இன்றைய அரசியல்வாதிகளிலேயே மரியாதைக்குரிய அரசியல் பாரம்பரியமும், நீண்ட நெடிய நிர்வாகத் திறமையும், ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து பெருமளவு விலகி நிற்பவருமாக ஒருவரை சொல்ல முடியுமென்றால், அவர் நிதீஸ்குமார் தான்! இன்னும் சொல்வதென்றால், மாநில அரசியலைக் கடந்து தேசிய அளவில் பிரதமர் வேட்பாளருக்கான தகுதி கொண்டவராகவும் பார்க்கப்பட்டவர்!
குற்றச் செயல்களின் கூடாரமாக பார்க்கப்பட்ட லாலுபிரசாத்தின் 15 வருட ஆட்சிகால பீகாரை, குற்றச் செயல்களை குறைத்து,கல்வியறிவு பெற்ற,தொழில் வளர்ச்சி கொண்ட மாநிலமாக வளர்த்தெடுத்ததில் நீதீஸின் பங்கு மகத்தானது! இதனால் தான் தொடர்ந்து அந்த மாநிலத்தில் மூன்று முறை அவர் முதல்வரானார்! ஆனால், இவ்வளவு செய்தும், இந்த முறை அவர் மீண்டும் முதல்வாராவதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை என்று தான் தோன்றுகிறது. காரணம், ஒருவரின் மரியாதை வளர்வதும், தேய்வதும் அவர் தேர்ந்தெடுத்து அருகில் வைத்துக் கொள்ளும் கூட்டாளிகளைப் பொறுத்தது என்பது நீதீஸ் விஷயத்தில் நூறு சதவிகித உண்மையாகிறது! வெளியில் இருக்கும் பகைவனைவிட உள்ளுக்குள் இருக்கும் துரோகி ஆபத்தானவன் என்பதை அவரது படிப்படியான வீழ்ச்சியால் நாம் அறியலாம்!
அடல்பிகாரி வாஜ்பாய் ஆட்சியிலே ரயில்வே அமைச்சர், விவசாய அமைச்சர் ஆகிய பொறுப்புகளைத் திறம்பட நிர்வகித்து மதிக்கப்பட்ட நிதீஸ்குமார் 2005 ல் தான் பீகாரின் முதல்வராகிறார். அடுத்த ஐந்தே ஆண்டுகளில் பீகாரை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்று மக்களின் நம்பிக்கையை மேலும் வென்றெடுக்கிறார்! ஆனால், 2010ல் பாஜகவுடன் அவர் வைத்த கூட்டு அவரது செல்வாக்கை சரிய வைக்கிறது. மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்த போது, அதை இந்திய அளவில் கடுமையாக எதிர்த்தவர் நிதீஸ்! ஆகவே, அவர் பாஜகவிடமிருந்து விலகி, லாலுகட்சியுடன் (ராஸ்டிரிய ஜனதா தள்) 2015 ல் கூட்டணி கண்டார். ஆனால், லாலுவின் மகன் தேஜஸ்வியாதவ் மீதான ஊழல் குற்றச்சாட்டு விஸ்வரூபம் எடுத்ததால் அந்த கட்சியுடனான தன் உறவை விடுவித்துக் கொண்டு, மீண்டும் பாஜகவுடன் இணைந்தார்! இந்த இணைப்பால் அவரது கட்சியே இரண்டானது! தன் அருமை நண்பரும் கட்சியில் தனக்கு அடுத்த நிலையில் இருந்தவருமான சரத்யாதவை அவர் இழக்க வேண்டியதாகிவிட்டதோடு அல்லாமல், அவரை அனுக்கூல சத்ரு போல ஒட்டிக் கொண்ட பாஜவின் நரித் தந்திரத்தால் இன்று வாக்குவங்கி பலத்தில் பீகாரில் மூன்றாவது ஸ்தானத்திற்கு சென்றுவிட்டது ஐக்கிய ஜனதா தளம்!
