‘கேட்டால் உடனே கடன் கிடைக்கும்’ என சீட்டிங் செய்யும் சீனத்து கடன் செயலிகள் தாறுமாறாக வந்துவிட்டன. ‘லோன் ஆப்’, ‘லெண்டிங் ஆப்’ என்ற தூண்டிலில் மாட்டிக் கொண்டு, சிறிதாகக் கடன் கொடுத்து, பெரிதாக பணம் பிடுங்கும் மோசடி கூட்டத்தால் உயிரை மாய்த்துக் கொள்வோர் எண்ணிக்கை பெருகி வருகின்றன…!
கடன் வழங்க வங்கி, நிதி நிறுவனங்கள், தனி நபர்கள் வழங்கும் கடன் என்று நிறைய வழிகள் இன்றுண்டு. ஆனால், முறையான வழியில் கடன் வாங்க பல முறை ஏறி இறங்க வேண்டும் என்று எண்ணத்தில் சுலபமாக கிடைக்கிற கடன் செயலி மூலம் வாங்குகிறார்கள். இன்று பல லட்சம் நபர்கள் கடன் செயலி வழியாக கடன் வாங்குகின்றனர். ஒவ்வொரு நாளும் இது போல கடன் வாங்கி சிக்கலில் மாட்டுகின்றவர்கள் அதிகமாகி வருகின்றனர்.
35 முதல் 50 சதவிகித வட்டி வசூலிக்கிறார்கள்! தொகையைத் தரும் போதே சுமார் 20 முதல் 25 சதவிகிதம் பிடித்துக் கொண்டு தான் தருவார்கள்! குறிப்பிட்ட நாட்களுக்குள் திருப்பித் தராவிட்டால் மலைத்து போகக் கூடிய அபராதம் விதிக்கிறார்கள்! முழுமையாக கடனை திருப்பி செலுத்திவிட்டாலும் கூட, மூர்க்கமாக பின் தொடர்ந்து மிரட்டுகிறார்கள்!
நம்முடைய மொபைலில் கடன் செயலிகள் ஆயிரக்கணக்கில் உள்ளன. அதில் 99 சதவிகிதம் செயலிகள் போலி கடன் செயலிகளாகும். இதில் பெரும்பாலான செயலிகள் சீன நபர்கள் நேரடியாக இந்தியாவில் முகவர்களை நியமித்து நடத்துகிறார்கள். குறிப்பாக இந்த மோசடி கும்பல்கள் வட நாட்டில் அதிகமாக உள்ளனர். சமீபத்தில் தமிழகத்தில் இருந்து இயங்கிய சித்திரவேல் என்ற தொழில் நுட்ப நபரை ஒடிசா போலீசார் கைது செய்தனர். சீனா மோசடி நபர்களின் தலைமையாக இந்தியாவில் இயங்கினார் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஆவியூரைச்…சேர்ந்த சித்திரவேல்.
ஒவ்வொரு நாளும் மோசடி நபர்கள் பிடிபடுகிறார்கள். ஆனால், இவர்களை ஒழிக்க முடியவில்லை. புற்றீசல் போல் உருவாக்கி கொண்டிருக்கிறார்கள். இவர்கள் டார்கெட் எல்லாம் ஏழை,எளிய குடும்பத்தாரை நோக்கியே உள்ளது. ஆண்-பெண் என்றெல்லாம் வித்தியாசம் இல்லை. இரண்டு தரப்பினரும் இப்படி கடன் வாங்கி கூனி, குறுகி, அவமானபட்டு, வாழ்க்கையை வெறுத்து, சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அப்படி மாட்டி நிலைகுலைந்த போனவர்தான் சத்யா. சென்னையை சேர்ந்தவர்.
