திமுக குடும்பத்தின் கஜானாவா மார்டின்..?

-சாவித்திரி கண்ணன்

லாட்டரி தடை இருந்தும் தமிழ்நாட்டில் கள்ளத்தனமாக லாட்டரி விற்பனை செய்து பல கோடிகளை சம்பாதிக்க திமுக அரசு செய்து தந்த சலுகை மட்டுமல்ல, தற்போது மார்ட்டின் குறிவைக்கப்பட்டதற்கு! அதையும் தாண்டி, திமுக தலைமை குடும்பத்திற்கும், மார்டின் குடும்பத்திற்குமான நெருக்கத்தின் பின்னணி!

சான்டியாகோ மார்டின் கோவையை பூர்வீகமாகக் கொண்ட ஒரு லாட்டரி அதிபர். மியான்மரில் (பர்மா) 13 வயதில் குழந்தை தொழிலாளியாக வாழ்க்கையை தொடங்கிய மார்ட்டின் இந்தியா திரும்பி, மார்ட்டின் லாட்டரி ஏஜென்சி லிமிடெட் என்ற சிறிய லாட்டரி கடையை 1988-ஆம் ஆண்டு திறக்கிறார்.1991 ல் அதை பெரும் நிறுவனமாக்குகிறார். தற்போது அகில இந்திய லாட்டரி வர்த்தகம் மற்றும் அது சார்ந்த தொழில் கூட்டமைப்பு பொருளாளராக உள்ளார்.

இன்று பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதியாக இருக்கும் மார்டின் பற்பல தில்லுமுல்லுகள் மூலம் தான் லாட்டரி சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியானார்!

# விற்பனையாகாத லாட்டரிகளில் ஒன்றை எடுத்து, அதற்கு பரிசு விழுந்திருப்பதாக அறிவித்து பரிசுத் தொகை அனைத்தையும் அபேஷ் செய்வது!

# ஒருபோதும் பரிசு விழ வாய்ப்பில்லாத போலி லாட்டரி சீட்டுகளை அச்சடித்து விற்பது!

# லாட்டரி தடை செய்யப்பட்ட இந்தியாவின் 16 தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கள்ளத்தனமாக லாட்டரி விற்று ஆட்சியாளர்களுக்கு கையூட்டு தருவது.

# ஆன்லைன் லாட்டரி, இரண்டு இலக்க லாட்டரி, என சகலவித லாட்டரிகளிலும் தில்லுமுல்லு செய்து சம்பாதிப்பது!

இவை எல்லாவற்றுக்கும் சிகரமாக லாட்டரி விற்க, அனுமதி தந்த மாநில அரசிற்கு தர வேண்டிய உரிய தொகையைக் கூட தராமல், அரசாங்கத்தையே ஏமாற்றுவது. (இந்த வகையில் சிக்கிம் அரசு லாட்டிரியின் இந்திய முழுமைக்குமான விற்பனை உரிமை பெற்ற வகையில், அந்த மாநிலத்திற்கு  ரூ4,500 கோடி ரூபாயைத் தராமல் ஏமாற்றிய வழக்கு இவர் மீது உள்ளது.)

2011ல் மார்டின் கைதான போது!

ஆரம்ப காலத்தில் இவரது வளர்ச்சியை அனுமதித்த ஜெயலலிதா பிறகு மார்டினுக்கு எதிரானவரானார். 2002 ல் தமிழகத்தில் லாட்டரிக்கு தடை போட்டவர் ஜெயலலிதா தான். தனது ஆட்சியில் 2011 -ல், நில மோசடி வழக்கு, போலி லாட்டரி விற்பனை செய்தது உட்பட, 13 வழக்குகளில் மார்டினை கைது செய்து, ஏழு மாதம் சிறையில் தள்ளினார். கடும் சட்ட போராட்டம் நடத்தி ஜாமீனில் தான் வெளியே வந்தார் மார்டின்.

2009 – 2010 காலக்கட்டத்தில் சிக்கிம் மாநில அரசின் லாட்டரி சீட்டுகளை முறைகேடாக அச்சடித்து விற்று வருமானம் ஈட்டியதில் முறைகேடாக ரூ.910 கோடி வருவாய் ஈட்டியதையும், அந்த பணத்தை 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் மார்ட்டின் முதலீடு செய்திருப்பதையும் வருமான வரித்துறை கண்டறிந்த வகையில் இவர் முதன்முதலாக பெரும் கவனம் பெற்றார்.

அதனடிப்படையில் கேரள மாநிலம் கொச்சி அமலாக்கத்துறை சட்டவிரோத பணப் பரிமாற்றத்திற்கு மார்ட்டின் மற்றும் அவரது பங்குதாரர் ஜெயமுருகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து,  மார்டின் தொடர்புடைய இடங்களில்  சோதனை நடத்தி, இவர் நடத்தி வரும் நிறுவனங்கள், அவருக்கு சொந்தமான கட்டிடங்கள், வீடுகள், நிலங்கள் ஆகியவற்றை படிப்படியாக முடக்கியது. இதுவரை மொத்தம் 451.07 கோடி மதிப்புடைய அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது என்றாலும், இவர் ஒரு சிறிதும் அசரவில்லை.

