விஜய்யின் “லியோ” படம் கழுதைப் புலிகளை பற்றி தவறான சித்திரத்தை சமூக தளத்தில் உருவாக்குகிறது! உண்மையில் இவை இயற்கையின் பாதுகாவலன். படு ஆபத்தான விலங்கில்லை! அதே சமயம் மனிதன் நட்பாக்கி கொள்ளும் விலங்குமில்லை. இவற்றின் இயல்புகள், செயல்பாடுகள் சுவாராஷ்யமானவை;
‘ஹைனா’ எனப்படும் கழுதைப் புலிகள் ஓர் தனித்துவமான விலங்கு. தற்போது இவை மிகவும் அரிதாகி வருகிறது. இவைகளைக் குறித்து அறிவியல் பூர்வமாகவும், உயிரின வரலாற்றுடனும் அறிந்து கொள்வது நல்லது!
விஜய் நடிப்பில் வெளியான ” லியோ “திரைப்படம் பார்த்த இளம் குழந்தைகள் கொடூரச் சண்டைகளில் குருதிச் சேறாகும் கொலைக் களங்களின் வன்மத்தைக் கடந்தும், படத்தில் சில காட்சிகளில் சொறிநாய், வெறிநாய் என்று சுட்டப்படும் விலங்கு எதுவென்று கேட்கிறார்கள் ..!
ஊடகங்கள் இவ்விலங்கை கழுதை, பூனை, நாய் குடும்பத்தில் சேர்த்து பேசவும், எழுதவும் செய்கின்றன. உலகில் இது வரை அறியப்பட்டுள்ள ஐந்தாயிரத்திற்கும் மேலான பாலூட்டிகளில் மிகச் சொற்பமான உயிரினங்கள் மட்டுமே பெண் விலங்குகளால் வழி நடத்தப்படுகின்றன! தாய் வழி சமூகத்தில் வாழும் பாலூட்டி சமூக விலங்கினங்களான யானை, சிங்கம் போலவே, இவையும் தாய்வழி சமூக விலங்கு தான். பொதுவாக கழுதைப் புலி கூட்டத்திற்கு பெண் கழுதைப் புலியே தலைமை தாங்கும். அதுவே வாழும் வாழ்விடத்தையும் முடிவு செய்யும்.
சமூக வலை தளங்களில் கழுதைப் புலியை ” ஈனப்பிறவி, எச்சில் ஒழுக்கி, அசிங்கமான விலங்கு, திருட்டுச் சனியன் ” என்றெல்லாம் திட்டுகிறார்கள்!
நமது திரைப்படங்கள் கொசு, ஈ, தொடங்கி பேருயிர்களான திமிங்கலம், யானைகள் வரை தவறாகக் காட்சிப்படுத்தி அவைகளின் இயல்பான வாழ்வை மோசமாக கொச்சைப் படுத்தியுள்ளன.
‘லயன் அண்ட் தி கிங்’ திரைப்படம் படுபங்கரமான விலங்காக கழுதைப் புலியைக் காட்டி பயமுறுத்தும்.
கோச்சடையான் படத்தில் ரஜினி அனிமேஷன் இயங்கு படக் காட்சியில் கழுதைப் புலியை பொளந்து கட்டுவார்.
லியோ படத்தில் விஜய் விஷீவல் எஃபெக்ட்ஸ் காட்சி அமைப்பில் கழுதைப் புலியுடன் சண்டையிட்டு அதனை குற்றுயிரும் குலையுயிருமாக வீழ்த்திய பிறகு நட்பாக்கி கொள்வார்.
நாட்டார் கதை தொடங்கி… நவீன சினிமாக்கள் வரை கழுதைப் புலிகளை தவறாகவே காட்சி படுத்துகிறார்கள்.
காட்டுயிர் உணவு வலயத்தில் உச்சத்திலுள்ள விலங்கு கழுதைப்புலி. லியோ படத்தில் காட்டும் கழுதைப்புலி இந்தியாவில் இல்லை! தமிழ் நாட்டில் நீலகிரி, ஈரோடு மாவட்டங்களிலுள்ள சத்திய மங்கலம் புலிகள் காப்பிடத்தில் கொஞ்சம் மீதப்பட்ட வரிக் கழுதைப்புலிகள் வாழ்கின்றன ..!
ஊன் உண்ணி விலங்குகளின் உணவு வலயத்தில் கழுதைப் புலிகளை உச்சத்தில் வைத்துள்ளது இயற்கை. காடுகளுக்குள் வயதாகி ,நோயால் ,வேட்டையால் சாகும் விலங்குகளின் கொம்புகள், காலடிக் குளம்புகள் , யானை போன்ற பெரும் விலங்குகளின் எலும்புகளை கழித்துக் கட்டி காட்டை தூய்மையாக வைத்திருப்பதில் கழுதைப் புலிகளின் பங்கு அளப்பரியது. காடுகளில் பிற கொன்றுண்ணி விலங்குகள் உண்ண முடியாத பகுதிகளை உண்டு காடுகளில் எலும்புக்கூடுகள் சேராமல் பார்த்துக்கொள்கின்றன கழுதைப்புலிகள். எனவே தான் கழுதைபுலி குறித்து கானகத் தூய்மையாளன் என அடைமொழியிட்டு தனி புத்தகமே எழுதியுள்ளேன்.
கழுதைப் புலிகளின் தாயகம் ஆப்பிரிக்கா வெப்ப மண்டல நிலப்பகுதி என்றாலும். மத்திய கிழக்கு நாடுகளிலும். இந்திய ஒன்றியங்களில் குஜராத், மாராட்டியம், மத்திய பிரதேசம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களிலும் வரிக் கழுதைப் புலிகள் வாழ்கின்றன.
