பழங்குடிகளை அழித்த துரோகத்தின் வரலாற்று காவியம்!

-தயாளன்

பழங்குடி செவ்விந்தியர்களுக்கு அமெரிக்கர்கள் செய்த துரோக வரலாற்றை  ஆவணமாக்கி உள்ளனர். தனது சொந்த நாட்டின் துரோகத்தை தோலுரித்து, பழங்குடிகளின் வாழ்வியல் போராட்டத்தை நேர்மையாக பதிவு செய்துள்ளார் மார்ட்டின் ஸ்கார்சிசி! ஒட்டி உறவாடி, எளியோரை அழிக்கும் ஆதிக்கத்தின் சூழ்ச்சி:

உலகெங்கிலும் உள்ள சினிமா ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மார்ட்டின் ஸ்கார்சிசியின் கில்லர்ஸ் ஆப் தி பிளவர் மூன் வெளியாகி இருக்கிறது.  கடந்த 20ம் தேதி அகில அளவில் வெளியான இப்படம் இந்தியாவில் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. சில திரையரங்குகளில் ஐமேக்ஸ் என்னும் அகன்ற திரையிலும் வெளியாகி இருக்கிறது.

இன்றைய நவீன சினிமாவின் பிதாமகர்களில் ஒருவரான மார்ட்டின் ஸ்கார்சிசியின் சினிமாக்கள் உலகை உலுக்கியவை. 80 வயதைக் கடந்தும் அவர் இயக்கும் படங்கள் உலக சினிமா வரலாற்றில் தடம் பதித்தவை.  தி சேலன்ஜிங், யேன் அமெரிக்கன் இன் பாரிஸ், ரிபெல் வித்தவுட் காஸ், தி டிபார்டட் (The Departed ) ஷட்டர் ஐலண்ட் (Shutter Island) தி ஐரிஷ்மன் (The Irishman) போன்ற படங்கள் புகழ் பெற்றவை. தி லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆப் க்றிஸ்ட் (The last Temptation of Christ) போன்ற படங்களின் மூலம் உலகளாவிய புகழை பெற்றவர் மார்டின் ஸ்கார்சிசி.

புகழ்பெற்ற படங்களை இயக்கிய மார்ட்டின் ஸ்கார்சிசி.

தற்போது அவர் இயக்கியிருக்கும் கில்லர்ஸ் ஆப் தி பிளவர் மூன் சினிமாவில் ஸ்கார்சிசியின் மேதைமை பளிச்சிடுகிறது. டேவிட் க்ரான் எழுதிய கில்லர்ஸ் ஆப் தி பிளவர் மூன் என்னும் நூலை தழுவி, எரிக் ரோத்துடன் இணைந்து மார்ட்டின் ஸ்கார்சிசி திரைக் கதை எழுதியிருக்கிறார்.  டேவிட் கிரான் எழுதிய நூல் மிகப் புகழ் பெற்றது. அமெரிக்காவில் பழங்குடி செவ்விந்தியர்களுக்கு அமெரிக்காவும் அதன் அரசுகளும் செய்த துரோக வரலாற்றின் கதையை அந்த நூலில் ஆவணமாக பதிவு செய்திருந்தார். அதை திரைக் கதையாகச் செம்மையாக்கி, சினிமாவாக காட்சி வடிவில் மொழி பெயர்த்திருக்கிறார் மார்ட்டின்.

அமெரிக்க செவ்விந்திய பழங்குடிகளில் ஒரு பிரிவினர் ஓசேஜ் இந்தியர்கள். நீண்ட நெடுங்கலாம் தொடர்ந்த சிவில் போரின் முடிவில் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கும் ஓசேஜ் பூர்வ அமெரிக்கர்களுக்கும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது. அதன் படி ஒக்லஹாமா பகுதியில் ஒசேஜ் இந்தியர்களுக்கு இறையான்மையுடன் கூடிய நிலத்தை அரசு அளித்தது. அதன் மூலம் தங்கள் பண்பாடு, மொழி, நிலம் ஆகியவற்றின் உரிமையை உறுதி செய்து கொண்டனர் ஓசேஜ் பழங்குடியினர். ஆனால், அதோடு நின்று விடவில்லை வரலாற்றின் முரண்.


