சர்வாதிகார ஆட்சியாளர்களின் கண்களுக்கு கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸ் சதிகாரராகத் தான் தெரிந்தார்! அவருக்கு நஞ்சை கொடுத்து கொன்றனர். ஆனால்,சாக்ரடீஸின் தத்துவங்கள் சாகாவரம் பெற்றுவிட்டன! அதே போல இன்று பாஜக அரசின் கண்களுக்கு மனித உரிமை ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும், சிந்தனையாளர்களும்,வழக்கறிஞர்களும் தண்டிக்கப்பட வேண்டிய நக்சலைட்டுகள்! இவர்களை சிறையில் தள்ள இந்த ஒற்றை குற்றச்சாட்டு போதுமானதாகிவிடுகிறது!
இந்தியா முழுவதும், காஷ்மீரிலிருந்து தமிழ்நாடு வரை, பேராசிரியரில் இருந்து மாணவர் வரை, கவிஞர் முதல் சமயத் துறவி வரை என கடந்த இரண்டு ஆண்டுகளில், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு குற்றவியல் சட்ட நெறிமுறைகளின்படி வழங்கப்பட்டிருக்க வேண்டிய பிணை கூட வழங்கப்படுவதில்லை. குறிப்பிட்ட குற்றத்தைச் செய்தார்கள் என்று தண்டிக்கப்பட்டு, தண்டனைக் கைதிகளாக சிறையில் அடைக்க வாய்ப்பில்லாததால், விசாரணைக் கைதிகளாக, பிணையும் வழங்காமல் வைக்கப்பட்டிருக்கிறார்கள்!
மத்திய அரசாங்கத்தின் தேசிய புலனாய்வு முகமை (National Investigation Agency) இந்த வழக்கை நடத்தி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பீமா கொரேகான் சம்பவத்தை ஒட்டி நடந்த கலவரத்தில் இத்தகைய சிந்தனையாளர்களை நகர்ப்புற நக்சல்கள் (Urban Naxals) என்று முத்திரை குத்தி, மோடியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார்கள் என்று மத்திய அரசு கூறுகிறது.
“கலவரம் நடந்த அன்று, இந்துத்தவ அமைப்பின் நபர்களே கலவரத்திற்கு காரணம் என்று முதல் தகவல் அறிக்கை போடப்பட்டிருந்தது. அதன் பிறகு ஆறு நாட்கள் கழிந்து ஊர்வலம் நடத்தியவர்கள் மீதும் முதல் தகவல் அறிக்கையை, இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ்தான் மகாராஷ்டிரா அரசு பதிவு செய்தது. ஆனால் பிறகுதான் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கை மாற்றினார்கள் ” என்கிறார் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக மும்பை நீதிமன்றத்தில் வழக்காடி வரும் மிகிர் தேசாய்.
இந்தியா முழுவதும் இதை எதிர்த்து போராட்டங்கள் நடந்து கொண்டே உள்ளன! ஐ.நா மனித உரிமை அமைப்பின் தலைவர் மிகைல்பேச்செல் இந்த கைதுகளை கண்டித்துள்ளார். இந்த வகையில் இந்தியாவெங்கும் சுமார் 1,500 மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சிறையில் இருப்பதாக அவர் கூறியுள்ளார். சீதாராம் யெச்சூரி, அருந்ததி ராய், யோகேந்திர யாதவ் அபூர்வானந்த்,பிரசாந்த் பூசன் ஆகியோர் இந்த கைதுகளை கடுமையாக கண்டித்துள்ளனர்.
இந்த அரசு தலித் சிந்தனையாளர்களையும் விடவில்லை. சுரேந்திரா காட்லிங்( Surendra Gadling) ரயில்வேயில் பயிற்சியாளராக ( apprentice) வாழ்வைத் தொடங்கிய ஒரு தலித். தலித் குடியிருப்புகளின் மேம்பாட்டிற்காக உழைத்தவர். இவர் தண்டிக்கபட்ட சிறைவாசியாக இருக்கும் பேராசிரியர் சாய்பாபா விடுதலைக்காக உழைத்தவர்.பேராசிரியர் சாய்பாபா 95 சதம் ஊனம் அடைந்தவர்.சக்கர நாற்காலியில் இருப்பவர்.சுரேந்திர காட்லிங்கும் இப்போது சிறையில் உள்ளார்.
