தேர்தல் நெருக்கத்திலான அசம்பாவிதங்கள் தேர்தலின் முடிவை மாற்றும்! முன்பு பண மதிப்பிழப்பு, ஜி எஸ் டி அமலாக்கம், ரபேல் ஊழல்… என அம்பலப்பட்டு தோல்வியை எதிர்நோக்கிய நிலையில், ‘புல்வாமா விபத்து’ மீண்டும் ஆட்சி க்கு வர உதவியதைப் போல, 2024-க்கும் பாஜகவிடம் ஒரு திட்டம் இருக்க வாய்ப்புள்ளதா?
நாட்டையே உலுக்கிய புல்வாமா பயங்கரவாத தாக்குதல் நடந்து நான்கு வருடங்களும், எட்டு மாதங்களும் உருண்டோடிவிட்டன. நாற்பதுக்கும் மேற்பட்ட CRPF வீர்ர்களை காவு கொண்ட இந்த துயர நிகழ்வு 40 குடும்பங்களை நிர்க்கதியில் தள்ளியுள்ளது.
அதில் அரசியல் ஆதாயம் அடைந்தவர்கள் இன்றும் ஆட்சியில் தொடர்கின்றனர்.
முன்னாள் ஜம்மு காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக் சில சமூக ஊடகங்களுக்கும் சமீபத்தில் ராகுல் காந்திக்கும் அளித்த பேட்டியிலிருந்து சில மறுக்கப்பட முடியாத உண்மைகள் வெளிவருகின்றன.
# விபத்து நடந்த உடனே மாலிக் பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார் . நடந்த விபத்துக்கு நமது தவறுகளே காரணம் என்றும் கூறியுள்ளார்.
ஆனால், பிரதமர் மோடியோ மாலிக்கிடம் ” இதைப்பற்றி யாரிடமும் எதையும் கூறாமல் வாயை மூடிக்கொண்டிருங்கள்” என கவர்னரை பணித்திருக்கிறார் .
இன்று வரை இந்தக் கோர விபத்து எப்படி நடந்தது? ஏன் நடந்தது? இதற்கு மூல காரணம் யார்? என்ற பல கேள்விகளுக்கு இன்று வரை அரசிடம் பதில் இல்லாததால், இது திட்டமிட்டு நடத்தப்பட்டு உள்ளது என்ற சந்தேகம் வலுக்கிறது!
இதற்கு பொறுப்பானவர்கள் இன்று வரை கண்டறியப்படவுமில்லை, தண்டிக்கப்படவுமில்லை! உயிரை பலி கொடுத்து வாடும் ராணுவ வீர்ர் குடும்பத்தினருக்கு நீதியும் கிடைக்கவில்லை. இந்த விபத்து பற்றிய எந்த உண்மையும் வெளிவரவில்லை.
புல்வாமா; தீவிரவாத தாக்குதலா? அரசின் சதிச் செயலா?
புல்வாமா பகுதியின் அன்று துணை கண்காணிப்பாளராக இருந்த DSP தேவேந்திரசிங் பற்றி யாரும் ஏன் மூச்சு விடவில்லை. இவர் 2020ல் தில்லிக்கருகில் இரண்டு பாக். தீவிரவாதிகளுடன் கைது செய்யப்பட்ட பிறகும், 2003ல் நடந்த பாராளுமன்ற தாக்குதலிலும் சம்பந்தப்பட்டவர், தில்லியிலுள்ள பாக் ஹைகமிஷன் உளவு அதிகாரியுடன் தொடர்புள்ளவர் என்றெல்லாம் தெரிந்த பின்னரும் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் தேவேந்திர சிங்கை அமீத் ஷா விடுவித்த மர்மம் என்ன?
இது போன்ற துயரங்கள் இனி நிகழா வண்ணம் தடுக்க என்ன செய்ய முடியும் என்ற நோக்கில் இதை அணுமும் போது சில உண்மைகள் வெளிப்படுகின்றன, சில கேள்விகளும் அதையொட்டி எழுகின்றன.
# 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 தேதி அன்று 78 பேருந்துகள் அடங்கிய ‘கான்வாய்’ 2,800 சி. ஆர்பி. எஃப் ராணுவ வீர்ர்களை சுமந்து கொண்டு அதிகாலை 4.10 மணிக்கு ஜம்முவிலிருந்து ஶ்ரீநகர் நோக்கி புறப்பட்டது.
