ரயில்கள் உற்பத்தியில் உலகப் புகழ்பெற்ற சென்னை பெரம்பூர் ஐ.சி.எப்பை முடக்கி, வெளிநாட்டு நிறுவனத்தை உள்ளே நுழைக்கத் திட்டமிடுகிறது பாஜக அரசு! இந்திய ரயில்வேயை தனியார் மயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக மிகச் சிறப்பாக இயங்கும் அரசு நிறுவனத்தை அயலார்க்கு தாரை வார்க்க முன்னோட்டமா?
பெரம்பூர் ரயில்வே தொழிற்சாலையின் இரயில் பெட்டிகள் சென்னையில் இருந்து உலகின் பல நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன. நவீன வந்தே பாரத் பெட்டிகளை உருவாகிய இந்த பாரம்பரிய அரசு நிறுவனத்திற்குள் வெளிநாட்டு நிறுவனத்தை நுழைப்பதால் உருவாகும் பொருளாதார இழப்புகளை அலசுகிறது இந்தக் கட்டுரை;
வந்தே பாரத் இரயில்களை 18 மாதங்களில் உற்பத்தி செய்து சாதனை படைத்தது ஐசிஎஃப். இந்த 68 ஆண்டு கால வரலாறு கொண்ட நிறுவனத்தை முடக்கும் விதமாக மோடி அரசு, வந்தே பாரத் இரயில்களை ஒரு வெளிநாட்டு நிறுவனம் உருவாக்க ஒப்பந்தம் போட்டுள்ளது. இவைகளை ஐசிஎஃப் வளாகத்தில் அதன் வடிவமைப்பு, தொழில் நுட்ப பணியாளர்களைக் கொண்டே உற்பத்தி செய்து , கூடுதல் விலைக்கு வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்பது விநோதமாகும். இதனை கண்டித்து தொழிற்சங்கங்கள் போராடி வருகின்றன.
1955 ம் வருடம் காந்தி பிறந்த நாளில், அப்போதைய பிரதமரான நேருவால் இரயில் இணைப்பு பெட்டித் தொழிற்சாலை (ICF) தொடங்கப்பட்டது. பெரம்பூரில், 511 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஆலையில் இருந்து உற்பத்தி ஆகும் பயணிகள் பெட்டிகள் நைஜீரியா, தான்சானியா, உகாண்டா, ஸ்ரீ லங்கா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் என பல்வேறு ஆசிய – ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன. இது ஒரு இலாபம் ஈட்டும் நிறுவனமாகும்.
அதிவேக இரயில் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட ‘வந்தே பாரத்’ இங்கு தான் உருவானது. “இதற்கான வடிவமைப்பு முதல் அதனை பயன்பாட்டுக்கு கொண்டுவர நாங்கள் எடுத்துக் கொண்டது 18 மாதங்களே. இது மகத்தான சாதனையாகும். அப்போது தொழிற்சாலையின் பொது மேலாளரான இருந்த சுதான்ஷூ மணி இதனை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு அனைவரையும் ஒருங்கிணைத்து 18 மாதங்களில் உருவாக்கினார். அதற்கு அப்போது இரயில் – 18 என பெயரிடப்பட்டது. பிறகு, அது வந்தே பாரத் பெயர் மாற்றப்பட்டு, தில்லி – வாரணாசி மார்க்கத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியால் பச்சைக் கொடி ஆட்டி முதலில் தொடங்கி வைக்கப்பட்டது.
அதன் தொடக்க நிகழ்ச்சிக்கு அதன் உருவாக்கத்தில் தனிக்கவனம் செலுத்திய ஐசிஎஃப் பொது மேலாளர் சுதான்ஷூ மணிக்கு அழைப்பு விடுக்கவில்லை என்பது வருத்தத்திற்குரிய ஒரு செய்தியாகும். இங்கு 40 வந்தே பாரத் இரயில்கள் இதுவரை உருவாக்கப்பட்டுள்ளன. இந்த தொழிற்சாலையில் இறந்தவர்கள், ஓய்வு பெற்றவர்களுக்கு பதிலாக ஆளெடுப்பு நடக்கவில்லை. ‘டிடாகர் வேகன்’ என்கிற வெளிநாட்டு நிறுவனத்திற்கு பதினாறு பெட்டிகள் கொண்ட 80 இரயில்கள் செய்து கொடுப்பதற்கான ஒப்பந்தத்தை இரயில் வாரியம் போட்டுள்ளது ” என்றார், ஏஐடியுசி ஐசிஎஃப் சங்கத்தின் துணைத் தலைவரான இராஜேந்திரன்.
