அதிசயக் கலையான அவதானம் தமிழர்களின் தொன்மைக் கலையாகும்! இது மிகக் கடும் பயிற்சிகளால் மட்டுமே சாத்தியமாகும்! ஒரே நேரத்தில் எட்டு முதல் 16 வகையான செயல்களை பிசிறின்றி மிகுந்த நினைவாற்றலுடன், மனப் பயிற்சியுடன் செய்து பெருவியப்பை தோற்றுவிக்கும் இந்தக் கலையின் இன்றைய நிலை என்ன?
எல்லா மனிதர்களுக்கும் ஒரு தலை, ஒரு கைகளே உள்ளன! நம்மைப் போலவே உள்ள அவதானிகள் ஒரே நேரத்தில் பத்து தலைகளோ, இருபது கைகளோ இருக்கின்ற அதிசயப் பிறவி போல பல அவதாரங்கள் எடுத்து செயல்படும் கலையே அவதானக் கலையாகும்!
எட்டுவித அம்சங்களில் அவதானம் (கவனகம்) நிகழ்த்துவது ‘அஷ்டாவதானம்’.
பத்து அம்சங்களில் நிகழ்த்துவது ‘தசாவதானம்’.
பதினாறு அம்சங்களில் நிகழ்த்துவது ‘சோடாவசதானம்’,
நூறு அம்சங்களில் நிகழ்த்துவது ‘சதாவதானம்’
என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது! துவிசதாவதானம் (இரு நூறு கவனகம்) நிகழ்த்துவோரும் அந்தக் காலத்தில் இருந்துள்ளனர்.
அவதானங்களைச் செய்வது அரிய செயலேயாகும். வேறு ஒன்றைப் பார்த்துவிட்டாலே ஏற்கெனவே செய்த செயலை மறந்துவிடுவோராக நம்மில் பலர் உள்ளோம்!
ஆனால் ‘வேலும் மயிலும்’ என்ற சொல்லை மாறாமல் வாய் கூறிக் கொண்டேயிருக்க,
கைகள் பிறர் கூறும் வாசகங்களை எழுதிக்காட்ட,
கணக்குகள் கேட்போருக்கு உடனே விடைகளும் சொல்ல,
முதுகிலே ஒருவரால் எறியப்படுவதை எண்ணிக் கொள்ள,
அத்துடன் சொக்கட்டான், சதுரங்கம் போன்ற விளையாட்டுகளும் ஆட,
இவையனைத்திற்கும் மேலாக கேட்ட நொடியில் வெண்பா பாட..
போன்ற பாடல் ஆற்றலை அவதானிகள் பெற்றிருந்ததை எண்ணுந்தோறும் வியப்பே மேலிடுகிறது.

பல நூற்றாண்டுகளாகத் தமிழ் நாட்டில் வெகுச் சிறப்பாக வளர்ந்து வந்த அவதானக்கலை இப்போது தமிழர்களின் ஆர்வமின்மையாலும், பயில்வோர் குறைந்து விட்டதாலும் வழக்கொழிந்து வருகிறது . தமிழ்நாட்டில் இராமையாவின் பேரரான கவனகர் கனகசுப்ரத்தினம், செங்கல்பட்டு இரா.எல்லப்பன், கலைச்செழியன், கோ.சி.பிரதீபா, திருமூலநாதன், க.பிரதிபா போல் வெகு சிலர் மட்டுமே இருக்கிறார்கள். திலீபன் என்ற இளைஞர் தற்போது 16 அம்சங்களை செய்து காட்டி வருகிறார்!

