வரலாற்றில் வழங்கப்பட்ட சனாதனத் தீர்ப்பு!

-அண்ணாமலை சுகுமாரன்

வீரத்தின் விளை நிலமாய் திகழ்ந்த மருது சகோதர்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் கொல்லப்பட்ட பிறகு, சின்ன மருதுவின் மனைவி, மருமகள் ஆகியோர் அன்றைய நீதிமன்றங்களில் கோலோச்சிய சனாதன வழிகாட்டுதலில் சந்திக்க நேர்ந்த துயரங்களை விவரிக்கிறது இந்தக் கட்டுரை!

அண்மையில் மருது பாண்டியர்களின்  நினைவு நாள் தமிழகமெங்கும் தன்னெழுச்சியாக மக்களால் கொண்டாடப்பட்டது . அவர்களது வீரமும், தியாகமும் , விடுதலை வேட்கையும் என்றும் மறக்க இயலாதவை .

அதோடு கூடவே அவர்களின் மறைவுக்குப் பிறகு  அதைத் தொடர்ந்து நடந்த சில சோக சம்பவங்கள்  பலராலும்  அதிகம் அறியப்படாத வரலாறு!

அன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்ட விபரீத தீர்ப்புகளையும், அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களையும் விவரிக்கும் கட்டுரை இது!

மருது பாண்டியர்கள்  மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பலர் மற்றும் உதவியாளர்கள் பலரும்  சோழபுரத்தில் சிறைபிடிக்கப்பட்டனர். அவர்கள் 1801 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி திருப்பத்தூரில்  600 மேற்பட்டவர்கள் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் தூக்கிலிடப்பட்டனர். மூன்று நாட்கள் இரத்த வெள்ளத்தில் சடலங்கள் அகற்றப்படாது கிடந்த சம்பவங்கள் ஒரு தொடர் கொடுமை என  பல வரலாற்று ஆசிரியர்களால்  பதிவிடப்பட்டுள்ளது.

அதன் பின்னே  காட்டிக்கொடுத்த , உதவி செய்த துரோகிகளுக்கு சன்மானமாக சிவகங்கை சீமையின் உரிமையும் கொடுக்கப்படுகிறது!

மருதிருவரின் ஆளுகையின் கீழ் இருந்த பகுதிகள் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு சிவகங்கை ஜமீன் என்ற அளவில் ஒரு பகுதி  சுருக்கப்பட்டு அதன் முதல் ஜமீன்தாராக   கௌரி வல்லப தேவர்   என்று ஒருவர் முதல் ஜமீனாக பொறுப்பேற்கிறார். அவரது வாரிசுகளே 1947 வரை அங்கு தொடர்ந்து  ஜமீந்தார்களாக  இருந்திருக்கின்றனர்.

ஜமீன்தாராக ஆளும்  உரிமை பெற்ற அந்த விசுவாசிக்கு  சும்மா இருக்க இயலவில்லை. தனது அதிகார மமதையை  வெளிக்காட்ட  தூக்கிலிட்டு உயிரிழந்த மருது  சகோதரர்களின் வாரிசுகளில் மிஞ்சி இருந்த இரண்டு அபலைப் பெண்கள் ஒரே உடமையாக   இருந்த அவர்களின் சொந்த நகைகளை  அரச  கட்டளைகள் மூலம் வலியப் பறிக்கிறார். அந்த நகைகளின் அப்போதைய மதிப்பு  4,125 நட்சத்திர  பகோடாக்கள்  என்று சொல்லபடுகிறது.

அந்த இரு அபலைப் பெண்கள் ;

# சின்ன மருதுவின் மனைவி வீராயி ஆத்தாள்.

# தூக்கிலிடப்பட்ட சின்ன மருது  மகன் சிவஞானத்தின் மனைவி மீனாம்மாள்.

இவர்கள் இருவரும் சின்ன மருது குடும்பத்தின் விதவைகள் . 1801 ஆம் ஆண்டு செப்டம்பரில் அந்த நகைகளை அவர்கள்  வேலைக்காரர் அழகு என்பவரின் பராமரிப்பில் வைத்திருந்தனர்.

ஒரு நட்சத்திர பகோடா என்பது    8 ரூபாய் 50 பைசா என்று கொங்கு மண்டல வரலாறுகள்  எனும் புத்தகம் தெரிவிக்கிறது!

அந்த வகையில் அப்போதே அதன் மதிப்பு சுமார் 35,062  ரூபாய்  ஆகிறது!  இன்றைக்கு அதன் மதிப்பு மிகப் பிரம்மாண்டமாகும். மன்னராக ஆட்சி புரிந்த குடும்பத்தில் அவர்களிடம் எஞ்சி இருந்த தங்க நகைகளே இவை !

அதையும் அவர்களிடம் இருந்து பிடுங்கியது அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையாகும்.

