சட்டீஸ்கரும், ம.பியும் காங்கிரசுக்கு சாதகமா?

-ச.அருணாசலம்

சட்டீஸ்கரில் தற்போது ஆட்சியிலுள்ள காங்கிரஸ் அரசை மதிப்பீடு செய்யும் போது பெயில் மார்க்கிற்கு வாய்ப்பில்லை! மத்திய பிரதேசத்தில் சென்ற முறையே காங்கிரஸ் வென்ற போதிலும், ஆள்தூக்கி அரசியலில் குறுக்கு வழியில் ஆட்சிக்கு வந்த பாஜகவை மக்கள் மன்னிக்க தயாரில்லை..இதோ ஒரு அலசல்;

நவம்பரில் நடைபெற இருக்கும்  ஐந்து மாநில தேர்தல்கள் பல்வேறு அரசியல் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. 2024ல் நடைபெற இருக்கும் பொதுத்தேர்தலுக்கு முன்னால் இந்திய மக்களின் குறிப்பாக இந்தி மொழி பேசும் வட மாநில மக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தலாம்.

அரை இறுதி போட்டி என பல அரசியல் விமர்சகர்களால் அழைக்கப் பெறும் இத்தேர்தல்கள் உண்மையில் மோடிஆட்சியை பற்றிய மக்களின் கணிப்பை வெளிப்படுத்துமா? அல்லது அந்ததந்த மாநிலங்களின் தனிப்பட்ட பிரச்சினைகளை முன்னெடுப்பதில் உள்ள மக்களின் அக்கறையை வெளிப்படுத்துமா? என்பது ஒரு புதிரான விஷயந் தான் என்றாலும், ஓரளவுக்கேனும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு இந்த தேர்தல் முடிவுகள் முன்னோட்டமாகவே அமையும்!

மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் , தெலுங்கானா மற்றும் மிசோரம் மாநிலங்களில் முதல் மூன்று மாநிலங்களில் மட்டுமே பாரதீய ஜனதா கட்சி ஒரு பிரதான போட்டியாளராக உள்ளது . மற்ற இரு (தெலுங்கானா, மிசோரம்) மாநிலங்களிலும் அக்கட்சி முக்கிய போட்டியாளர் இல்லை. ஆனால் இந்த ஐந்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி பிரதான கட்சியாகபோட்டியாளராக உள்ளது . இரண்டு மாநிலங்களில் (ராஜஸ்தான், சட்டீஸ்கர்ஆளுங்கட்சியாகவும் மீதமுள்ள மூன்று மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கும் அருகதையுள்ள எதிர்கட்சியாகவும் காங்கிரஸ் களத்தில் நிற்கிறது.

முதலாவதாக இந்தக் கட்டுரையில் மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் நிலைமைகளை அலசலாம்.

சட்டீஸ்கர்

90 சட்ட மன்ற உறுப்பினர்களை கொண்ட சட்டீஸ்கர் மாநிலத்திற்கான தேர்தல் இரண்டு கட்டமாக  நவம்பர் 7 மற்றும் நவம்பர் 17 தேதிகளில் நடைபெற உள்ளது

மொத்த மக்கள் தொகையில் 32% விழுக்காடு பழங்குடி (Tribes) மக்களை கொண்ட சத்தீஸ்கர் வித்தியாசமான மாநிலமாகும் . பழங்குடிகளுடன் இயற்கை வளமும் நிரம்ப பெற்ற மாநிலம் சத்தீஸ்கர் மாநிலமாகும்

தன்னுடைய முதல் தேர்தலை 1998ல் சந்தித்த சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல் முதல்வர் காங்கிரசை சார்ந்த அஜித் ஜோகி ஆவார் 

2003 முதல் 2018 வரை பதினைந்து ஆண்டுகள் ராமன் சிங் தலைமையில் பா ஆட்சியில் இருந்தது

சுரங்க ஊழல், சுரங்கங்களை தனியாருக்கு தாரை வார்த்தல, வளர்ச்சியின் பெயரால் பழங்குடிகள் அகற்றப்படுவதும், இம் மாநிலத்தில் பெருமளவு நிழ்ந்தது. இதன் விளைவாக நகசல் இயக்கம் பழங்குடியினரிடையே காலூன்றுவதும், இதை முறியடிக்க அரசின் அத்து மீறலும், அதிகார முறைகேடும் ராமன் சிங் ஆட்சியின் அடையாளங்களாயின. சல்வா ஜுடும் என்ற ஆயுதக்கும்பலை அரசே உருவாக்கி அவர்கள் பழங்குடியினரை வேட்டையாடுவதை மாநில அரசே முன்னின்று நடத்தியதை அன்றைய உச்ச நீதி மன்றமே வன்மையாக கண்டித்தது. இத்துடன்வளர்ச்சியை முன்னிறுத்தி மக்களை கொள்ளையடித்த பா வின் ராமன் சிங் ஆட்சி 2018ல் மண்ணைக்கவ்வியது