வளர்ந்துவரும் நாடுகள் அறிவியலின் மூலமாகப் பெற்று வரும் வளர்ச்சிகளெல்லாம் புற உலகில் அவை பெற்றுவரும் வளர்ச்சிகளாகவே அமைந்துள்ளதை உணர்கிறோம். அதனால்தான் அவ்வளர்ச்சியின் மிகுதியாலேயே அங்கே போட்டிகளும் பொறாமைகளும் தோன்றக் காணகிறோம். அதனால் போரும் பூசலும் வெடித்து வளர்ச்சியே வீழ்ச்சிக்கும் வித்தாக அமைவதைப்பார்க்கிறோம். உயர்ந்த மாளிகைக்கு ஆழமான அடித்தளம் அமைப்பது போல அகவாழ்வைப்பற்றி ஆழ்ந்து சிந்தித்து அரிய பல உண்மைகளை வெளிப்படுத்திய பெருமை தமிழினத்திற்குண்டு.
அதனால்தான் தமிழரின் புறவாழ்வும் அன்பும் அருளும் கலந்ததாக அமைந்துள்ளதைக் காண்கிறோம்.
மனத்தைப் பற்றியும். ஆன்மாவைப் பற்றியும், உயிருக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பைப் பற்றியும், இவ்வுலகின் நிலையைப் பற்றியும் ஆழ்ந்து சிந்தித்தவர்கள் தமிழர்கள். மனத்தின் மாண்பினைப் பற்றியும், அதனை ஒருவழிப் படுத்தல் அல்லது ஒரே வழி அடக்கி வைத்தல் ஆகியவற்றின் மூலமாகச் செயற்கரிய செயல்கள் பலவற்றைச் செய்யமுடியும் என்பதையும் எடுத்துக்காட்டியவர்கள் நம் நாட்டுச் சித்தர்கள்..
தமிழ்நாட்டில் இச் சித்தர்கள் வாழ்ந்த காலத்திற்கும் அவதானிகள் தோன்றியதற்கும் ஓர் தொடர்பு உண்டு. திருமூலர் போன்ற சித்தர்கள் காலத்தால் முந்தியவர்களாக இருந்தாலும் பெரும்பாலான சித்தர்கள் ஏறத்தாழ கி.பி.16ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி, 17ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே வாழ்ந்துள்ளார்கள். நமக்குக் கிடைக்கும் சான்றுகளின்படி பார்த்தால், கி.பி. 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே தமிழ்நாட்டில் அவதானக் கலை தோன்றியுள்ளது. அவதானம் தோன்றிய காலமும் தோன்றியதற்கான காரணமும் ஆராயப்படவிருக்கிறது.
மனத்தைப்பற்றிய சித்தர்களின் ஆராய்ச்சியில் தான் அவதானக்கலையும் தோன்றியுள்ளது! ஏனெனில், அவதானக்கலைக்கும் மனநிலையே அடிப்படையானது.
மனத்தை கட்டுப்படுத்தும் திறனில்லார் அவதானத்தின் அரிச்சுவடியையே கூட அறியமுடியாது!
ஒரே சமயத்தில் பலர் விடுக்கும் வினாக்களுக்குப் பதில்கூறும் பாங்கும், நினைத்தவுடன் பாட்டெழுதும் திறமும் எளிதில் கைவந்துவிடக் கூடியதல்ல. சித்தர்கள் உரைத்துச் சென்ற உண்மைகளை உணர்ந்து பெற்ற மன அனுபவமே அவதானக் கலையாகும்!
அவதானம் என்பதற்கு ‘கவனம்’ என்ற பொருளை மூன்று அகராதிகள் குறிப்பிட்டுள்ளன. மறதியற்ற நிலை, ஞாபகத் திறமையின் உச்சம், என்றும், மேன்மைச்செயல் என்றெல்லாம் அவதானத்தின் பொருள் கூறப்பட்டுள்ளது!
வரலாற்றில் அவதானிகளைப் பற்றிய குறிப்பீடு முகலாயர்களிலிருந்து தான் தொடங்குகிறது! முகலாய பேரரசர்கள் மற்றும் அவர்களின் சுபதர்கள் (கவர்னர்கள்) முன் அவதானம் கலையை பல ஜைன அவதானிகள் காட்சிப்படுத்தினரென்பது பதிவாகியிருக்கிறது! துறவி விஜயசென் சூரியின் சீடரான நந்தி விஜய், அக்பருக்கு முன்னால் அஷ்டாவதானம் செய்தார். அக்பர் அந்தக் கலையில் மிகவும் ஈர்க்கப்பட்டார் அதனால், நந்தி விஜய்க்கு குஷ்பாம் என்ற பட்டத்தை வழங்கினார்!