இதை அமல்படுத்த அப்போது சிவகங்கை மாவட்டத்தில் அமலில் இருந்த இராணுவச் சட்டத்தின்படி  ஜமீன்தாரால் அந்த நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகத்  தெரிகிறது.

அதன் பின்னே   வீராயி ஆத்தாள் சிவகங்கை ஜமீன்தாருக்கு எதிராக 4,125 நட்சத்திர பகோடாஸ் மதிப்புள்ள நகைகளை மீட்டுத் தருமாறு ராமநாதபுரத்தில்  உள்ள ஜில்லா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நவம்பர் 1, 1805 தேதியிட்ட ராமநாதபுரத்தில்  உள்ள உள்ள ஜில்லா நீதிமன்றத்தின் தீர்ப்பு விதவைகள் இருவருக்கும் சாதகமாக இருந்தது! ஜமீன்தார்  பறித்த நகைகளை அவற்றின் உரிமையாளர்களிடம் மீண்டும் ஒப்படைக்க அந்த நீதி மன்றம்  உத்தரவிட்டது.

சிவகங்கை ஜமீன்தார்  கௌரி வல்லப தேவரவர்கள்  இந்த கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து திருச்சியில் உள்ள தென் மாகாண மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

அந்த மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அப்போதைய வழக்கப்படி ஹிந்து பண்டிட்களுடன் கலந்தாலோசித்து, அவர்களின் ஆலோசனைப்படி ஜமீன்தாருக்கு ஆதரவாக தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது.

கணவனே மனைவிக்கு எஜமானன்; கணவன் அடிமையாக இருந்தால் அவரது மனைவி – சுதந்திர பெற்றோருக்கு பிறந்திருந்தாலும் – அவளும் ஒரு அடிமை ஆகிறாள்! எஜமானரின் சொத்தாக  ஆனதின்  விளைவாக அடிமைகள் சம்பாதித்த எந்தவொரு செல்வமும் அடிமைக்கு சொந்தம் அல்ல, எஜமானருக்கே சொந்தமானது.  4,125 நட்சத்திர பகோடாக்கள் மதிப்புள்ள நகைகள் வீராயிக்கு சொந்தமானதல்ல! என்பது நீதிமன்றத்தின் தீர்ப்பு.

இன்னமும் அது விரிவாக  மருது சேர்வை என்பவர் போரில் தோற்றதால் சிவகங்கை ஜமீன் நாலுகோட்டையின் வீட்டு அடிமை ஆகிறார்.  எனவே, அவரது மனைவி , சுதந்திரமாகப் பிறந்திருந்தாலும் அவள் அடிமையின் மனைவியாக  இருப்பதால், அவளும் அடிமையாகி விடுகிறாள். “அடிமையின் மனைவியும் எஜமானுக்கு அடிமைதான். கணவனும், மனைவியும் ஒன்றே என்பது  அடிமைகள் பற்றிய செய்திகளைக் கூறும் ஸ்மிருதி சந்திரிகா என்னும் சம்ஸ்கிருத   நூலின் ஒரு அத்தியாயத்தில்  மூலம் தெளிவாகிறது!  அதன் ஒரு பகுதியில்   கூறப்படுவது கணவன் மனைவிக்கு எஜமானன்; அந்த வகையில் கணவன் அடிமை என்றால், அவனது மனைவியும் ஒரு அடிமை ! மீனாம்மாள் அடிமையாக  இருப்பதால்,  4,125   நட்சத்திர பகோடாக்கள் என்று அவர் உரிமை கொண்டாடும் மேற்கண்ட நகைகளில் அவருக்கு உரிமை இல்லை என்று மாகாண நீதிமன்றம் கருதுகிறது.

( இது  ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ் 1841 இன் அமர்வு ஆவணங்களிலிருந்து எடுக்கப்பட்டது, இதில் தென் மாகாண மேல்முறையீட்டு நீதிமன்றம் 1806 மார்ச் 17 அன்று பக்கம் 463 மற்றும் 464 இல் வழங்கிய தீர்ப்பைக் கொண்டுள்ளது.)

இந்தக் குறிப்பு பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் பிரபுக்கள் சபை 1841 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் காலனிகளில் அடிமைத்தனம் பற்றிய அமர்வு அறிக்கைகளை சமர்ப்பித்தது. இது பிரிட்டனின் காலனிகளில் அடிமை முறையின் இருப்பை விரிவாக விவரிக்கிறது.

இது 1806 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் தேதி திருச்சினாப் பள்ளியில் (இந்தியா) உள்ள தெற்கு மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இரண்டு தீர்ப்புகளைக் குறிப்பிடுகிறது . அந்த இரண்டு தீர்ப்புகளும் மருது பாண்டியரின் மனைவி  தொடுத்த இந்த வழக்கை விவரிக்கிறது .

