அதானியின் முறைகேடுகளுக்கு அரசே உதவுகிறது..!

-ச.அருணாசலம்

ஒரு மெகா திருடனுக்கு அரசாங்கமே சகல வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதும், அந்த முறைகேடு அம்பலமானால், அவனைக் காப்பாற்ற நீதிமன்றங்களுக்கே நெருக்கடி ஏற்படுத்துவதும் உலகமே கண்டிராத விசித்திரமாகும்..! அதை இந்தியாவில் பாஜக அரசு நிகழ்த்திக்காட்டியது விவரிக்கப்படுகிறது!

2019ம் ஆண்டு ஜனவரியில்  டி எல் அகாசியா என்ற 229 மீட்டர் நீளமுடைய பெரிய சரக்கு கப்பல் கலிஓரங்க்  என்ற இந்தோநேசியா நாட்டு துறைமுகத்திலிருந்து புறப்பட்டது.

கிழக்கு களிமந்தன் பகுதியிலிருந்து புறப்பட்ட அந்த சரக்கு கப்பல் இந்திய எரிபொருள் நிறுவனத்திற்காக 74,820 டன் எடையுள்ள நிலக்கரியை சுமந்து கொண்டு புறப்படுகிறது. பனாமிய கொடி பறக்கும் இந்த சரக்கு கப்பல் தென் கொரியாவை சேர்ந்த ஒருவரது கப்பல்.

அதனுடைய கடல் பயணத்தின் போது ஒரு அதிசயம் நிகழ்கிறது. சிந்துபாத் கதையில் வரும் அதிசயங்களையெல்லாம் விஞ்சும் அளவிற்கான அந்த அதிசயம் என்னவென்றால், கப்பலில் உள்ள சரக்கின் (நிலக்கரி) மதிப்பு “இரட்டிப்பு” ஆகியது. 1.9 மி. டாலர் (15.82 கோடி ரூபாய்) பெறுமான நிலக்கரி , கடல் போக்குவரத்து மற்றும் கப்பல் கட்டணம் 42,000 டாலர் ( 35 லட்சம் ரூபாய்) சேர்த்து இந்தியாவில் உள்ள அதானி வசமுள்ள முந்த்ரா துறைமுகத்தை அடையும் பொழுது, அதன் மதிப்பு 16.17 கோடி ரூபாயாக இருக்க வேண்டும் . ஆனால் அதன் மதிப்போ 4.3மி. டாலராக (35.78 கோடி ரூபாய்) அறிவிக்கப்பட்டது.

இந்த அகாசிய கப்பல் அதிசயம் போல் பல்வேறு ஷிப்மென்ட் அதிசயங்களை நிகழ்த்தி, அதானி நிறுவனம் இந்தியாவிற்கு நிலக்கரி இறக்குமதி செய்தது. இதில் 30 ஷிப்மென்ட்களை பற்றி மட்டும் புகழ்பெற்ற ‘பைனான்சியல் டைம்ஸ்’-Financial Times  பத்திரிக்கை அலசி ஆராய்ந்தது. 2019-2021 காலகட்டத்தில் நடந்த இந்த அதிசய இறக்குமதிகளில் மொத்தம் 3.1 மி. டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதையும் , அதன் உண்மைவிலை (139மி +3.1மி டாலர்= 1182.77 கோடி ரூபாயாக இருக்க, சுங்க இலாகாவில் தெரிவிக்கப்பட்ட மதிப்பு 215மி டாலராகும்! சுமார் 1,790 கோடி ரூபாய்கள்! கடல் பயணத்தின்போதே 73 மி. டாலர் லாபம் ஈட்டும் அதிசயத்தை அதானியால் மட்டுமே நிகழ்த்த முடிகிறது என பைனான்சியல் டைம்ஸ் பத்திரிக்கை குற்றம் சாட்டுகிறது.