பூர்வ அமெரிக்க பழங்குடிகளான ஓசேஜ்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் எண்ணெய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிலமும் அங்கு கிடைக்கும் தாதுக்களும் அந்த பழங்குடிகளுக்கே சொந்தம். இதனால் மிகப் பெரும் செல்வந்தர்களாக மாறினர் ஓசேஜ் பழங்குடிகள். உலகின் தனிநபர் வருமானத்தில் உச்சநிலையை அடைந்தனர். எண்ணெய் கிணறுகளின் வருமானம் பெரிய அளவில் இருந்ததால், நிர்வாக மற்றும் இதர பணிகளுக்காக அவர்கள் வெள்ளையர்களை வேலைக்கு அமர்த்திக் கொண்டனர்.  சிலர் வெள்ளையர்களை திருமணமும் செய்து கொண்டனர்.

இந்த சூழலில் 1920கள் தொடங்கி நிறைய கொலைகள் நடக்கின்றன. இளையவர்களை குறி வைத்து இந்த கொலைகள் நிகழ்ந்தன. பிளவர் மூன் என்பது ஒசேஜ் பழங்குடிகளின் மதிப்பிற்குரிய தாவரம். அவர்களின் ஆன்மீக நம்பிக்கைகளை கைவிடாமல் இருந்தனர். இந்த கொலைகளுக்கு பின்னால் இருந்தது யார் என்ற துரோக வரலாற்றையே கில்லர்ஸ் ஆப் தி பிளவர் மூன் படம் இரத்தமும் சதையுமாக விவரிக்கிறது.


ஓசேஜ் பழங்குடி பெண்ணான மொல்லியை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார் அமெரிக்கரான எர்னஸ்ட்.  நிறைய கொள்ளைகளும், கொலைகளும் நடக்கத் தொடங்குகின்றன. அமெரிக்க பாதுகாவலராக செயல்படும் வில்லியம் ஹேல் எர்னஸ்டின் உறவினர். மொல்லியின் உறவினர்கள் ஒருவர் பின் ஒருவராக கொலை செய்யப்படுகின்றனர். ஒரு வீட்டில் வெடிகுண்டு வெடிக்கிறது. அதைத் தொடர்ந்து மொல்லியின் கோரிக்கையின் பேரில் அமெரிக்க அரசு விசாரணை மேற்கொள்கிறது. அந்த விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் அம்பலமாகின்றன. துரோகத்தின் கோர முகம் வெளிப்படுகிறது. கொலையாளிகள் சிறைக்கு செல்கிறார்கள்.

இந்த கதையை உலகின் எந்த மூலைக்கும் பொருத்தலாம். பூர்வகுடி மக்களை கொஞ்சம் கொஞ்சமாக விரட்டி தோற்கடித்து அவர்களை பலவீனப்படுத்தி அவர்களின் நிலத்தை கொள்ளையடிப்பதுதான் உலகம் முழுக்க வரலாறாக இருக்கிறது. அப்படி ஒரு உண்மையான வரலாற்றுக் கதை இது. நேரடியாக எதிர்த்து நின்று அழிக்காமல், பழங்குடிகளுடன் உறவாடி
கெடுக்கும் நிகழ்வுகளை நாம் இன்றும் பார்க்கிறோம்.

இந்த வரலாற்று சூழலிலின் பின்னணியில் இந்த சினிமா தொடங்குகிறது. எர்னஸ்ட்டாக வரும் லியார்னாடோ காப்ரியோ நடிப்பில் மிளிர்கிறார். உலகப் போரில் பங்கு பெற்று கார் ட்ரைவராக ஒக்லகாமாவுக்கு திரும்பும் காட்சியில் தொடங்கி, மொல்லியாக வரும் லில்லி கிளாட்ஸ்டோனை காதலித்து, அவளின் நம்பிக்கைக்குரிய கணவனாக மாறி, கொஞ்சம் கொஞ்சமாக துரோகியாக மாறும் கதாபாத்திரத்தில் அசத்துகிறார்.

அவர் உரையாடல்களில் காட்டும் ஏற்றம் இறக்கம், இடைவெளி, கண்களில் காட்டும் காதல், துரோகம் இரண்டின் ஊசலாட்டம், குழந்தையின் மரணத்திற்காக கதறும் காட்சி என்று நடிப்பில் தான் ஒரு மாஸ்டர் என்று நிறுவுகிறார். மொத்த படத்திலும் காப்ரியோவின் நடிப்பும் ஒரு டிக்சினரியைப் போல இருக்கிறது. கடைசியில் தனது மனைவியின் கண்களை எதிர் கொள்ள முடியாமல் தவிக்கும் காட்சி ஒரு முத்திரை.