அதாவது, ”கைது செய்து தூக்கிலிடபட்டதால், அடிமையான சின்ன மருதுவும் அவரின் மனைவியும் ஜமீனுக்கு அடிமையாகிறார்கள்! அடிமைகளுக்கு சொந்தமாக சொத்துகள் வைத்து கொள்ள உரிமையில்லை. அப்படி ஏதும் இருந்தால் அவைகள் அந்த அடிமையின் உரிமையாளருக்கு சொந்தமாகிறது” என்று ஒரு உயர் நீதி மன்றம் தீப்பளிக்கிறது .அந்தத் தீர்ப்பை வழங்க  ஸ்மிருதி சந்திரிகா என்னும் சம்ஸ்கிருத நூல் ஆதாரமாக கொள்ளப்பட்டிருக்கிறது

எத்தகைய கொடுமை இது! எப்படிப்பட்ட நீதி முறைமை அப்போது தமிழ் நாட்டில்  நிலவியிருக்கிறது என்பது அதிர்ச்சியளிக்கிறது!  இந்தத் தீர்ப்பை சனாதனப் பார்வையில் தரப்பட்ட தீர்ப்பாகவே கொள்ள வேண்டியுள்ளது. இப்படிப்பட்ட நீதி முறைதான்  காலம்  காலமாக இங்கு வழங்கப்பட்டிருக்கிறதோ ?

அப்போது இந்த தீர்ப்பைபெற்ற அந்த இருஅபலைப்  பெண்களின்  மனம் எத்தனை  வேதனைப்பட்டிருக்கும்!  தங்களின் ஒரே உடமையாக இருந்த நகைகளையும் பறி கொடுத்து, பின்பு வாழ வழியின்றி, ஆளுகின்ற  ஐரோப்பியரிடமே உதவித் தொகைக் கேட்கும் அவல நிலைக்கு அவர்கள் வாரிசுகள்  தள்ளப்பட்டனர்.

இதேப் போன்ற ஒரு சூழலில் தனது பாஞ்சாலி சபதம் கவிதையில் மகாகவி பாரதியார் பாஞ்சாலியின் கூற்றாகவே தன் தீர்ப்பை வழங்குகிறார்.  வியாசர் எழுதிய மகாபாரதத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வுக்கு பாரதி பொங்கி எழுகிறார். துரியோதனனுக்கு சூதில் அடிமையான பாண்டவர்களின் மனைவி பாஞ்சாலி தன்னை அடிமையாகக் கருதி, துகிலுறியும் துச்சாதனிடம் பேசுவதாக அமைந்தது பாரதியார் தீர்ப்பு;

நாயகர் தாந்தம்மைத் தோற்றபின் – என்னை

நல்கும் உரிமை அவர்கில்லை – புலைத்

தாயத்திலே விலைப் பட்டபின், – என்ன

சாத்திரத் தாலெனைத் தோற்றிட்டார்? அவர்

தாயத்திலே விலைப் பட்டவர்;- புவி

தாங்குந் துருபதன் கன்னி நான் – நிலை

சாயப் புலைத் தொண்டு சார்ந்திட்டால்,- பின்பு

தார முடைமை அவர்க்குண்டோ!

பிறகு, இத்தகைய சட்டங்களுக்கு தீர்ப்புகளின் மாற்றாக உலகம் முழுவதும் ஏற்பட்ட எழுச்சிக்குப் பிறகு, அப்போதைய நீதிமன்ற முறைகளுக்கு ஏற்றபடி இந்தியாவிலும் முதலில் இந்திய தண்டனைச் சட்டம் தாமஸ் பாபிங்டன் மெக்காலேயின் தலைமையில் 1833 ஆம் ஆண்டின் சட்டத்தின் கீழ் 1834 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்தியாவின் முதல் சட்ட ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த குறியீடு வரைவு செய்யப்பட்டது . இது 1862 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியின் போது இந்தியாவில் நடைமுறைக்கு வந்தது.

சின்ன மருதுவின் இளைய மகனான அழகில் துரை மாதிரி இருந்ததால் துரைசாமி என்று அழைக்கப்பட்ட  முத்துவடுக நாததுரை உட்பட 11 பேரைப் பிடித்துக் கொடுத்தால் 1000 கூலிச் சக்கரங்கள் (18-ஆம் நூற்றாண்டு நாணயம்) பரிசாக வழங்கப்படும் என்று ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனித் தளபதி கர்னல் அக்னியூ 1801, அக்டோபர் 1- இல் சிவகங்கை குடிமக்களுக்கு ஒரு பொது அறிவிப்பைப் பிரகடனப் படுத்தினார்.

அதன் பின்னர் பிடிபட்ட 15 வயதே ஆன துரைச்சாமி உட்பட 73 பேர் மலேயாவின் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவிற்கு (இன்றைய பினாங்கு) 1802, பிப்ரவரி 11-இல் நாடு கடத்தப் பட்டனர். இவர்களைப் பற்றிய மனதை உருக்கும் தியாக வரலாறு நீளமானது. வாசகர்கள் தேடிப் படிக்கலாம்.

கட்டுரையாளர்; அண்ணாமலை சுகுமாரன் 

புதுச்சேரி

[email protected]

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time