அன்று மதியம் 3:10 அளவில் நெடுஞ்சாலையில் (NH -44) வீர்ர்களை சுமந்து சென்ற பேருந்து மீது வெடிமருந்து நிரம்பிய கார் மோதி(?) பயங்கர வெடிப்பின் விளைவாக 40க்கும் மேற்பட்ட வீர்ர்கள் பலியாயினர். பலர் படுகாயமுற்றனர், பேருந்தும் , வெடி மருந்து ஏற்றி வந்த காரும் சுக்கு நூறாக சிதறி சில கி. மீட்டருக்கு அப்பால் வரை சென்று விழுந்தன.
இந்த விபத்து நிகழ்ந்தவுடன் ஜம்மு காஷ்மீர் காவல் துறை ஓர் அறிக்கை வெளியிட்டது. அதில் 350 கிலோ வெடிமருந்தை ஏற்றிக் கொண்டு வந்த கார் மோதி வெடித்ததால் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டது.
பொதுவாக ராணுவ பாதுகாவலர்கள் வாகனங்களில் செல்லும் பொழுது அந்தப் பாதையை பாதுகாத்து பேணி வைக்கும் நடைமுறை உண்டு . இதற்கு பெயர் Standard Operating Procedure இந்த வழமையான நடைமுறை அன்று ஏனோ இவை பின்பற்றப்படவில்லை!
காவல்துறையோ, ராஷ்டிரிய ரைபில்ஸ் RR படையினரோ சாலையை சுத்தப்படுத்தி கண்ணிவெடி போன்ற வெடிகளை அகற்றி சாலைகளை ராணுவ தளவாட போக்குவரத்திற்கு பாதுகாப்பாக வைக்க Road Opening Patrol மூலம் முயன்றிருக்க வேண்டும். இதற்கு அவர்கள் Bomb Disposal Squad ன் உதவியை நாடி சுத்தப்படுத்தி , 200 மீட்டருக்கு ஒரு காவலர் என்ற நிலையில் அந்த சாலைகளை பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டும் . கிளைச் சாலைகள், குறுக்குச்சாலைகள் இவற்றை மூடி பாதுகாத்திருக்க வேண்டும்.
இவையெல்லாம் நடைபெற்றதா? நடைபெற்றதென்றால் 350 கிலோ வெடி பொருளுடன் ஒரு கார் எப்படி நெடுஞ்சாலையில் உலவ முடியும்?
இதை அனுமதித்து யார்? எங்கிருந்து இந்த கார் வந்தது? ‘’350 கி . வெடி மருந்துள்ள கார்’’ என்று விபத்து நடந்த உடனேயே கூற முடிந்த காவல் துறைக்கு இதை முன்னரே ஏன் தடுக்க இயலவில்லை.
# சி. ஆர்.பி.எப் . வீர்ர்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய விமானங்கள் கொடுக்க ஏன் உள்துறை அமைச்சகம் மறுத்தது. கோரிக்கை வந்து பல வாரங்கள் கிடப்பில் போட்டு இறுதியில் அனுமதி மறுத்தது ஏன்? என்ன காரணம்?
# வெடி மருந்து ஏற்றி வந்த கார் யாருடையது, எங்கிருந்து அது வந்தது? யார் ஓட்டி வந்தது?
விபத்து நடந்த உடனே வெளியான காவல்துறையும், பாரத்தவர்களின் சாட்சியமும் இந்த கார் ஒரு எஸ் யு வி ஸ்கார்ப்பியோ போன்ற ஸ்போர்ட்ஸ் யுட்டிலிட்டி வெய்கிள் என்றும், அது கறுப்பு நிறமான கார் என்றும் கூறுகிறது. இந்தப்படியே பிப்ரவரி 2022 வரை பிரபல ஊடகங்களும் கூறி வந்துள்ளன. இதையே தான் புலனமைப்புகளும் முதலில் கூறி வந்தன.
ஆனால், இப்பொழுது கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக இந்தக் கார் மாருதி இகோ என காவல்துறையும் புலனாய்வு அமைப்புகளும் கூறுகின்றன. அதுவும் மாருதி இகோ சிவப்பு நிறக்கார் , இதன் உரிமையாளர் சாஜ்ஜட் பட், இவரை காணவில்லை, தலைமறைவாக இருக்கிறார் என காவல் ரிக்கார்டுகள் கூறுகின்றன.
