மாஸ் ஹீரோக்களும், மீறப்படும் நியாயங்களும்!

-சாவித்திரி கண்ணன்

‘லியோ வசூலில் சாதனை படைத்தது ‘என்கிறது தயாரிப்பு நிறுவனம்! ‘எங்களுக்கு லாபமில்லை’ என்கிறது தியேட்டர்கள் தரப்பு! உண்மைகளை ஆராய்ந்தால், பெரிய மாஸ் ஹீரோக்களை வைத்து படமெடுப்பதன் மூலம் பல அநீதிகளும், மெகா சுரண்டல்களுமே பல தரப்பிலும் அரங்கேறுகிறது..! 

‘லியோ படத்தின் ஒரு வார கலெக்‌ஷன் 461 கோடி ப்ளஸ்’ என தயாரிப்பாளர் சார்பில் ஒரு விளம்பரம் தரப்பட்டது. இதையடுத்து திரைப்பட உரிமையாளர்களிடம் ”நல்ல கலக்சனாமே…” என பத்திரிகையாளர்கள் கேட்கப் போக, அவர்களோ, பொங்கி தீர்த்து விட்டார்கள்!

”கலெக்‌ஷனுக்கெல்லாம் குறைச்சல் இல்லை. நல்ல வசூல் தான்! ஆனா, எங்களுக்கு தான் லாபமில்லை…” என்று புலம்பித் தீர்த்துவிட்டார்கள்! இதில் திருப்பூர் சுப்பிரணியன் என்பவர் நேர்காணல்கள் பரவலாக வந்துள்ளன!

திருப்பூர் சுப்பிரமணியன்

”ஏன் லாபமில்லை? என்றால், மொத்த கலெக்‌ஷனில் 80 சதவிகிதத்தை படத் தயாரிப்பாளர் தரப்பு எடுத்துக் கொள்கிறது! 20 சதவிதம் தான் எங்களுக்கு வருகிறது! உதாரணத்திற்கு ஒரு டிக்கெட் விலை ரூபாய் 190 என்றால், அதில் எங்களுக்கு கிடைப்பது ரூபாய் 35 மட்டும் தான்! இதைக் கொண்டு தான் நாங்கள் தியேட்டர் மெயிண்ட்னினென்ஸ், ஊழியர்கள் சம்பளம், மின்கட்டணம்.. உள்ளிட்ட பல செலவுகளை செய்ய வேண்டி உள்ளது! ஆகவே நாங்கள் பெரிய ஹீரோ படம் ரிலீஸ் பண்ணிவிட்டோம். லாபமடைந்துவிட்டோம் என சந்தோஷம் அடைய முடியவில்லை.”

”பிறகு ஏன் சார் படத்தை வாங்கி திரையிடுகிறீர்கள்..?”

”என்ன செய்வது பல கோடிகள் செலவு செய்து தியேட்டர் கட்டி விட்டோம்…சும்மா தியேட்டரை போட்டு வைக்க முடியாது! அதனால் முதலில் இந்த 80;20 ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒத்துக் கொள்ள மறுத்தாலும், பின்பு இணங்க வேண்டியதாயிற்று! எங்களுக்கு லாபமும் இல்லை. நஷ்டமும் இல்லை. முன்பெல்லாம் பெரிய ஹீரோக்கள் படம் திரையிடல் ரொம்ப மகிழ்ச்சியைத் தரும். இப்போதோ போட்ட பணத்தை எடுக்க முடியுமான்னு பதற்றமே வருகிறது. இத்தனை கோடி வசூல்! ‘ரெக்கார்ட் பிரேக்’ என தயாரிப்பாளர் தரப்பு விளம்பரங்கள் தரலாம். ‘எங்களுக்கு என்ன வந்தது?’ என்று பார்த்தால், சந்தோஷப்பட முடியவில்லை. உதாரணத்திற்கு ஒரு லட்சம் வசூல் ஆனது என்றால், அதில் அரசுக்கான ஜி.எஸ்.டி.வரி 26,000 போய்விடும். மீதி, 74,000 த்தில் எங்களுக்கான தொகை 14,800 மட்டுமே கிடைக்கும். இதனால் தான் நாங்கள் 70;30 என பேசிப் பார்த்தோம். அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. அப்படி கிடைத்திருக்கும் பட்சத்தில் அவர்களோடு சேர்ந்து நாங்களும் மகிழ்ந்து இருக்க முடியும்” என்கிறார்கள்!