2018ல் அறுதி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ் பூபேஷ் பாகல் தலைமையில் ஆட்சியமைத்தது

பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கையிலெடுத்துள்ள காங்கிரஸ் கட்சி தலித்துக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு முன்னுரிமை என்ற பரப்புரைகளில் தேர்தலை சந்திக்கிறது

பூபேஷ் பாகல் மற்றும் டி. எஸ். சிங் தியோ இடையிலான பூசல் தீர்க்கப்பட்டு காங்கிரஸ் கட்சி ஒருமுகமாக தேர்தலை சந்தித்து வருகிறது

எதிர்கட்சியான பா வோ கோஷ்டி பூசலினாலும் மோடி ஷா வின் மேலாதிக்க ஆளுமையாலும் தடம் புரண்டு திகழ்கிறது. வளர்ச்சி பற்றியோ விலை உயர்வு பற்றியோ ஏதும் சொல்லவியலாத பா பழங்குடிகள் மத மாற்றத்தை வம்படியாக கையிலெடுத்துக் கொண்டு மத திரட்டலுக்கு தூபம் போடுகிறது.

கே ஜி முதல் பி ஜி வரை இலவசக்கல்விமழலையர் பள்ளி படிப்பு முதல் முதுகலை பட்ட படிப்பு வரை கல்வி இலவசம்என்ற வாக்குறுதியை சத்தீஸ்கர் மாநிலத்திலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வழங்கியுள்ளார் , இது தவிர தெண்டு இலைகள் ( Tendu leaves) சேகரிப்போருக்கு ஆண்டிற்கு ரூ 4000 உதவி தொகை என்ற வாக்குறுதியும் பழங்குடியினரிடையே பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. சத்தீஸ்கர் மாநில மக்கள் தொகையில் 32% பழங்குடிகள் என்பதை கருத்தில் கொண்டால் இந்த அறிவிப்பின் முக்கியத்துவம் விளங்கும். மேலும் சாதிவாரி கணக்கெடுப்பு என்பதும் காங்கிரசால் முன்னெடுக்கப்படுகிறது

பல்வேறு ஆய்வுகளின்படி காங்கிரஸ் அதிக பெரும்பான்மை இடங்களை வென்று ஆட்சியை தக்க வைக்கும் என்றே தோன்றுகிறது

மத்திய பிரதேசம் 

உண்மையிலேயே இந்தியாவின் மத்தியில் உள்ள மத்திய பிரதேச மாநிலம் நவம்பர் 17ந்தேதி தேர்தலை சந்திக்கிறது. ஒரே கட்டமாக நடக்கும் இத்தேர்தல் 230 தொகுதிகளுக்கான ஒன்றாகும்

2018 ல் நடந்த தேர்தலில் , 114 இடங்களில் வென்று அதுவரை ஆட்சியில் இருந்த சிவராஜ் சிங் சௌகான் தலைமையிலான பா ஆட்சியை காங்கிரஸ் கட்சி வீட்டிற்கு அனுப்பியது

ஆனால், கோவிட் பெருந்தொற்று காலத்திலும் காங்கிரசை உடைத்து ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் 22 சட்ட உறுப்பினர்களை விலைக்கு வாங்கி கமல் நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை பா கவிழ்த்தது. ஓடுகாலிகளின் உதவியவுடன் மீண்டும் சிவராஜ் சிங் சௌகான் ஆட்சியில் அமர்ந்தார்.

 

40.89% விழுக்காடு வாக்குகளை பெற்ற காங்கிரஸ் வென்ற தொகுதிகள் 114. காங்கிரசைவிட 0.13% விழுக்காடு அதிக வாக்குகள் பெற்றிருந்தாலும், பா கவென்ற தொகுதிகளோ 109 மட்டுமே . இதை சரி செய்ய தான் சிந்தியா பயன் படுத்தப் பட்டார்.

