போராடும் உரிமையை தமிழ்நாடு அரசு மறுப்பது ஏன்?

-பீட்டர் துரைராஜ்

உண்ணாவிரதம், தர்ணா, ஒரு மணி நேர ஆர்ப்பாட்டம், பேரணி, கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பை தெரிவிக்கும் அமைதியான எதிர்ப்பு, கண்டனக் கூட்டம்.. என எல்லாவற்றுக்கும் தடை என்றால்..எப்படி? ஜனநாயகத்தில் போராடுவதற்கான உரிமை தொடர்ந்து மறுக்கப்படுமானால், அது உச்சகட்ட கொந்தளிப்பை உருவாக்காதா..?

“நீ சொல்வதோடு நான் உடன்படாமல் போகலாம். ஆனால் அதைச் சொல்லும் உரிமை உனக்கு உண்டு” என்பது பிரெஞ்சு சிந்தனையாளரான வால்டேரின் புகழ்பெற்ற வசனமாகும். நமது அரசியல் சாசனம்,  பேச்சுரிமையையும், போராட்ட உரிமையையும் நமக்கு அளித்துள்ளது. அதனை உறுதி செய்ய வேண்டிய தமிழக அரசின் காவல்துறை, மக்களின் போராட்டங்களை தடுத்து வருகிறது.

கள்ளக் குறிச்சி மாணவி ஸ்ரீமதி கொல்லப்பட்டதற்கு குற்றவாளிகளுக்கு ஆதரவாக தமிழக காவல்துறை நடந்து கொள்வதை எதிர்ப்பு தெரிவித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அறிவித்த ஆர்ப்பட்டத்திற்கு அனுமதி மறுத்ததோடு, அந்த போராட்டத்திற்கு வீட்டில் இருந்து கிளம்பி வரும் வழியிலேயே மாதர் சங்க பெண்களை கைது செய்தது தமிழக காவல்துறை!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சென்ற ஆட்சியில் போராடியவர்களை சிட்டுக் குருவிகளை போல சுட்டுக் கொன்றது காவல்துறை! அது குறித்து விசாரணை செய்து நீதிபதி அருணா ஜெகதீசன் தந்த அறிக்கை மீது இன்று வரை நடவடிக்கை திமுக அரசு எடுக்கவில்லை. இதற்கு எதிப்பு தெரிவித்து போராட்ட்டம் நடத்தக் கூட மனித உரிமை அமைப்புகளுக்கு அனுமதி தராமல் மறுத்து வருவதாக சொல்லப்படுகிறது!

மகாத்மா காந்தி பிறந்த நாளை மதவெறிக்கு எதிரான நாளாக கொண்டாட சி.பி.எம் காவல் துறையிடம் அனுமதி கேட்டதற்கு கடைசி வரை தராமல் இழுத்தடித்து, கடைசி நேரத்தில் பல கண்டிஷன்களுடன் அனுமதி தந்து, கெடுபிடியும் செய்தார்கள்! கோட்ஸே காந்தியை கொன்றதைப் பற்றி தோழர். ஜி.ராமகிருஷ்ணன் பற்றி பேசிய போது அப்படி பேசக் கூடாது என காவல்துறை எச்சரித்ததோடு, அனுமதி ரத்தாகும் என மிரட்டியது.

தற்போது திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மேல்மா பகுதியில் தொழிற்பேட்டை தொடங்க பசுமையான விவசாய நிலங்களை அரசு அதிரடியாக பறிப்பதை எதிர்த்து தங்கள் வாழ்வாதாரத்திற்காகப் போராடும் எளிய அப்பாவி விவசாயிகள் மீது குண்டர் சட்டம் பாயுமென தமிழ் நாடு அரசு வழக்கறிஞர் கோர்ட்டில் தெரிவித்து உள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது! இப்படியான பல அனுபவங்களை பார்க்கும் போது தமிழ்நாட்டை ஆட்சி செய்வது ஸ்டாலினா? மோடியா? என்ற சந்தேகமே வருகிறது!

