உளவிலும்,களவிலும் ஒப்பற்று திகழும் பாஜக அரசு!

-ஆர்.எம்.பாபு

தனிமனித உரிமைகளை பாதுகாத்து, சுதந்திரமாக வாழும் உரிமையை உத்திரவாதப்படுத்துவது தான் ஒரு அரசின் தார்மீக கடமையாகும்! ஆனால், பாஜக அரசோ, தனி நபர் சார்ந்த தகவல்கள் மீது  அத்துமீறி சட்ட விரோதமாக கைவைக்கும் பாசிசத்தை எப்படி நடைமுறையில் கொண்டுள்ளது என்பதை விவாதிக்கிறது இந்தக் கட்டுரை;

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் கொடுத்திருக்கும் தனிமனித உரிமைகளை அவர்களது ரகசியங்களை ஆட்சியாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பறித்துக் கொண்டு வரும் நிலை மிகவும் ஆபத்தான ஒன்றாக முடியக்கூடும்!  இப்போது நடைமுறையில் ஒருவரை பொருளாதார ரீதியாக முடக்கிவிட அந்த நபரின் கைபேசி, கணினி இவற்றை பறிமுதல் செய்தாலே போதுமானது.  ஆனால், இப்படி ஒருவரை முடக்குவது என்பது சட்டவிரோதம் என்பதை உணராமலே பல்வேறு விசாரணை அமைப்புக்கள் இதை செய்து வருகின்றன!.

அத்தியாவசியமாக்கப்பட்ட ஆதார் கார்டு

ஆதார்  கார்டு என்ற திட்டத்தை குறிப்பாக தனி நபர் விஷயங்களை அதாவது கை ரேகைகள், கண் குறியீடுகள் ஆகியவற்றை வைத்து தயாரிக்கப்படும் ஆதார் அடையாள அட்டைகளை சென்ற மன்மோகன் சிங் ஆட்சியின் போது கொண்டு வந்தார்கள்.  அதை இடதுசாரிகள் கட்சிகள் எதிர்த்தன!  அப்போது பாரதிய ஜனதா கட்சியும் எதிர்த்தது. அதே நேரம் பாஜக ஆட்சிக்கு வந்ததும் அதி தீவிரமாக இந்த ஆதார்  திட்டத்தை அமல்படுத்தியது!    அப்போதும், இப்போதும் தனிமனிதன் பற்றிய ரகசிய தகவல்கள் அனைத்தும் வெளியே செல்ல கூடும் என்று தொடர்ந்து ஒரே நிலைப்பாட்டில் எதிர்த்து வருவது கம்யூனிஸ்ட் கட்சிகள்  மட்டுமே.

ஆதார் விபரங்கள் கசிவு!

கொரோனா காலத்தில் ஆதார் விபரங்கள் அனைத்தும் தனியார்களிடம் சென்று கொண்டுள்ளன.. போன்ற அதிர்ச்சியூட்டும் தகவல்கள் ஒருபக்கம் வந்தன.  இவை கார்ப்பரேட் நிறுவனங்களின் வியாபார விருத்தி சார்ந்த திட்டமிடல்களுக்கு பயன்படுத்தும் நோக்கில் நடந்துள்ளன என்பது தான் வேதனையானது! ஒவ்வொரு தனி நபருக்கும் தன்னைப் பற்றிய தகவல்களை பாதுகாக்கவும், ரகசியம் காக்கவும் உரிமை உண்டு.  அது வெளியே கசிகிறது என்றால், தனிமனித சுதந்திரம் பாதிக்கப்படுகிறது.

பெகாசஸ் உளவு செயலி

இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனம் தயாரித்த பெகாசஸ் ஸ்பைவேர் என்ற உளவு மென்பொருளை பாஜக அரசு ஊடகவியலாளர்கள், சமூகஆர்வலர்கள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், நீதித் துறையினர்,அரசு அதிகாரிகள் மற்றும் வர்த்தகப் பெரும்புள்ளிகள்  உட்பட 300 பேரை உளவு பார்க்க கள்ளத்தனமாக  பயன்படுத்திய அதிர்வுகள் இன்னும் அடங்கவில்லை!

பெகாசஸ் மூலம் ஓட்டுக் கேட்பு மற்றும் உளவு பார்த்தல், மற்றவர்களின் கைபேசி, கணினி இவற்றுள் ஊடுருவுதல் என்பது அரசே செய்யும்போது அது இந்திய ஜனநாயகத்திற்கும் அடிப்படை உரிமைக்கும் மிகப்பெரிய ஆபத்தாக மாறிவிடும்.

தனி நபரின் தனிப்பட்ட விபரங்கள்

ஒவ்வொருவரும் தங்கள் தனிப்பட்ட தகவல்களான  ATM PIN, வங்கி PIN, தனது மின்னஞ்சல் ரகசிய குறியீடு  போன்றவற்றை ரகசியமாக பாதுகாப்பது அவசியம் மட்டுமல்ல, அடிப்படை உரிமையுமாகும்!  தங்கள் தொலை பேசி, கணினி இவற்றில் சேமித்து வைப்பது என்பது அவரவர்கள் உரிமை.  இது போக அறிவியல் ஆராய்ச்சியாளர்கள், பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் அவர்களது படைப்புகளை ஆய்வுகளை, அறிவியியல் கண்டுபிடிப்புகளை சேமித்து வைக்க அவர்களுக்கு இருக்கும் முழு உரிமைகளை மறுக்கக் கூடாது.