 

இதன் மூலம் சுமார் 12,000 கோடி ரூபாய் அதானி இந்திய அரசுகளிடமிருந்து 2019-2021 வரையிலான இரண்டு ஆண்டுகளில் மட்டும் கொள்ளையடித்துள்ளார் என பைனான்சியல் டைம்ஸ் பத்திரிக்கை கூறியுள்ளது.  இதெல்லாம் யாருடைய பணம்?

அதானி என்டர்பிரைசஸ் என்ற அதானி குழுமத்தின் புகழ்பெற்ற நிறுவனம் நிலக்கரி இறக்குமதியிலும், விற்பனையிலும் கொடி கட்டி பறந்து அதானிக்கு “லாபம்” ஈட்டி கொடுத்துள்ளது. இதனுடைய நிலக்கரி விற்பனை பிரிவான ஐ ஆர் எம் ( இன்டக்ரேட்டட்

ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட்) இதன் மூளையாக செயல்படுகிறது.

இந்த பிரிவிலிருந்து வந்த அடுத்த அதிசயம் இறக்குமதியை நேரடியாக கையாளாமல் சிறு சிறு நிறுவனங்கள் மூலமாக நிலக்கரியை அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்து இந்திய நிறுவனங்களுக்கு வழங்குவதையும் அதானி குழுமம் செய்தது.

அப்படியான சிறு நிறுவனங்கள் தைவானை சார்ந்த ஹை லிங்கோஸ் , துபாயை சேர்ந்த டாரஸ் நிறுவனம் மற்றும் சிங்கப்பூரை சார்ந்த பான் ஆசியா ட்ரேட்லிங்க் நிறுவனமாகும். அதானி குழும்ம் 2021-2023 ஆண்டுகளில்  இந்த மூன்று நிறுவனங்களுக்கு 4.8பில்லியன் டாலர் கொடுத்து  நிலக்கரியை இறக்குமதி செய்தது.

நேரடியாக அதானி குழுமம் இந்த காலத்தில் 73 மி. டன் நிலக்கரியை 2000 ஷிப்மென்ட்களில் இறக்குமதி செய்துள்ளது. இதில் 43 மி. டன் நிலக்கரிக்கு சராசரியாக 130 டாலர் எனவும் மூன்று நிறுவனங்கள் மூலம் அதானி இறக்குமதி செய்த 31 மி. டன் நிலக்கரிக்கு 155 டாலர் என அறிவித்து இந்திய அரசு நிறுவனங்களிடமிருந்து அதானி குழும்ம் வசூல் வேட்டை நடத்தியுள்ளது. இதன் மதிப்பு மட்டும் சுமார் 800மி டாலர்!  ( இந்திய பண மதிப்பில் 6657.56 கோடி ரூபாய்!)

இந்த மூன்று கம்பெனிகளுமே அதானியின் பினாமிகள்தான் என்பது அதிசயத்திலும் அதிசயம்.

சாங் சுங் லிங் என்ற சீனாக்காரனே ஹை லிங்கோசின் உரிமையாளர், அதானியின் பினாமியான இவர், ஆதிகால அதானி நிறுவனர்களில் ஒருவர், அதானி குழுமத்தில் ஷெல் கம்பெனிகளின் மூலமாக பங்குகள் வாங்கி, இந்திய பங்கு சந்தையை ஏமாற்றியவர். 2017 முதல் இவர் அதானி குழுமத்தின் பங்குகளை ரகசியாக வைத்து பங்கு விலை ஏற்ற மோசடிக்கு  ஆணிவேராக உள்ளவர்.

அடுத்து துபாய் கம்பெனியான டாரசின் உரிமையாளர் முகமது அலி ஷபான் அலி , சிங்கப்பூர்  நிறுவனமான பான் ஆசியா நிறுவனத்தின் உரிமையாளரும் அதானி கம்பெனியின் முன்னாள் அதிகாரி தான்! ஆக, இம் மூவருமே அதானியின் பினாமிகள் தான் என்பதும், இவர்கள் மூலம் அதிக எரிசக்தி உள்ள நிலக்கரியை சந்தையில் நிலவும் விலையைவிட கூடுதலாக கொடுத்து, இறக்குமதி செய்து அந்தக் கொள்ளையை இந்திய அரசு நிறுவனங்களிடம் வசூலித்தவர் அதானி என்பதை இப் பத்திரிக்கை போட்டு உடைத்துள்ளது.

