குறுநில மன்னராக கோலோச்சிய எ.வ.வேலு!

-சாவித்திரி கண்ணன்

ஒரு சாதாரண மோட்டார் மெக்கானிக்காக தொடங்கி, பிறகு பஸ் கண்டக்டராகி, பின்னர் அதிமுக எம்.எல்.ஏவாகி, திமுகவுக்கு வந்து அமைச்சரானவர் இன்று மலைக்க வைக்கும் சொத்துக்களின் அதிபதி. பல ஆயிரம் கோடிகளுக்கு சொந்தக்காரர்! ஒரு பைசா கூட ரெய்டில் எடுக்க முடியவில்லையாம்! உண்மை என்ன?

ஏற்கனவே 2021 ஆம் ஆண்டு வருமான வரி சோதனைகளுக்கு உள்ளானவர் தான் எ.வ.வேலு. தற்போது திமுக ஆட்சியில் அவரது பொருளதார வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்து வருவதால், பாஜக அரசு இவர் மீது தொடர் கண்காணிப்பு செய்து வந்தது!

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான சென்னை, திருவண்ணாமலை உள்பட சுமார் 100 இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் களம் இறங்கி  5 நாட்கள்  தீவிர ரெய்டு நடத்தினார்கள்! அவருடைய ப்பினாமி எனச் சொல்லப்படும் அருணை கிரானைட் வெங்கட், கோவை மீனா ஜெயக்குமார், காசா கிரானைட், அப்பாசுவாமி ரியல் எஸ்டேட் ஆகிய இடங்களையும் ரெய்டு செய்து அதிகாரிகள் சல்லடை போட்டு சலித்தனர். நடைபெற்ற சோதனையில் பல்வேறு ஆவணங்கள், 18 கோடி ரொக்கப் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக ஊடகங்களில் பேச்சு அடிபட்டது. நடைபெற்ற வருமான வரி சோதனை நிறைவடைந்த பிறகு எ.வ.வேலு பத்திரிகையாளர்களை அழைத்து வருத்தத்துடன் பேசினார்.

”என்னுடைய கோப்புகளை பார்க்கும் உதவியாளர் சுப்பிரமணி மற்றும் எனது டிரைவரிடம் 5 நாட்களாக கேள்வி என்ற பெயரில் வருமான வரித்துறையினர் மன உளைச்சலை உருவாக்கிவிட்டனர். என்னுடைய மனைவி, மகன்களையும்விட்டு வைக்கவில்லை. நாங்கள் தனித்தனியே தான் வசிக்கிறோம். எங்கள் இடத்தில் ரெய்டு செய்து அவர்களால் ஒரு பைசாவைக் கூட எடுக்க முடியவில்லை” என்றார்!

எ.வ.வேலு சோகமாகப் பேசினாலும், திருவண்ணாமலை மக்களுக்கும், ஏன் சொந்தக் கட்சிக்காரகளுக்குமே கூட அவர் மீது அனுதாபம் ஏற்படவில்லை. அந்த அளவுக்கு அவரது செயல்பாடுகள் இருந்துள்ளன என்பதையே இவை காட்டுகின்றன.

எ.வ.வேலுவின் சொத்துக்கள் பற்றிய பட்டியலை வாசித்தாலே தலை சுற்றுகிறது. அவ்வளவு சொத்துக்களை சேர்த்துள்ளார். அருணை மருத்துவமனை கூவலூர், அருணை அறிவியல் கல்லூரி, அருணை மருத்துவ கல்லூரி, கம்பன் ஐடிஐ, அருணை மருத்துவமனை காந்திநகர், கம்பன் மருத்துவமனை, குமரன் அறிவியல் கலைக்கல்லூரி, குமரன் ஐடிஐ, குமரன் பாலிடெக்னிக், ஜீவா.வேலு இண்டர்நேசனல் ஸ்கூல், கரண் அறிவியல் கல்லூரி, கம்பன் மகளிர் கல்லூரி, அருணை மெட்ரிகுலேசன் ஸ்கூல், இப்படியாக எட்டு கல்வி நிறுவனங்கள், அருணை கிரானைட்ஸ், அருணை வாட்டர் பிளாண்ட்.. கரூரில் ரூ.500 கோடியில் பைனான்ஸ், ஸ்பின்னிங் மில்,  தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம்,  திரைப்பட பைனான்ஸ் மற்றும் விநியோகிஸ்தர் தொழில் என பரந்து விரிந்துள்ள சாம்ராஜ்யத்தின் அதிபதி தான் அமைச்சர் எ.வ.வேலு! இவர் திருவண்ணாமலை மாவட்டத்தின் குறுநில மன்னராக வளம் வருகிறார்.

