Khufiya என்றால் ரகசியமாகும். தபு உளவு அதிகாரியாக வருகிறார். நாட்டு ரகசியங்களை இந்திய உளவு அமைப்பான ரா (RAW) அதிகாரி கடத்துகிறார். அவரை பொறி வைத்து பிடிப்பதே கதை. உளவு, துரோகம், தேசப் பற்று..போன்றவற்றைச் சொல்ல இஸ்லாமிய வெறுப்போ, பாகிஸ்தான் எதிர்ப்போ இல்லாத விறுவிறுப்பான, திரில் படம்!
ராவில் பணிபுரிந்த அமர்பூஷன் எழுதிய Escape to nowhere என்ற நூலை வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. ஹைதர் மற்றும் மக்பூல் போன்ற பாராட்டப்பட்ட படங்களை எடுத்த விஷால் பரத்வாஜு இதை சினிமாத்தனம் இல்லாமல் எடுத்துள்ளார்.
உளவுத் துறை நினைத்தால் என்னென்ன செய்யலாம் என்பது போகிற போக்கில் சொல்லப்படுகிறது. நிதியில் இருந்து விரும்புவர்களுக்கு அள்ளிக் கொடுக்கலாம். வாசனை திரவியம் மூலம் கொலை செய்யலாம். அனுமதி இல்லாமலேயே உளவு பார்க்கலாம். ஆன்மீக சாமியார் வங்கிக் கணக்கை முடக்கலாம். அவரை வைத்தே இவர்கள் விரும்பும் ஆளை மடக்கலாம். தேசபக்தி வசனங்கள் இல்லை. குறிப்பிட்ட மதத்தினரை இலக்காக காட்டும் வெறுப்பரசியல் இல்லை. பாகிஸ்தான் எதிர்ப்பு முழக்கம் இல்லை. நறுக்கு தெரித்தாற் போல வசனங்கள் வருகின்றன. விஷால் பரத்வாஜ் எழுதி இயக்கி, தயாரித்துள்ளார்.
தபு இதில் உளவுத்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இது இவருக்கு பேர் சொல்லும் படமாக இருக்கும். புது தில்லியில் நடக்கும் இக்கதை டாக்காவில் தொடங்கி அமெரிக்காவில் முடிகிறது. உளவறிதல், ஒட்டுக்கேட்டல், பின்தொடரல், ரகசியங்களை கடத்துதல் போன்றவை நம்பும்படியாக உள்ளன.
டாக்காவின் தூதரகத்தில் பணிபுரியும் கிருஷ்ணா மெகராவிடம் ஒரு பெண் தன்னை உளவாளியாக ஏற்றுக் கொள்ளும்படி கோருகிறார். கேஎம் என்று அழைக்கப்படும் கிருஷ்ணா மெகரா அவளது துறையில் மதிப்புமிக்கவள். கச்சிதமாக வேலையைச் செய்து முடிப்பவள். வலிய வருபவளை உளவாளிகளாக ஏற்றுக் கொள்ளத் தயங்கும் கேஎம் பின்னர் சம்மதிக்கிறார். வங்கதேச இராணுவ அதிகாரியைக் கொல்வது அவர்களது திட்டம். உயர்மட்டத்தில் வெகு சிலருக்கே தெரிந்த இந்த திட்டத்தின் ரகசியம் கசிந்து உளவாளி கொல்லப்படுகிறாள். சந்தேகத்தின் நிழல் அனைவர் மீதும் விழுகிறது.
ஆங்கிலத்தில் வரும் இதுபோன்ற படங்களில் சண்டைக்காட்சிகள் இருக்கும். கொலைகள் நடக்கும். விறுவிறுப்பாகச் செல்லும். ஆனால், இதில் கதைக்கு முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது. உளவாளி யார் என்பது தொடக்கத்திலேயே தெரிந்துவிடுகிறது. ஆனால், கைது செய்யாமல் தொடர்ந்து கண்காணிக்கிறார்கள். அவன் யாருக்குச் சேவகம் செய்கிறான் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். உளவுத்துறையில் பணிபுரிந்தவரின் அனுபவத்தை ஒட்டியது என்பதால் கதை நம்பகத் தன்மையோடு செல்கிறது. இரண்டரை மணி நேர படம். இடையில் மெதுவாக நகர்கிறது. திரை அரங்கங்களுக்கு வராமல் நேரடியாக நெட்பிளிக்ஸ் தளத்திற்கு தற்போது வந்துள்ளது.