2019 ஆம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் மார்ட்டின் சம்பந்தப்பட்ட 70 இடங்களில் ஐந்து நாட்கள் சோதனை நடத்தினர். அவரது கோவை வீட்டில் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்திய போது ஒரு இடத்தில் வீட்டின் கீழ் படிக்கட்டு அமைக்கப்பட்டு பாதாள ரகசிய அறைகள் இருந்ததை கவனித்து நுழைந்ததில் அங்கே கட்டுக்கட்டாக பணம் அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.

மார்ட்டின் வீடும், திருப்பதிக்கு 3.5கிலோ தங்கம் தந்த போதும்!

அப்போது  மார்ட்டின் நிறுவன அலுவலகத்தில் காசாளராகவும், அதிகாரியாகவும் பணியாற்றிய பழனிச்சாமியிடம், வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்திய பிறகு அவர் மர்மமன முறையில் காரமடையில் உள்ள ஒரு குளத்தில் பிணமாக மிதந்தார். இது கோவை மக்களை உலுக்கிய சம்பவமாகும்.

தமிழகம் மட்டுமின்றி பஞ்சாப், கர்நாடகா, கேரளா, மேற்கு வங்கம், சிக்கிம், அருணாச்சல பிரதேசம், மேகாலயா, என பல மாநிலங்களில் தனது முறைகேடான லாட்டரி சாம்ராஜ்ஜியத்தை மார்ட்டின் விரிவுபடுத்தியதில் இருந்தே எல்லா மாநிலங்களிலும் ஆட்சி செய்யும் அரசியல்வாதிகளை விலைபேசும் சாமார்த்தியம் மார்டினுக்கு இருந்ததை நாம் அறியலாம்.

இந்த வகையில் இவர் கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசையும் வளைத்து போட்டார். அவர்கள் நடத்தும் தேசாபிமானி நாளிதழுக்கு ரூ இரண்டு கோடி நன்கொடை தந்ததன் மூலம். இது கடுமையான விமர்சனத்தை பெற்றது. இதனால், அடுத்து பதவிஏற்ற காங்கிரஸ் அரசு மார்டின் மீது முறைகேடான லாட்டரி வியாபாரத்தை காரணம் காட்டி, சுமார் 32 வழக்குகளை போட்டது குறிப்பிடத்தக்கது.

லாட்டரியின் மூலம் ஹவாலா பணத்தையும், கருப்புப் பணத்தையும் வெள்ளையாக மாற்றி தந்ததன் மூலம் இவர் செல்வந்தர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் ஆப்த நண்பராகிப் போனதில் வியப்பில்லை. இதற்காகவே இவர் சுமார் 300 க்கு மேற்பட்ட பெயர்களில் நிறுவனங்களை பதிவு செய்துள்ளார். வருடா வருடம் இவர் கட்டியதாக காட்டும் வருமானவரியை விட, கட்டாமல் ஏய்த்த வருமானவரி  முறைகேடுகள் அதிகமாகும். இப்படியாக சகலவிதமான பொருளாதாரக் குற்றங்களிலும் சம்பந்தப்பட்டவரே மார்டின்.

இன்றைக்கு தமிழகத்தில் சட்டப்பூர்வ லாட்டரி தடை செய்யப்பட்டிருப்பதாக சொன்னாலும், போலி லாட்டரி எந்த தடையுமின்றி புழக்கத்தில் உள்ளதன் பின்னணியில் இருக்கிறது இவரது அரசியல் செல்வாக்கு. அதுவும் மாவட்ட வாரியாக லாட்டரி முகவர்கள், வட்டார முகவர்கள், பல நூறு விற்பனை பிரதிநிதிகள் என்ற ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பை எப்படி சரியாக பேண முடிகிறது? அரசு நிர்வாகமும், காவல்துறையும் ஒத்துழைக்காமல் இவை சாத்தியமில்லை.

இந்த லாட்டரி சீட்டுக்களை பெரும் எதிர்பார்ப்போடு வாங்கி தொடர்ந்து ஏமாறுபவர்கள் ஏழை, எளிய தொழிலாளிகள் தாம். எத்தனை உழைத்தாலும் தங்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றம் ஏற்படாத நிலையில் லாட்டரி மூலம் ஒரு விடிவு வராதா…?  என ஏங்கும் லட்சோப லட்சம் கூலித் தொழிலாளிகளை ஏமாற்றி சம்பாதித்தவையே மார்டினிடம் இருக்கும் பொருளாதார சாம்ராஜ்யத்தின் அடித்தளமாகும்.