குழந்தை பெற்றெடுக்க தாய் வீட்டிற்கு வந்தார் சத்யா. குழந்தை பிறப்பிற்காக தொழில்நுட்ப வேலையே விட்டு இருந்தார். சில நாட்களில் குழந்தை பிறந்தது. ஒரு நாள் மாலை நேரம் ஊரில் உள்ள மாமியார், மாமனார், கணவர் பதற்றமாக கிளம்பி சத்யாவை பார்க்க வருகிறார்கள்.
சத்யா உன் புகைப்படம் நிர்வாணமாக எங்களுக்கு வந்து உள்ளது என்ற வார்த்தையை போனில் மாமியார் சொன்னபோது கை குழந்தையை வைத்து இருந்த சத்யா நிலைகுலைந்து போய்விட்டார்.
அவர்களால் சிறுதும் யோசிக்க முடியவில்லை. அழுகையுடன் மாமியார் பேசியது மட்டுமே சத்யா மண்டையில் ஓடி கொண்டு இருந்தது. என்ன நடக்க போகிறது? இனி தன்னால் வெளியே செல்ல முடியுமா? அனைவரும் தன்னை தவறாக பார்ப்பார்களே என்று குழம்பி போய் இருந்தார்.
கணவர் என்ன சொல்வார்? மாமியார் எப்படி நடத்துவார்? ஒன்றும் புரியாமல் ஊரில் இருந்து வந்து கொண்டு இருக்கும் அவர்களை எண்ணி அஞ்சி கொண்டு இருந்தார் சத்யா. இந்த செயலை செய்த அந்த படுபாவிகள் இன்னும் தனக்கு போன் செய்து கொண்டு இருக்கிறார்களே என்று பயந்து நடுங்கி கொண்டு இருந்தார்.
இந்த சம்பவம் நடைபெற்ற நாட்களில் இருந்து 15 நாட்கள் பின்னோக்கி செல்வோம்.
வேலையை விட்டுவிட்டதால் கையில் பணச் சிக்கல் வந்தது சத்யாவுக்கு. கை குழந்தையை எந்த நேரமும் கவனித்து கொள்வதால் வருமான இழப்பு ஏற்பட்டது.ஒரு நாள் அவசரமாக பணம் தேவைப்பட்டது. தொழில்நுட்ப அறிவு இருக்கு ஆனால், அதன் ஆபத்து சரியாக தெரியவில்லை. தன்னுடைய மொபைலில் சீன கடன் செயலியை பதிவிறக்கம் செய்து தன்னுடைய ஆதார் கார்டு விவரம், பான் அட்டை எண், வங்கி கணக்கு விவரம் கொடுத்து கடன் வாங்கினார்.
இவர் எதிர்பார்த்த கடன் 75 ஆயிரம் ரூபாய். ஆனால், கிடைத்தது வெறும் ஐயாயிரம் ரூபாயே!
அந்த தொகையை வைத்து ஒன்றும் செய்ய முடியாது என்று கடன் கொடுத்த நபர்களுக்கு தகவல் சொன்னார். இந்த தொகையை சரியாக செலுத்தி விட்டால், நீங்கள் கேட்கும் தொகை தருகிறோம் என்று சொன்னார்கள். அதை சத்யாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ”கடன் கொடுக்கும் முன்பு உங்கள் விளம்பரத்தில் ஐம்பதாயிரம் அதன் மேல் வழங்கப்படும் என்று இருப்பதை பார்த்த பிறகுதான் கடனுக்கு விண்ணப்பித்தேன்” என்றதற்கு அனைவருக்கும் முதலில் இந்த தொகைதான் தருவோம் பிறகு பார்க்கலாம் என்று சொல்லிவிட்டனர்.
அப்பொழுதுதான் இதன் ஆபத்து கொஞ்சம் தெரிய தொடங்கியது. பயமும் வர தொடங்கியது. அவர்கள் பேச்சு அப்படி இருந்தது. சத்யாவுக்கு வந்த சந்தேகம் நம்முடைய ஆதார் கார்டு, பான் எண், வங்கி கணக்கு மட்டும் தான் கொடுத்தோம். நம் புகைப்படம் எப்படி அவர்களுக்கு சென்றது என்ற சந்தேகம் வந்தது.