மேற்படி சம்பவங்கள் எல்லாமே தமிழகம் முன்பின் அறியாத புது அனுபவமாக உள்ளது. மத்திய அரசு டெல்லியில் என்ன மாதிரி எல்லாம் மக்கள் இயக்கங்களுக்கு கெடுபிடி தருகிறதோ, அதைவிட ஒருபடி மேலே போய் ஸ்டாலின் தலைமையிலான அரசு தருவதாகச் சொல்கிறார்கள் இவர்கள்!

அ.பாக்கியம்; (சி.பி.எம்)

அரசினால் கண்டுகொள்ளப்படாத அல்லது தீர்க்க இயலாத நிலையில்தான் பிரச்சினைகள் மக்கள் மன்றங்களுக்கு வருகின்றன. ஆனால் மக்கள் கூடாத இடங்களில்தான் போராடுவதற்கு அனுமதி என்பது, எதற்காக போராடுகின்றார்களோ அதற்கான நோக்கத்தையே சிதைத்து விடும்.
திருவனந்தபுரத்திலும், கல்கத்தாவிலும் தலைமைச் செயலகத்தி்ற்கு முன்பாகவே போராட முடியும். மும்பை சிவாஜி பூங்கா பகுதியில் போராட முடியும். ஹைதராபாத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தின் போது நான் அங்கு இருந்தேன். முக்கிய சாலை ஓரங்களில் தான் அங்கு போராட்டம் நடந்தது. சென்னையில் மட்டும் ஏன் மறுக்கபடுகிறது எனத் தெரியவில்லை! சென்னை கடற்கரையில்  நிறைய போராட்டங்கள் நடந்துள்ளன. கடற்கரையில் இருந்த சீரணி அரங்கை ஜெயலலிதா அரசு இடித்துவிட்டது. அமைந்தகரை ஹபிபுல்லா ரெட்டி அவென்யு, சைதாப்பேட்டையில் போன்ற இடங்களில் நடத்தி இருக்கிறோம். ஆனால், தற்போது மறுக்கப்படுகிறது. சென்னை நகரக் காவல் சட்டத்தைக் காட்டி சென்னை காவல்துறை இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கிறது.

மக்கள் தங்களுடைய வாழ்வாதார பிரச்சினைகளான குடி தண்ணீர், சாலைவசதி போன்ற அடிப்படைத் தேவைகளுக்காக கூட இப்போது போராட முடிவதில்லை. அந்தந்த மாநகராட்சி பகுதி அலுவலகங்கள் முன்பு, மின்வாரிய அலுவலகங்கள் முன்பு என சம்மந்தப்பட்ட அரசு அலுவலகங்கள் முன்பு  மக்கள் போராடி இருக்கிறார்கள்; குறைகள் தீர்க்கப்பட்டிருக்கின்றன. தெருமுனைக் கூட்டங்கள் நடந்துள்ளன. அந்தப் பகுதி மக்களை ஈடுபடுத்தி பொதுமக்கள் முன்பு குறைகளை சொல்லும் நடத்தும் வடிவங்கள் இப்போது இல்லாமல் ஆகிவிட்டதே.

மாநகராட்சி பிரச்சினைக்காக ரிப்பன் மாளிகை முன்பு உண்ணாவிரதம் நடத்த முடியாது. அதாவது, உள்ளூர் பிரச்சினைக்காக நீங்கள் போராட முடியாது. பல்வேறு தடைகள் மூலம் அரசு போராட்டங்களை தடுக்கிறது. சென்னை மாநகராட்சியில், ஒரு கோட்டத்தி்ற்கு ஒரு பகுதியில் போராட அனுமதி அளிக்க வேண்டும். சென்னைத் தீவுத்திடலை போராட்ட இடமாக அறிவிக்கலாமே. உலகெங்கிலும் கடற்கரை பகுதியிலும், ஆற்றங்கரை ஓரங்களிலும் மக்கள் போராடத் தானே செய்கிறார்கள். சென்னை கடற்கரையில் ஏன் தொடர்ந்து அனுமதி மறுக்கிறார்கள்!. சீரணி அரங்கத்தை மீண்டும் கட்டி பயன்பாட்டிற்கு கொண்டுவரலாமே!

