இஸ்ரேலின் கொடூர துப்பாக்கி குண்டுகள் பாலஸ்தீனத்தின் குழந்தைகளை, பெண்களை பல்லாயிரக் கணக்கில் கொன்று குவித்த வண்ணம் உள்ளது! மருத்துவமனைகள் கல்லறைகளாகி வருகின்றன! உலகின் மனசாட்சி உறங்கிவிட்டதா..? என உருக்கமாகவும், உரக்கவும் அருந்ததிராய் கேட்கும் கேள்விகள் முக்கியத்துவம் வாய்ந்தன!
ஜெர்மனியிலுள்ள முனிச் நகரில் நடைபெற்றுவரும் இலக்கிய விழாவில் நவம்பர் 16 அன்று புகழ்பெற்ற எழுத்தாளர் அருந்ததிராய் ஆற்றிய ஆங்கில உரையின் தமிழ் வடிவம்.
காசாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று யூதர்களும், இஸ்லாமியர்களும், கிறித்தவர்களும், இந்துக்களும், கம்யூனிஸ்டுகளும், கடவுள் மறுப்பாளர்களும், கடவுளை உணரமுடியாது என்கிறவர்களும் பல்லாயிரக்கணக்கில் குரல்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். என்னைப் போன்றவர்களுடைய குரலை அவர்களின் குரல்களோடு சேர்ப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஜெர்மனி உள்ளிட்ட எந்த ஒரு பொதுத் தளத்திலிருந்தும் எனது பார்வையை வெளிப்படுத்த முடியாது. அதை நான் அறிந்தே இருக்கிறேன்.
வெட்கக் கேடான இப் படுகொலைகளை நாம் தொடர்ந்து அனுமதித்தால், நாமும் அவற்றிக்கு உடந்தையாக இருக்கிறோம். நமது அகம் சார்ந்த அறத்தில் ஏதோ ஒன்று மாற்றப்பட்டுவிடும் என்றென்றைக்கும். மருத்துவமனைகள் மீது குண்டுமழை பொழிவதையும், இலட்சக் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து ஓடி ஒளிவதையும், இடிபாடுகளில் சிக்கி இருந்த குழந்தைகள் சடலங்களாக மீட்கப்படுவதையும், மௌன சாட்சிகளாக நாம் இனியும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கப் போகிறோமா? மனித இனம், மனிதாபிமானமற்ற முறையில் அழித் தொழிக்கப்படுவது நமக்குத் பொருட்டில்லை என்கிற மனநிலையோடு நாம் தொடர்ந்து இப் படுகொலைகளைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறோமா?
மேற்குக் கரையையும், காசாவையும் ஆக்கிரமித்திருக்கும் இஸ்ரேலின் இப்போர், மனித குலத்திற்கு எதிரான மாபெரும் குற்றமாகும். இதனை ஆதரிக்கும் அமெரிக்காவும் பிற நாடுகளும் இக்கொடிய ஆக்கிரமிப்பிற்குத் துணை நிற்பதாகவே எண்ண வேண்டியுள்ளது. இதயமின்றி மனிதர்களைப் படுகொலை செய்த ஹமாஸும் சரி, இஸ்ரேலும் சரி, இந்த முற்றுகைக்கும் ஆக்கிரமிப்பிற்கும், பயங்கரத்திற்கும் பொறுப்பேற்க வேண்டும்.
இருதரப்பிலும் நடைபெறும் அத்துமீறல்களைக் குறை சொல்வதாலும், இக்கொடூரங்களை விமர்சிப்பதாலும், இப்படுகொலைகளை நியாயப்படுத்துவதாலும் தீர்வு ஏதும் கிடைத்துவிடாது.
ஆக்கிரமிப்பே அரக்கத்தனத்தை ஊக்குவிக்கிறது. அதுவே, குற்றவாளிகளையும், பலியாகிறவர்களையும் வன்முறைக்கு இட்டுச் செல்கிறது. பலியாகிறவர்கள் உண்மையிலேயே இறந்து போகிறார்கள். ஆனால், குற்றவாளிகள் உயிர்த்திருக்கும் நாள்வரை, தாங்கள் செய்தவற்றோடே வாழ்கிறார்கள். அவர்களுடைய குழந்தைகளும் அவ்வாறே, பல தலைமுறைகளாகஉருவாகி வருகின்றனர்!.
போர் ஒரு போதும் தீர்வாகாது. இஸ்ரேலியர்களும், பாலஸ்தீனர்களும் மதிப்புடன், சம உரிமையுடன், அருகருகே வாழ, அரசியல் தீர்வு ஒன்றே வழி. உலகம் உடனடியாக இதில் தலையிடவேண்டும். ஆக்கிரமிப்பு முடிவுக்கு வரவேண்டும். பாலஸ்தீனியர்களுடைய தாயகம் சாத்தியமாக வேண்டும்.
இது நிகழாவிட்டால், மேற்குலகின் தாராளமயத்தின் அறம் சார்ந்த கட்டமைப்பு, மடிந்து போகும். அது எப்போதும் போலித்தனமானது என்பதை நாம் அறிந்தே இருக்கிறோம். ஆனால், அதன் மூலம் கூட ஒரு பாதுகாப்பு உருவாயிற்று. ஆனால், அது நம் கண்முன்னே மறைந்து கொண்டிருக்கிறது.
Also read
பாலஸ்தீனத்திற்காகவும், இஸ்ரேலுக்காகவும், உயிருடன் இருப்பவர்களுக்காகவும், இறந்தவர்களுக்காகவும், ஹமாஸால் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பிணைக் கைதிகளுக்காகவும், இஸ்ரேலின் சிறையில் வாடும் பாலஸ்தீனியர்களுக்காகவும், ஒட்டு மொத்த மனித குலத்திற்காகவும், உடனே, இப்போதே, இப்போரை நிறுத்துங்கள்.
தமிழ் மொழிபெயர்ப்பு: முனைவர் தயாநிதி
நன்றி: தி ஸ்க்ரோல். இன்
Leave a Reply