அமெரிக்க பழங்குடி ஒசேஜ் நாயகியாக நடித்திருக்கும் லில்லி கிளேட்ஸ்டோனின் நடிப்பும் அபாரம். சர்க்கரை நோயால் அவதிப்படும் காட்சியிலும் சரி, யாரை நம்புவது என்று பரிதவிக்கும் காட்சியிலும் சரி மிக நிதானமான அழுத்தமான நடிப்பில் ஆழ்மன உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார். உறவினர்களை ஒவ்வொருவராக இழக்கும் காட்சியில் அவர் வெளிப்படுத்தும் சோகம் சினிமா நடிப்புக்கு இலக்கணம்.

படத்தின் இன்னொரு ஹீரோ வில்லியம் கிங் ஹேலாக வரும் ராபர்ட் டி நீரொ. நயவஞ்சகத்தின் நடிப்பையும், துரோகத்தின் குரூரத்தையும் அவர் வெளிப்படுத்தி இருக்கும் விதம் அலாதி.

ஒளிப்பதிவு காலத்தை நம் முன்னே காட்சியாக்குகிறது. கதாபத்திரங்களின் ஆழ் மன உணர்வுகளை, அக ஓட்டங்களை ஒளியமைப்பும், கோணங்களும் கோடிட்டு காட்டுகின்றன. படத்தொகுப்பு செய்திருக்கும் ஸ்கார்சிசியின் தோழி 83 வயதான தெல்மாவின் உழைப்பு அபாரமானது. இந்த சினிமாவின் மிக முக்கியமான அம்சம் அது கலை மற்றும் ஆடை வடிவமைப்பு. 1920 காலகட்டத்தின் பழங்குடிகளின் உடை, உணவு, அவர்களது நம்பிக்கைகள், வழிபாடு குறிப்பாக இசைக்கருவிகள் ஆகியவற்றிற்காக படக்குழு காட்டியிருக்கும் மெனக்கெடல் மலைப்பைத் தருகிறது. படம் முழுக்க பழங்குடிகளின் இசையை பயன்படுத்தி இருக்கிறார்கள்.


கிட்டத்தட்ட 3.30 மணி நேரங்கள் ஓடும் இந்த படம் மிக தீவிரமான சினிமாவாக இருக்கிறது. ஆங்கில, பழங்குடி மக்களின் மொழிகளில் படம் இருப்பதால் உள்வாங்குவதற்கு சற்று சிரமமாக இருக்கலாம். பரபரப்பான காமிக் படங்களுக்கு உலக சினிமா ரசிகர்கள் அடிமையாகிக் கொண்டிருக்கும் இக் காலத்தில், மார்ட்டின் ஸ்கார்சிசி தனது ஆளுமையை நிருபித்திருக்கிறார்.  நடிகர்களிடம் அவர் வேலை வாங்கியிருக்கும் விதம், வரலாற்றை கண் முன்னே நிகழ்த்திக் காட்டியிருக்கும் அவரது நுட்பமான அர்ப்பணிப்பான உழைப்பு அத்தனையும் சாகசம்.

மார்ட்டின் ஸ்கார்சிசியின் நேர்காணல் ஒன்றில், “சினிமாவில் பரவி வரும் காமிக் கலாச்சாரத்திற்கு எதிராக போராட வேண்டும். சூப்பர் ஹீரொ படங்கள் என்பது சினிமா அல்ல. அவை நமக்கு தீம் பார்க் ஒன்றில் இருக்கும் உணர்வையே தருகின்றன” என்கிறார்.

அந்த நேர்மையான சொல்லுக்கு இந்தப் படத்தை அர்ப்பணிக்கலாம். தனது சொந்த நாட்டின் துரோகத்தை தோலுரித்து, பழங்குடி மக்களின் இருத்தலுக்கும், வாழ்வுக்குமான பெரிய ஆவணம் ஒன்றை பதிவு செய்து வரலாற்றின் தடங்களில் நேர்மையான படைப்பாளியாக வலம் வருகிறார் மாமேதை மார்ட்டின் ஸ்கார்சிசி. சினிமா ரசிகர்கள் கொண்டாட வேண்டிய படைப்பு “கில்லர்ஸ் ஆப் தி பிளவர் மூன்”

விமர்சனம்; தயாளன்,

[email protected]

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time