2018ல் தோல்வியை தழுவிய பா , புல்வாமா உதவியால் 2019ல் நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றது. இதனால் சிவராஜ் சவுகான் இறக்கைகள் வெட்டப்பட்டு  மோடியின் ”  மகிமைபெரிதாக ஊதப்பட்டது. மாநில கட்சியோ சிதறுண்டு கிடந்தது

சிந்தியாவின் வரவினால் சவுகான் ஆட்சியை கெட்டியாக பிடித்தாலும் மாநில கட்சி அமைப்பில்  மூவகையான கோஷ்டிகள் தோன்றி வளரத்தொடங்கின

சிவராஜ் பாஜ்பா, மகாராஜ் பாஜ்பா , மற்றும் நராஜ் பாஜ்பாஅதாவது சிவராஜ் கோஷ்டி, சிந்தியா (மகராஜ்) கோஷ்டி , மூன்றாவதாக இவ்விரண்டிலும் சேராத தனி கோஷ்டி(நராஜ்)

என பிளவு பட்டது கட்சிமாநிலத்தலைவராக வி. டி. ஷர்மா நியமிக்கப்பட்டார் இவர் அமீத் ஷாவின் கையாள். ஆக ஷா பாஜ்பாவும் உதயமானது

இத்தகைய கோஷ்டி பூசலினால் கட்சி கலகலக்க ஆரம்பித்தது. தீபக் ஜோஷி என்ற முக்கிய தலைவர் தன் ஆதரவாளர்களுடன் பா விற்கு முழுக்கு போட்டுவிட்டு காங்கிரசில் இணைந்தார். இவர் முன்னாள் மத்திய பிரதேச மாநில முதல்வர் கைலாஷ் ஜோஷியின் புதல்வர்.

இந்த பூசலோடு ஆட்சியின் அலங்கோலங்களும் ஊழலும் மத்திய பிரதேச மக்களை வாட்டி யெடுத்தது. செய்வதறியாது தடுமாறிய மோடி ஷா தலைமை சவுகானை கழட்டி விடவும் முடியாமல், அரவணைத்து தட்டிக் கொடுக்கவும் முடியாமல் விழி பிதுங்கியது

மொத்த மக்கள் தொகையில் 50% விழுக்காட்டிற்கு மேல் பிற்படுத்தப்பட்டோரும், 15.62% விழுக்காடு தலித்துகளும் பழங்குடியினர் 21.9%ம், இஸ்லாமியர்கள் 5% விழுக்காடே உள்ள நிலையில் இஸ்லாமிய வெறுப்பு அரசியல் மட்டுமே பா விற்கு உதவாது. பிற்படுத்தப்பட்டோர் தான் பா வின் அடிப்படை ஆதரவாக இருந்து வந்துள்ளனர். ஆனால், பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவரும் , பெண் தலைவருமான மூத்த தலைவர் உமா பாரதியை வெகு காலமாக ஆர்.எஸ்.எஸ். ஓரங்கட்டியுள்ளதால் பற்றாக்குறைகள் பா கட்சிக்கு ஏற்படலாயிற்று

கமல்நாத் அரசு (2018-2020) பிற்படுத்தப்பட்டோருக்கான 27%  இட ஒதுக்கீட்டை அறிவித்த போது அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது, எதிர்ப்பும் இருந்தது.இவ் வொதுக்கீடு இன்றுவரை அமுல்படுத்தப்படவில்லை.

கட்சியில் கோஷ்டி பூசல்கள் வெடித்த நிலையில் , அடித்தள ஆதரவும் ஆட்டங்கண்ட நிலையில் சவுகானை நம்பாத மோடி ஷா தலைமை ஒன்றிய அமைச்சர்களையும் , நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வைத்துள்ளது. நரேந்திர சிங் தோமர் (வேளாண்துறை அமைச்சர்) பிரகலாத் சிங் பட்டேல் (நாடாளுமன்ற அவை அமைச்சர்) பக்கான் சிங் குலஸ்தே ( ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்) மற்றும் தேசிய பொதுச்செயலாளர் விஜய் வர்கியா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ராக்கேஷ் சிங்உதய் பிரதாப் சிங் போன்றோரையும் களமிறக்கி உள்ளது

தோல்வி பயத்தால் எடுக்கப்பட்ட இந்நடவடிக்கைகள் எதிர்பார்த்த பலனைக் கொடுக்கவில்லை என்பது ஒருபுறமிருக்க, ஓரங்கட்டப்பட்ட சவுகான் கட்சித் தலைமையுடன் பலப்பரீட்சைக்கு தயாராகிநான் சிறந்த முதல்வரில்லையா? என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என பேசும் கூட்டங்களில் எடுத்துரைத்து மக்களிடம்  பதில் கேட்கிறார்.மக்களும் இதற்கன பதிலை தேர்தலில் பளிச்சென வெளிப்படுத்த காத்து இருக்கிறார்கள்!

கட்டுரையாளர்;ச.அருணாசலம்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time