கூழாங்கல் – தமிழில் ஒரு உலக சினிமா!

-தயாளன்

பல நூறு கோடிகள் கொட்டி ரத்தம் தெறிக்க எடுக்கப்படும் வன்முறை நிறைந்த தமிழ் சினிமா சூழலில் சிறிய பட்ஜெட்டில் நமது ரசனைக்கு நல்ல தீனியாக, காட்சி வழியே கவிதை மொழி பேசும் படமாக, நிஜ வாழ்க்கையின் நெருக்கடிகளை மிக அழகாகப் பேசும் கூழாங்கல் உலகத் தரத்தில் எடுக்கப்பட்டுள்ளது;

அறிமுக இயக்குனர் பி. எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் படம் “கூழாங்கல்”.  2022 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்காக இந்தியாவிலிருந்து பரிந்துரை செய்யப்பட்ட இந்த தமிழ்ப் படம் ஏற்கனவே நிறைய சர்வதேச விருதுகளையும், அங்கீகாரங்களையும் பெற்றுள்ளது.  தமிழ் சினிமா தற்போது சிக்கிக் கொண்டிருக்கும் பெருவணிக கார்ப்பரேட் சூழலில் கூழாங்கல் புதிய நம்பிக்கையைத் தருகிறது.

அரிதிலும் அரிதாக வெளியாகும் கூழாங்கல் போன்ற சினிமாக்கள் தான் தமிழ் சினிமாவை உயிர்த் துடிப்போடு வைத்திருக்கின்றன.  சில ஆண்டுகளுக்கு முன் வெளியான மேற்குத் தொடர்ச்சி மலை படத்தைப் போலவே இப்படமும் அற்புதமான சினிமா மொழியையும், காட்சி அனுபவத்தையும் நமக்குத் தருகிறது.

மிக எளிய கதை. கொடுமைக்கார கணவனிடம் கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு செல்லும் மனைவியை மீண்டும் கூட்டிக் கொண்டு வருவதற்காக மகனுடன் கிளம்புகிறான் அந்த கணவன்.  ஆனால் அந்த பெண் மீண்டும் கணவன் வீட்டிற்கே சென்று விடுகிறாள்.  தனது தந்தையும் ஊருக்கு நடந்து செல்ல வேண்டும் என்பதற்காக சிறுவன் பணத்தை கிழித்து எறிந்து விட்டு ஓடுகிறான். வேறு வழியில்லாமல் அவனது தந்தை தனது மகனை பின் தொடர்ந்து நடந்தே ஊர் வந்து சேர்கிறான். இந்த எளிய கதையை பிரச்சார நோக்கமில்லாமல், அனுதாபத்தை கோராமல், இயல்பான காட்சி மொழியிலும், நிலவியல் காட்சிகளிலும் வாழ்வை நம் முன்னே விவரிக்கிறார் இயக்குனர் பி.எஸ். வினோத்ராஜ்.


படத்தின் முதல் காட்சியில் இருந்தே நடக்கத் தொடங்கி விடுகிறார் நடிகர் கருத்தடையான்.  ஆவேசமும், வன்மமும் கொண்ட அந்த பாத்திரத்தை கச்சிதமாக உள்வாங்கி இருக்கிறார். படம் முழுக்க நடந்து கொண்டே இருக்கிறார். நடையில் காட்டும் வேகத்தைக் கொண்டே உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார்.  தமிழ் சினிமாவிற்கு அற்புதமான வரவு கருத்தடையான்.

சிறுவனாக வரும் செல்லப்பாண்டியும் நடந்து கொண்டே இருக்கிறான்.  ஆங்காங்கே தரையில் கிடக்கும் கண்ணாடி, இலைகள், மற்றும் பாறைகள், மலைகள், செடிகள் இவற்றினூடாக அவனது பயணம் நமது மனதை கரைய செய்கிறது. மதுரையின் சுற்றுப்புற ஊர்களான அரிட்டப்பட்டி, ஒத்தக்கடை, மேலூர் ஆகிய பகுதிகளின் நிலவியலில், அந்த கொடும் வெயிலில் சிறுவன் செல்லப் பாண்டியின் உழைப்பும் அர்ப்பணிப்பும் போற்றத் தகுந்தது. தனது தந்தையை பழிவாங்கும் முயற்சியில் அவன் செய்யும் சில்மிஷங்கள் ரசிக்க வைக்கின்றன.