மின்னணு சாதனங்கள் பறிமுதல்

இந்த பாஜக அரசு, ஏதாவது, ஒரு குற்றச்சாட்டை  வலிந்து கூறி, ஆட்சியை விமர்சிப்போரின் மின்னணு பொருட்களை பறிமுதல் செய்வது தொடர்கதையாக உள்ளது! மதுரையில் பீப்பிள் வாட்ச் ஹென்றிடிபேனிடமும் இது நடந்தது! இது நம் ஒவ்வொருவரின் ரகசியங்கள் வெளியே கசிவதற்கு வாய்ப்பாக அமைகிறது.  அதோடு பொருளாதார ரீதியாக தன்னை எதிர்ப்போர்களின் G-PAY, வங்கி செயலிகள் ஆகியவற்றை முடக்குகிறார்கள்!

பீமா கோரேகான் வழக்கு;

இந்த வழக்கில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மனித உரிமை ஆர்வலர்களான ஆனந்த் டெல்டும்பே, சூசன் ஆப்பிரகாம், பாதர் ஸ்டேன்சாமி, சுரேந்திர காட்லிங், சுதிர் தவாலே, ரோனா வில்சன், பேராசிரியர் ஷோமா சென், மகேஷ் ராவத், கவிஞர் வரவர ராவ், எழுத்தாளர் வெர்னான் கோன்சால்வ்ஸ், எழுத்தாளர் அருண் ஃபெரீரா மற்றும் கல்விச் செயற்பாட்டாளர் சுதா பரத்வாஜ் ஆகியோருக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் மறக்கக் கூடியதல்ல!

தமிழ்நாட்டில் பிறந்த ஸடேன் சாமி என்ற  83 வயதான பாதிரியார் பர்கின்சான் நோயால் பாதிக்கப்பட்ட நிலையிலும் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆதிவாசிகள் வளர்ச்சிக்காகவும், உரிமைக்காகவும் பணியாற்றியவர். ஆதிவாசிகளின் நிலத்தை கார்ப்பரேட்டுகள் ஆக்கிரமிப்பதை தடுத்தர்க்காக இவரை கைது செய்தனர். காரணம்! வழக்கில் இவரது கணினியில் இவருக்கு எல்கர் பரிஷத் மாவோயிஸ்ட் இயக்கத்தினருடன் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்கள் இருந்ததாக கூறி,அவரை UAPA, NIA ஆகிய கொடும் சட்டங்களின் கீழ் சிறையில் அடைத்து,  சித்தரவதை செய்ததில் சிறைக்குள்ளே இறந்து போனார்!

இந்த பாதிரியாருடைய வழக்கறிஞர்கள் அவரது கணினியை FORENSIC LAB மூலம் ஆய்வுசெய்து அறிக்கை கேட்டதற்கேற்ப  நீதிமன்ற ஆணையின்படி அவரது கணினியை ஆய்வு செய்து அமெரிக்காவில் இருக்கும் ARSENAL LAB  அளித்த அறுக்கையில் ஸ்டேன்சாமி கணினியில் இப்படியான தரவுகள் திட்டமிட்டு திணிக்கப்பட்டு இருப்பதது அம்பலமானது.

பாஜக ஊழல்களை எழுதுவோர் மீது நடவடிக்கை

பாஜக அரசின் முறைகேடுகளை விமர்சிக்கும் பத்திரிகைகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் மீதும் தொடர் தாக்குதலில் ஈடுபடுவதோடு அவர்களின் கணினி, கைபேசி போன்ற மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்து இருக்கிறது.  சமீபத்தில் நியூஸ் கிளிக் செய்தி நிறுவன பத்திரிக்கையாளர்கள் 90 க்கும் மேற்பட்டோரின் டிஜிட்டல் சாதனங்களை பறிமுதல் செய்து வைத்து இருப்பதோடு கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் அவர்களை சிறையில் அடைத்து இருக்கிறது.

ஆப்பிள் நிறுவன எச்சரிக்கை

சமீபத்தில் கூட ஆப்பிள் நிறுவனம் எதிர்க்கட்சி தலைவர்கள் பலருக்கும் எச்சரிக்கை செய்தியை அனுப்பியது மிகவும் கவனிக்கத்தக்க ஒன்று. அந்த எச்சரிக்கைக்கு இந்திய கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பொது செயலாளர் தோழர் சீதாராம் எச்சூரி அவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.

