படுபாதக ஆட்சிக்கு பாஜகவின் முன்னோடியே கே.சி.ஆர்!

-சாவித்திரி கண்ணன்

மலைக்க வைக்கும் ஊழல், குடும்ப ஆட்சி, எல்லை மீறிய காவல்துறை அடக்குமுறைகள், பாஜகவைக் காட்டிலும் பத்து மடங்கு இந்துத்துவ வெறி, ஆடம்பரத்தில் அமெரிக்க ஜனாதிபதியை விஞ்சிய ஜம்பம், பணத்தால் யாரையும் விலைபேசும் துணிவு.. மேற்படி அம்சங்களின் மொத்த கலவையான கே.சி.ஆர் பற்றிய ஒரு அலசல்;

புரிந்து கொள்ள முடியாத புதிராக இந்திய அளவில் வலம் வருபவர் தான் பாரதீய ராஷ்டிர சமீதியின் தலைவர் கே.சந்திரசேகர ராவ்! இன்றைய இந்தியாவில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஊழலில் ஊறித் திளைக்கும் ஆட்சியாக தெலுங்கானா ஆட்சி உள்ளது என்பதை சந்தேகத்திற்கு இடமில்லாமல் நாம் உணர முடியும். அதே சமயம் இவரை வைத்து தான் காங்கிரசை  ஒழித்துக் கட்ட முடியும் என்ற எண்ணத்தில் பாஜக சந்திரசேகர ராவின் சகல தில்லுமுல்லுகளையும் சகித்துக் கொண்டு வருகிறது!

கே.சி.ஆரின் ஆரம்ப கால அரசியல் அற்புதமானது மட்டுமல்ல, அர்ப்பணிப்பு உள்ளது! ஒருங்கிணைந்த ஆந்திராவில் தெலுங்கானா புறக்கணிக்கப்பட்டு வருவதைக் கண்டு கொதித்து எழுந்து, இடைவிடாது போராடி தெலுங்கானா என்ற தனி மாநிலம் உருவாகக் காரணமானவர் கே.சி.ஆர் என்ற வகையில் அவரது போராளி பிம்பம் தான் அவரது இன்றைய அனைத்து அவலங்களையும் கடந்து அவரை நின்று நிலைக்க வைத்துள்ளது.

இவர் தீவிர இந்து பற்றாளராக இருந்தாலும், ஜோதிடம், வாஸ்து, எண் கணிதம்.. ஆகியவை பார்க்காமல் எதையுமே செய்யமாட்டார் என்ற போதிலும், கே.சி.ஆரிடம் இருக்கும் ஒரு நல்ல அம்சம், அவர் இஸ்லாமிய வெறுப்பு அரசியலை செய்வதில்லை என்பது மாத்திரமல்ல, அவர் உருது மொழியின் காதலர்  என்ற வகையிலும், தெலுங்கானாவில் வாழும் 13 சதவிகித இஸ்லாமியர் பேசும் உருது மொழியை தனது அரசாங்கத்தின் இரண்டாவது ஆட்சி மொழியாக அங்கீகரித்துள்ளார் என்பதும் கவனத்திற்கு உரியது. பல மொழிகள் தெரிந்தவர் கே.சி.ஆர்!

எல்லா அரசு திட்டங்களிலும், ஊழல்,முறைகேடு என்பதை எழுதப்படாத விதியாக வைத்துள்ள சந்திரசேகர ராவ் இதை தட்டிக் கேட்கும் பத்திரிகையாளர்கள் மீது கொடூர சட்டங்களின்படி கைது செய்து தண்டிக்கவும் தயங்காதவர். அவரது ஆட்சியை ஆதரிக்கும் ஊடக நிறுவனங்களை உச்சிமோர்ந்து ஆதரிப்பதிலும் அவரை மிஞ்ச ஆளில்லை எனலாம். இந்த வகையில் 95 சதவிகித ஊடகங்கள் அவர் புகழ்பாடி வருகின்றன.

