே கிடையாது. திமுகவை ஒழிக்க அதன் கஜானாக்களாக அறியப்படுபவர்களை ஒருவரை அடுத்து ஒருவராக ரெய்டு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் அவர்கள் முதலில் டார்கெட் செய்தது ஸ்டாலின் மருமகன் சபரீசனை! அவரது ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜீ ஸ்கொயர் திமுக ஆட்சிக்கு வந்த மிகக் குறுகிய காலகட்டத்தில் பல்லாயிரம் கோடிகள் ஈட்டியதை மோப்பம் பிடித்து ரெய்டு செய்தனர். ஆனால், எந்த உருப்படியான நடவடிக்கையும் இல்லை. என்ன பேரம் நடந்ததோ? அதற்கு பிறகு செந்தில் பாலாஜியை தூக்கினார்கள். அதிலும் கூட அவரது தற்போதைய டாஸ்மாக் மதுபான முறைகேடுகளை அம்பலப்படுத்தாமல் பழைய முறைகேட்டை மட்டுமே விசாரிப்பது போல போக்கு காட்டினர்.

அதற்கு பிறகு தமிழக இயற்கை வளங்களை சுரண்டிக் கொழுக்கும் மணல் மாபியாக்களை ரெய்டு செய்தனர். அந்த மணல் மாபியாக்களை டீலிங் செய்து கொண்டிருக்கும் அமைச்சர் துரைமுருகனையோ, சபரீசனையோ விசாரணை வளையத்திற்கே கொண்டு வரவில்லை. ஆனால், அது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்.

தற்போது ஜெகத்ரட்சகன் சம்பந்தப்பட்ட 70 இடங்களில் சோதனை நடத்திய வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத் துறையினர் வழக்கம் போல கமுக்கமாக இருப்பதைப் பார்த்தால், இவர் முறைகேடாக சேர்த்துள்ள சொத்துக்களுக்காக தண்டிக்கப்படுவார் என்ற நம்பிக்கை பிறக்கவில்லை. ஏதோ ஒரு பேரம் நடக்கும் என்றே தோன்றுகிறது. அது பொருளாதார பேரமா? அல்லது அரசியல் பேரமா? என்பது விரைவில் தெரிய வரும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time