உலகில் மனித நேயமற்ற கார்ப்பரேட் வணிகம் மக்கள் வாழ்க்கையை சூறையாடி வரும் சூழலில் அதற்கு மாற்றாக மக்கள் குரலை ஒலிக்க, உருவாக்கப்பட்டதே WORLD SOCIAL FORUM என்ற உலக சமூக மாமன்றம். தற்போது உலக நெருக்கடிகளை விவாதிக்க ‘தமிழ்நாடு சமூக மாமன்றம்’ அக்டோபர் -28 சென்னையில் நடக்க உள்ளது;
கொரானா உலகை அச்சுறுத்தி வந்த 2020- 2021 காலகட்டத்தில் நடந்த இதன் கூட்டத்தில் தொற்று நோய் பாதிப்புகள், சமூக ஒற்றுமை மற்றும் சுகாதார சமத்துவம், டிஜிட்டல் செயல்பாடு மற்றும் சமூக இயக்கங்களின் எதிர்காலம் ஆகியவை விவாதிக்கப்பட்டன.
தற்போது உலக சமூக மாமன்றத்தின் (WORLD SOCIAL FORUM) இந்திய பொதுக் குழு கூட்டம் அக்டோபர் 13,14 ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெற்றது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் நிர்வாகிகள் வருகை தந்து இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
உலக அளவில் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து பல்வேறு பொருள்களில் அமர்வுகள் நடைபெற்றன.
அனைத்து நிகழ்வுகளும் நிறைவுற்ற பிறகு, இக்கூட்டம் தொடர்பாக இந்திய சமூக மாமன்றத்தின் பிரதிநிதிகள் ஷீலு, நாகல்சாமி (தமிழ்நாடு), அனில் மிஸ்ரா ( டெல்லி), ரூபேஷ் (பீகார்), சுஜாதா (மராட்டியம் ),சரத் (கேரளா) ஆகியோர் பத்திரிக்கையாளர்களுக்கு கூட்டாகபேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியது:

” உலகமய மாக்கல்,புதிய பொருளாதாரக் கொள்கை ஆகியவை மக்களுக்கிடையே பெரும் ஏற்றத் தாழ்வை உருவாக்கியுள்ளன. இவை பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாகவும் ஏழைகளை மேலும் ஏழைகளாகவும் ஆக்கிவிட்டன.
வெறும் 63 கார்ப்பரேட் நிறுவனங்கள் உலகின் 50 சதவீத வளங்களை தங்கள் ஆளுகைக்குள் வைத்துக் கொண்டு உலகின் போக்கையே தீர்மானித்து வருகின்றன. நிலம், நீர், காடுகள் போன்ற இயற்கையின் அங்கங்கள், வளங்கள் அவற்றைப் பயன்படுத்தும் மக்களின் கட்டுப்பாட்டில் இருப்பது தான் உலக நலனுக்கு ஏற்புடையது.
இதற்கான தீர்வு உடனடி சாத்தியம் இல்லாதது ஆயினும், உலக அளவில் மக்கள் பங்கேற்கும் கருத்தரங்கு, கூட்டம், மற்றும் விவாத மேடைகள் வாயிலாக உண்மைத் தன்மைகளை புரிய வைக்கும்போது தீர்வுகள் கிடைக்கும். அதற்கான பணிகளை உலக சமூக மாமன்றம் தொடர்ந்து செய்து வருகிறது.
கடந்த 2001 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு குறிப்பிட்ட கொள்கைகள் தான் இலக்கு என்று இல்லாமல் உலகளாவிய பார்வையுடன் ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாடு, பெண்கள் நலன் ,சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட சமூக பிரச்சினைகளின் தீர்வுக்காக தொடர்ந்து பயணித்து வருகிறது.
2004 -ல் மும்பையில் நடைபெற்ற இந்த மாமன்றத்தின் சர்வதேச மாநாடு உலகின் பார்வையை ஈர்த்து பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியது. தமிழகத்தில் இருந்து மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.
இதே போன்ற சர்வதேச மாநாடுகள் பாகிஸ்தான், வங்காளதேசம், நைரோபி, வெனிசுலா மெக்ஸிகோ, அர்ஜென்டினா முதலான நாடுகளிலும் நடைபெற்றது.