தோற்றத்தில் ஒன்றுக் கொன்று மாறுபட்டவை மாருதி இகோ வகை காரும், ஸ்கார்ப்பியோ ரக காரும் என அனைவருக்கும் தெரிந்த பிறகும் தடயங்கள் ஏன் மாற்றப்பட வேண்டும்? இதற்கு யார் பின்னணி போன்ற கேள்விகள் எழுகின்றன.
பல அறிக்கைகளில் தெளிவாக வெடி மருந்து நிரம்பிய கார் ஸ்கார்பியோ என சி.ஆர்.பி. எப் கூறி இருந்த நிலையில் அதை ஏன் மாருதி இகோ காராக மாற்ற வேண்டும் ?
யாரை காப்பாற்ற இந்த தகிடுத்த்தம்?
# காரை ஓட்டி வந்தவர் யார்? ஓட்டி வந்தவரும் சுக்கு நூறாக உடல் சிதறி மாண்டார். ஆனால், அந்த ஓட்டுனர் பெயர் அதில்அகமது தார் என்றும் அவர் ஜெய்ஷ் ஏ முகமது என்ற பயங்கரவாத அமைப்பின் தற்கொலை படை வீரன் என அறிவிக்கப்பட்டது.
கார் வந்த வழி என்ன? எங்கிருந்து வந்தது? என்பதை பற்றி எந்தவிதமான தெளிவான குறிப்பும் புலனாய்வு அமைப்பிடம் ஏன் இல்லை?
ராணுவ போக்குவரத்து வாகனங்களில் ஜாமர்ஸ் (Jammers) என்று அழைக்கப்படும் சிக்னல்களை முடக்கும் கருவி இருந்திருக்க வேண்டுமே? அது இல்லையா? அல்லது இருந்தும் வேலை செய்யவில்லையா? என்பது நமக்கு தெரியவில்லை. புலனாய்வு அமைப்பினரிடமும் இதற்கான பதிலில்லை.
# இந்த கோரவிபத்திற்கு முன்னரே பத்துக்கும் மேற்பட்ட புலன் அமைப்பின் எச்சரிக்கைகள் CRPF,BSF, ITBP, SSB, Army and Air Force ஆகிய காவல் அமைப்புகளுக்கு அனுப்பட்டுள்ளன.
ஆனால், இத்தனை எச்சரிக்கைகளையும் மீறி இந்த பயங்கரம் எப்படி நிகழ அனுமதிக்கப்பட்டது?
இது புலனாய்வின் தோல்வியே என்றே பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், இதை உள்துறை அமைச்சகம் மறுத்தாலும், சி. ஆர்.பி. எப். தயாரித்துள்ள அறிக்கையில் இவ்விபத்திற்கு காரணம் புலனாய்வு அமைப்புகளின் தோல்வியும், சில குறைபாடுகளும், கவனக் குறைவுமே என குறிப்பிட்டுள்ளது.
இவ்வறிக்கை ஏன் வெளி வரவில்லை ? உண்மையான ஆய்வறிக்கையை ஏன் மூடி மறைக்க வேண்டும்?
# காரை ஓட்டி வந்தவர் அதில்அகமதுதார் என்பதும், இந்த விபத்துக்கு நாங்களே பொறுப்பு என ஜெய்ஷே முகமது அமைப்பு அறிவித்தது. ஜெய்ஷே அமைப்பு அதில்தாரைப் பற்றிய ஒரு வீடியோவைவும் வெளியிட்டது.
காஷ்மீர் பள்ளத்தாக்கு காக்கபோரா பகுதியை சார்ந்த இவன் 2016-2018 காலங்களில் ஆறு முறை காவலர்களால் பிடிக்கப்பட்டாலும், கைது செய்யப்படவில்லை என மத்திய புலனாய்வு நிறுவனம் கூறுகிறது.
இங்கு சில கேள்விகள் இயல்பாக எழுகின்றன. ஆறு முறை பிடிக்கப்பட்ட ஒரு நபர், தீவிரவாதிகளுக்கு உதவியாளர் என அறிந்த பின்னரும் ஏன் கைது செய்யப்பட வில்லை?
2017 அக்டோபரில் கைதான அதில் அகமதுதார் எப்பொழுது வெளியே வந்தார் ? எப்படி விடுதலை செய்யப்பட்டார்?
