ராஜஸ்தான் தேர்தலில் காங்கிரசும், பாஜகவும் சமபலத்துடன் போட்டி இடுகின்றன. ஆளும் கட்சியை தோற்கடித்து, ஆட்சி மாற்றம் செய்வது வழக்கமாக உள்ள ராஜஸ்தானில் இந்த முறை காங்கிரஸ் தோற்றுவிடும் என உறுதியாக சொல்ல முடியவில்லை. உட்கட்சி மோதல்களே காங்கிரசை வீழ்த்த வாய்ப்புள்ளது..!
இன்றைய முதல்வர் அசோக்கெலாட் சாதாரண நிலைமையில் இருந்து படிப்படியாக கடும் உழைப்பையும், திறமையையும் வெளிப்படுத்தி உயர்ந்தவர். கட்சிகளைக் கடந்து பலதரப்பிலும் நன்மதிப்பை பெற்றவர். சிலபல குற்றச்சாட்டுகள் ஆட்சியின் மீது வைக்கப்பட்டாலும் பாஜகவின் மீது மக்களுக்கு முழு நம்பிக்கை வந்துவிடவில்லை.
இதற்கு காரணம், எளிய மக்களுக்கான சில முக்கிய திட்டங்களில் முதல்வர் அசோக் கெலாட் கண்ணும், கருத்துமாக இருந்ததால் தான்!
அதிகமான கிராமப் புற ஏழை மக்களுக்கு வாழ்வாதாரமாக உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தை ராஜஸ்தானில் குறைகளின்றி முறையாக அமல்படுத்தி காட்டியுள்ளார் அசோக்கெலாட்! தொழிலாளர்களிடமும், குடிமைச் சமூக அமைப்புகளிடமும் கலந்தாலோசனை செய்யும் சிறந்த பண்புள்ள அரசாக காங்கிரஸ் அரசு இருப்பதால், ஒரு திட்டத்தை உருவாக்கும் போதும், அமல்படுத்தும் போதும் களத்திலிருக்கும் சம்பந்தப்பட்டோரிடம் கருத்துகளைப் பெற்று செயல்படுத்தியதில் வேலை வாய்ப்பையும், ஊதியம் நிலுவையின்றி தரப்படுவதையும் உறுதி செய்துள்ளனர்.
‘எளியோருக்கும் மருத்துவம்’ என்ற கொள்கையில் ராஜஸ்தான் அரசு சட்டப் பேரவையில் தாக்கல் செய்த ராஜஸ்தான் நலவாழ்வு உரிமைக்கான சட்ட முன்வரைவு ஒரு சிறந்த உதாரணமாகும். மட்டுமீறி செயல்படும் தனியார் மருத்துவமனைகளை கட்டுக்குள் கொண்டு வரும் இந்த சட்ட முன்வரைவை அரசு நிறைவேற்ற கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக தனியார் மருத்துவமனை முதலாளிகளிடம் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தி தான் சாதித்தது!
இப்படி எல்லாம் அசோக் கெலாட் செயல்பட்டாலும், மக்கள் விருப்பத்திற்கு மாறாக காங்கிரசின் டெல்லி தலைமையால் மாநிலத்தில் வலிந்து திணிக்கப்பட்டு வளர்க்கப்படும் தலைவரான சச்சின் பைலட் அவருக்கு பெருத்த தலைவலியாகவே உள்ளார். சொந்த கட்சியின் ஆட்சியில் துணை முதல்வராக பதவி வகித்துக் கொண்டே, அந்த ஆட்சித் தலைமையை நாளும், பொழுதும் குறை சொல்லி வருவதோடு, எதிராகவும் செயல்படுகிறார்.
அந்தந்த மாநிலங்களில் மக்களிடையே பணியாற்றி, கடும் உழைப்பையும், ஆற்றலையும் செலுத்தி முன்னேறி வந்த மக்கள் தலைவர்களை தயக்கமின்றி அரவணைத்து ஆதரித்தால் மட்டுமே காங்கிரஸ் தழைத்தோங்கும். தமிழகத்தில் தனிபெரும் தலைவராகத் திகழ்ந்த காமராஜரை ஓரம் கட்டி, பக்தவச்சலத்தை முதல்வராக்கியது அன்றைய டெல்லித் தலைமை! 1967 தேர்தலில் காமராஜரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க மறுத்து விட்டது டெல்லித் தலைமை! அன்றைக்கு ஆட்சியை பறிகொடுத்த காங்கிரஸால் இன்று வரை தமிழகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வர முடியவில்லை! அதே போலத் தான் தற்போதும் கூட மூன்று முறை முதல்வராக இருந்த அசோக் கெலாட்டை அடுத்த முதல்வர் அவர் தான் என டெல்லி தலைமை அறிவிக்கவில்லை. அதுமட்டுமின்றி அசோக் கெலாட்டின் நம்பகமான ஆதரவாளர்களுக்கு மீண்டும் சீட் கொடுக்கவும் மறுத்துள்ளது. இது தேர்தல் வெற்றியை கண்டிப்பாக பாதிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
ராஜஸ்தானில் சச்சின் பைலட் என்பவர் தந்தை ராஜேஷ் பைலட் மறைவை அடுத்து காங்கிரசில் வந்து முக்கியத்துவம் பெற்றவர். கட்சியில் சேர்ந்ததில் தொடங்கி, அவருக்கு அதிமுக்கியத்துவ பதவிகள் தரப்பட்டன. ஆனால், அதற்கான தகுதிகளையோ, திறமையையோ, அவர் வளர்த்துக் கொள்ளவில்லை. உழைப்பையும் தரத் தயாரில்லை. ஆனால், சதாசர்வகாலமும் முதலமைச்சர் கனவில் மிதக்கிறார்.