தமிழ்நாட்டைப் பொருத்தவரை அவதானம் வளர்ந்த காலம் 17 ஆம் நூற்றாண்டுகளுக்குப் பிறகாகவே இருக்கிறது! அப்போதுதான் அவதானம் செய்யும் வழக்கம் தமிழ்ப் புலவர்களிடம் வந்து சேர்ந்தது! அவதானம் செய்தவர்கள் அனைவருமே அருந்தமிழ்ப் புலவர்களே! அவர்கள் அவதானம் செய்த மொழியும் தமிழே! அவதானத்தின் போது, அவர்கள் பாடிய ஆசுகவிப் பாடல்கள் அனைத்தும் அழகு தமிழ்ப் பாடல்களே! அப்படியிருந்தும் இந்த அரிய கலையின் பெயர் மட்டும் அவதானம் என்ற வடசொல்லாக இருப்பானேன் என்ற கேள்வி எல்லோர்க்கும் எழுவது இயல்பே.
அதற்குரிய முக்கியக் காரணம், இக் கலை இந்நாட்டில் வளரத் தொடங்கிய நேரம் இங்கிருந்த வடமொழி மிகுதிபுழக்கம் ஆகும் ! பெருமைக்குரிய எதையுமே வடசொல்லால் சொல்லும்போது தான் அது புனிதத் தன்மையடைகிறது என்ற போலிக் கொள்கையே அப்போது நிலவி வந்ததால், இந்தக் கவனக் கலை அவதானமாக இங்கே அவதரித்துள்ளது.
இலங்கையில் பிறந்திருந்தாலும் தமிழ் நாட்டில் வாழ்ந்த நா.கதிர்வேற்பிள்ளை இவர் ஒரே நேரத்தில் நூறு செயல்களைக் கவனிக்கும் – அவதானிக்கும் – ஆற்றல் படைத்தவராம்! இவர் சதாவதானி என்ற சிறப்புடன் அழைக்கப்பட்டார்!! ஆறுமுக நாவலருக்குப் பின்னர் சைவத் திருமுறைகளை பதிப்பித்து காப்பாற்றினார். நா.கதிரைவேற்பிள்ளை செய்த அதிசயக் கலைத் திறன் ஞானாந்த சுவாமிகள், ஆங்கிலேய அதிகாரிகள் உள்ளிட்ட பலர் முன்னிலையில் நடந்து பாராட்டு பெற்றுள்ளது!

இஸ்லாமியராக இருந்தாலும் செய்குதம்பி பாவலர் சைவத் திருமுறைகள் உள்ளிட்ட இதமிழ் இலக்கியங்களில் பெரும் புலமை கொண்டவர்! வள்ளலார் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர்! அவருக்காக அருட்பாவா? மருட்பாவா? விவகாரத்தில் வாதாடி வள்ளலார் இயற்றியவை அருட்பாவே என நிறுவியவர்! நாகர்கோவிலில் பிறந்த பாவலர் சென்னையில் வாழ்ந்த காலத்தில் முதுகுளத்தூர் கல்யாண சுந்தரம் எனபவரைச் சந்தித்து இக் கலையை கற்றார்! பிறகு சொந்த ஊரான நாகர்கோவிலில் 1905-ல் பாவலர் சோடசதாவதானம் (பதினாறு அவதானம்) என்னும் கலையை நிகழ்த்தினார். இதில் பாவலர் இறைநாம உச்சரிப்பு, கைப்பணி, தலைவரோடு உரையாடல், இலக்கியம், இலக்கணம், இருமுறை கேட்டு வெண்பாவை ஒப்புவித்தல், சுவைப்புலன் அறிதல், ஒலி வேறுபாடு உணர்தல், நெல் எறிதல், கல் எறிதல், சீட்டாடல், கண்டப்பத்திரிக்கை, கவிபாடல், கண்டத் தொகை, கிழமை கூறுதல், நூறு நிரப்புதல் எனப் பதினாறு செயல்களை செய்து காட்டி மக்களை அசத்தினார்! காந்தியின் சீடான இவர் காந்தியின் முன்பும் இதை செய்து காட்டிப் பாராட்டு பெற்றாராம்! எம்.ஜி.ஆர் ஆட்சியின் போது இவருக்கு நினைவு மண்டபம் எழுப்பட்டுள்ளது!