சுதா பரத்வாஜ் என்ற 60 வயது பெண்மணி கான்பூர் ஐஐடியில் படித்தவர். ஒரு தொழிற்சங்கத் தலைவர், வழக்கறிஞர். பியுசிஎல் அமைப்பின் தேசியச் செயலாளராகவும் சுதா இருக்கிறார். ‘சத்தீஸ்கர் முக்தி மோர்ச்சா’ என்ற அமைப்பில் ஆதிவாசிகள் மத்தியில் சத்தீஸ்கர் மாநிலத்தில் பணிபுரிந்தவர். இவர் ஆதிவாசிகளுக்கு நிலம்,வனம், நீர் ஆகிய உரிமைகளை உறுதி செய்யும் வன உரிமைச் சட்டம் உருவாக காரணமாக இருந்தவர். கணிதம் படித்த சுதா, சட்டம் படித்தார். 2017 ல் தில்லி பல்கலைக்கழகத்தில் சட்ட பேராசிரியராக பணிபுரிவதற்காக தில்லி குடிபெயர்ந்தார். தற்போது இவர் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார். ரத்த கொதிப்பு, நீரழிவு நோய், இருதய நோய் என பல உபாதைகள் இருந்தாலும் இவருக்கு பிணை கிட்டவில்லை.
தெலுங்கானாவை சேர்ந்த கவிஞரான வரவர ராவ், தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் கட்சி உறுப்பினர்களோடு தொடர்பில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.இவர் தெலுங்கு மொழி கவிஞர் மற்றும் எழுத்தாளர். ஒருங்கிணைந்த ஆந்திராவில் புரட்சிகர எழுத்தாளர் அமைப்பை கட்டி எழுப்பியவர்.. பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகப் இடையறாது போராடி வருபவர் . இவரோடு சேர்ந்த எட்டு பேர் பிரதம மந்திரியை கொலை செய்யச் சதித் திட்டம் தீட்டியதாக குற்றப் பத்திரிகை வழங்கியுள்ளனர். இவர் மும்பை சிறையில் இருக்கும்போது கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளானாலும் 79 வயதான இவருக்கு பிணை கிட்டவில்லை.இவருக்கு சரியான மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டி அவரது மகள் நீதிமன்றம் சென்று முறையிட்டும் பயனில்லை.
கொரேகான் கலவரத்தின் பின்னணி என்ன?
200 ஆண்டுகளுக்கு முன்னதாக பிரிட்டிஷ் ராணுவத்தில் இருந்த மகர் ஜாதியைச் சார்ந்தவர்கள், பேஷ்வா இராணுவத்தை எதிர்த்து வென்றனர். பேஷ்வா சாதி என்பது மகாராஷ்டிராவில் ஒரு ஆதிக்க சாதி. இந்த வெற்றியின் நினைவாக பூனா மாவட்டம், கொரேகானில் ஒரு வெற்றித் தூணை கிழக்கிந்திய கம்பெனி நிறுவி் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி ஒன்றாம் நாள் தலித்துகள் வெற்றி விழா கொண்டாடுவது வழக்கம். 2018 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாள் ஒரு வெற்றி பேரணியில் நடந்தது.அதில் இந்துத்து அமைப்புகளின் சதியால் கலவரம் ஏற்பட்டது; ஒருவர் கொல்லப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த மகாராஷ்டிரா அரசு பாதிக்கப்பட்டவர்கள் மீதே பயங்கரவாத தடைச்சட்டத்தை சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்தது.அப்போது பாஜகவைச் சார்ந்த பாத்னாவிஸ் முதலமைச்சராக இருந்தார்.
1996ம் ஆண்டு இயற்றப்பட்ட பஞ்சாயத்து சட்டம், வன வளங்களையும், இயற்கை வளங்களையும், நீர் ஆதாரங்களையும் பாதுகாக்கும் உரிமைகளை உள்ளூர் பஞ்சாயத்துகளுக்கும், கிராம சபைகளுக்கும் வழங்கியது.அதே போல வன உரிமைச் சட்டம் 2006, ஆதிவாசிகளுக்கு விவசாயம் செய்யும் உரிமை, நிலத்தை விட்டு அப்புறப்படுத்தினால் உரிய இழப்பீடு போன்ற உரிமைகளை வழங்கியது. இதனால் கார்ப்பரேட்டுகளுக்காக விருப்பம் போல நிலத்தை ஆர்ஜிதம் செய்வதில், மத்திய மாநில அரசுகளுக்கு ஒரு தடை ஏற்பட்டது.ஏறக்குறைய கைது செய்யப்பட்டுள்ள அனைவருமே ஏதோ ஒரு வகையில் சமுதாயத்தின் அடித்தட்டு மக்களின் மேம்பாட்டிற்கு உழைத்தவர்கள்.அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளின் அடிப்படையில் வெளிப்படையாக பணி புரிபவர்கள்.அனைத்தையும் விட சிறந்த மனித நேயர்கள்!
