எங்கெங்கும் ஜேசிபியின் சீற்றம்! வேறெந்த ஆட்சியிலும் காணாத வகையில் குடியிருப்புகள் அகற்றம் என்பது தமிழகத்தில் நாளும், பொழுதுமாக இந்த ஆட்சியில் அரங்கேறி வருகின்றன! அதே சமயம் செல்வாக்கானவர்களின் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் நீதிமன்றம் தீர்ப்பு தந்தால் கூட, அரசு அசைந்து கொடுப்பதில்லை; விபரமாவது;
செங்கல்பட்டு மாவட்டம் அனகாபுத்தூரின் டோபிகானா தெரு , எம்.ஜி.ஆர் நகர், காயிதே மில்லத் தெரு, சாந்திநகர், தாய்மூகாம்பிகை நகர், டோபிகானா தெரு உள்ளிட்ட பகுதிகளில் மூன்று தலைமுறைகளாக வசித்து வரும் குடியிருப்புவாசிகளை நீர்நிலை ஆக்கிரமிப்பு எனக்கூறி வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகிறது திமுக அரசு!
50 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்தப் பகுதிகள் ஊராட்சி, நகராட்சி பட்டியலில் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன! மின் இணைப்பு, குடி நீர் இணைப்பு, வீட்டு வரி என எல்லாம் இருந்துள்ளது!
இங்கு வாழும் மக்களின் பிள்ளைகள் 400 க்கு மேற்பட்டோர் அரசு பள்ளிகளில் படித்துவரும் மாணவர்களின் கல்வி கேள்வி குறியாக உள்ளது. இவர்களுக்கு 10 கீமீ தள்ளி ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் வெறும் 350 சதுர அடியில் மாற்று இடம் தரப்பட்டத்தால் வேதனை அடைந்த மக்கள் தினசரி போராடி வருகின்றனர். சமீபத்தில் இந்த தீபாவளி பண்டிகையன்று கருப்பு தினமாக கருதி, கருப்பு சட்டை, பேட்ஜ் மற்றும் கையில் கருப்பு கொடி ஏந்தி கோஷமிட்டவாறு எதிர்ப்பு தெரிவித்தனர்.
தாம்பரம் அடுத்த சிட்லபாக்கத்தில் உள்ள ஏரி ஆக்கிரமிப்பு எனச் சொல்லி 450 வீடுகள் அகற்றப்பட்டன!
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பக்கிங்காம் கால்வாயை ஒட்டி உள்ள கோவிந்தசாமி நகர், இளங்கோ தெரு போன்ற இடங்களில் இருந்த 625 வீடுகளை அகற்றினர். இதைத் தொடர்ந்து கண்ணையா என்பவர் தீக்குளித்து உயிர் இழந்தார்.
கடற்கரையோரம் என்பது மீனவர்களின் பூர்வீக இடமாகும். ஆனால், மெரீனா லூப் சாலையில் ஏழை, எளிய மீனவப் பெண்களின் மீன் கடைகள் அதிரடியாக அப்புறப்படுத்தப்பட்டன!
பெருநகர சென்னை மாநகராட்சியில் மண்டல பறக்கும் படை குழுவினரால் அவ்வப்போது 200 முதல் 200 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.
விருத்தாசலம்-கடலூர் நெடுஞ்சாலையில் கோட்டாட்சியர் அலுவலகம் எதிர்புறம் 4.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட முல்லா ஏரி பகுதி மற்றும் கோட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பல ஆண்டுகளாக இருக்கும் எளிய குடியிருப்பு பகுதிகள் 150-க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள் என கட்டடங்கள் ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றப்பட்டன.
திருச்சி மாநகரில் பாலக்கரை ரவுண்டானா முதல் மரக்கடை வரையிலான மாநகராட்சி சாலையில் இரு புறங்களிலும் கட்டப்பட்டு பல்லாண்டுகளாக புழக்கத்தில் இருந்த கடைகள் ஜேசிபி.இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டன.
கடலூர் மஞ்சக்குப்பத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தை சுற்றியுள்ள பகுதி, சப்-ஜெயில் சாலை, பீச் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் டீக்கடைகள், ஓட்டல்கள், குளிர்பான கடைகள் உள்ளிட்ட 123 கடைகள், மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக பல தலைமுறைகளுக்கு பிறகு விழிப்புணர்வு பெற்றது போல அதிரடியாக அகற்றப்பட்டன.
இவ்வாறாக மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர், ஈரோடு,திருப்பூர், சேலம், நாமக்கல், விழுப்புரம்..என எல்லா மாவட்டங்களிலும் ஒரு மாவட்டம் கூட விடுபடாமல் ஜேசிபி இயந்திரத்தின் தாக்குதல்கள் வீடுகள், சிறு கடைகள் ஆகியவற்றை பதம் பார்த்துள்ளன.