எ.வ.வேலுவின் மருத்துவ கல்லூரி

கருணா நிதி ஆட்சியில் உணவு அமைச்சராக இருந்துள்ளார். அப்போது செய்த முறைகேடுகளுக்காக  எ.வ.வேலு மீது ஏற்கனவே வருமானத்திற்கு மீறிய சொத்து சேர்த்ததாக அதிமுக ஆட்சியில் போடப்பட்ட வழக்கை அரசியல் அழுத்தம் தந்து ஒன்றும் இல்லாமல் செய்துவிட்டார்.

தற்போது நெடுஞ்சாலை, பொதுப் பணித் துறை, சிறு துறைமுகங்கள் துறை என பல்வேறு துறைகளில் அமைச்சராக இருந்து இன்னும் அதிகமாக பொதுப் பணத்தை கையாடல் செய்கிறார். முந்தைய ஆட்சியில் முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி கைவசம் வைத்திருந்த நெடுஞ்சாலை மற்றும் பொதுப் பணித்துறையை கேட்டு வாங்கி பெற்ற எ.வ.வேலு இத் துறைகளில் வரம்பு மீறி கொள்ளையில் ஈடுபடுவதை நாம் ஏற்கனவே அறம் இணைய இதழில் சுட்டிக் காட்டியுள்ளோம்.

எ.வ.வேலுவின் பொறியியல் கல்லூரி

திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடனேயே அதிமுக ஆட்சியில் வேலை எடுத்து செய்து கொண்டிருந்த காண்டிராக்டர்களை அழைத்துப் பேசி அதிமுகவுக்கு தான் பணம் கொடுத்து எடுத்தீங்க. நாங்க வந்திருக்கோம். எங்களுக்கும் கமிஷன் தந்தால் தான் தொடர்ந்து வேலை செய்ய அனுமதிப்பேன் என நிர்பந்தித்து பணம் பெற்றார். இதற்கு தோதாக பழைய ஊழல் அதிகாரிகளையே பயன்படுத்திக் கொண்டார்.

நெடுஞ்சாலைத் துறையில் ஆண்டுக்கு சுமார் 19,000 கோடி அளவில் பட்ஜெட் போடப்பட்டு பணிகள் நடக்கின்றன. இதில் எடப்பாடியை விஞ்சும் வண்ணம் 12.5சதவிகித கமிஷன் வாங்காமல் எந்த ஒப்பந்த பணியையும் செய்யவிடுவதில்லை அமைச்சர் எ.வ.வேலு. இந்தப் பணிகளுமே கூட தரமானதாக நடப்பதில்லை.

இவரது நெருக்கடியால் பாதிக்கப்பட்ட காண்டிராக்டர்களும், துறையின் நேர்மையான அதிகாரிகளும் தான் மத்திய அரசுக்கு எ.வ.வேலு தொடர்பாக முழு தகவல்களையும் தந்துள்ளனர். அந்த வகையில் சரியாகவே காய் நகர்த்தி, வேலு தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடத்தி ஆவணங்களை எல்லாம் எடுத்துவிட்டனர், அதிகாரிகள்! ஆக, எந்தெந்த வகைகளில் முறைகேடுகல் நடந்துள்ளன என்பதர்கான அத்தட்சிகள் கிடைத்துவிட்டதாம்!

