இந்தோனேசியக் கலாச்சார, சமூக, அரசியல் பின்னணியோடு கூடிய ஒரு காதல் கதையே ‘சிகரெட் கேர்ள்’. வித்தியாசமான கதை. புதிரான மனிதர்கள்! நமக்குத் தெரியாத உலகத்தை சிறப்பாக வடிவமைத்திருக்கிறார்கள்! அதுவும், அசாத்திய ஆளுமை நிறைந்த, கூர்மையான அறிவுள்ள பெண் கதாபாத்திரம் அசத்துகிறது!
Gadis Kretek என்ற பெயரில் வெளி வந்த புகழ்பெற்ற நாவலை வைத்து எடுக்கப்பட்ட, இந்த ஐந்து மணி நேரத் தொடரை ரசித்துப் பார்க்கலாம்.
கதை இந்தோனேசியாவின் தலைநகரான ஜாகர்தாவில் தொடங்குகிறது. மரணப்படுக்கையில் இருக்கும் தொழிலதிபர், ‘ஜாங் யா’ என்ற பெயரை முணுமுணுக்குகிறார். அதைக் கேட்ட அவருடைய கடைசி மகனான லேபாஸ் மறுநாள் தனது தந்தையிடம் அதுகுறித்து கேட்கிறான். அறுபதுகளில் எழுதப்பட்ட ஒரு காகிதத்தையும் அக்காலத்திய சிகரெட் டப்பியையும், ஒரு கூட்டுக் குடும்ப புகைப்படத்தையும் அவனிடம் கொடுத்து ஜாங் யா- வை கண்டுபிடிக்கச் சொல்கிறார் அந்தத் தொழிலதிபர். அவள் யார், எங்கிருக்கிறாள் என்பது தெரியாது. அவளைப் பற்றிய விரிவாக தன் மகனிடம் சொல்லவும் அவர் விரும்பவில்லை.
அந்தக் கடிதத்தின் வழியாக கதை பின்னோக்கி நகர்கிறது. இந்தோனேசிய நகரம் ஒன்றில் குடிசைத் தொழிலாக இத்ரிஸ் சிகரெட்டை உற்பத்தி செய்கிறார். அதற்கு உதவியாக அவருடைய மூத்த மகள் தாசியா இருக்கிறாள். தன் தந்தையோடு புகையிலை சந்தைக்குச் செல்கிறாள். தரமான புகையிலையை தரும்படி வியாபாரியிடம் வலியுறுத்துகிறாள். பேரம் பேசுகிறாள். தாசியா சிகரெட்டை கையால் சுற்றுவதில், அதற்கான நிறமி, வாசனைத் திரவியங்களைக் கொண்டு சூத்திரத்தை உருவாக்கி சிகரெட் தயாரிக்கும் அளவுக்கு திறமை வாய்ந்தவள். இத்தகைய சிகரெட்டிற்கான சேர்க்கை உருவாக்கும் ரகசிய அறைகளில் பெண்கள் ஈடுபடுவதை அந்நாட்டுக் கலாச்சாரம் அனுமதிப்பதில்லை.(எல்லா நாடுகளிலும் பெண்களின் நிலை இதுதானோ ? )
ஆனால், சுயேச்சையான தாசியா, தன் தந்தைக்கு ஆலோசனை சொல்கிறாள். உற்பத்தி பிரிவிற்கு பொறுப்பாளியாக இருக்கிறாள். தனது அனுபவங்களை காகிதங்களில் எழுதுகிறாள். இந்தப் பாத்திரத்தில் டியான் சார்டிரோவார்தோயா (Dian Sartrowardoya) என்பவர் சிறப்பாக நடித்துள்ளார். உணர்ச்சிகளை வெளிக்காட்டாத, அதே சமயம் அழுத்தமான பாத்திரம். இந்தோனேசியாவில் சிகரெட் தொழில் முக்கியமான ஒன்று. உற்பத்தி, கொள்முதல், தயாரிப்பு, வியாபார போட்டி என அனைத்தும் இதில் வருகின்றன. தாசியா, அவள் தங்கை ருகையா, அவளது பெற்றோர் உள்ள ஒரு குடும்பம் வருகிறது. அவருடைய தந்தைக்கு போட்டியாக இருக்கும் சிகரெட் வியாபாரியும் வருகிறார்கள்.
கடிதத்தின் வழியாக தாசியா கதையின் ஒரு பகுதி தெரிகிறது. அதோடு தன் தந்தைக்கு என்ன தொடர்பு என இவனுக்குத் தெரியவில்லை. தந்தையின் இறுதி விருப்பம் என்பதால், இளகிய மனம் கொண்ட லேபாஸ் அக்கறை எடுத்து தேடுகிறான். சிகரெட் டப்பியின் வரலாற்றைத் தெரிந்து கொள்ள ஒரு அருங்காட்சியகத்திற்குச் செல்கிறான். இதே போன்ற பழங்கால சிகரெட் டப்பி ஒன்றை அந்த அருங்காட்சியகத்திற்கு தந்த குடும்பத்தைச் சார்ந்த அறம் என்ற பெண்ணைச் சந்திக்க நேர்கிறது. அவள் இதே கையெழுத்தில் மேலும் சில குறிப்புகள் இருப்பதாகச் சொல்கிறாள்; இருவரும் சேர்ந்து வாசிக்கிறார்கள். கதை மேலும் விரிவடைகிறது.
