திகுதிகுக்கும் தெலுங்கானா தேர்தல் களம்!

-சாவித்திரி கண்ணன்

சூடு பறக்கிறது தேர்தல் களம்! பத்தாண்டு ஆட்சியை மீண்டும் தொடரத் துடிக்கிறார் கே.சி.ஆர். கெத்தாக களம் இறங்கி சுத்தாத இடமில்லை என சுற்றிச் சுழல்கிறது காங்கிரஸ்! சோனியா, ராகுல், பிரியங்கா மூவருமே களத்தில்! பாஜக நிலையோ பரிதாபம்…! சகல பலத்தையும் பிரயோகித்துக் கொண்டிருக்கிறார் கே.சி.ஆர்..!

2018 இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், BRS 119 இல் 88 இடங்களை வென்றது மற்றும் 47.4 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது. காங்கிரஸ் 28 சதவித வாக்குகளை பெற்று 19 இடங்களைப் பெற்று, இரண்டாவது இடத்தைப் பிடித்தது. பாஜக 118 தொகுதிகளிலும் போட்டியிட்டு ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. அதே சமயம் மூன்று சதவிதத்திற்கும் குறைவாக வாக்கு வங்கியுள்ள ஓவைசியின் இஸ்லாமிய கட்சி வெறும் எட்டு இடங்களில் போட்டியிட்டு 7 இடங்களை வென்று சட்டசபையில் மூன்றாவது பெரிய கட்சியாக இடம் பிடித்தது. இந்தக் கட்சியை பொறுத்த வரை பாஜகவிற்கு எதிராக காங்கிரஸுக்கு செல்ல வேண்டிய சிறுபான்மை வாக்குகளை தன் பக்கம் ஈர்த்துக் கொள்வதால் பாஜகவிற்கு பெரிய நன்மை கிடைக்கிறது.

அதே போல தனித்து நின்று தெலுங்கானாவில் உள்ள தலித் வாக்குகளில் 2 சதவிதத்தை பங்கு போட்டுவிடுகிறது பகுஜன் சமாஜ் கட்சி!

இடதுசாரிகளோடு காங்கிரசுக்கு கூட்டணி இருந்தாலுமே கூட, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் சேர்த்து பார்த்தால் கூட, அவர்களுக்கு ஒரு சதவிகித வாக்கு வங்கி கூட இல்லை. எனினும், காங்கிரஸ் கூட்டணியில் ஒட்டிக் கொண்டு ஓரிரு இடங்களில் வந்துவிடுவது வழக்கமாக உள்ளது.

தெலுங்கானா தேர்தலில் ஆந்திரா எதிர்க் கட்சியான தெலுங்குதேசம் போட்டியிடாது என அறிவிக்கப்பட்டது. கடந்த 2014 தேர்தலில் 15.5 சதவிகித வாக்கும், 15 தொகுதிகளும் கொண்டிருந்த தெலுங்கு தேசம் 2018-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ், இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு 2 தொகுதிகளில் மட்டும் வென்றது. மொத்தம் 3.51% வாக்குகளை தெலுங்குதேசம் பெற்றிருந்தது. தற்போது தெலுங்கு தேசம் தெலுங்கானாவில் முற்றிலும் செல்வாக்கு இழந்த நிலையில் தெலுங்கு தேசத்தின் வாக்கு வங்கி காங்கிரஸ் கூட்டணிக்கு கிடைக்க வாய்ப்புள்ளது என சொல்லப்படுகிறது.

கடந்த ஐந்தாண்டுகளில் வாக்காளர்கள் எண்ணிக்கை 5.8 சதவிகிதம் அதிகரித்துள்ளது. புதிய வாக்காளரக்ளில் கணிசமானோர் காங்கிரசை நோக்கி திரும்பியுள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

சமீபகாலமாக பி.ஆர்.எஸ் கட்சியில் இருந்து கணிசமானவர்கள் வெளியேறி காங்கிரஸ் கட்சியில் அணியணியாக சேர்ந்து வருவதானது அந்தக் கட்சி தோற்றுவிட வாய்ப்புள்ளது என்ற தோற்றத்தை உருவாக்கி உள்ளது! இதே போல முன்னாள் எம்.பி.,யும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான ஜி.விவேக் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்துள்ளார். மற்றொரு பாஜக மூத்த தலைவர் கோமதி ரெட்டி ராஜ் கோபால் ரெட்டி பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். இதெல்லாம் காற்று எந்தப் பக்கம் வீசிக் கொண்டிருக்கிறது என்பதற்கான அறிகுறியாக கணிக்கப்படுகிறது!