சுஜாதா மோடி; (பெண் தொழிலாளர் சங்கம்)

காஸா கடற்கரை இனப் படுகொலையை எதிர்த்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீட்டிற்கு முன்பாகவே, இஸ்ரேல் நாட்டு மக்களால் போராட முடிகிறது. ஆனால், இங்கு சென்னையில் அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக நம்மால் போராட முடியாது. அதற்கு அனுமதி கேட்போரை  தீவிரவாதி போல காவல்துறை நடத்துகிறது. ஆனால், முன்பெல்லாம்  நாம் நடத்தி உள்ளோம். சென்னை உயர்நீதிமன்றம் எஸ்பிளனேடில், பூங்காக்களில், அண்ணா சாலையில் நாங்கள் போராடி இருக்கிறோம். ஆனால், தற்போதோ, மன்றோ சிலைக்கு முன்பு ஊர்வலத்தை தொடங்குங்கள் என்று காவல்துறை சொல்கிறது. மன்றோ சிலை என்பது ஒரு வெள்ளைக்கார கவர்னரின் சிலை;  அந்த சிலைக்கு முன்பு நாம் ஏன் போராட்டத்தை நடத்த வேண்டும்? காந்தி சிலை முன்பு, அம்பேத்கர்  மண்டபம் முன்பு என நாம் மதிக்கின்ற இடத்தில் போராடும் உரிமை நமக்கு வேண்டும்.

சீரணி அரங்கம் போல, ஏற்கனவே போராட்டம் நடந்த இடங்கள் திரும்பவும் மீட்கப்பட வேண்டும். போராடும் போது நமது உணர்ச்சிகளை மக்கள் பார்க்க வேண்டும். ஒன்றுகூடும் உரிமையையும், எதிர்ப்பிற்கான உரிமையையும், மாற்றுக் கருத்து சொல்லும் உரிமையையும் காவல்துறை பறித்து விட்டது. சென்னை நகரத்தில் உள்ள சாலைகளும், காலியான இடங்களும் கார் நிறுத்ததிற்கான  இடங்களாகி விட்டன. இதே காவல்துறை இஸ்கான் போன்ற மத அமைப்புகள் கூடுவதற்கு எப்படி அனுமதி அளிக்கிறது ?

பேருந்துகள் செல்லாத, மக்கள் நடமாட்டமில்லாத இடங்களில் போராடும் போது, ஊடகத்தினரின் கேமராவை பார்த்து பேசுவது தான் போராட்டம் என்று மாறி விட்டது. அரசு நிர்வாகம், காவல்துறை, நீதிமன்றம்  என அனைத்தும் சாதாரண மக்கள் போராடுவதை அனுமதிப்பது இல்லை. கெடுபிடிகளால் மக்கள் போராடுகின்ற உரிமை மறுக்கபடுகிறது. பரபரப்பான இலண்டன் மாநகரில் கூட மக்கள் போராட இரயிலில் பயணித்து கலந்து கொள்கிறார்கள்!

ம. இராதாகிருஷ்ணன்; (ஏஐடியுசியின் மாநிலச் செயலாளர்)

இந்தியாவில்  உள்ள பத்து தொழிற்சங்கங்கள் இணைந்து வருகிற நவம்பர் 26ந்தேதி தொடங்கி 28 ந்தேதி வரை கவர்னர் மாளிகை முற்றுகை  போராட்டத்தை அறிவித்துள்ளோம். இதற்கான விண்ணப்ப படிவத்தை வாங்கவே தமிழக காவல்துறை மறுக்கிறது. கடைசி நேரத்தில் போராட்டம் நடத்துவதற்கு ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தை தருவார்கள். எந்த இடம் என்பது கடைசிவரை  நமக்குத் தெரியாது. இடம் தெரியாவிட்டால் எந்த ஏற்பாடுகளையும் செய்ய முடியாது. கலந்து கொள்வோர்களுக்கு தகவல் சொல்ல முடியாது.

தில்லியில் போராட்டத்திற்கு அனுமதிக்கபடும்  ஜந்தர் மந்தர் பகுதி பாராளுமன்றத்தில் இருந்து வெகு தூரம் இல்லை. அதே போல இங்கும் சட்டமன்றம் முன்பு போராட அனுமதித்தால் என்ன தவறு ?  கடந்த காலங்களில் முதலமைச்சர்கள் தலைமைச் செயலக வாசலுக்கு வந்து, போராடிய மக்களிடம் நேரடியாக மனு வாங்கி இருக்கிறார்கள். தொழிலாளர் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்; மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும், விவசாயிகளுக்கு கொடுத்த உறுதி மொழியை ஒன்றிய அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக ஒன்றிய அரசின் பிரதிநிதியான கவர்னர் மாளிகை முன்பு இரவும் பகலும் மூன்று நாட்கள் போராட திட்டமிட்டுள்ளோம். இதை அனுமதிப்பதில் என்ன தடை ?