கொடுக்கும் தளவாடங்களுக்கு அதிக விலை நிர்ணயித்தும், இறக்குமதி செய்யப்படும் நிலக்கரிக்கு அதிக விலை கேட்டும், இந்திய அரசு மற்றும் மாநில அரசு எரிபொருள் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து போட்ட ஒப்பந்தத்திற்கு மேலே, கொள்ளை வசூல் செய்வது அதானியின் வாடிக்கை .

குஜராத்தில்  மோடியால் பாலூட்டி வளரக்கப்பட்ட அதானி மீது 2013-2014 ஆண்டுகளில் எரிபொருள் உற்பத்தி சாதனங்கள் இறக்குமதியில் அதானி செய்த பண மோசடி குற்றத்திற்காக ஒன்றிய அரசின் பொருளாதார குற்ற புலனாய்வு இயக்ககம் DRI(Director of Revenue Intelligence ) வழக்கு தொடுத்தது.

ஒவர் இன்வாய்சிங் மற்றும் இறக்குமதி செய்த நிலக்கரி விலையை போலியாக உயர்த்தி சப்ளை செய்தல் போன்ற தில்லுமுல்லு நடவடிக்கைகளால் 7,000 கோடிகளுக்கு மேல் மோசடி செய்த குற்றத்தை செபி போன்ற கண்காணிப்பு நிறுவனங்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததோடில்லாமல், வெளிநாடுகளில் உரிய விசாரணை மேற்கொள்ள LR  (LETTER REGOTARY)  அனுப்பி விசாரித்து குற்ற பத்திரிக்கையும் தாக்கல் செய்தது.

அதானியின் விமானத்தில் பறந்து வந்து 2014-ல் பிரதமர் பதவியேற்ற மோடி இந்த வழக்குகளை “நண்பேன்டா” என்ற அடிப்படையில் நீர்த்து போக செய்தார்.

எரிபோருள் உற்பத்தி துறையில் நுழைந்து , நிலக்கரி இறக்குமதி மூலமும் , இயந்திரங்கள் இறக்குமதி மூலமும் கொள்ளையடிக்க அதானிக்கு வழிவகுத்து கொடுத்தது மத்திய மாநில அரசுகள் அதானியுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள்தான் .

வாஜ்பாய் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட மின்துறை சீர்திருத்தங்கள் மூலம் தனியார்துறை இந்த முக்கியமான துறையில் நுழைய தொடங்கியது(PAP)  PUBLIC AND PRIVATE PARTNERSH மூலம் உள்ளே நுழைந்த அதானிக்கு பல்வேறு மாநிலங்கள் மின் உற்பத்தி மற்றும் வினியோக ஒப்பந்தங்களை (அதானி பவர் கம்பெனிக்கு ) வாரி வழங்கியது.

மோடி இத்துடன் நில்லாமல் அதானிக்கு துறைமுகங்களையும் , விமான தளங்களையும் பாதுகாப்பு தளவாட உற்பத்தி ஒப்பந்தங்களையும் வாரி வழங்கினார். பொது சொத்துக்களை அதானிக்கு அடிமாட்டு விலைக்கு விற்றார்.

அதானிக்கு யாரும் போட்டியாக வரக்கூடாது என்ற நிலைமையை மோடி அரசு சி.பி.ஐ., இ.டி.ஐ.டி. துறைகள் மூலம் ஏற்படுத்தி அதானி கொள்ளையடித்து பெருக்க வழி செய்யப்பட்டது.

உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் நண்பன் அதானிக்காக மோடி தலையிட்டு நிலக்கரி சுரங்கங்களையும் ,துறைமுகங்களையும், மின் உற்பத்தி ஒப்பந்தங்களையும் பெற்றுக் கொடுத்தார்.