நம்முடைய மொபைலில் உள்ள புகைப்படங்கள், வீடியோ, மெசேஜ் எல்லாம் நாம் மட்டுமே பார்க்க முடியும் என்பதல்ல! மொபைலில் உள்ள கேமரா, மைக் எல்லாம் நமக்கே நமக்கானது என்று நாம் நினைத்து கொண்டு இருந்தால், அதை கொஞ்சம் மாற்றி கொள்ள வேண்டும்.
மொபைல் சரியாக பயன்படுத்தினால், அது நமக்கு நண்பன், விழிப்புணர்வு இல்லாமல் பயன்படுத்தினால் வில்லன் ஆகிவிடும். அதுதான் சத்யா விஷயத்தில் நடந்து உள்ளது.
ஒரு செயலியை தரவிறக்கம் செய்யும் போது அந்த செயலி நம் மொபைலில் உள்ள புகைப்படம், வீடியோ போன்றவற்றை எடுத்து அதன் சர்வருக்கு அனுப்பிவிடும். அதாவது, நம் மொபைலில் உள்ள புகைப்படம், வீடியோ இப்பொழுது வேறு ஒரு சேமிப்பு இடத்திற்கு சென்று விட்டது. அந்த செயலில் உருவாக்கியவர்கள் நம் புகைப்படம், வீடியோ போன்றவற்றை பார்க்க முடியும். இது பெரும்பாலும் யாருக்கும் தெரியாது.
உங்கள் மொபைலில் உள்ள அனைத்து தொடர்பு எண்களும் கடன் செயலிகள் எடுத்து அதன் சர்வருக்கு அனுப்பிவிடும். உங்களுக்கு வரும் அனைத்து மெசேஜ்களையும் செயலி படிக்கும்.
உங்களுடைய மொபைல் முன் கேமரா அதுவே இயங்கி, நம்மை படம் எடுத்து அதன் சர்வருக்கு அனுப்பிவிடும். பல முறை எனக்கு நடந்து உள்ளது. மொபைல் லாக் தவறாக உள்ளீடு செய்து உள்ளேன். அப்போது, என்னுடைய புகைப்படத்தை என் மொபைல் முன் கேமரா எடுத்து எனக்கு மின்னஞ்சலில் அனுப்பி உள்ளது.
அதாவது, உங்கள் மொபைலில் உள்ள அனைத்தையும் வேறு ஒருவர், வேறு எங்கோ அமர்ந்து பார்த்து கொண்டு இருப்பார்.
அதனால் தான் தேவையில்லாத செயலி, புதிய நிறுவன செயலி, முன்-பின் அறிந்திராத செயலி, கடன் செயலி போன்றவற்றை பதிவிறக்கம் செய்ய கூடாது என்று அடிக்கடி சொல்லப்படுகிறது.
இங்கு சத்யாவுக்கு அதுதான் நடந்தது. கடன் செயலியை தரவிறக்கம் செய்த உடன் அந்த செயலி சத்யா மொபைலில் உள்ள புகைப்படம், வீடியோ, தொடர்பு எண்கள் மற்ற தகவல்கள் அனைத்தும் அதன் சர்வருக்கு அனுப்பிவிட்டது. அந்த மோசடி நபர்கள் இந்த புகைப்படங்களை எடுத்து நிர்வாணமாக மார்பிங் செய்து சத்தியா போனில் உள்ள தொடர்பு எண்ணில் உள்ளவர்களுக்கு அனுப்பி உள்ளனர்.
அப்படித்தான் சத்யா மாமியார்-மாமனார்-கணவர், நண்பர்கள், உறவினர்கள் என்று குறைந்தது 50 பேருக்கு சென்று உள்ளது. அவர்கள் இப்பொழுது அழுது கொண்டே வந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களை பொறுத்தவரை இந்த புகைப்படம் உண்மை என்று நம்பி உள்ளனர்.