இதில் உளவாளிகளின் தனிப்பட்ட வாழ்வும் பேசப்படுகிறது. விவாகரத்தான கேஎம்மிற்கு பதின் பருவ வயதில் ஒரு மகன் அவனது தந்தையோடு இருக்கிறான். அவனது நாடக அரங்கேற்றத்திற்கு அவளால் போக முடியவில்லை. அவன் நடிக்கும் நாடகப் பாத்திரமான புரூட்டஸ் என்பதை ஒரு திட்டத்திற்கு அவள் சூட்டுகிறாள். அவளுக்கு வங்கதேச உளவாளியோடு இருக்கும் “நெருக்கமான” உறவு தெரிந்த அவளுடைய மேல் அதிகாரி, ரகசியம் கசிவதை கண்டுபிடிக்கும் பொறுப்பை இவளிடம் தருகிறார். ஆண்களே கதாநாயகர்களாக வலம் இத்தகைய படங்களில், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இயக்குநர் விஷால் பரத்வாஜைப் பாராட்ட வேண்டும். ஷேக்ஸ்பியரின் ஒத்தெலோ நாடகத்தைத் தழுவி ‘ஓம்காரா’ என்ற படத்தை இவர் ஏற்கனவே எடுத்துள்ளார்.
வெளிநாட்டிற்கு ரகசியத்தை கடத்தும் ரவியின் மனைவி சாருவாக, வாமிகா கபி நடித்துள்ளார். அவர்களது வீடு ரகசிய கேமரா மூலம் கண்காணிக்கப்படுவது தெரியாமல் அவள் சிகரெட் குடிப்பதும், ஆடுவதும் அதை இவர்கள் வேடிக்கை பார்ப்பதும் ஒருபுறம் நடக்கிறது. சாரு இராணுவ அதிகாரி ஒருவரின் மகள். எனவே, அவள் வழியாக ரகசியம் கடத்தப்பட்டிருக்கலாம் என ரா சந்தேகிக்கிறது. அவளின் மாமியார் ( ரவியின் அம்மா), வாமிகா, தபு என மூன்று பெண்களும் போட்டி போட்டுக் கொண்டு நடிக்கிறார்கள். ரவியின் மாமியார் அதாவது சாருவின் மாமியார் பாத்திரம் முக்கியமான பாத்திரம். நன்றாகவும் நடித்துள்ளார்.
Also read
உளவு பார்ப்பது தெரிந்துவிட்டால் என்ன செய்வது? அவரை எப்படி வெளியே கொண்டு வருவது? எப்படி பாதுகாப்பது ? எங்கே பாதுகாப்பது ? என்ன சொல்லி பாதுகாப்பது..? இவையெல்லாம் நமக்கு புதியவை. இதற்கான நாவல்கள் நமது மொழிகளில் சொல்லும்படியாக இல்லை. ஆனால் இவைகளை இந்தப் படம் நன்றாக சித்தரிக்கிறது. இதனை தமிழிலும் பார்க்கலாம்.
மற்ற நாடுகளின் உளவுத்துறை அதிகாரிகளிடம் பேசிக்கொள்வதும், வேலை முடிந்த பிறகு தமக்கு உதவி புரிந்தவர்களை கைவிடுவதும் நடக்கிறது. நடந்த கொலையை மாரடைப்பாக மாற்றுவதும் நடக்கிறது. அப்போதைய நலனே அவர்களுக்கு முக்கியம். வித்தியாசமான படம்தான்.
– பீட்டர் துரைராஜ்.
Leave a Reply