“16 பெட்டிகள் இருக்குமாறு முதலில் பத்து வந்தே பாரத் இரயில் தயாரிக்கப்பட்டன. பெரியதாக இருப்பதால் இருக்கைகள் முழுவதும் பூர்த்தியாகவில்லை. எனவே, இப்போது எட்டு பெட்டிகள் இருப்பதாக வடிவமைக்கப்படுகிறது. இவைகள் பயணிகள் அமர்ந்து செல்லக் கூடியவை. ஆனால், இப்போது படுக்கை வசதி கொண்ட 80 இரயில்களை உருவாக்க டிடாகர் வேகன் என்ற வெளிநாட்டு நிறுவனத்திற்கு இரயில் வாரியம் அனுமதி அளித்துள்ளது. உட்கார்ந்து செல்லும் இரயிலை படுக்கை வசதி கொண்டதாக மாற்றுவதற்கு பெரிய தொழில்நுட்பம் தேவையில்லை. பெரம்பூர் இரயில் பெட்டித் தொழிற்சாலை 68 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அரசுத்துறை நிறுவனமாகும். இரயில் வாரியம் ஒப்பந்தம் போட்டுள்ள நிறுவனத்திற்கு இந்த துறையில் இத்தகைய அனுபவம் ஏதுமில்லை.
இந்த இரயிலுக்கான வடிவமைப்பை ஐசிஎஃப் தான் உருவாக்கியது. அதைக் கொண்டு தான் டிடாகர் வேகன் நிறுவனம், பெரம்பூரில் உள்ள உற்பத்திக் கூடத்தில் இரயில் பெட்டிகளை தயாரிக்கப் போகிறார்கள். இங்கு கிடைக்கும் மின்சாரம், அழுத்தப்பட்ட காற்று, பாரந்தூக்கி, நீர்வசதி, சோதனைக் கூடம் உள்ளிட்ட அனைத்துக் கட்டமைப்புகளையும் ஐசிஎஃப்- தான் அந்த டிடாகர் நிறுவனத்திற்கு தர வேண்டும். தொழில்நுட்ப பணியாளர்களையும் தர வேண்டும்” என்கிறார் ஐசிஎஃப் ஐக்கிய தொழிலாளர் சங்கத்தின் செயலாளரான ஜி. சரவணகுமார். இந்த ஆலையில் பணிபுரியும் அதிகாரிகள், மேற்பார்வையாளர், பொறியாளர், அலுவல் பணியாளர், தொழிலாளர் என அனைத்து பிரிவினரும் ஒருமித்த குரலில் டிடாகர் என்ற வெளிநாட்டு நிறுவனத்திற்கு வந்தே பாரத் இரயில்களை தயாரிக்க அனுமதி கொடுக்கும் முடிவை எதிர்க்கின்றனர். இதனை எதிர்த்து சமீபத்தில் அக்டோபர் -27 அன்று ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான கிரிராஜன், கலாநிதி வீராசாமி, இரயில்வே சம்மேளனத் தலைவர் இராஜா ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
“வந்தே பாரத் இரயிலின் வடிவமைப்பு இங்குதான் தயாரானது. ஒரு மணிக்கு 180 கி.மீ வேகத்தில் செல்லும்வகையில் சோதனை ஓட்டத்தை நடத்தி இதன் வெற்றியை ஐசிஎஃப் நிரூபித்துள்ளது. இப்போது இருக்கும் இரயில்களுக்கு பதிலாக இனி வந்தேபாரத் இரயில்கள் இயக்கப்படும். அதாவது, இன்னும் கூடுதலாக உற்பத்தி செய்ய வேண்டும் . இதனை 70 கோடி ரூபாய்க்கு ஐசிஎஃப் உற்பத்தி செய்துள்ளது. இதே இரயிலை ஐம்பது கோடி ரூபாய் அதிகமாக அதாவது 120 கோடி ரூயாய்க்கு உற்பத்தி செய்ய டிடாகர் என்ற பன்னாட்டு நிறுவனத்திற்கு இரயில் வாரியம் அனுமதி அளித்துள்ளது சரியல்ல” என்று 14 சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு இரயில்வே நிர்வாகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. அனைத்துச் சங்க போராட்டக் குழுவில் அதிமுக, பாஜக சங்கங்களும் உள்ளன.