புலி வாழும் காடு வளமானது என்பார்கள். கழுதைப் புலி வாழும் காடு வளங்களின் வளமானது!
நமது மேற்கு மலைத்தொடரில் மனிதர்கள் நுழையாத காடுகள் இன்னும் கொஞ்சம் மீதப்பட்டுள்ளன. அக்காட்டில் ஐந்து டன் எடையுள்ள ஒரு யானை இறந்து போக நேர்ந்தால் … அவ்வுடல் மக்கி மறைய பல மாதங்கள் பிடிக்கும். காற்றில், நீரில் பல தொற்றுயிர்கள் பரவவும் வாய்ப்புகள் அதிகம். ஆனால் …கழுதைப் புலிகளும் பாறுக் கழுகுகளும் நமது காட்டில் இருந்தால் ஒரு வாரத்தில் அவ்வுடல் சிதைக்கப்பட்டு மறுசுழற்சிக்கு உள்ளாகும். ஒரு யானையின் உடலில் சுமார் 700- கிலோவரை எடை கொண்ட எலும்புகள் உள்ளன. அதனை உண்டு செரிக்கும் வலிமையான தாடை அமைப்புகளை கொண்டது கழுதைப் புலிகள் . தன்னைவிட இரண்டு மடங்கு வலிமையான விலங்கை கூட தன் தாடையால் அடித்து வீழ்த்திவிடும் வல்லமை கழுதைப் புலிக்கு உண்டு.
எலும்புகள் மட்டுமன்று. கொம்புகள், நகங்கள், அடர்த்தியான கொழுப்புகள், காலடிக் குளம்புகள், இரப்பர் போன்ற தசை நார்களை மென்று கூழாக மாற்றுவதில், காட்டுக்குள் குவியும் இறைச்சிக் கழிவுகளை கழித்துக் கட்டுவதில் கழுதைப் புலிகளின் பங்கு அளப்பரியது. ஒரு வகையில் இது காடுகளில் சம்பளம் வாங்காமல் தோட்டி வேலை செய்கிறது!
நமது காடுகளில் உள்ள வரிக் கழுதைப் புலிகளின் உணவுப் பட்டியல் ரொம்பவும் வியப்பானது! இவை பெரிய விலங்குகளுடன் மோதாமல் பெரும்பாலும் குட்டிகளை மட்டுமே கொன்று உண்ணும். இதனால் சிங்கம், சிறுத்தை முதலான விலங்கினங்களுமே கூட கழுதைப் புலியிடம் இருந்து தங்கள் குட்டிகளை காப்பாற்ற படாதபாடுபடும். வயதான அல்லது நோய்வாய்ப்பட்ட அல்லது பலம் குறைந்த சிங்கத்தையோ, யானையையோ அடையாளம் கண்டால், கழுதைப் புலிகள் கூட்டமாகச் சென்று தாக்கி கொன்று தின்று விடும்.
இறைச்சியைத் தவிர புல், பழம், கிழங்கு, காய்கறிகளையும் இவை உண்ணும். காட்டை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் விளையும் மஞ்சள் பூசணிக்காயை இவை உண்டுவிடும். ஆகவே, இவற்றை விரட்டி அடிப்பார்கள். பட்டி,தொட்டிகளில் உள்ள ஆடு,கோழிகளையும் இவை உண்டுவிடும். ஏன் ….? பூச்சிகள், உடும்பு, முயல், கீரி, அணில்களும் கழுதைப் புலிகளின் விருப்பமான உணவுகளே. கால்நடைகள் வளர்க்கும் மக்கள் வசிப்பிடங்களுக்கு அருகே வரும் கழுதைப் புலிகள் இரவில் நடமாடும் பெருச்சாளி, எலிகளையும் வேட்டையாடி உண்கின்றன. கோழிகள், ஆடு, மாடுகள், அடைத்து வைத்துள்ள பட்டிகளுக்கு அருகே வரும் கழுதைப் புலிகளை மிக கடுமையாகத் தாக்கி விரட்டுகிறார்கள் மக்கள்.
எல்லா உயிரினங்களின் மீதும் மனிதர்கள் கொண்டுள்ள மூடநம்பிக்கைகளுக்கு கழுதைப் புலிகளும் தப்பவில்லை! பல்வேறு கட்டுக் கதைகளுக்கு இலக்கான கழுதைப் புலிகள் உலகெங்கும் அழிவின் விளிம்பில் உள்ளன.
இவற்றை மனிதர்கள் ஒரு போதும் வளர்க்க முடியாது. இவை பிணம் தின்பதால் ஒருவித துர் நாற்றம் எப்போதுமே இதனை நம்மை நெருங்க விடாது. இதன் சுபாவங்கள் மனிதர்களோடு நட்போடு வாழ்வதற்கு இடம் கொடுக்காது.
சிறார் கதைகள் , திரைப்படங்கள் போன்ற கருத்து, காட்சி ஊடகங்கள் காட்டுயிர்களின் இயல்பிற்கு மாறான படிமங்களை தோற்றுவித்து, காட்டுயிர்களின் மீது வெகு மக்களுக்கு ஒருவித ஒவ்வாமையை ,வெறுப்புணர்வை ஏற்படுத்தி வருவது வருத்ததிற்கு உரியதாகும்.. காட்டுயிர்களின் பல்லுயிர் பங்களிப்பை சமவெளி மக்களுக்கு கொண்டு சேர்க்கும் கல்வி விழிப்புணர்வு இயக்கங்கள் பெருக வேண்டும்!
கட்டுரையாளர்; கோவை சதாசிவம்
கானுயிர் ஆவணப்பட இயக்குநர்,
சூழலியல் எழுத்தாளர்
Leave a Reply