இவரது குடும்ப அறக்கட்டளை பெயரில் அவ்வப்போது சிற்சில உதவிகள் செய்து தன்னை வள்ளலாக காட்டிக் கொள்வதோடு, வருமான வரி விலக்கு பெற பல மடங்கு அதிகமாக உதவியதாக எழுதிக் கொள்வார்! இவர் ஆட்சியாளர்களை நெருங்குவதற்கு புயல், பெருமழை, பெருவெள்ளம் போன்ற காலகட்டங்களை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு நிதி தருவார். அந்த வகையில் எடப்பாடியோடு நெருங்க கஜா புயலையும், கொரானா காலகட்டத்தையும் பயன்படுத்திக் கொண்டார். இதே பாணியை அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களிலும் கையாள்கிறார்.

மார்டினின் மகனும், மருமகளும் அஸ்ஸாம் முதல்வரை சந்தித்து வெள்ள நிவாரணதிற்கு நிதி தந்த போது!

எல்லா கட்சிகளுக்கும் தேர்தல் நிதியை அள்ளி வழங்கும் மார்ட்டினுக்கு, திமுக மீது மட்டும் பற்று சற்று அதிகம். பாஜகவிற்கு நூறு கோடி மட்டுமே தேர்தல் நிதி தந்த மார்டின், திமுகவிற்கு ஐநூறு கோடியை தந்தார்! இதற்கு முக்கிய காரணம், கருணாநிதி காலம் தொட்டு இருந்து வரும் ஒரு நெருக்கம். தலா இருபது கோடி செலவில், ‘கலைஞர் கதை வசனத்தில் படம் ஓடாது’ என்ற நிலையிலும் இளைஞன், பொன்னர்சங்கர் ஆகிய படங்களை தயாரித்தார்! இதற்காக கருணாநிதிக்கு சம்பளமாக 90 லட்சங்களை வழங்கினார்.

அதற்கு பிரதியுபகாரமாக இவர் சட்டவிரோதமாக லாட்டரி நடத்திக் கொள்ள கருணாநிதி அரசு இசைவாக இருந்தது. இன்றும், அதே நிலையை தொடர்கிறார் ஸ்டாலின்! எஸ்.ஆர்.எம் அதிபர் பச்சமுத்து சென்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது மக்கள் நீதி மையம் கட்சியோடு கைகோர்க்க முயன்ற போது, 100 கோடி கேட்டு, கமலஹாசன் நிர்பந்தித்ததில் விரக்தி அடைந்த போது, மார்டின் தான் ஸ்டாலினிடம் பேசி பச்சமுத்துவிற்கு திமுக சின்னத்தில் போட்டியிட்டு ஜெயிக்கும் வாய்ப்பை உருவாக்கித் தந்தார்.

ரியல் எஸ்டேட் துறையிலும் கொடிகட்டிப் பறக்கும் மார்டின் இதில் சில காலம் கலைஞர் மகள் செல்வியோடும் இணைந்து செயல்பட்டதாக செய்திகள் உண்டு. ரியல் எஸ்டேட் விவகாரத்தில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கும் மார்டின் நெருக்கமானவர். அவர் கூட இவரிடம் பணம் தந்து வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. வேலுமணி சம்பந்தப்பட்ட இடங்களில் திமுக அரசு ரெய்டுகளை நடத்திய காலத்தில், ஆட்சித் தலைமைக்கும், வேலுமணிக்கும் இவர் சமரசம் செய்து வைத்ததாக கோவையில் பேச்சு உண்டு.

திமுக குடும்பத்தின் சட்டவிரோத சம்பாத்தியங்கள் சிலவும் இவர் மூலமாக சில தொழில்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான சுமார் 20 கோடி மதிப்புள்ள நிலத்தை அழகிரியின் மனைவி காந்திக்கு வெறும் 85 லட்சத்திற்கு விற்றதாக புகார் பதிவாகியுள்ளது. இது போல திமுக குடும்பத்தில் உள்ள பலருக்கும் பல நேரங்களில் மார்டின் உதவியுள்ளார். ஆகவே தான், இவரது மகன் பாஜகவில் இருந்த போதிலும் கூட, இவரது மனைவி லீலா ரோஸ் எஸ்.ஆர்.எம் பச்சமுத்துவின் ஐ.ஜே.கே கட்சி மூலம் மோடி புகழ் பாடி வந்தாலும் கூட, மார்டினுக்கு செக் வைத்துள்ளது பாஜக அரசு.

ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத் தேர்தலில் திமுக, ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 20,000 முதல் 40,000 வரை பணப்பட்டுவாடா செய்து வெற்றியை அறுவடை செய்தது. ஆகவே, தான் திமுக சம்பந்தப்பட்ட பணமுதலைகளை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே செக் வைக்க வேண்டும் என்பதற்காக செந்தில்பாலாஜி, மணல் மாபியாக்கள், ஜெகத்ரட்சகன்.. என்ற வரிசையில் லாட்டரி மார்டினை குறிவைத்துள்ளது பாஜக அரசு. எனினும் கூட இதற்கெல்லாம் திமுக அசராமல் உள்ளது, காரணம், அதன் சாம்ராஜ்யம் கற்பனைக்கு அப்பாற்பட்டு பல கிளைகளாகப் பரந்து விரிந்துள்ளது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time