மகாராஷ்டிரா அரசு, தேர்தலுக்குப் பிறகு பீமா கோரேகான் வழக்கை மறு ஆய்வு செய்வோம் என்று கூறியிருந்தது. இந்நிலையில் மத்திய அரசின் கீழ் உள்ள தேசிய புலனாய்வு நிறுவனம், மாநில அரசையும் கலந்தாலோசிக்காமல் இந்த வழக்கை தன்வசம் எடுத்துக் கொண்டது. அதேபோல வனவாசிகள் அதிகம் இருக்கும் ஜார்கண்ட் சத்தீஷ்கர் மாநில முதலமைச்சர்கள் சோரன்மற்றும் கேரள் முதல்வர் பினராய் விஜயன் ஆகியோர் கைதுகளை கண்டித்துள்ளார்.
அருண் பெரேரா என்ற மும்பையைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் மீது முந்தைய அரசு ஏற்கெனவே பத்து வழக்குகள் போட்டிருந்தது. அதில் எட்டு வழக்குகளில் விடுவிக்கப்பட்டுவிட்டார். ஒன்றில் தண்டனைக்காலம் முடிந்து விட்டது. சமூக ஆர்வலரான அருண் பெரேரியா வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 2007-ம் ஆண்டும் மாவோயிஸ்ட்டுகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கூறி அருண் கைது செய்யப்பட்டார். எனினும், 2012-ம் ஆண்டு இந்தக் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஜனநாயக உரிமைகளுக்கான பாதுகாப்பு குழு (Committee for Protection of Democratic Rights) என்ற அமைப்பில் செயலாற்றி வருகிறார். இதுபோன்ற வழக்குகளில் அதிகம் பேரை கைது செய்யும் காவலர்களுக்கு 11 சதவீத ஊக்கத் தொகையாக சம்பள உயர்வு கொடுப்பதன் மூலம், மனித உரிமைகளுக்கு விரோதமான நடவடிக்கைகளை அரசு ஊக்குவிக்கிறது’’ என்று இவர் கூறுகிறார்.
கௌதம் நவ்லாகா (Gotham Navlakha) என்பவர் காஷ்மீரைச் சேர்ந்தவர்; எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி என்ற புகழ்வாய்ந்த பத்திரிகையின் ஆலோசகர்;’Days & Nights in the Headland of Rebellion’ என்ற நூலை எழுதியவர். கவுதலம் நவ்லகா சிறந்த மனித உரிமை ஆர்வலர், பியுடிஏ அமைப்பின் உறுப்பினராகவும் இருக்கிறார். பத்திரிகை ஆசிரியராகவும் பணியாற்றியவர் . 2011-ம் ஆண்டு காஷ்மீர் மாநிலத்துக்குள் நுழைவதற்கு அரசால் இவருக்கு தடை விதிக்கப்பட்டு, வலுக்கட்டாயமாக டெல்லிக்குத் திருப்பி அனுப்பப்பட்டவர்.
சோமா சென் ( Soma Sen) என்ற ஆங்கிலப் பேராசிரியர், நாக்புர் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்திலும் இருக்கிறார். இவரது கைதுக்கு பிறகு இவர் வேலையிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
கேரளாவை சேர்ந்த ரோனா வில்சன் ( Rona Wilson) ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பல்கலைக்கழகத்தில் படித்தவர்.கொல்லம் நகரில் வசிக்கிறார். பாராளுமன்றத் தாக்குதலில் எஸ்.ஏ.ஆர்.ஜிலானி விடுதலைக்காக விடுதலைக்காக முன்னணியில் இருந்தவர். அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான குழுவில் (Committee for the release of Political Prisoners ) பணியாற்றியவர். லண்டனில் இவரது ஆய்வுப் பட்ட( PhD) முன் மொழிவு பரிசீலனையில் இருந்தபொழுது கைது செய்யப்பட்டிருக்கிறார்.