இப்போது இங்கு நடைபெற்ற அமர்வுகளில் மூன்றாம் பாலினத்தவர் நலனுக்கானதும் அடங்கும். இவர்களுக்காக தொடர்ந்து களப்பணியாற்றிக் கொண்டிருக்கும் கிரேஸ்பானு உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர். மூன்றாம் பாலினத்தவர்கள் தற்போது திருநங்கை, திருநம்பி என்று அழைக்கப்படுகிறார்கள் அல்லவா? அவர்கள் தங்களை “திருநர்” என்று அழைக்கப் படுவதையே விரும்புகிறார்கள் என்ற ஒருமித்த குரல் இக்கூட்டத்தில் வெளிப்பட்டது. இதை உலகின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே தற்போது நடைபெற்று வரும் போரும், அதன் விளைவுகளும் மிகுந்த வேதனை தருவதாக உள்ளது. எந்த ஒரு போரிலும் அப்பாவி மக்களும், குழந்தைகளும், பெண்களும் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் .அங்கேயும் அதுதான் நடந்துள்ளது. இந்தப் போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வந்து ,அங்கு சுமூக நிலைமையையும், நல்லிணக்கத்தையும், நீதியையும் நிலைநாட்டும் கடமை அனைத்து தரப்பினருக்கும் உள்ளது. இது உடனடியாக நடைபெற வேண்டும்.
உலகம் முழுவதும் மொழி, இன, மத அடிப்படையில் சிறுபான்மையினர் பரவலாக உள்ளனர். அவர்களுடைய உரிமை, சுதந்திரம் காப்பாற்றப்பட வேண்டும். இது பற்றி விவாதித்தோம்.
2024 பிப்ரவரி மாதம் 15-19 தேதிகளில் நேபாளம் நாட்டில் எங்களுடைய அடுத்த சர்வதேச மாநாடு நடைபெற உள்ளது. அதை சிறப்பாக நடத்துவது குறித்தும் விவாதித்தோம்.
அதற்கான முன்னேற்பாடுகளும் எங்களுடைய விவாத மேடைகளும் தொடர்ந்து பீகார், கேரளா, ஒரிசா, சத்தீஸ்கர் ,ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் நடைபெற உள்ளது. வருகிற 28ஆம் தேதி சென்னை ,அடையாறில் உள்ள பேட்ரிஸன் கல்லூரியில் , அன்று ஒரே நாளில் பல்வேறு தலைப்புகளில் 25 அமர்வுகள் நடத்த உள்ளோம்.
எந்தப் பிரச்சினையிலும் அதன் மெய்ப்பொருளை அறியும் ஆற்றலை மக்கள் அடையும் போது பிரச்சனைகளுக்கு தீர்வும் கிடைக்கும். இந்தப் புரிதலோடு தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
2001 ஆம் ஆண்டு தென் அமெரிக்காவிலுள்ள பிரேசில் நாட்டில் உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல் ஆகியவற்றுக்கு எதிராக பெரிய அளவில் பல நாடுகளைச் சேர்ந்த சமூக இயக்கங்கள் ஒன்றுகூடின. ‘மாற்று உலகம் சாத்தியமே’ என்ற முழக்கத்தை முன்வைத்தன. வல்லரசு நாடுகளின் நலன்களைக் காக்க, கார்ப்பரேட் ஆதிக்கத்தை வலுப்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் ‘உலக பொருளாதார மன்றம்’ ( World Economic Forum ) கூடிவருகிறது. அதேநேரத்தில், அதற்கு எதிராக உலக நாடுகள் அனைத்திலும் உள்ள ‘சமூக இயக்கங்கள்’ கூடி, மாற்று உலகத்திற்கான செயல்பாடுகளைக் கட்டமைக்க உறுதிபூண்டன. அதற்கு ‘உலக சமூக மாமன்றம்’ என்று பெயரிடப்பட்டது. பிரேசில் நாட்டின் பெரிய தொழிற்சங்கத் தலைவராக இருந்த லூலா அன்று தலைமை தாங்கினார்.
2002 ஆம் ஆண்டு ‘ஆசிய பசிபிக் சமூக மாமன்றம்’ ஹைதராபாத் நிஜாம் கல்லூரி வளாகத்தில் கூடியது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பல்வேறு சமூக அமைப்புகளின் கருத்தரங்குகள் ஒரேநேரத்தில் பல்வேறு அரங்குகளில் நடத்தப்பட்டன.
2003 ஆம் ஆண்டில் ‘தமிழ்நாடு சமூக மாமன்றம்’ மதுரை ‘லேடி டோக்’ கல்லூரியிலும் அடுத்த ஆண்டில் சென்னை ‘லயோலா கல்லூரி’யிலும் ‘குட் ஷெப்பர்ட்’ பள்ளி வளாகத்திலும் நடத்தப்பட்டது. கருத்தரங்குகள், பேரணிகள் ஆகியவற்றில் பல நூறு பேர் பங்குகொண்டனர்.