இப்படி கதை அறுபதுகளின் மத்தியப் பகுதி, எழுபதுகளின் மத்தியப் பகுதி, சமகாலம் என முன்னும், பின்னும், இடையிலும் விட்டுவிட்டு பயணிக்கிறது. கதையின் ஆர்வம் ரசிகர்களை விடாது இருத்தி வைக்கிறது. கதாப்பாத்திரங்கள் ஒருவர் ஒருவராக அதன் இயல்பான போக்கில் வந்து விழுகிறார்கள். பாத்திரங்கள் சமகாலத்தில் ஒரு பெயராலும், இளமைக் காலத்தில் வேறு பெயராலும் அழைக்கப்பட்டது தெரிய வர இடைவெளிகளை அவதானித்துக் கொள்கிறார்கள். வெளியூரில் தேடிக் கொண்டிருக்கும் தன் மகனிடம் ‘என்ன கிடைத்ததோ அதை அங்கேயே விட்டு விட்டு வரும்படி’ அவளது தாய் லேபாசிடம் கூறுகிறாள். அப்படியானால் தன் தாய்க்கு ஏதோ தெரியும். ஏன் அவள் மறைக்கிறாள் ? ஒருவேளை தாங்கள் தேடுபவள் அப்பாவின் காதலியோ !
ரதித் கும்லா (Ratit Kumala) என்ற இந்தோனேசிய நாவலாசிரியை எழுதியதன் திரை வடிவம் இது. கதை அடர்த்தியாக இறுதிவரை உள்ளது. இந்த நாவல் ஜெர்மனியிலும், ‘சிகரெட் கேர்ள்’ என்ற பெயரில் ஆங்கிலத்திலும் வந்துள்ளது. 1965 ல் இந்தோனேசியா நாட்டின் கம்யூனிஸ்ட்டுகளை அந்த நாட்டு அரசு படுகொலை செய்கிறது. அதன் ஆதரவாளர்கள் அடக்குமுறைக்கு ஆளாகிறார்கள். இந்த சம்பவம் கதையின் போக்கையே மாற்றுகிறது.(இது நடக்காமல் இருந்திருந்தால், ஒருவேளை இந்தக் கதையே உருவாகாமல் போயிருக்கலாம்)
தாசியாவிற்கும் எங்கிருந்தோ அனாதையாக வந்து சேர்ந்து, தொழில் கற்றுக்கொண்டு தன் அப்பாவிடம் வேலை செய்யும் இராஜாவிற்கும் காதல் மலர்கிறது. அவன் யார் ! பின்னணி என்ன? அது தெரிந்தால் என்ன ஆகும் !
பேசிக் கொண்டிருக்கும்போது லேபாஸ் தன் தாயின் பெயரைச் பெயரை அறத்திடம் கூறுகிறான். ‘அவள் தன் தாயின் பள்ளிக்கூட நணபர், இதுவரை அவள்பெயரை ஏன் சொல்லவில்லை’ என அவள் கடிந்து கொள்ள, அதன் வழியாக கதை மேலும் நகர்கிறது. இதில் வரும் பாத்திரங்கள் அனாயசமாக சிகரெட்டை ஊதிக்கொண்டே இருக்கிறார்கள். அறம் ஒரு மருத்துவர்- சிகரெட் பிடித்தால் புற்றுநோய் வரும் என்கிறாள். இவள் ஒரு விதத்தில் அந்த சிகரெட் குடும்பத்தோடு தொடர்புள்ளவள். லேபாசுக்கும், அறத்திற்கும் அவர்கள் சேர்ந்து இருக்கும் சில தினங்களில் புரிதல் ஏற்படுகிறது. நன்றாக நடித்துள்ளனர். அறம் யாருடைய மகள். இராணுவ அதிகாரியான அவளது தந்தைக்கும் தாசியாவிற்கும் என்ன உறவு. அவளுடைய தாய் ஏன் தாசியாவைப் பற்றி பேசும் போது கோபம் அடைகிறாள் !
Also read
தன் குடும்பத்தில் தயாரிக்கும் சிகரெட்டும், அறம் சுட்டிக் காட்டும் கிராமத்தில் உற்பத்தியாகும் சிகரெட்டும் ஒரே மாதிரியாக உள்ளது; எனவே, இவை ஒரே சூத்திரத்தில் உருவானது எனத் தெரிய வருகிறது. இயல்பாகவே முதலாளிகளான லேபாசின் சகோதரர்கள், தமது ‘வியாபார புத்தியின்’ காரணமாக அதன் காப்புரிமை பற்றி பேசுகிறார்கள். லேபாஸ் தன் கண்டறிந்தை தன் தந்தையிடம் சொல்ல, மீதியை அவர் சொல்லி முடிக்கிறார்.
வித்தியாசமான கதை. நமக்குத் தெரியாத உலகத்தை சிறப்பாக வடிவமைத்திருக்கிறார்கள் இயக்குநர்களான காமிலா அதங்கைி-யும் ( Kamila Andini ), இப் இஸ்பான்சியா (Ifa Isfansyah)- வும். நெட்பிளிக்ஸ் ஆசியாவில் தனது தளத்தை விரிவுபடுத்த எண்ணியுள்ளது. இம் மாதம் வெளிவந்துள்ள இந்தத் தொடர் அதற்கு நிச்சயம் உதவும்.
விமர்சனம்; பீட்டர் துரைராஜ்.
Leave a Reply