தெலுங்கானா மக்களின் மிகப் பெரிய நம்பிக்கையாக பார்க்கப்பட்ட கே.சி.ஆர் இன்று மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளார்! பத்து வருட ஆட்சி அதிகாரம் அவரை தலை கீழாக மாற்றிவிட்டது. பொதுவாக பாதிக்கப்படும் மக்கள் தங்கள் வேதனையை வெளிப்படுத்த ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என்ற ஏதேனும் ஒரு வழிமுறையை வழங்குவது என்பது தான் ஜனநாயகத்தின் இயல்பாகும். ஆனால், கே.சி.ஆர் ஆட்சிக்கு வந்தவுடன் போராடுவதற்கு ஒதுக்கப்பட்ட சட்டமன்றத்திற்கு சற்று தொலைவில் இடத்தையே காலி செய்தார். இத்தனைக்கும் அந்த இடத்திலே தான் அவரே பலமுறை தன் போராட்டங்களை நடத்தி உள்ளார்.

தெலுங்கானாவை ஒரு போலீஸ் ஸ்டேட்டாக மாற்றிவிட்டார்! மக்களுக்கான பாதுகாப்பு என்ற பெயரில் எந்த நேரமும் யார் வீட்டுக்குள்ளும் நுழைந்து சோதனையிடும் உரிமை போலீஸுக்கு வழங்கப்பட்ட ஒரு மாநிலமாக தெலுங்கானா உள்ளது. சாலையில் நடமாடும் யாரையும் விசாரணை என்ற பெயரில் கைது செய்யும் அதிகாரத்தை காவல்துறை கொண்டுள்ளது.

பழங்குடி பெண்களை அடித்து நொறுக்கும் தெலுங்கானா காவல்துறை!

அந்த வகையில் போலீஸ் அத்துமீறல்களில் அதிகமாக பாதிக்கக் கூடிய மக்களாக தலித்துகள், பழங்குடியினர், முஸ்லீம்கள் தான் உள்ளனர். போலீஸ் தாக்குதல் என்பதையும் ‘லாக் அப் மரணம்’ என்பதையும் தெலுங்கானாவின் அடையாளாமாக மாற்றிவிட்டார் சந்திரசேகரராவ்! மக்கள் சாலையில் சுதந்திரமாக நடமாடுவதற்கே அச்சப்படும் அளவுக்கு காவல்துறை கெடுபிடிகள் அதிகம் நிறைந்த மாநிலமாக தெலுங்கானாவை மாற்றிவிட்டார், கே.சி.ஆர்! தலித்துகள் 18.5சதவிகிதமும், பழங்குடிகள் 11 சதவிகிதமும் வாழும் மாநிலத்தில் அவர்களை எப்போதுமே அச்சத்தின் பிடியில் வைத்திருக்கும் ஆட்சி தான் அங்கு நடக்கிறது.

இந்த லட்சணத்தில் அம்பேத்கருக்கு 125 அடி உயர சிலை எழுப்பி உள்ளார் கே.சி.ஆர். அதே சமயம் தன் கேபினெட்டில் ஒரு தலித்தை கூட சேர்க்க முடியாதவராகவும் கே.சி.ஆர் உள்ளார் என்பதே யதார்த்தமாக உள்ளது.

ஒன்பது ஏக்கர் நிலத்தில் ஒரு லட்சம் சதுர அடியில் கே.சி.ஆரின் அரண்மனை போன்ற வீடு!

பண்ணையார் மற்றும் நிலப்பிரபுவத்துவ தோரணையில் வலம் வருபவராக சமீப காலங்களில் தன்னை கட்டமைத்துக் கொண்டிருக்கும் கே.சி.ஆர் தன் பங்களாவை 9 ஏக்கர் நிலத்தில் பிரம்மாண்டமாக எழுப்பி உள்ளார்! அதே போல சட்டமன்ற கட்டிடத்தையும் மிக ஆடம்பரமாக கட்டியுள்ளார்! தன்னை தெலுங்கானாவின் மன்னராக கருதிக் கொண்டு, தன் மகன் ராமாராவை இளவரசனை போல நிழல் முதல் அமைச்சராக வைத்துள்ளார். மருமகன் ஹரிஸ்ராவை நிதி அமைச்சராக நியமித்து உள்ளார். மகள் கவிதாவை எம்.பியாக்கி உள்ளார். அப்பட்டமான குடும்ப ஆட்சியை எந்தவித கூச்ச, நாச்சமும் இன்றி நிகழ்த்தி வருகிறார்.