தற்போதைய ஆட்சி குறித்த அதிருப்திகள் மக்கள் மத்தியில் அதிகமாக உள்ள போதிலும், ஊடக லாபியை பலமாக செய்து வரும் கே.சி.ஆர் ஆட்சி குறித்த அதிருப்திகள் ஊடகங்களில் வெளிவராதவாறு பார்த்துக் கொள்கிறார்.

சந்திரசேகர ராவ் ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு தெலுங்கானாவில் பொருளாதார புழக்கம் தாறுமாறாக அதிகரித்துள்ளது என்பது கண்கூடான உண்மை! 2014 ஆம் ஆண்டு ஆந்திராவில் இருந்து தெலங்கானா பிரிக்கப்பட்ட போது, ​​புதிய மாநிலத்தின் பட்ஜெட் சுமார் ரூ 69,000 கோடியாக இருந்தது, தற்போது அது கிட்டத்தட்ட  3 லட்சம் கோடியாக வளர்ந்து உள்ளது! வெளி நாடுகளில் இருந்தும், உலக வங்கியிடமும் கடன்களை வாங்கி குவித்து மாநிலத்தை கடன் சுமையில் தள்ளியுள்ளார் என்ற விமர்சனக்கள் வைக்கபடுகின்றன.

இந்த தேர்தலில் அரசியல் கட்சிகள் பணபலத்தை பிரதானமாக பாவிக்கின்றனர். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதில் பி.ஆர்.எஸ் முன்னிலை வகிக்கிறது! பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் இது வரை ரூ.300 கோடிக்கும் கூடுதலான மதிப்புள்ள பணம் மற்றும் நகை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

ஆளும் பி.ஆர்.எஸ் கட்சி மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. அரசு இயந்திரத்தை மிகவும் ஊழல் மலிந்ததாக கே.சி.ஆர் மாற்றிவிட்டார்! கூச்ச நாச்சமில்லாத குடும்ப அரசியல், ஆடம்பர அரசியல், வெளிப்படைத் தன்மையற்ற நிர்வாகம், மற்ற கட்சி எம்.எல்.ஏக்களை விலை பேசி வாங்கிய அணுகுமுறைகள்.. தன்னை ஒரு போதும் அசைக்க முடியாது என்ற இறுமாப்பு, தலித்துகள், சிறுபான்மையினர் விவகாரத்தில் வெளிப்படையாக இல்லாமல் மறைமுகமாக காட்டப்படும் பாரபட்சம், குறிப்பாக காவல்துறை அத்துமீறலக்ள் ஆகியவை கே.சி.ஆருக்கு பெருத்த பின்னடைவை தந்தாலும், அவரது ஆட்சி கடந்த காலத்தில் செயல்படுத்திய திட்டங்கள், மிகக் கவர்ச்சிகரமான இலவச தேர்தல் வாக்குறுதிகள், தேர்தலில் விளையாடும் பணபலம், ஊடக ஆதரவு ஆகியவற்றால் எப்படியாவது கரை சேர்ந்து விடலாம் என நினைக்கிறார் கே.சி.ஆர். இந்த அச்சத்தின் காரணமாகவே கஜ்வெல், காமரெட்டி என இரு இடங்களில் போட்டியிடுகிறார்.