சொன்னாலும் புரிய போவதில்லை என்று சத்யா நிலைகுலைந்து இருந்தார். வீட்டிற்கு வந்துவிட்டனர். வீடு முழுவதும் ஒரே அழுகை சத்தம். சத்யா நடந்ததை முழுவதும் சொன்னார். சரி அந்த படுபாவிகளுக்கு பணத்தை கட்டி விடலாம் என்று முடிவு செய்து உள்ளனர். வாங்கிய கடன் தொகை ஐயாயிரம். ஆனால், கட்ட சொன்னதோ ஐம்பதாயிரம் ரூபாயை! அதுவும், 15 நாட்கள் முன்பு வாங்கிய ஐயாயிரம் ரூபாய்க்கு!
கடைசியாக சத்யா புகைப்படம் இன்னும் வெளியே செல்லக் கூடாது என்பதால் அடுத்த சில மணி நேரத்தில் பணத்தை தயார் செய்துவிட்டனர். அந்த நேரம் அவர்களுக்கு நான் சொன்னது, ”எந்த காரணத்தை கொண்டும் பணத்தைக் கட்டாதீர்கள். போலீசில் புகார் கொடுங்கள்” என்பதே!
ஏற்கனவே புகைப்படம் மார்பிங் செய்து அனுப்பி விட்டான். அதற்கு மேல் அவனால் ஒன்றும் செய்ய முடியாது. இந்த மோசடி கும்பலில் ஆண் அளவு பெண்களும் ஈடுபடுகிறார்கள் என்பது தான் உண்மை. மிக மோசமான கெட்ட வார்த்தையில் பணம் கட்டாதவர்களிடம் பணம் வசூல் செய்யும் பெண்கள் பேசுகிறார்கள். ஆண் அந்த வார்த்தையை கேட்டாலே குறுகி விடுவான், பெண் கேட்டல் அவமானத்தின் உச்சத்திற்கு செல்ல வாய்ப்புண்டு!
சத்யாவுக்கு இப்படி நடந்துள்ளது. அதனால் தன் போனை அனைத்து வைத்துவிட்டார். எப்பொழுதாவது போனை திறந்தாலே கெட்ட வார்த்தையில், மோசமாக திட்டி மெசேஜ் வந்து விழுகிறது. மற்றும் உங்கள் ஆதார் விவரங்களை போதை கும்பலிடம் ஒப்படைத்து விடுவோம் என்ற மிரட்டல் மெசேஜ் வந்தது.
கடைசியாக சத்யா குடும்பத்தினர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து, சைபர் கிரைம் அலுவலகத்தில் புகார் தெரிவித்து, சத்யா மொபைல் எண்ணை தூக்கி எரிந்து, மிகுந்த மன அழுத்தத்தில் சத்யா வாழ தொடங்கினார்.
சென்னை கே.கே. நகரைச் சேர்ந்த இளைஞர் நரேந்திரன் சீனக் கடன் செயலியில் ரூ-33,000 ஆயிரம் வாங்கி, ரூ50,000 திருப்பி செலுத்தியும், அவர்கள் தொடர்ந்து மிரட்டியதால் தற்கொலை செய்து கொண்டார்!
சமீபத்தில் பெங்களூரை சேர்ந்த மாணவர் தேஜஸ், சீன செயலியில் கடன் வாங்கி கட்ட முடியாமல் தூக்கில் தொங்கி உள்ளார்.