இப்படியாக உலகப்பணக்காரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்திற்கு அதானியை உயர்த்திய பெருமை மோடிக்கு உண்டு.

குஜராத்தில் மட்டும் 2021-2022 ஆண்டில் மின உற்பத்திக்காக அதானிக்கு ஒப்பந்தத்தை மீறி 102% அதிக பணம் குஜராத் அரசு வழங்கியுள்ளது. இதன் அளவு 13000/- கோடி ரூபாய் ஆகும்!

இதே போன்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் கோடா(Godda Power Plant) அதானிக்கு சொந்தமானது, இங்கும் 7400 கோடி ரூ. அந்த மாநிலம் அதானிக்கு கூடுதலாக வழங்கியுள்ளது.

அதானி பவர் மகாராஷ்டிரா லிட்., (APML)

அதானி பவர் ராஜஸ்தான் லிட்., (APRL). போன்ற நிறுவனங்களுக்கு வழங்கப்படும்

அதிகப்படியான பணத்தை(7000 + 6000 கோடி ரூ) எதிர்த்து மாநில அரசுகள் தொடரந்த வழக்கில் உச்ச நீதி மன்ற நீதிபதி  அருண் மிஷ்ரா  தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு அதானிக்கு ஆதரவாக மாநில அரசுகளின் நியாயமான கோரிக்கைகளை நிராகரித்து தீர்ப்பு  வழங்கியது. அருண் மிஷ்ரா பதவி ஓய்வு பெறும் வரை கிட்டத்தட்ட ஏழு வழக்குகளில் அதானிக்கு சாதகமாக தீர்ப்புகள் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மின் உற்பத்தி ஒப்பந்தங்களை கையகப்படுத்துவது,

மின்உற்பத்தி இயந்திரங்களை இறக்குமதி செய்து அதற்கான விலையை அதிகரித்து பொய்கணக்கு கொடுப்பது,

இறக்குமதி செய்யும் நிலக்கரி விலையை உயர்த்தி இன்வாய்ஸ் கொடுப்பது,

மின் கட்டணங்களை தாறுமாறாக உயர்த்துவது…  என்ற உத்திகள் மூலம் அதானி குழுமம் கொள்ளையடிப்பது தொடர்கிறது.

அந்தக் கொள்ளையை மூடி மறைப்பதும், கண்டும் காணாமல் இருப்பதும், அப்படி ஏதாவது வழக்குகள் வந்தால் அதை நீர்த்து போக செய்வதுமான மோடி அரசின் செயல்பாடுகள் இன்று உலகிற்கே வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

கேள்வி கேட்பவர்களையும், பத்திரிக்கையாளர்களையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும் மிரட்டுவது, பொய் வழக்கு போடுவது பயங்கரவாதிகளாக சித்தரித்து டெர்ரிச வழக்குகளை போடுவது என்ற பாணியை ஒன்றிய அரசு கடைபிடித்து வருகிறது.

இன்று ஓடி ஒளிய இடமின்றி உலகெங்கும் அம்பலப்பட்டு நிற்கும் அதானிக்கு , ஆதரவாக சட்டங்களை இயற்றியும், சொத்துக்களை தாரை வார்த்தும் இந்திய மக்களை பாதாளத்தில் தள்ளி, மோசடி செய்யும் மோடிக்கு இருக்கும் ஒரே ஆயுதம் அல்லது கவசம் இந்துத்துவா என்னும் இந்து மத வெறிஉணர்வுதான்.

இந்த மதவெறி மூலம், அரசியல் அதிகாரத்தை பிடித்து ஆட்சியில் இருப்போரை அதனின்றும் இறக்காவிடில் இந்திய மக்கள் இன்றிருப்பதிலும் மோசமான நிலைக்கு செல்வதை யாரும் தடுக்க முடியாது.

கட்டுரையாளர்;ச.அருணாசலம்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time