பல்லாண்டுகளாக ஒன்றுபட்ட ஆந்திராவை ஆட்சி செய்த கட்சி என்ற வகையில், காங்கிரசிடமும் பணபலம், ஆள் பலத்திற்கு குறைவில்லை. பணக்கார ரெட்டியார்கள் பலர் கட்சியில் உள்ளனர். இவர்கள் மிகத் தீவிரத்துடன் கே.சி.ஆருக்கு ‘டவ் பைட்’ தந்து கொண்டுள்ளனர்! குறிப்பாக ”கல்லேஸ்வரம் திட்டத்தில் 1 டிரில்லியன் ரூபாயை பிஆர்எஸ் அரசு முறைகேடாக கையாண்டது என்றும், கல்லேஸ்வரம் திட்டத்தின் ஒரு அங்கமான மேடிகட்டா நீர்த் தேக்க பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதானது எந்த லட்சணத்தில் கேவலமாக அவை கட்டப்பட்டன என்பதற்கு சாட்சியகிறது என்றும் காங்கிரஸ் பிரச்சாரம் செய்கிறது. மற்றுமொரு முறை கே.சி.ஆர் வசம் ஆட்சி சென்றால், தெலுங்கானாவில் நினைத்து பார்க்க முடியாத ஒரு சர்வாதிகார காட்டு ராஜ்யத்தை கே.சி.ஆர் குடும்பம் உருவாக்கி விடுவதோடு, தெலுங்கானாவையே கே.சி.ஆர் குடும்ப சொத்தாக்கி விடுவார்” என காங்கிரஸ் செய்யும் பிரச்சாரம் மக்களிடையே அபார வரவேற்பை பெற்றுள்ளது.

காங்கிரஸ் வெற்றிக்காக சோனியா, ராகுல், பிரியங்கா மூவருமே களம் கண்டுள்ளனர். மல்லிகார்ஜுன கார்க்கேயும் தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்! இதே போலவே பாஜகவிலும் மோடியும், அமித்ஷாவும் அடுத்தடுத்து தெலுங்கானாவிற்குள் வந்து தீவிரம் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அமித்ஷா வந்த போது அவரை ஜுனியர் என்.டி.ஆர் சந்தித்தது பாஜகவில் பரபரப்பையும், பரவசத்தையும் கூட்டியுள்ளது.

அமித்ஷாவும், ஜுனியர் என்.டி.ஆரும்!

முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் ஜுப்லி ஹில்ஸ் தொகுதியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனுக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளது காங்கிரஸ்! கிரிகெட் ஊழலில் பேரைக் கெடுத்துக் கொண்ட இவருக்கு முன்பு உ.பியில் மொரதாபாத் தொகுதியில் வாய்ப்பு தந்தது. அந்த வாய்ப்பை வீணடித்த அசாருதினுக்கு பிரபலம் கருதி மீண்டும் வாய்ப்பு தந்துள்ளது காங்கிரஸ்!

சமீபத்திய கருத்துக் கணிப்புகள் பலவும் காங்கிரஸ் லேசாக முன்னிலையில் இருப்பதாகவே சொல்கின்றன. இதனால் கே.சி.ஆர் மிகத் தீவிரத்துடன் தேர்தல் வேலைகளை முடுக்கிவிட்டு பணத்தையும் அள்ளி இறைக்கிறார். எல்லாவித அத்துமீறல்கள், முறைகேடுகளை செய்தாவது வெற்றிக் கனியை பறித்தே தீருவது என்ற வெறி அவரது ஒவ்வொரு அசைவிலும் வெளிப்படுவதால் காங்கிரஸால் கே.சி.ஆரை சமாளித்து வர முடியுமா? என்ற பதற்றமும் நிலவுகிறது. அப்படியே வெற்றி பெற்று வந்தாலும், கொடுத்த இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது பெரும் சவாலாக இருக்கும்.

* குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2500
* காஸ் சிலிண்டர் விலை ரூ.500
* அரசு பேருந்தில் மகளிர்க்கு இலவச பயணம்
* வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்ட 5 லட்ச ரூபாய் பணம்
* 200 யூனிட் இலவச மின்சாரம்

இதை விட சற்று கூடுதலாக இலவச வாக்குறுதிகள் பி.ஆர்.எஸ்ஸும் தந்து உள்ளது. எனவே, வெற்றி பெற்றவர்களுக்கு இருக்கிறது விஷப் பரிட்சை!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time