இதே பாணி ஊழலைத்  தான் பொதுப் பணித்துறையிலும் அரங்கேற்றி வருகிறார் வேலு. சமீபத்தில் தான் மருத்துவ கல்லூரியையும் திறந்தார்! திமுக தலைமைக்கு கேட்கும் போதெல்லாம் பணத்தை தாராளமாக தருபவர் என்று சொல்லப்படுகிறார். இதனால் ஸ்டாலினுக்கு நெருக்கமாகி தன் மகன்களை கட்சியில் முன்னுக்கு கொண்டு வருகிறார் என்ற குற்றச்சாட்டை உடன்பிறப்புகளே இவர் மீது வைக்கின்றனர். இந்த வகையில் திருவண்ணாமலை திமுகவையும் தன் குடும்ப சொத்தாக்க முயல்கிறார்.

பாஜக அரசு செய்வது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை தான்! சந்தேகமே இல்லை. ஆனால், அதற்கு இடம் கொடுக்கும் வகையில் நடந்து கொண்டது அமைச்சர்களின் செயல்பாடுகள் தானே! வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது, வரி ஏய்ப்பு செய்தது போன்ற குற்றச்சாட்டுகளை சுலபத்தில் நிருபிக்க முடியாதவாறு சிறந்த ஆடிட்டர்களை கொண்டு கணக்கு வழக்குகளை சரிபடுத்திவிடுகிறாராம் எ.வ.வேலு. வருமானத் வரித்துறை வரும் என அவருக்கு கண்டிப்பாகத் தெரியும். மேலும் ரெய்டுக்கு முதல் நாளே அவருக்கு தகவலை யாரோ தந்து உஷார்படுத்திய தாகவும் சொல்லப்படுகிறது.

செந்தில் பாலாஜி சிறையில் இருக்கிறார். பத்து முறை அவர் ஜாமினுக்கு முயன்றும் கிடைக்கவில்லை. மதுபானத் துறையில் வரம்புகளை மீறி அவர் ஆடிய ஆட்டங்கள் மறக்கக் கூடியவை அல்ல! கொங்கு வட்டாரத்தையே தன் கண்ட்ரோலில் எடுத்துக் கொண்டு, வசூல் வேட்டைகளையும், அத்துமீறல்களையும் அரங்கேற்றி வந்தார். தற்போது அவர் ஜெயிலில் இருந்தாலும், அவர் அமைச்சராக கருதப்பட்டு பணி செய்யாமல் அமைச்சர் வேலைக்குரிய வருமானம் அவர் குடும்பத்திற்கு தரப்படுகிறது. அவருடைய உதவியாளர்கள், கார் டிரைவர்கள் என சுமார் 21 பேருக்கு அரசு சம்பளம் வெட்டியாக கடந்த ஐந்தாறு மாதங்களாக வழங்கப்படுகிறது! இதனால், செந்தில் பாலாஜி மீதும் யாருக்கும் அனுதாபம் கிடையாது.

சமீபத்தில் திமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகன் சம்பந்தப்பட்ட இடங்களில் ரெய்டு நடந்த போது அவர் சொத்துக்கள் பற்றி தெரிய வந்த போது மக்களுக்கு பெரும் மலைப்பே ஏற்பட்டது. அமைச்சர் பொன்முடியும் கோர்ட், வழக்கு என அலைந்து கொண்டுள்ளார்.

நமக்கு கிடைத்த தகவல்கள்படி திமுகவில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, மூர்த்தி, ஐ.பெரியசாமி, சேகர்பாபு, த.மோ.அன்பரசன், அனிதா ராதாகிருஷ்ணன்..ஆகியோர் மீதும் அடுத்தடுத்து ரெய்டுகள் நடக்க உள்ளன. கடைசியாக ஸ்டாலின் குடும்பத்தையும் விட்டுவைக்க போவதில்லை எனத் தெரிகிறது. இதற்கிடையே ஐந்த மாநில தேர்தல்களில் பாஜகவிற்கு சற்று பின்னடைவு ஏற்பட்டால் கூட, அதன் வேகம் குறையலாம். அப்போது திமுகவிற்கு சற்றே நிம்மதி ஏற்படும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time