2004 ஆம் ஆண்டு ‘உலக சமூக மாமன்றம்’ மாநாடு இந்தியாவில் மும்பையில் நடத்தப்பட்டது. உலக நாடுகள் பலவற்றிலிருந்தும் சமூக இயக்கத்தார்கள் வந்திருந்து கருத்தரங்குகளும், கலைநிகழ்ச்சிகளும் பேரணிகளும் நடத்தினர். ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட சமூக செயற்பாட்டாளர்கள் மும்பையில் கலந்துகொண்டனர். இடதுசாரி வெகுஜன அமைப்புகள் முழுவீச்சில் பங்குகொண்டனர். 2006 ஆம் ஆண்டில் ‘இந்திய சமூக மாமன்றம்’ மாநாடு டில்லியில் கூடியது.
2005 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டிலும் 2006 ஆம் ஆண்டில் வெனிசுலா, மாலி, பாகிஸ்தானின் கராச்சியிலும் நடந்தது. 2007 ஆம் ஆண்டில் கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் நடந்தது. 2009, 2010 ஆம் ஆண்டுகளில் பிரேசிலில் நடந்தது. 2011 ஆம் ஆண்டில் செனகல் நாட்டில் நடந்தது. 2012 ல் பிரேசில் நாட்டிலும் 2013, 2015 ஆம் ஆண்டுகளில் துனிஸ், 2016 ல் மாண்ட்ரில், 2018 ல் சல்வேடார் ஆகிய நாடுகளில் நடந்தன.
2024 பெப்ருவரி மாதம் 15 முதல் 19 ஆம் தேதி வரை ‘உலக சமூக மாமன்றம்’ மாநாடு நேபாள நாட்டில் காத்மாண்டு நகரத்தில் 170 நாடுகளின் சமூக அமைப்புகள் பங்குகொண்டு நடக்கவுள்ளது. ‘இந்திய சமூக மாமன்றம்’ 2023 டிசம்பர் 2, 3, 4 தேதிகளில் பாட்னாவில் நடக்கவிருக்கிறது.
‘தமிழ்நாடு சமூக மாமன்றம்’ 2023 அக்டோபர் 28 ஆம் தேதி சென்னை அடையாறு ‘பேட்ரிசன் கல்லூரி’யில் நடக்கவிருக்கிறது. கட்சி சார்பற்ற சமூக இயக்கங்கள், மக்கள் அமைப்புகள் கணிசமாக பங்கு கொள்கின்றன. கட்சி சார்பற்ற மக்கள் நலன் சார்ந்த அரசியல் செயல்பாடுகளில் முன்னிலையில் இருக்கும் தமிழ்நாட்டில் 2017 ஆம் ஆண்டின் ஜல்லிக்கட்டு எழுச்சி, அதற்குப் பிறகு தொடர்ந்த நெடுவாசல், கதிராமங்கலம் ஆகியவற்றின் மீத்தேன், ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு இயக்கங்களும் ஒன்றரை லட்சம் மக்கள் வரை அணிதிரட்டிய ‘ஸ்டெர்லைட்’ ஆலை எதிர்ப்பியக்கம் ஆகியவை தமிழ்நாட்டில் மக்கள் எழுச்சியின் அடையாளங்களாகும். பெண்கள் இயக்கத்தினர், தலித் இயக்கத்தினர், சுற்றுச் சூழல் அமைப்புகள், பழங்குடி மக்கள் அமைப்புகள், மீனவர் சங்கங்கள், திருநங்கையர், திருநம்பியர் அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் போன்ற பல அமைப்புகள் சிறப்பாகப் பங்களிப்பு செலுத்துகின்றனர்.
Also read
ஆகவே, தமிழகத்தில் நடக்க உள்ள சமூக மாமன்றக் கூட்டத்தில் இந்த செய்தியையே அழைப்பாக கருதி, மக்கள் இயக்கங்கள் கலந்து கொள்ள அழைக்கிறோம். கார்ப்பரேட்டிசத்திற்கும் மதவாதத்திற்கும் சாதியவாதத்திற்கும் மாற்று உலகத்தை உருவாக்க, இந்த மாமன்ற நிகழ்வுகளில் அதிக அளவில் கலந்து கொள்ளுமாறு பொதுமக்களை கேட்டுக் கொள்கிறோம். மக்கள் அணிதிரண்டு செயல்படும்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமாதானம் உள்ளிட்ட உலக நலனுக்கான முயற்சிகளில் ஒருமித்த கவனமும் வலிமையும் நல்ல விளைவுகளும் கிடைக்கும்” இவ்வாறு அவர்கள் கூறினார்.
மூத்த ஊடகவியலாளர் டி .எஸ் .எஸ் .மணி, மகேஷ் உள்பட இந்த மாமன்றத்தின் தமிழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
-ம.வி.ராஜதுரை
உலக சமூக மாமன்றம் பற்றிய விளக்கமான தகவல்.