அடுத்து புல்வாமா விபத்து நடப்பதற்கு ஒரு வாரம் முன்னதாக புல்வாமா அருகிலுள்ள சிர்நூ கிராமத்தில் ஒரு பள்ளியில் கைவெடி கொண்டு வீசிய விபத்தில் 11 மாணவிகள் காயமுற்றுள்ளனர். இந்த கிராமம் புல்வாமாவிலிருந்து சுமார் 10 கி.மீ தூரத்தில் தான் உள்ளது. இந்த விபத்திற்கு பிறகாவது பாதுகாப்பு படைகள் இப் பகுதியை கண்காணித்து சோதனைகள் செய்திருந்தால் வெடி மருந்துடன் அலையும் காரையும், அதில்அகமது தார் என்ற தீவிரவாதியையும் கைது செய்திருக்க முடியுமே! புல்வாமா விபத்தையும் தடுத்திருக்க முடியுமே!
# புல்வாமா விபத்தின் மூளையாக செயல்பட்டவன் என ஒருவரை இந்திய புலனாய்வு நிறுவனம் முதலில் அறிவித்தது. அவன் பெயர் அப்துல் ரஷீத் காஜி என கூறப்பட்டது.
ஆனால், அப்துல் காஜி 2007 ஜூலை யில் பாகிஸ்தான் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டான் என்ற தகவல் வந்தது. உடனே இந்திய அமைப்புகள் இன்னொரு உமர் ஹஃபீஸ் என்ற சூன் கம்ரான் என்பவன் தான் புல்வாமா வெடி விபத்தின் மூளையாக செயல்பட்டவன் என மாற்றி அறிவித்தன. அவனுடைய “போட்டாஷாப்” செய்யப்பட்ட படங்களையும் வெளியிட்டது. இதையெல்லாம் ஊடகங்கள் அப்படியே கேள்வி ஏதும் கேட்காமல் வெளியிட்டன.
இத்தகைய தரந்தாழ்ந்த செயலில் ஏன் இந்திய பாதுகாப்பு மற்றும் புலனாய்வு நிறுவனங்கள் ஈடுபடுகின்றன? இவர்கள் எதை மறைக்கின்றனர்? யாரை ஏமாற்றுகின்றனர்?
# இந்த விபத்தின் போது பிரதமர் மோடி எங்கிருந்தார்?
விபத்து நடந்த போது ( 14/02/2019 மாலை 3:10மணி) மோடி உத்தர பிரதேசத்தில் உள்ள கார்பெட் தேசிய பூங்காவில்-புலிகள் சரணாலயத்தில்- டிஸ்கவரி சானல்நபருடன் போட்டோஷூட்டில் இருந்தார்.
அன்று மாலை 5:10 மணி அளவில் ருத்ராபூர் பேரணியில் கைபேசி மூலம் உரையாற்றினார் .அப்பொழுது அவர் புல்வாமா பற்றி வாய் திறக்கவில்லை.பிறகு மாலை 6:40 மணி அளவில் கார்பட் பூங்காவிலிருந்து வெளியேறினார். பிரதமரின் நிழ்ச்சி நிரல் பற்றியும் அவரின் நடவடிக்கைகள் பற்றியும் பல கேள்விகள் எழுப்பபட்டாலும், அதற்கு தெளிவான பதிலை தெரிவிக்கவில்லை.
பிரதமரை போலவே தேசிய பாதுகாப்பு ஆலோசகர் NSA அஜீத் தோவல் கவர்னர் சத்யபால் மாலிக்கை தொலைபேசியில் அழைத்து, ”நீங்கள் இவ் விபத்து பற்றி எதுவும் வெளியில் கூறவில்லை அல்லவா? இனிமேலும் ஏதும் கூறாமல் மௌனமாக இருங்கள்” என வலியுறுத்தியதாக சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளது உண்மையில் திடுக்கிட வைக்கிறது.
பதற வைத்த பாலகோட் தாக்குதல்
இதற்கு இதுவரை பிரதமரிடமிருந்தோ , பிரதமர அலுவலகத்திலிருந்தோ, அஜித் தோவலிடமிருந்தோ எந்த மறுப்பும வரவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
தேச பாதுகாப்பிற்கு ஊறு வந்துவிட்டது என பாலகோட் தாக்குதலை நடத்திய மோடி தான் இந்திய நாட்டை பாதுகாக்கிறேன் பேர்வழி என சர்ஜிக்கல் தாக்குதலை வாக்குகளை வேட்டையாடும் அரசியலாக்கினார். அடுத்த கணமே சங்கிகளும், அமீத் ஷாவும் 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று கொக்கலித்தனர்.
நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், டெய்லி டெலிகிராப், தி கார்டியன், தி கலப் நியூஸ் என பல்வேறு பிரபல சர்வதேச பத்திரிக்கைகள் இந்த பொய்யை மறுத்து ஒரே ஒரு நபர் தான் சிறு காயமடைந்தார், காட்டுப் பகுதியில் சில மரங்கள் பழுதுபட்டன என ஆணித்தரமாக எடுத்துரைத்தனர்.
உள்நாட்டில் இந்த கேலிக்கூத்தை, பொய் மூட்டையை கேள்வி கேட்ட எதிர்கட்சியினரை மோடி கும்பல் ‘தேச விரோதிகள், ஆதாரம் கேட்கிறார்கள் ‘ என ஏகடியம் பேசியது.
ஆனால், இவர்களால் – மோடி கும்பலால்- சர்வதேச ஊடகங்களின் கேள்விகளுக்கு பதில் கூறவோ, ஆதாரங்களை எடுத்துரைக்கவோ முடியவில்லை. காரணம், ஸ்பைஸ் 2000 என்ற ஏவுகணையிலேயே காமிரா வசதியள்ளதால் உண்மையில் ஏவுகணை தாக்குதலால் பயங்கரவாதிகள் தாக்கப்பட்டிருந்தால் அவை புகைப்பட ஆதாரங்களுடன் இந்தியாவை வந்தடைந்திருக்கும்
வெறும் வாயை மெல்லும் சங்கிகள் இதன்மூலம், பொய் செய்திகள் மூலம் வாக்கு வேட்டையாட முயன்று வெற்றியும் கண்டனர்.
பண மதிப்பிழப்பு, ஜி எஸ் டி அமல் செய்தது, ரபேல் ஊழல், ஊதாரித்தனம் என பல்வேறு பிரச்சினைகளால் தோல்வியை எதிர்தோக்கி இருந்த மோடிக்கு புல்வாமா விபத்து வரப்பிரசாதமாக அமைந்தது. அரசின் கையலாகாத்தனத்தை மறைத்து, தேசத்திற்கு தீவிரவாதிகளால் ஆபத்து என பாலகோட் (சர்ஜிகல்?) தாக்குதலை நடத்தி வாக்குகளை அள்ளி தேர்தலில் வெற்றி கொள்ள இது பயன்படுத்தப்பட்டது.
தேசத்தின் பாதுகாப்பிற்கு ஆபத்து என்றால், அதை அலசி ஆராய்ந்து முடிவுகள் எடுத்திருக்க வேண்டாமா? இதன் காரணமான பல தலைகள் உருண்டிருக்க வேண்டாமா?
முன்னாள் ராணுவப் படை தளபதி சங்கர் ராய் சவுத்ரி, இவ் விபத்திற்கான பொறுப்பு பிரதமருக்கும், அரசுக்கு ஆலோசனை கூறும் தேச பாதுகாப்பு ஆலோசகரையுமே சாரும். நிச்சயமாக இது ஒரு பின்னடைவு தான் (setback)” என டெலிகிராப் நாளிதழில் கூறியுள்ளார்.
Also read
முன்னாள் ரா R&AW அமைப்பின் தலைவர் ஏ.எஸ். துலாட் இவ்விவகாரம் (புல்வாமா விபத்து பாலகோட் தாக்குதல்) பற்றி ,”இந்தச்சூழலை பயன்படுத்தி மோடி அரசியல் ஆதாயம் அடைய முயல்கிறார்” என்று கூறியுள்ளார்.
விபத்து எப்படி நிழ்ந்தது? ஏன் நிழ்ந்தது? இதை எதிர்காலத்தில் எவ்வாறு தடுப்பது என்ற அக்கறையில்லாமல் அதை எப்படி தனது அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்தலாம் என்று எண்ணும் பாஜகவினர், நாளை தங்களது ஆட்சியை மீண்டும் அரியணை ஏற்ற எதுவும் செய்ய தயங்க மாட்டார்கள்! ருசி கண்ட பூனைகளாயிற்றே!
2024ல் ஆட்சியை தக்க வைக்க ஒரு பிரளையத்தை கிளப்ப அவர் தயங்க மாட்டார், ஏன் ராமர் கோவிலை இடித்தோ, குருவாயூர் கோவிலை தாக்கியோ, அல்லது தனது உயிருக்கு ஆபத்து என்று நாடகமாடியோ வாக்குகளை பெறக் கூடும் என்ற அச்சம் பரவலாக பேசப்படுகிறது! சத்தியபால் மாலிக் அவர்களே இது குறித்து எச்சரித்து உள்ளார்!
கட்டுரையாளர்; ச.அருணாசலம்
Leave a Reply