படத்தின் இன்னொரு ஹீரோ என்றால் அது ஒளிப்பதிவு.  விக்னேஷ் குமுலை, ஜெயா, பார்த்திபன் ஆகியோரின் கேமரா மேலூரின் வெயிலை சுமந்து வருகிறது. நீளமான ஷாட்களும்,  தேவைக்கு ஏற்ப நிலைத்த ஷாட்களும், பாத்திரங்களின் நடை பயணத்தின் போது கேமராவின் நடை பயணமும் வசீகரிக்கின்றன.  சிறுவன் செல்லப்பாண்டி அவனது அம்மா ஊருக்கு சென்று விட்டு, பின் அவனது அப்பா அவனைத் தேடி வந்து சண்டையிடும் காட்சி ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டிருப்பது இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரின் திறமைக்கு சான்றாக அமைகிறது.  தகிக்கும் சூரியனின் பின்புலத்தில் கருத்தடையான் நடந்து செல்லும் போது காட்டப்படும் காட்சி உக்கிரமாக அமைகிறது.

இயக்குனர் பி.எஸ். வினோத்ராஜின் திரைக்கதை அமைப்பும், காட்சி மொழியும், ஒலி வடிவமைப்பும் இந்தப் படத்தை உலக தரத்திற்கு மாற்றுகின்றன. தனது வாழ்வின் அனுபவத்தை வலியை கடத்த அவர் காட்டியிருக்கும் பொறுப்புணர்வும் நேர்மையும் அவரை கொண்டாட வைக்கிறது.  தந்தை அவரது மகனை அடிக்கும் வன்முறைக் காட்சியின் போது கேமரா சற்று விலகி காட்சியின் கோரத்தை தவிர்த்து அமைதி காக்கிறது. பார்வையாளருக்கு காட்சியின் தீவிரத்தை கடத்தும் அதே சமயம் வன்முறையை காட்சிப்படுத்தும் போது பொறுப்புணர்வோடு நடந்து கொள்கிறது!

கேமராவின் அசைவும் நகர்வும். பேரூந்தில் நடக்கும் சண்டைக்காட்சியிலும் கேமரா மெதுவாக நகர்ந்து சென்று தூங்கிக் கொண்டிருக்கும் சிறு குழந்தை அழத் தொடங்கும் காட்சியில் நிலைக்கிறது.  படம் முழுக்க வரும் மலைகளும், புழுதி படர்ந்த பாதைகளும், வறண்ட நிலத்தின் தாவரங்களும் நமக்கு கதையின் இன்னொரு கோணத்தை சொல்லிக் கொண்டே வருகின்றன.   படத்தின் இன்னொரு நாயகன் எனில், அது படத்தில் வரும் நிலவியல்.  கதாபாத்திரங்கள் மூலம் ஒரு கதையும், நிலவியல் காட்சிகளின் மூலம் இன்னொரு கதையும் நமக்கு சொல்லப்படுகிறது.

எடிட்டிங், படத்தின் மிகப்பெரிய பலம். துண்டு துண்டாக வெட்டாமல், நின்று நிதானமாக சீரான வேகத்தில் படம் செல்கிறது. ஒலி வடிவமைப்பு அட்டகாசம். இயற்கையான ஒலிகள், நேரடி ஒலிப்பதிவும் மாயாஜாலம் செய்திருக்கின்றன.  ஒரு காட்சியில் அப்பாவின் காலடித் தடத்தின் ஒலியும், சிறுவனின் காலடித் தடத்தின் ஒலியும் ஒரே பிரேமில் நமக்கு கேட்கிறது. இந்த ஒலிப்பதிவு கதாபாத்திரங்களின் உணர்வுகளை கடத்துகின்றன. இசை யுவன் சங்கர் ராஜா. பெரும்பாலும் இந்த படத்திற்கு இசை தேவையில்லை என்பதை யுவன் புரிந்து கொண்டு இசையமைத்திருக்கிறார். இந்த அழகான எளிய படத்தை தயாரிக்க முன்வந்ததற்காக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

பான் இந்தியா சினிமா, காமிக் சினிமா என்ற பெயரில் வெறும் வன்முறை, ஆபாசம் இவற்றையே மூலதனமாக கொண்டு படங்கள் வெளிவரும் சூழலில், “கூழாங்கல்” என்னும் நல்ல சினிமா ஆசுவாசத்தையும் நிம்மதியையும் தருகிறது.

விமர்சனம் ; தயாளன்
தொடர்புக்கு: [email protected]

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time