சுதந்திரப் போராட்டத் தியாகியான விருதுநகர் இராமையா என்பவர் தன் 32ஆவது வயதில் கண்ணை இழந்த பிறகு பேறையூரை சேர்ந்த பொ.மீ.இராமலிங்கம் செட்டியார் வழியாக இந்தக் கலையைக் கற்று தசாவதானியாகத் திகழ்ந்தார்! இவர் நினைவுக்களை ஏந்தல் என அழைப்பட்டார்! 1330 திருக்குறளை தன் மனைவியும், மகளும் வாசிக்க அப்படியே நூறு நாளில் தலை கீழாக மனப்பாடம் செய்துவிட்டாராம்! இவர் திருக்குறள் தொடர்பான எதையும் துல்லியமாகச் சொல்வாராம்! ஒரு வார்த்தையைச் சொன்னால், அது எந்தந்த திருக்குறளில் வருகிறது என்பதை அடுத்த நொடியில் சொல்வாராம்! இதே போல பழந்தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் புலமை பெற்று இருந்துள்ளார். இவர் 1968 உலகத் தமிழ் மாநாட்டில் தன் கலை வெளிப்பாட்டை நிகழ்த்தியுள்ளார். இவர் தமிழகத்தில் குரானா கவர்னராக இருக்கும் போது, கவர்னர் மாளிகையில் இந்த தசாவதாரக் கலையை நிகழ்த்தியுள்ளார். இவர் ஒரே நேரத்தில் 10 விவகாரங்களை கவனித்து செய்வதை பார்த்த அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் இவரை அரசரவை கலைஞராக 1984 ல் அறிவித்து கவுரவித்தார்!
இது வரை தமிழ் நாட்டில் புகழுடன் திகழ்ந்த பலரையும், தற்போதும் இருக்கிற ஒரு சில அவதானிகளையும் வரிசைப்படுத்திய (கவனகர்கள்) பட்டியல் விக்கியில் ஒன்று கிடைத்தது! அவை இங்கே தரப்படுகிறது!
- சட்டாவதானம் (ஆறு கவனகம்) கங்காதர பாலதேசிகர்
- வைரக்கண் வேலாயுதப் புலவர்
- அட்டாவதானம் (எட்டு கவனகம்) அச்சுத உபாத்தியாயர்
- அட்டாவதானியார்
- அப்துல்காதர்
- அபூபக்கர் நயினார் புலவர்
- அரங்கநாதக் கவிராயர்
- அரங்கையர்
- அரங்கசாமி ஐயங்கார்
- இரங்கநாதக் கவிராயர்
- இராமசாமியா பிள்ளை
- இராமநாதன் செட்டியார்
- இராமலிங்கம் பிள்ளை
- இராமானுசக் கவிராயர்
- இராமசாமிக் கவிராயர்
- இராமசாமிக் கவிஞர்
- இராமலிங்கக் கவிராயர்
- இன்பக் கவிராயர் ஏகாம்பரம்
- நா. கதிரைவேற்பிள்ளை
- நா. கதிர்வேல் கவிராச பண்டிதர்
- கலியாண சுந்தரம் பிள்ளை
- கிருஷ்ண ஐயங்கார்
- குமாரசாமிக் கவிராயர்
- சபாபதி முதலியார்
- சந்திரசேகர உபாத்தியாயர்
- சரவணக் கவிராயர்
- சரவணப் பெருமாள் பிள்ளை
- சாமிநாதையர்