பீகாரில் பாஜகவிற்கு 1995ல் வெறும் 13% தான் வாக்கு வங்கி இருந்தது. அது 2010 16.5% மாகவும், 2015 ல் 24% மாகவும் வளர்ந்துவிட்டது.ஆனால், அவர்களுடன் கூட்டணி கண்ட நிதீஸின் ஐக்கிய ஜனதாதளமோ 1995ல் 28% வாக்குவங்கியாக இருந்து, 2015ல் 16.8% மாகிவிட்டது. இதனால், இந்த தேர்தலில் பாஜகவிற்கு 121 இடங்களை தாரை வார்த்துவிட்டு, நிதீஸ் கட்சி வெறும் 117 இடங்களில் போட்டியிடுகிறது! இதைவிடக் கொடுமை இந்தக் கூட்டணியில் இருந்த ராம்விலாஸ் பாஸ்வானின் கட்சி தற்போது வெளியேறி, ஐக்கிய ஜனதா தளம் போட்டியிடும் இடங்களில் எல்லாம் எதிர்வேட்பாளரை நிற்கவைத்து ஓட்டை பிரிக்குமாம்! ஆனால்,பாஜக போட்டியிடும் இடங்களில் வேட்பாளரை நிறுத்தாதாம்! இதுவும் பாஜகவின் தந்திரங்களில் ஒன்று தான்! அதாவது நிதீஸ் கட்சியை குறைந்த தொகுதியில் போட்டியிட வைத்ததோடு, அந்த குறைந்த தொகுதிகளில் கூட கூடுமானவரை வெற்றிபெறாமல் பார்த்துக் கொள்கிறது! நியாயப்படி எல்.ஜெ.பி மற்ற தலித் கட்சிகளான ராஷ்டிரிய லோக் சம்தா,பகுஜன் சமாஜ் ஆகியவற்றுடன் இணைந்து தேர்தல் களம் கண்டிருந்தால் கூட அதை இயல்பான கூட்டணியாக பார்க்கலாம்! ஆனால், நிதீசை அழித்து பாஜகவை ஆட்சி பீடத்தில் ஏற்றுவதற்கு தன்னை முழுக்கவே ஒப்புக் கொடுத்துவிட்டது ராம்விலாஸ் பஸ்வான் மகன் சிராஜ் பாஸ்வானின் எல்.ஜே.பி கட்சி!
மற்றொரு பக்கம் பாஜகவை எதிர்ப்பதிலும், முஸ்லீம்களை அரவணைப்பதிலும் பெயர் பெற்ற லாலுவின் ராஷ்டிரிய ஜனதாதளத்தின் தற்போதைய இளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் காங்கிரசுடன் களம் காண்கிறார்! இவருடைய அரசியலை பார்க்கும் போது லாலுவின் பழைய ஆட்சியை இவர் அப்படியே மீட்டெடுப்பார் என்று தான் மதிப்பிடமுடிகிறது. இவரது கட்சியின் முன்னாள் தலித் தலைவர் ஒருவரை சமீபத்தில் ஆள் வைத்து கொலை செய்ததாக இறந்தவரின் மனைவியால் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். முன்னதாக தனக்கு தேஜஸ்வி கொலைமிரட்டல் விட்டதாக அந்த தலித் தலைவரே கூறியிருந்தார்! இதையெல்லாம் கடந்து பாஜகவின் மீதான அதிருப்தி பீகார் தேர்தலில் தேஜஸ்வியை கரை சேர்த்துவிட வாய்ப்புள்ளதாகத் தான் அரசியல் பார்வையாளர்கள் சொல்கிறார்கள்!
Also read
எப்படிப் பார்த்தாலும் இந்த தேர்தலுடன் நிதீஸின் அரசியல் வாழ்க்கை ஒரு அஸ்த்தமனத்திற்கு வரலாம்! அதற்காகத் தான், கூட இருந்தே பாஜக ’ஸ்கெட்ச்’ போட்டுவிட்டது. எதிர்காலத்தில் லாலுகட்சியுடன் ’லடாய்’ அரசியல் நடத்திக் கொண்டு போவது தான் தனக்கு செளகரியமானது என்பது பாஜகவின் கணிப்பு! ராஸ்டிரிய ஜனதாதளக் கூட்டணியில் காங்கிரஸ் 70 தொகுதிகளில் போட்டியிடுகிறது! கம்யூனிஸ்டுகளோ 29 இடங்களில் போட்டியிடுகிறார்கள்! ஒரு வகையில் கூட்டணி கட்சிகளுக்கு மிகச் சிறப்பாக தொகுதி பங்கீடு தந்துள்ளது ஆர்.ஜே.டி!
யாருக்கு வெற்றிவாய்ப்பு என்பது தற்போதைய நிலையில் உறுதியாக கணிக்க முடியவில்லை! ஆனால், எந்த மாநிலக் கட்சியுடன் பாஜக கூட்டணி காண்கிறதோ, அந்தக் கட்சியை கூட இருந்தே அழித்து வளரும் தனிக்கலையில் பாஜகவுக்கு நிகராக வேறு எதுவுமில்லை! மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு அது தான் நடந்தது. தற்போது தமிழகத்தில் அதிமுகவிற்கு அது தான் நடக்கவுள்ளது..
மிக நேர்த்தியான கட்டுரை…தொடர்ந்து அறம் படிக்கும் ஆவலை ஏற்படுத்தி இருக்கிறது…தொடர்ந்து வாசிக்கிறேன்…