தயாரிப்பாளர்கள் தரப்பில் சொல்லப்படுவது என்ன?

”முதல் ஒரு வாரத்திற்கு மட்டும் தான் நாங்கள் 80;20 ஒப்பந்தம் போடுகிறோம். அடுத்த வாரத்தில் இருந்து 70;30 என்று தான் வாங்குகிறோம். இந்த முதல் வாரங்களில் டிக்கெட் விலையை மிக உயர்த்தி வைத்து வசூல் செய்கிறோம். ஆகவே தான், அதில் இருபது சதவிதமே அவர்களுக்கு அதிகம் என்கிறோம். உதாரணத்திற்கு ஒரு டிக்கெட் 1000 அல்லது இரண்டாயிரம் என வசூல் ஆகும் போது அதில் அவர்களுக்கு லம்பாக ரூ 200 முதல் 400 வரை லாபம் வருகிறது! அத்துடன் கேண்டினில் 15 ரூபாய் பாப்கார்னை 200 ரூபாய்க்கு விற்கிறார்கள்! 20 ரூபாய் குளிர்பானத்தை 200க்கு விற்கிறார்கள்! இதில் கொள்ளை லாபம் கிடைக்கிறதே..! இது தவிர பார்க்கிங் கட்டணம் என்று வசூல் கிடைக்கிறது. மேலும் ஆன்லைன் புக்கிங்கில் எக்ஸ்டிரா வாங்கப்படும் ரூ 30 ரூபாயில் 15 ரூபாய் தியேட்டர்காரர்களுக்கு கிடைக்கிறது. இப்படி பல வகைகளிலும் நன்றாக லாபம் பார்த்துவிட்டு லாபமே இல்லை என சொல்வதில் உண்மையில்லை..”என்கிறார்கள்!

இப்ப இதன் மூலம் நமக்கு புரிய வேண்டியது என்னவென்றால், தயாரிப்பாளர்களும், தியேட்டர்காரர்களும் சேர்ந்தே மக்களை சுரண்டுகிறார்கள்! எல்லாவற்றுக்கும் காரணம், நம் சமூகத்தில் இருக்கும் கதாநாயக மயக்கம் அல்லது வழிபாடு தான்!

இந்த கதாநாயக நடிகர்களோ தயாரிப்பாளரை சுரண்டுகிறார்கள். படத்தின் மொத்த தயாரிப்பில் மாஸ் ஹீரோவின் சம்பளம் மட்டுமே 70 சதவிகிதம் என்கிறார்கள்! அதாவது படத்தின் மொத்த பட்ஜெட் 200 கோடிகள் என்றால், ஹீரோ சமபளம் 140 கோடி என்றாகிறது! மீதி பணத்தில் தான் இயக்குனர், கதாநாயகி, மற்ற நடிக, நடிகையர், இசை அமைப்பாளர், டெக்னீஷியன் உள்ளிட்ட அனைவரின் சம்பளமும், தயாரிப்பு செலவுகளும் வருகிறது. இதில் குறிப்பிட்ட ஒரு சிலரின் சம்பளம் அதிகமாக இருக்கலாம்.