- சிறிய சரவணக் கவிராயர்
- சிவராமலிங்கக் கவிராயர்
- சின்ன இபுறாகீம் மொகையதீன்
- சுந்தரம் ஐயர்
- சுப்பிரமணிய ஐயர்
- சுப்பிரமணிய தாசு
- சுப்பையர்
- தி. க சுப்பராய செட்டியார்
- செகராவ் முதலியார்
- சோடாசலக் கவிராயர்
- சொக்கலிங்கப் புலவர்
- சொக்கநாதப் புலவர்
- சோமசுந்தர குரு
- நயினார் பிள்ளை
- நாகலிங்கம் பிள்ளை
- பாப்பையர்
- பூவை. கலியாணசுந்தர முதலியார்
- பெரிய திருவடிக் கவிராயர்
- பொன்னுங் கூட அவதானி
- மகாதேவ ஐயர்
- மீனாட்சிசுந்தரக் கவிராயர்
- முத்துசாமி ஐயங்கார்
- முத்துக்குமாரு. ச.
- முத்துச்சாமிக் கோனார்
- முகமது மீரா ராவுத்தர் அ. ம. சி.
- முகம்மது அப்துல் காதர்
- வடபத்திர ஐயங்கார்
- பாலசுப்பிரமணிய ஐயர்
- வீராசாமி செட்டியார்
- வேலாயுதக் கவிராயர்
- தசாவதானம் (பத்து கவனகம்) ஆறுமுகம் பிள்ளை
- ‘திருக்குறள்’ இராமையா
- சரவணப் பெருமாள் கவிராயர்
- ஜெகநாதப் பிள்ளை
- திருஞானசம்பந்தன்
- பாலசுப்ரமணிய ஐயர்
- முத்துவீர உபாத்தியாயர்
- சோடசாவதானம் (பதினாறு கவகனம்) சரவணப் பெருமாள் கவிராயர்
- சுப்பராயச் செட்டியார்
- மீனாட்சி சுந்தரக் கவிராயர்
- வேலாயுதக் கவிராயர்
- சதாவதானம் (நூறு கவனகம்) இராமநாதச் செட்டியார்
- கிருஷ்ணசாமிப் பாவலர் தெ. பொ
- சரவணப் பெருமாள் கவிராயர்
- சுப்பிரமணிய ஐயர்
- செய்குத்தம்பிப் பாவலர்
- பாலசுப்ரமணிய ஐயர்
- பாலசுப்ரமணிய ஐயர்
- மீனாட்சி சுந்தர ஐயர்
- முத்துச்சாமி ஐயங்கார்
- பாலசுப்ரமணி ஐயர்
- துவிசதாவதானம் (இரு நூறு கவனகம்) ம. உ . சுப்பராமையர்
- திருக்குறள் அவதானம் திருக்குறள் இராமையாப் பிள்ளை
- இராமதாசு
- சுப்பிரமணிய தாசு
- எல்லப்பன்
- அட்சராவதானம் பெருங்கருணை முத்தழகர்
- கவனகர்கள் (தற்காலம்) இரா. கனகசுப்புரத்தினம்
- கலை.செழியன்
- திருக்குறள் திலீபன்
- திருக்குறள் திருமூலநாதன்
- கோ.சீ. பிரதீபா
- க. பிரதீபா
19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகள் தெலுங்கில் அவதானத்தைப் போக்கு திவாகர்லா திருப்பதி சாஸ்திரி (1871-1919) மற்றும் செல்லப்பில்லா வெங்கட சாஸ்திரி (1870-1950) ஆகியோரால் பிரபலப்படுத்தப்பட்டது, அவர்கள் திருப்பதி வெங்கட கவுலு எனப் பிரபலமாக இருந்தனர்.