தெலுங்கானாவின் பிரம்மாண்ட தலைமைச் செயலகம்!

தன்னுடைய பிறந்த நாளில் 11,200 கோவில்களில் பல்லாயிரக்கணக்கான அர்ச்சகர்கள் கொண்டு சிறப்பு பூஜைகள் செய்துள்ளார். இதை முன்னிட்டு அர்ச்சகர்களின் சம்பளத்தை இரட்டிப்பாக்கினார். அடிக்கடி கோவிலை புனரமைக்க பல்லாயிரம் கோடிகள் ஒதுக்குவது, தங்கத்தால் கூரை வேய்வது, வைரக் கீரிடம் சாத்துவது… என கடவுள்களுக்கு சதாசர்வ காலமும் அள்ளித் தருகிறார். ‘பிராமணர்களை போஷிப்பது’ என்பதை ஒரு கடமையாகவே செய்து வரும் கே.சி.ஆர், ஹைதராபாத்தில் பத்துகோடி செலவில் பிரமாண்ட ‘பிராமண பவன்’ ஒன்றையும் கட்டிக் கொடுத்துள்ளார்.

இப்படியாக படுமோசமான பிற்போக்குத்தனங்களை நிகழ்த்தி வரும் ‘கே.சி.ஆரை வீழ்த்துவது’ என முடிவெடுத்துவிட்டால், பாஜகவிற்கு அது புதிய விஷயமல்ல. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபி.ஐ ரெய்டு என உலுக்கி எடுக்க தகுதியானவராக இருந்தும், கே.சி.ஆரைவிட்டு வைத்துள்ளது! காரணம், தன் எதிரிக்கு எதிரி மாத்திரமல்ல, தான் எதிர்பார்த்தவற்றைத் தான் கே.சி.ஆர் செய்து கொண்டிருக்கிறார் என நினைப்பது தான். உண்மையிலேயே தெலுங்கானா மாநிலத்தில் பாஜகவே மிரளக் கூடிய ஒரு படுபாதக ஆட்சியைத் தான் நடத்தி வருகிறார் கே.சி.ஆர்!

”கே.சி.ஆரின் ‘ரிமோட் கண்ட்ரோல்’ மோடியிடம் தான் இருக்கிறது” என ராகுல்காந்தி சொன்னது மிகையல்ல! பதிலுக்கு கே.சி.ஆர் ராகுல்காந்தியை, ”இந்தியாவின் மிகப் பெரிய பபூன்” என கிண்டல் அடித்துள்ளார்.

தெலுங்கானாவில் தேர்தல் களம் கண்டுள்ள ராகுல்காந்தி

பத்தாண்டுகள் ஆடாத ஆட்டங்களை எல்லாம் ஆடித் தீர்த்துவிட்ட பாரத ராஷ்டிரிய சமிதியின் மீது மக்களுக்கு கடுமையான அதிருப்தி இருப்பது கண் கூடாகவே தெரிகிறது. எனினும், அந்த அதிருப்தியை அறுவடை செய்யும் தகுதியில் காங்கிரஸ் இருக்கிறதா..? என்பதற்கு தான் இன்று வரை உறுதியான விடை கிடைக்கவில்லை.

அதே சமயம் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் கே.சி.ஆர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தெலுங்கானா எந்த அளவுக்கு சீரழியும் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.

மகளிருக்கு மாதம் 3000 ரூபாய், அனைத்து ஏழை குடும்பங்களுக்கும் ரூ400க்கு கியாஸ் சிலிண்டர், முதியோர் ஓய்வூதியம் ஆண்டுக்கு ரூ.5000 ஆக உயர்த்தப்படும், மருத்துவ காப்பீடு அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய்  உயர்த்தபடும், முழு பிரீமியத்தை அரசு செலுத்தி 93 லட்சம் குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் திட்டம், ரேஷனில் இலவச அரிசி, மகளிர் குழுக்களுக்கு சொந்த கட்டிடங்கள் கட்டி தரப்படும்…என்பதாக காங்கிரசை விஞ்சி கவர்ச்சிகர இனாம்களை அறிவித்துள்ள கேசி.ஆரை மக்கள் தூக்கி எறியும் துணிச்சல் பெறுவார்களா தெரியவில்லை!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time