இப்படி தொடர் மிரட்டல், புகைப்படம் மார்பிங், கெட்ட வார்த்தைகள் என்று தொடர்ந்தால் எப்படிப்பட்ட நபர்களும் நிலைகுலைந்து, பயந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுக்கிறார்கள். அப்படி இதுவரை 60 பேருக்கு மேல் தற்கொலை செய்துள்ளனர். இது முழுமையான கணக்கு இல்லை இன்னும் அதிகம் நபர்கள் தற்கொலை செய்திருக்க வாய்ப்புண்டு
சீன கடன் செயலிகள் எப்படி இயங்குகிறது என்றால், ஒரு செயலி நீண்ட நாட்கள் இயங்குவதில்லை. ஒரு குறிப்பிட்ட நபர்களுக்கு கடன் கொடுத்த பின் சில வாரங்களில் அந்த செயலியை நீக்கிவிடுகிறார்கள். பின் அவர்களே வேறு பெயரில் புதிய செயலியை உருவாக்கி கடன் கொடுக்கிறார்கள். நாம் இந்த பெயர் கொண்ட செயலிதான் என்னை ஏமாற்றியது என்று play store சென்று பார்த்தால் அங்கு அந்த செயலி இருக்காது. சம்மந்தமே இல்லாத புதிய பெயரில் வேறு செயலி இருக்கும். இது தான் அவங்க ஸ்டைல்! அதனால், அவ்வப்போது மோசடி செயலிகள் பற்றிய புகார்களால் அரசாங்கம் சில செயலிகளுக்கு தடை விதித்தாலும், அவர்கள் பீனிக்ஸ் பறவை போல வேறு பெயர்களில் வந்துவிடுகிறார்கள்!
ஒவ்வொரு கடன் செயலியும் சில வாரங்கள் மட்டுமே இருக்கிறது. அதனால், இது தான் தன்னை ஏமாற்றிய கடன் செயலி அதனால் அதில் யாரும் கடன் வாங்காதீர்கள் என்று சொல்ல கூட முடியவில்லை.
அரசு மிக தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு செயலியை பயன்பாட்டில் கொண்டு வர நிறைய கட்டுப்பாடுகளை உருவாக்க வேண்டும். செயல்பாட்டிற்கு ஒரு செயலியை சுலபமாக கொண்டு வருவதால் தான், ஏமாற்றுவதும் சுலபமாக முடிகிறது. ஆகவே, இதில் கடுமையான நிபந்தனைகள் தேவை!
அனைத்து கடன் செயலியையும் முற்றிலும் நீக்கிவிடுவது மிகவும் உத்தமம். கடன் வாங்க இந்தியாவில் நிறைய வழிமுறைகள் உள்ளன. நிறை கடன் கொடுக்கும் நிறுவனங்கள், வங்கிகள் உள்ளன. 2 நாட்களில் கடன் வாங்கும் முறை எல்லாம் வந்துவிட்டது. அரசு வங்கிகளே இப்போது வேகமாக 3 நாட்களில் தனிநபர் கடன் வழங்குகிறது. அதனால், முற்றிலும் கடன் செயலிகளை நீக்கினால் மட்டுமே இதற்கு விடிவு காலம்.
‘இனி மொபைல் கடன் செயலி வழியாக கடன் கிடையாது’ என்று அரசு முடிவு எடுத்து’ அப்படி இயங்கும் செயலிகளை நிரந்தரமாக நீக்கிட வேண்டும். எங்கோ ஒரு நாட்டில் இருந்து நம் நாட்டின் மக்களை அச்சுறுத்தி தற்கொலை செய்ய வைக்கிறார்கள் என்றால், இதை முற்றிலும் நிறுத்துவது மட்டுமே தீர்வாகும்.
பட்டுப் பாதை திட்டத்தின் மூலம் இலங்கை, பாகிஸ்தான் உள்பட சுமார் 42 நாடுகளுக்கு கடனுக்கு மேல் கடன் வழங்கி, அந்த நாடுகளை சீன அரசு தன் அடிமையாக்கி ஆட்டுவிப்பதைப் போல, சீனாவின் மோசடிப் பேர்வழிகள் வளரும் நாடுகளின் எளிய மக்களை கடன் வலையில் வீழ்த்தி, கண்ணீர் தற்கொலைகளுக்கு தள்ளுவதை இந்திய அரசு உடனே தடுக்க வேண்டும்.
கட்டுரையாளர்; செழியன் ஜானகிராமன்
சிறந்த விழிப்புணர்வு கட்டுரை !