சதாவதனி சேக் தம்பி பாவலர் – இவர் ஒரு தமிழ்க் கவிஞர், அறிஞர் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். அவர் 10-மார்ச்-1907 அன்று சென்னை விக்டோரியா டவுன் ஹாலில் சதாவதானம் செய்தார். 31 டிசம்பர் 2008 அன்று, அவரது நினைவு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
குஜராத்தி ஜெயின் கவிஞரான ராய்சந்த்பாய் ஒரு சாதாவதானி ஆவார், அவருடைய திறமைகள் மகாத்மா காந்தியை பெரிதும் கவர்ந்தன.
இவைகளெல்லாம் வேறு சில மாநிலங்களிலும் இந்த கலை சிறப்புடன் இருப்பதை அறிவிக்கும் செய்திகளாகும். ஆனால், தமிழ்நாட்டில் இந்தக் கலை சிறுகச் சிறுக மறைந்து வருகிறது.
அவதானங்களைச் செய்வது அரிய செயலேயாகும். வேறு ஒன்றைப் பார்த்துவிட்டாலே ஏற்கெனவே செய்த செயலை மறந்துவிடும் தன்மை நம்மில் பலருக்கு இயல்பாக அமைந்ததுபோல் காணப்படுகிறது.
உமறுப்புலவரின் பேரர் அப்துல்காதர் என்பவர் ஓர் அட்டாவதானி.
ஒரு முறை அவர் அட்டாவதானம் செய்து கொண்டிருக்கும்போது அன்பர் ஒருவர் ஒரு வேண்டுகோள் விடுத்தார்.’ஐ’ எனத் தொடங்கி, ‘ஐ’ என முடியுமாறும், இடையில் ஆனைமுகன் பெயர் வருமாறும் வெண்பாப் பாடவேண்டும் என்பதே அவரின் வேண்டுதல். அடுத்த நிமிடமே அவரது வாயிலிருந்து ஓர் அரிய வெண்பா மலர்ந்தது.
“ஐயா விரிசடையோன் அண்ணலுக்கு முன்னுதித்தமெய்யாங்குணதீப வித்தகனாம் – வையமெல்லாம் போதமுறும் வேழமுகப் புண்ணியனைப் போற்றுதற்குச் சாதனைசெய் பால்சாதத் தை” என்பதே அப்பாடல். இவ்வாறு பல்வேறு செய்திகள் அதிகம் உள்ளது. சொன்னால் நீளும்.
எந்த ஒரு கலையும் பிறரது ஆதரவு இருக்கும் போதுதான் வளர முடியும். ஆதரவு என்பது பயிரின் வளர்ச்சிக்குப் பாய்ச்சப்படும் நீர் போன்றது! நீரின்றி எவ்வளவு காலம் பயிர் உயிர் வாழ முடியும்? எனவே இந்த அரிய தமிழர் மனநலம் உயர் வகை கூறும் இதுவும் இப்போது மறையத் தொடங்கிவருகிறது!
தமிழ் வழிக் கல்வி என்பதே தமிழ்நாட்டில் அருகி வரும் நிலையில், தமிழில் அகச் சிறந்த புலமை பெற்று வளர்ந்த இது போன்ற அரிய நினைவாற்றலும், கூர்ந்த மெய் ஞானமும், சிறந்த ஆளுமைப் பண்பும் கொண்ட அவதானக் கலை அழிந்து வருவதை எப்படி தடுக்க முடியும்? தமிழ் வழிக் கல்வியை மீட்க முடிந்தால், இது போன்ற ‘அதி திறமைசாலிகள்’ இன்றும் ஜொலிக்க முடியும்!
கட்டுரையாக்கம்;
அண்ணாமலை சுகுமாரன் & சாவித்திரி கண்ணன்
தமிழ் கூறும் நல்லுலகு அறிந்துகொள்ள வேண்டிய பயனுள்ள ஒரு கட்டுரை! கட்டுரையாளர்களுக்கு நெஞ்சு நிறை பாராட்டுக்கள்.