Also read
வெரோன் கோன்சால்வேஸ் பிரபல எழுத்தாளர், சமூக ஆர்வலர், தொழிற்சங்கத் தலைவர். மாவோயிஸ்ட்டுகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கூறி கடந்த 2007-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இவர் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டது.எனினும், 17 வழக்குகளில் விடுவிக்கப்பட்டார். மும்பையில் உள்ள ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் பேராசிரியராகவும் வெரோன் கோன்சால்வேஸ் பணியாற்றி உள்ளார்.
ஆனந்த் டெல்டும்டே( Anand Tetulmbde.) சமூக ஆர்வலர், எழுத்தாளர். கோவாவில் உள்ள புள்ளியியல் மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர்.. சமீபத்தில் இவர் வெளியிட்ட ’இந்தியாவில் தலித் இயக்கம்’ என்ற தலைப்பில் என்ற புத்தகம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது பலருக்கும் நினைவிருக்கும். மேலும், இந்திய சாதி அமைப்பு குறித்த சிந்தனையாளர். Hindutva Politics, Perspectives for understanding communal praxis என்ற முக்கியமான நூல்களை எழுதியிருக்கிறார்
இந்த கொரோனா காலத்தில் இவரை விடுதலை செய்ய வேண்டும் என்று ரொமீலா தாப்பர் உள்ளிட்ட 600 சிந்தனையாளர்கள் அறிக்கை விடுத்துள்ளனர். ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் (Amnesty international) என்ற அமைப்பும் கண்டித்துள்ளது.
Tata institute of social science ல் படித்த மகேஷ் ராவத் (Mahesh Raut ) என்ற ஆராய்ச்சி மாணவரும் கைது செய்யப்பட்டுள்ளார். புகையிலை விவசாயம் செய்யும் ஆதிவாசிகள் ஒப்பந்தக்காரர்களால் ஏமாற்றப்படுவதை தடுக்க பணியாற்றியது தான் காரணம். ‘பாரத் ஜன் அந்தோலன்’ என்ற அமைப்பில் தொண்டாற்றியவர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெய்ராம் ரமேஷ் இவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இதுவரை கைது செய்யப்பட்டுள்ள 16 பேர்களில் மிகவும் இளையவர் இவர்தான் வயது 33.
தமிழ்நாட்டில் பிறந்த ஸடேன் சாமி என்று அழைக்கப்படுகிற ஸ்தனிஸ்லாஸ் லூர்து சாமியும் கைது செய்யப்பட்டுள்ளார். 83 வயதாகும் இவர் பர்கின்சான் நோயால் பாதிப்படைந்து உள்ளார்.முப்பது ஆண்டுகளாக சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆதிவாசிகள் வளர்ச்சிக்காகவும், உரிமைக்காகவும் பணியாற்றியவர். ஆதிவாசிகளின் நிலத்தை கார்ப்பரேட்டுகள் ஆக்கிரமிப்பதை தடுத்தது தான் இவரது கைதுக்கு காரணம்!
வருண் கொன்சால்வஸ் என்பவர் ” ஜனவரி மாதம் 1ஆம் தேதி தலித்துகள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்திய, இந்துத்துவா தலைவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் என்று கோரிக்கை வைத்ததற்காக தன் மீது வழக்கு தொடுத்துள்ளனர் ” என்று கூறுகிறார். பெங்களூரைச் சேர்ந்த இவர் கத்தோலிக்க மதத்தை சேர்ந்தவர்.
சுதீர் தவாலே( Sudhir Dhawale) வன்கொடுமை சட்டத்தை கறாராக அமலாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருபவர். பீமா கொரேகான் கலவரத்தைத் தொடர்ந்து நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதியின் விசாரணை ஆணையத்தின் முன்பு சாட்சியம் சொன்னவர்.
தில்லிப் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் ஹானி பானு, பாடகர் ஜோதி, சாகர் கோர்கே( Sagar Gorkhe), ரமேஷ் கெய்ச்சார் (Ramesh Gaichor) உள்ளிட்ட 16 பேர் சிறையில் உள்ளனர்.இன்னும் எத்தனை பேருக்கு இந்த அரசு குறி வைத்துள்ளது என்று தெரியாது.
“இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தின் (UAPA Unlawful activities Prevention Act ) கீழ் பிணையில் வருவதற்கான வாய்ப்பு ஏறக்குறைய இல்லை.வழக்கு முடியும் வரை அது நான்கு ஆண்டுகளோ, ஐந்து ஆண்டுகள் தெரியாது.அதுவரையில் சிறையில் இருக்க வேண்டியதுதான்.அரசு தனக்கு எதிராக பேசுபவர்களை இந்தச் சட்டத்தின் கீழ் அரசு கைது செய்கிறது. எனவே இந்தக் கொடுமையான சட்டத்தை அரசு இரத்து செய்ய வேண்டும் ” என்று கூறுகிறார் மக்கள் சிவில் உரிமைக் கழக (PUCL) தேசிய பொதுச் செயலாளரான முனைவர்.வி.சுரேஷ்.
இந்திய அரசியல் சட்டம் வகுத்துள்ள பல சட்டங்கள் காவல்துறை,வருவாய் துறை,வனத்துறை, கனிமத்துறை,நீர் வளத்துறை போன்ற அரசு எந்திரங்கள் வழியாகத்தான் அமலாகின்றன. இதன் செயல்பாடுகளை மக்கள் நலவுரிமை அமைப்புகள் கண்காணிக்கும்போதுதான் தவறுகள் களையப்படும்.. விமர்சனங்களை விரும்பாத அரசு தன்னைத் தானே வீழ்த்திக் கொள்ளும். இத்தகைய கைதுகள் ஜன நாயகத்திற்கு ஆபத்தானது. இது மக்கள் ஜனநாயகத்திற்கு பங்களிப்பதை ( Participatory Democracy) தடுத்துவிடும்!
அர்பன் நக்ஸல்கள் பற்றி பேசும் திரு சாவித்திரி கண்ணன் அவர்களின் கனிவான பார்வைக்கு ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்ட ஒரு கடிதம் தங்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது. இதற்கு தாங்கள் கட்டாயம் பதில் அளிக்க வேண்டுகிறேன். கருத்து சுதந்திரம் என்பது வன்முறையையும், கொலையையும் நியாயப்படுத்தக் கூடாது. கம்யூனிஸ நாடுகளில் கூட பிரிவினையை ஆதரிக்கும் இயக்கத்தை தடை செய்த வரலாறு உண்டு. சீனாவில் உய்கர் முஸ்லீம்களால் தங்களுடைய நாட்டிற்கு ஆபத்து என்றவுடன், அவர்களை கொன்று குவித்த வரலாறை சற்றே திருப்பி பார்க்க வேண்டும்
கடிதத்தை இணைத்துள்ளேன்.
18.4.2017. ல் எழுதிய கடிதத்தில் உள்ள சில வாசகங்கள்
Modi led Hindu fascist regime is bulldozing its way into the livers of indigenous adivasis. In spite of big defeats like Bihar and West Bengal, Modi has successfully established BJP govt. in more than 15 states. If this pace continues then it would mean immense trouble for the party on all fronts. Greater suppression of dissent and more brutal from of Mission 2016 ( OGH) Com. Kisan and few other senior comrades have proposed concrete steps to end Modi.raj. we are thinking along the lines of another Rajiv Gandhi type incident . இதில் அடங்கியுள்ள கேள்வி என்னவென்றால், ராஜீவ் காந்தி டைப் நிகழ்ச்சி என குறிப்பிட்டது எதை பற்றியது என்பதை திரு. சாவித்திரி கண்ணன் விளக்கம் கொடுப்பாரா
பி.யு.சி.எல். என்ற அமைப்பு நக்ஸல்களால் கொல்லப்பட்டவர்களைப் பற்றி வாய் திறப்பதில்லை. மாறாக நக்ஸல்கள் கொல்லப்பட்டாலும், கைது செய்யப்பட்டாலும், உண்மை கண்டறியும் குழு என நியமித்து, நக்ஸல்களின் செயல்களை நியாயப்படுத்தி அறிக்கை விடுபவர்கள். இது பற்றி சாவித்திரி கண்ணனுக்கு தெரியாதா? கன்னபிரான், கல்யானி போன்றவர்களும், ஆமார்க்ஸ் போன்றவர்களின் நடவடிக்கையை சற்றே ஆய்வு செய்ய முடியுமா .