ஆற்றோரத்தில் உள்ள ஏழை,எளியோரின் குடியிருப்புகளை அகற்றுவதற்கு ”அங்கு குடியிருப்பவர்களின் பாதுகாப்பு கருதியே செய்கிறோம்” என அரசு சொல்கிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருப்புவர்கள் தங்கள் பகுதி ஆபத்தான பகுதி என்றால், தொடர்ந்து குடியிருப்பார்களா? கடனை, உடனை வாங்கி சிறிய வீட்டை கட்டிப் எழுப்பத் துணிவார்களா? இத்தனை வருடங்களாக குடி நீர்வசதி, மின்சார வசதி, வீட்டு வரி ஆகியவை எப்படி நடந்தேறின? அதே சமயம், இதே ஆற்றங்கரைகளை ஆக்கிரமித்து எழுந்துள்ள பிரம்மாண்ட வணிக நிறுவனங்களை, தனியார் கல்வி நிறுவனங்களை அரசு சட்டை செய்வதே இல்லை. அனகாபுத்தூர் விவகாரத்தில் ஏழை, எளியோர் குடியிருப்புகளை கறாராக அகற்றும் அரசு அதே இடத்தில் கட்டப்பட்டு இருக்கும் மாதா கல்லூரியை கண்டுகொள்ளவே இல்லை.
நகராட்சிகள் மா நகராட்சிகளாகவும், பேருராட்சிகள் நகராட்சிகளாகவும் மாற்றப்பட்டு விவசாய நிலங்களை விழுங்குகிறார்கள்! சிற்றூர்களின் பசுமை சூழ்ந்த எழிலை சிதைக்கிறார்கள்!
இதே போல மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் ஏரியை ஆக்கிரமித்து தான் தன் கல்வி நிறுவனங்களை கட்டியுள்ளார். அவற்றை அகற்ற வேண்டும் என நீதிமன்றமே தீர்ப்பளித்த பிறகும் அதிமுக, திமுக என எந்த அரசும் அதில் ஒரு செங்கல்லைக் கூட அகற்றத் துணியவில்லை.
அவ்வளவு தஞ்சையில் காவல்துறை அகடமிக்கு சொந்தமான 54 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து சாஸ்தா பல்கலைக் கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் கட்டப்பட்டதை நீதிமன்றமே உறுதி செய்தும், அதை காலி செய்து அரசு எடுத்துக் கொள்ளலாம் என உத்திரவிட்ட பிறகும் ஸ்டலின் தலைமையிலான திமுக அரசு ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை.
இது போல பல ஆயிரம் உதாரணங்களை நாம் சொல்ல முடியும். செல்வாக்கானவர்களிடம் ஒரு அணுகுமுறை, எளிய மக்களிடம் ஒரு அணுகுமுறை! ஓரிடத்தில் மென்மை, மற்றோரு இடத்திலோ வன்மை! இது என்ன நியாயம்? என்ன தர்மம்? உண்மையில் எளியோரிடமல்லவா மென்மையை காட்டி இருக்க வேண்டும். திமிர்பிடித்த செல்வந்தர்களிடம் அல்லவா வன்மையைக் காட்டி இருக்க வேண்டும்.
இப்படி எளியோரிடம் இருந்து இடத்தை பறித்து செல்வந்தர்களின் வளர்ச்சிக்கு வாய்ப்பு உருவாக்கித் தருவதும் பல இடங்களில் நடக்கின்றன. ஜி ஸ்கொயர், அதானி எண்டர்பிரைசஸ் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகக் கூட பல இடங்களில் குடியிருப்புகள் அகற்றப்படுகின்றன.
இன்னும் பல இடங்களில் தேவையே இல்லாமல் தொழிற்பேட்டை கொண்டு வரப்போவதாக சொல்லி பசுமையான விவசாய நிலங்கள் வன்முறையாக அகற்றப்பட்டு வருகின்றன. செய்யாறு மேல்மா பகுதி இதற்கு சிறந்த உதாரணம். இந்தப் பகுதி மக்கள் கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.
Also read
பரந்தூரில் விமான நிலையத்திற்காக சுமார் 4750 ஏக்கர் விளை நிலங்கள், ஏரிகள், குடியிருப்புகளை அழிக்கும் முயற்சிக்கு எதிராக அந்தப் பகுதி மக்கள் சுமார் 450 நாட்களுக்கும் மேலாக போராடி வருகிறார்கள்!
நகராட்சிகளை மாநகராட்சிகளாகவும், பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும் மாற்றி, விவசாய நிலங்களை விழுங்குகிறார்கள்! சிற்றூர்களின் பசுமை சூழ்ந்த எழிலையும், சிறு தொழில்களையும் சிதைக்கிறார்கள்!
கார்ப்பரேட் கழுகுகளின் அகோர பசியை திருப்திபடுத்துவதற்கு என்றே செயல்படும் மத்திய பாஜக அரசின் தமிழக ஏஜெண்டாக இன்றைய திமுக அரசு தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது என்பதை இனியும் மறைக்க முடியாது!
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
எதிர் கட்சியாக இருக்கும் போது
எளியவர்களின் ஏந்தலாக காட்டி கொள்வது.
ஆளும் கட்சியாக வந்ததும் அப்படியே அந்தர் பல்டி அடிப்பது. இதுதான் இன்றைய திமுக அரசாக இருக்கிறது.
ஒன்றிய அரசுடன் கள்ள கூட்டணி வைத்து மக்களை வதைக்காமல் இருக்குமா இந்த அரசு???