அதில் “உங்கள் ஆப்பிள் ஐடியுடன் தொடர்புடைய ஐபோனை தொலை தூரத்தில் இருந்து இயக்க அரசாங்கத்தின் மூலம் முயற்சி எடுக்கப்பட்டு தாக்குபவர்களால் நீங்கள் குறிவைக்கப்படுகிறீர்கள் என்று ஆப்பிள் நம்புகிறது” என்று வெளிப்படையாகக் கூறுகிறது’’ என ஆப்பிள் நிறுவனம் எச்சரித்துள்ளதை சுட்டிக்காட்டி, ‘’இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் உத்திரவாதம் செய்து இருக்கும் குடிமக்கள் அனைவருக்கும் இருக்கும் அடிப்படை உரிமைகளை முற்றிலும் மீறுவதாகும். ரகசியமாக குடிமக்களை கண்காணிப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது.” என எழுதியுள்ளார்.

சர்வதேச சட்டங்களின் நிலைப்பாடு

கணினி யுகத்தில், இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மின்னணு சாதனங்கள் தேடுதல்கள் கடுமையான நிபந்தனைகளுக்கு உட்பட்டவை. மின்னணு சாதனங்களைக் கையாள்வதற்கான கூடுதல் நெறிமுறைகள் உள்ளன.

பல்வேறு மேலை நாடுகளில் இப்படியான டிஜிட்டல் சாதனங்களை பறிமுதல் செய்வதற்கும், ஆய்வுக்கு உட்படுத்துவதற்கும், அதற்குள்ளே நுழைவதற்கு என்று பல்வேறு கட்டுப்பாட்டு வழிமுறைகளை உருவாக்கி இருக்கின்றன! குறிப்பாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இப்படி டிஜிட்டல் சாதனங்களை பறிமுதல் செய்வதற்கு முறையாக நீதிமன்றத்தில் இருந்து அனுமதி வாரண்ட் வாங்கிய பின்னர் தான் செய்ய முடியும்  இப்படியான சட்டங்கள் இந்தியாவிற்கும் தேவை என்ற அடிப்படையில் சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

பரிந்துரைகள்; 

#  ஒரு மின்னணு சாதனத்திலிருந்து சரியாக என்ன தேடப்படுகிறது? காரணம் என்ன? என்பதை எழுத்துப்பூர்வமாக தர வேண்டும். இந்த விவரம் நீதித்துறை வாரண்டில் பிரதிபலிக்க வேண்டும். இந்த எழுத்துப்பூர்வ அறிக்கை சாதனத்தின் உரிமையாளரிடமோ அல்லது யாரிடமிருந்து எடுக்கப்படுகிறதோ அந்த நபரிடமோ வழங்கப்படவேண்டும்.. காவல்துறை இந்த மின்னணு சாதனங்களைத் ஒப்படைக்க கூறி, யாரையும் அழைக்க கூடாது. நீதிமன்றத்தின் ஆணை இல்லாமல் யாருடைய மின்னணு சாதனங்களையும் விசாரணைக்கு உட்படுத்தக் கூடாது.

#  கைப்பற்றப்பட்ட சாதனம் அதன் உரிமையாளர் முன்னிலையில் தான் சோதனையை மேற்கொள்ளப்பட வேண்டும். தனிப்பட்ட மற்றும் தொழில்முறை தகவல்கள் போன்ற விசாரணைக்கு சம்பந்தமில்லாத எந்த தகவல்களையும் எடுக்கக் கூடாது.. விசாரணைக்கு நேரடியாகத் தொடர்புடைய தகவல்கள் இருந்தால்  அதன்  நகல்கள் உரிமையாளருக்கு தர வேண்டும்.

# புலனாய்வாளர்களால் மின்னணு சாதனம் பறிமுதல் செய்யப்படவேண்டிய சந்தர்பத்தில், விசாரணைக்குப் பொருத்தமற்ற அனைத்துத் தகவல்களையும் அகற்றிய பின்னரே எடுத்து செல்ல வேண்டும்.. திரும்ப ஒப்படைக்கப்படும் தேதி மற்றும் இடம் மெமோவில் குறிப்பிடப்படவேண்டும்.  இது தேடலின் போதே செய்யப்பட வேண்டும். கைப்பற்றப்பட்ட 30 நாட்களுக்குள் சாதனம் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும்.

# எந்தவொரு சட்டமும் வெளிப்படையாக அனுமதிக்காத வரையில் கடவுச் சொற்களை கட்டாயமாக வெளிப்படுத்துவது தடை செய்யவேண்டும்,.

# வழிகாட்டுதல்களை மீறும் வகையில் கைப்பற்றப்பட்ட எந்தப் பொருளையும் நீதிமன்றத்திலோ அல்லது வேறு எந்த வகையிலோ பயன்படுத்தக் கூடாது.

இன்னும் ஒன்றிய அரசு இது பற்றி எதுவும் பதில் சொல்லவில்லை.  இந்த தனிமனித உரிமை என்பது அரசியல் அமைப்பு சட்டம் ஒவ்வொருவருக்கும் கொடுத்த ஒன்று. ஆளுமைமிக்க தனி நபர்களின் ரகசியத் தகவல்களை  திருடும் நோக்கத்தில் தான் இப்படியான அதிரடி சோதனைகளை மேற்கொள்ளப்படுகின்றன!  இது மிகவும் ஆபத்தானது.

கட்டுரையாளர்; ஆர்.எம்.பாபு

இடதுசாரி செயற்பாட்டாளர்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time