தலைநகரம் என்பதால் நிறைய இயக்கங்கள் சென்னையில் நடக்கின்றன. அதற்கேற்றவாறு கூடுதல் இடங்களை ஒதுக்க வேண்டும். மும்பையில் விவசாயிகள் நெடும்பயணம் நடத்தவில்லையா? போராடுவது ஜனநாயக உரிமை. அரசியல் கட்சிகள், பொதுமக்களிடம் பொது விவாதம் நடத்தி போராடும் இடங்கள் குறித்து முடிவெடுக்க வேண்டும். பொது அமைதிக்கு பங்கம் வராத நிலையில், காவல்துறை போராட்டங்களை தடுக்கக் கூடாது. பதிவு செய்யாத அமைப்புகளுக்கு அனுமதி இல்லை என்று காவல்துறை சொல்கிறது. பதிவு செய்வதும், செய்யாமல் இருப்பதும் அந்தந்த அமைப்புகளின் விருப்பத்தை பொறுத்தது.

போராட்ட அனுமதி கொடுத்த பிறகு எப்படி மேடை போட வேண்டும்; எத்தனை இருக்கைகள் போட வேண்டும்; மைக் எப்படி வைக்க வேண்டும் எனக் கெடுபிடிகளை காவல்துறை செய்கிறது. அரங்கக் கூட்டங்கள் நடத்த அனுமதி தேவையில்லை. ஆனால், மண்டப உரிமையாளர்களையும், மைக் செட் காரர்களையும் காவல்துறை மிரட்டுகிறது.

க.சரவணன்; (மனித உரிமை செயற்பாட்டாளர்)

போராட்டங்கள் நடத்த காவல்துறை அனுமதி வேண்டும் என்பதே கூடாது. காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாலே போதுமானது! சென்னை மாநகரக் காவல் சட்டமானது ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டது. இந்தியா விடுதலை அடைந்த பிறகு, அரசியல் அமைப்புச் சட்டத்தின் 19 வது பிரிவின்படி கருத்துக் கூறும் உரிமை அடிப்படை உரிமையாகும். ஆயுதம் இன்றி அமைதியாக கூடுபவர்களை ‘சட்டவிரோதமாக கூடுகிறார்கள்’ எனச் சொல்லக் கூடாது. இதே போலத் தான் மாவட்ட தலைநகரங்களில் போராட அனுமதி மறுக்கிறார்கள்.

குறிப்பாக மாநில அரசை எதிர்த்துப் போராட காவல்துறை அனுமதிப்பதில்லை. அதை எதிர்த்து நீதிமன்றம் தான் போக முடியும். எத்தனை பேர் அவ்வாறு போக முடியும் ? அதற்கு எவ்வளவு செலவாகும்; அதற்கான நேரம் இருக்குமா? சமீபத்தில் திருவண்ணாமலை மாவட்டம், மேல்மாவில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப் போவதை எதிர்த்து  ஊர்வலம் சென்ற விவசாயிகளை காவல்துறை கைது செய்தது.

‘மக்களாகிய நாம்’ என்றுதான் நமது அரசியல் சட்டம் தொடங்குகிறது. குடிமக்களின் உரிமை, சுதந்திரம் என்பதுதான் ஜனநாயகத்திற்கான அடிப்படையாகும். எனவே, அரசின் எல்லா நடவடிக்கைகளும் மக்களை அதிகாரப்படுத்துவதாகவே இருக்க வேண்டும். இல்லையெனில், ‘சுதந்திரமின்மை என்பது ஒரு அமைப்பியல் வன்முறை’ என்று மனித உரிமைப் போராளியான கே. பாலகோபால் சொல்வது உண்மை ஆகிவிடும்.

கட்டுரையாளர்; பீட்டர் துரைராஜ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time