ஆயிரக்கணக்கான துணை நடிகர்களுக்கு நாள் கூலி தான்! இந்த லியோ படத்திலேயே கூட டான்ஸ் ஆடிய 1500 பேர்களுக்கு நாள் சம்பளம் தலா 1,250 தான்! அதையும் தராமல் இழுத்தடித்ததில் போராடித் தான் பெற்று உள்ளனர். உண்மையில் ரஜினி, விஜய்யை விட சிறப்பாக நடிக்கும் வல்லமை பெற்ற பிரகாஷ்ராஜ் இன்னும் லட்சங்களில் தான் சம்பளம் வாங்குகிறார். அதாவது மாஸ் ஹீரோக்கள் சம்பளத்தில் ஒரு சதவிகிதம் கூட அவர் பெறுவதில்லை..! அதே போல மாஸ் ஹீரோ சம்பளத்தின் ஒரு சதவிகிதம் கூட அந்த படத்தின் அடிநாதமாக உள்ள கதை எழுதிய படைப்பாளிக்கு போவதில்லை. இது தான் யதார்த்தம். இதற்கெல்லாம் காரணம், நமது சமூகத்தில் நிலவும் கதாநாயக மோகம் தான்!

அந்த கதாநாயகனுக்கு கொடுக்க வேண்டிய அதிக சம்பளத்தை சரி கட்டத் தான் டிக்கெட் கட்டணத்தை ஆயிரம், இரண்டாயிரம் என விற்க வேண்டியுள்ளது. தியேட்டர் உரிமையாளரின் பங்கை குறைக்க வேண்டியுள்ளது. தியேட்டர் உரிமையாளர் பங்கு குறைக்கப்படும் போது, அவர் அதை சரிகட்ட ‘பாப்கார்ன்’ உள்ளிட்ட நொறுக்குதீனி விலைகளை பத்து மடங்கு லாபம் வைத்து விற்பதை நியாயப்படுத்துகிறார். அதாவது, உயர் மட்டத்தில் செய்யப்படும் ஒரு தவறுக்காக அடிமட்டம் வரை பல தவறுகள் அரங்கேறுகின்றன.

இப்படி இத்தனை கோடி வசூல் எனப் போடுகிறார்களே.. அந்தப் பணம் யாருடையது..? விஜய்யை விரும்பும் ஏழை, எளிய ரசிகர்கள் முதல் நாள் படம் பார்க்க தங்கள் ஒரு வாரக் கூலியான ஆயிரம் ரூபாயை கொடுத்து பார்த்த பணமாகும். நியாயமற்ற முறையில் தியேட்டர் கட்டணங்களை உயர்த்தி வசூலித்து பெற்ற பணமாகும்! தியேட்டர்காரர்களையும், விநியோகஸ்தர்களையும் பதற்றத்தில் வைத்து நிர்பந்தித்து பெற்ற பணமாகும். ஒரு தனி நபர் அல்லது ஒரு சில நபர்கள் மட்டுமே பெரும் லாபம் அடைய நிகழ்ந்த உழைப்புச் சுரண்டலாகும். இவை யாவும் மாஸ் ஹீரோ மீதான மயக்கத்தில் மீறப்படும் நியாயங்களாகும்!

அது மட்டுமின்றி, இப்படி மிகைப்படுத்தி செய்யப்படும் விளம்பரங்கள் பெரும்பாலும் உண்மைக்கு புறம்பானவையாகும்! இந்த மிகைப்படுத்தப்பட்ட கணக்கின்  மூலம் கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் வேலையையும் செய்வதாக சொல்லப்படுகிறது. இதில் என்ன கொடுமை என்றால், பணம் இழந்த ரசிகர்களே அந்த வசூல் குறித்து பெருமை பொங்க பேச வைப்பதாகும்!

இப்படிப்பட்ட ஹீரோக்கள் படத்தை பார்த்து ரசிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவர்களை தலைவர்களாக்கி நாட்டையே அவர்களிடம் ஒப்படைக்க நினைக்கும் மக்கள் சற்று யோசிக்க வேண்டும். ஆட்சி அதிகாரம் கையில் இருக்கும் ரெட் ஜெயிண்ட் மூவீஸும், சன் பிக்சர்ஸும் செய்யத் துணியாததை விஜய்யின் செல்வாக்கை கொண்டு செய்யத் துணிகிறார்கள் என்றால், ஆட்சி அதிகாரம் கைக்கு போனால் என்னவெல்லாம் நடக்குமோ..?

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time