மக்கள் அன்பைப் பெற்ற அசோக்கெலாட்டை வீழ்த்தி, தான் முதல்வராக வேண்டும் என்ற கனவில் அவசரப்பட்டு 17 எம்.எல்.ஏக்களுடன் காங்கிரசில் இருந்து விலகி, பாஜகவுடன் பேரம் பேசி, அது படியாத காரணத்தால், மீண்டும் காங்கிரஸுக்குள் வந்தவர் தான் சச்சின் பைலட்!
இந்தியாவிலேயே காங்கிரஸ் வலுவாக காலூன்றி நிற்கும் மாநிலங்களில் முதன்மையாக இருந்த பஞ்சாப், காங்கிரசிடம் இருந்து பறிபோனதற்கு அன்றைய முதலமைச்சராக இருந்த கேப்டன் அமீந்தர்சிங்கை பலவீனப்படுத்தும் விதமாக பாஜகவில் இருந்து வந்த சித்து காங்கிரசுக்குள் நிகழ்த்திய அத்துமீறல்களுக்கு டெல்லித் தலைமை துணை போனதாகும். அது போல சச்சின் பைலட்டை எப்படியாவது முதல்வராக்கத் துடிக்கும் டெல்லி காங்கிரஸ் தலைமையின் அணுகுமுறையால் ராஜஸ்தானில் காங்கிரஸ் பலவீனப்பட்டுள்ளது என்பது தேர்தல் பிரச்சாரத்திலும், வேட்பாளர் தேர்விலும் கண் கூடாகத் தெரிகிறது!
பாஜகவில் மக்கள் செல்வாக்கிழந்த வசுந்தராஜே சிந்தியா சற்று ஓரம் கட்டப்பட்டு, சத்தீஸ்புனியா என்பவர் முன்னெடுக்கப்பட்டுள்ளார்! வழக்கம் போல பாஜக சாதி ரீதியான வாக்குகளை வென்றெடுக்கும் சதி திட்டங்களை சிறப்பாகவே அமல்படுத்தி வருகிறது. ராஜஸ்தானை பொறுத்த வரை ஜாட், ராஜ்புட், குஜ்ஜார், மீனாஸ், தலித், பிராமணர் ஆகிய ஜாதிகளே முக்கிய ஓட்டு வங்கியாக பார்க்கப்படுகின்றன. அதாவது, உயர்சாதியினர் 19 சதவிகிதம், பிற்படுத்தப்பட்டவர்கள் 39 சதவிகிதம், தலித்துகள் 18 சதவிகிதம், பழங்குடிகள் 13 சதவிகிதம், இஸ்லாமியர் 9 சதவிகிதம், இதர பிரிவினர் 2 சதவிகிதமாகும்.
இது வரை எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகளில் பாஜக ஜெயிக்கும் என மூன்றும், காங்கிரஸ் ஜெயிக்கும் என இரண்டும் தெரிவித்துள்ளன. சென்ற தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் 31 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன! இந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என பலராலும் கணிக்க முடியவில்லை.
Also read
ராஜஸ்தானைப் பொறுத்த வரை காங்கிரஸ், பாஜக இரண்டுக்கும் 33 சதவிகித வாக்கு வங்கி என்பது நிரந்தரமாக உள்ளது. மேற்கொண்டு 12 சதவிகித வாக்குகள் தேர்தலுக்கு தேர்தல் மாறி,மாறி விழுகின்றன. மாயாவதியின் பகுஜன் சாமாஜ் கட்சிக்கு 4 சதவிகித வாக்கு வங்கி உள்ளது!
ராஜஸ்தானில் காங்கிரஸ் தோல்வி அடைந்தால் அதற்கு மக்கள் மதிப்பை பெற்ற மாநிலத் தலைவரை வீழ்த்த நினைக்கும் காங்கிரசின் அகில இந்தியத் தலைமை தான் காரணமாக இருக்க முடியும்.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
Leave a Reply