“12,000 தொழிலாளர்கள் இருக்க வேண்டிய ஆலையில் இப்போது 9,500 பேர் தான் உள்ளனர். ஆனாலும், வந்தே பாரத் இரயிலை உருவாக்கி எங்கள் வெற்றியை நிரூபித்து இருக்கிறோம். வந்தே பாரத் இரயிலை 70 கோடிக்கு தயாரித்ததை இரயில்வே அமைச்சர் பாராளுமன்றத்தில் ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனால், அதற்கு இப்போது 120 கோடி ரூபாய் என நிர்ணயம் செய்து அதனை வெளிநாட்டு கம்பெனிக்கு கொடுக்க உள்ளனர். இது தொடர்பாக அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறோம். எங்கள் ஆலை வளாகத்திற்குள் வெளிநாட்டு கம்பெனி வேலை செய்ய நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று உறுதிபடக் கூறினார் கூட்டு நடவடிக்கைக் குழுவின் ஒருங்கிணைப்பாளரான பி. மோகன்தாஸ்.
நிர்வாகத்தில் தொழிலாளர்களின் பங்களிப்பை உறுதி செய்ய வேண்டிய நடவடிக்கைகளை அரசு செய்ய வேண்டும் என அரசியல் அமைப்புச் சட்டத்தின் வழிகாட்டு நெறிமுறை கூறுகிறது. ஆனால், இவ்வளவு பெரிய கட்டமைப்பு, தொழில்நுட்பம், நெடிய அனுபவம், சோதனை ஓட்டத்தில் வெற்றி, குறித்த காலத்தில் தயாரிப்பு என பலமுனைகளிலும் சாதித்த பொறியாளர்கள், தொழிலாளர்களிடம் இப்படி ஒரு முடிவை எடுக்கும் முன்பு இரயில்வே நிர்வாகம் எந்தவிதமான விவாதத்தையும் நடத்தவில்லை.
” எந்தவிதமான புதிய தொழில்நுட்பத்தையோ, வடிவமைப்பையோ தராத ஒரு வெளிநாட்டு நிறுவனத்திற்கு இதன் தயாரிப்பைத் தரக்கூடாது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் வந்தே பாரத் இரயில்கள் ICF ஆலையில் உருவாக்கப்படும் என நான் எழுப்பிய கேள்வியின் போது பாராளுமன்றத்தில் நீங்கள் அளித்த உறுதி மொழியை நிறைவேற்ற வேண்டும் ” என்று ஒரு நெடிய கடிதம் மூலம் இரயில்வே அமைச்சருக்கு வேண்டுகோள் வைத்துள்ளார் வடசென்னை பாராளுமன்ற உறுப்பினரான டாக்டர். கலாநிதி வீராசாமி.
Also read
” புதிய பணி ஆணைகள் (work order), கூடுதல் தொழிலாளர்கள் என்று கொடுத்து இரயில் வாரியம் இரயில் இணைப்பு பெட்டி தொழிற்சாலையை ஆதரிக்க வேண்டும். மாறாக வந்தே பாரத் இரயில்களின் உற்பத்தியையும், பராமரிப்பையும் – ஐசிஎஃபை முடக்கி, ஒரு தனியார் நிறுவனத்திற்கு இரயில் வாரியம் ஏன் கொடுக்கிறது ? ” என்று தெரியவில்லை என்று கூறி, ஐஎன்டியுசி, ஏஐடியுசி, சிஐடியு, எல்பிஎஃப் உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
பத்து ரூபாய்க்கு ஒருவர் தாம்பரத்தில் இருந்து கடற்கரை இரயில் நிலையத்தி்ற்குச் செல்ல முடியும். இரயிலானது அரசுத் துறையில் இருப்பதால் தான், குறைந்த விலையில் பயணச்சீட்டு இருக்கிறது. இவை தொடர வேண்டுமானால், இலாபத்தை தரும் பெரம்பூர் இரயில் இணைப்பு பெட்டி தொழிற்சாலை போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். காமராஜர் காலத்தில் உருவான இந்த ஆலையை பாதுகாக்க வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு.
கட்டுரையாளர்; பீட்டர் துரைராஜ்
Joint TN. Government
பொதுத்துறை, அரசு நிறுவனங்கள், கனிம வளங்கள் என அனைத்தயும் கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கும் மோடியின் ஆட்சியை விரட்டியடிப்போம்