அதிகாரப் பறிப்பு – உள்ளாட்சி தலைவர்கள் கொந்தளிப்பு!

-சாவித்திரி கண்ணன்

”ஆளுநரைக் கொண்டு மத்திய பாஜக அரசு மாநில அரசை வதைப்பது போல, கிராம பஞ்சாயத்து தலைவர்களை கிளர்க்குகளைக் கொண்டும், பிடிஒக்களைக் கொண்டும் செயல்படவிடாமல் திமுக அரசு வதைக்கிறது” என தமிழ் நாட்டு கிராமங்களின் உள்ளாட்சித் தலைவர்கள் பொங்கி எழுந்து போராடத் துவங்கியுள்ளனர்.

மாநில அரசின் அதிகாரங்களைப் பறிக்கிறார், கவர்னர்! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் மற்றும் சட்டமன்ற மக்கள் பிரதிகளால் இயற்றப்பட்ட மசோதாக்களை நிறுத்தி வைக்கிறார்! மொத்தத்தில் மாநில அரசை அதிகாரமற்றதாக ஆக்க, மத்திய அரசு கவர்னரை பயன்படுத்துகிறது! இதற்காக தமிழக சட்டமன்றமே கொந்தளித்துள்ளது! உச்ச நீதிமன்றக் கதவுகளை தட்டியுள்ளது தமிழ்நாடு அரசு!

ஆனால், உள்ளாட்சிகளில் மேற்படி விவகாரங்களையே மாநில திமுக அரசு கையாண்டு ஊராட்சித் தலைவர்களை அதிகாரமற்றவர்களாக்க அரசு அதிகாரிகளை பயன்படுத்துகிறது. இதனால், தமிழ் நாட்டில் உள்ள 12,525 ஊராட்சித் தலைவர்கள் தமிழ்நாட்டு அரசுக்கு எதிராக கொந்தளித்துள்ளனர்.

நாங்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தான் பொறுப்புக்கு வருகிறோம். கிராம மக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதற்கே தங்களோடு வாழும் எங்களை தேர்ந்தெடுத்துள்ளனர்! ஆனால், எங்கிருந்தோ வரும் தொலை தூரத்தில் இருக்கும் அரசு அலுவலர் மற்றும் வட்டார அரசு அலுவலர்களை சகல அதிகாரமிக்கவர்களாக்க திமுக அரசு ஊராட்சிகள் சட்டத்தின் 104 மற்றும் 106 பிரிவுகளை திருத்தி உள்ளது. இதன் மூலம் பஞ்சாயத்து தலைவர்களை செல்லாக்காசாக்கி, அரசு அதிகாரிகளின் தயவில் கிராமங்கள் தொடங்கி அனைத்து உள்ளாட்சிகளையும் கொண்டு செல்கிறது!

”மத்திய அரசால் நியமிக்கப்படும் அதிகாரியான கவர்னரால் பாதிக்கப்பட்டு உரிமைக்காக போராடி வரும் தமிழக அரசுக்கு, தானும் அதே செயலை தனக்கு கீழ் வரும் உள்ளாட்சிகளுக்கு செய்ய எப்படி மனசு வருகிறதோ..”என வருத்தப்படுகிறார்கள் உள்ளாட்சித் தலைவர்கள்!

இந்த பிரச்சனை தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பை சென்னை பிரஸ் கிளப்பில் ஊராட்சித் தலைவர்கள் தன்னாட்சி அமைப்பு முன்னெடுப்பில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து குமுறித் தீர்த்தனர்! இந்த சந்திப்பில்,

திருவரங்குளம் (புதுக்கோட்டை மாவட்டம்) செரியலூர் இனாம் கிராம ஊராட்சித் தலைவர் முகமது ஜியாவுதீன்,

நாகப்பட்டினம்  மாவட்டம், கீழையூர், பிரதாபராமபுரம்  கிராம ஊராட்சித் தலைவர் சிவராசு,

கடலூர் மாவட்டம், மேல் புவனகிரி, சி முட்லூர் கிராம ஊராட்சித் தலைவர் வேதநாயகி,

நாமக்கல் எருமப்பட்டி  முத்துகாபட்டி கிராம ஊராட்சித் தலைவர் அருள் ராஜேஷ் ,

திருச்சி மாவட்டம், கிருஷ்ணசமுத்திரம், திருவெறும்பூர்  கிராம ஊராட்சித் தலைவர் ரம்யா,

ஆகியோருடன் தன்னாட்சி அமைப்பின் தலைவர் ஜாகீர் உசேன் மற்றும் தன்னாட்சியின் முன்னாள் தலைவர் சரவணனும் உடன் இருந்து பேட்டி தந்தனர்.

இவர்கள் கூறியதாவது; கிராம ஊராட்சியில் இருந்து ஊதியம் பெறும் ஒரு அரசு அலுவலரான ஊராட்சி செயலரிடம் அதிகாரம் மொத்ததையும் குத்தகைக்கு கொடுத்துவிட்டு, ஊராட்சித் தலைவர்கள் அவர்களிடம் கைகட்டி நிற்கும் நிலையை தமிழக அரசு புதிதாக உருவாக்கப்பட்ட சட்ட திருத்ததின் மூலமாக கொண்டு வந்திருப்பது மத்திய பாஜக அரசையும் விஞ்சிய ஒரு சர்வாதிகாரச் செயலாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களிடம் தான் தங்கள் பிரச்சினைகளை, கோரிக்கைகளை மக்கள் சொல்வார்கள்! நாங்கள் தான் உள்ளாட்சிகளில் சாலை பராமரிப்பு, தெருவிளக்கு குடி நீர் வசதி, வீட்டு வசதி போன்ற வாழ்வாதாரத் திட்டங்களை செயல்படுத்த வேண்டிய இடத்தில் இருக்கிறோம்.

இதில் எங்களுக்கு ஒத்தாசையாக இருக்க வேண்டியது தான் அரசு அலுவலரான பஞ்சாயத்து கிளர்க்கின் பணியாகும். அவர் சரியாக பணியாற்றாமல் டிமிக்கி கொடுப்பது அல்லது ஏடாகூடமாக ஏதாவது செய்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் ஊராட்சித் தலைவரிடம் இருக்குமாறு தான் உள்ளாட்சிகள் 1994 ல் உருவாக்கப்பட்டன! ஆனால், அதை ஒரளவு நீர்த்து போகச் செய்ய அதிமுக அரசு சற்று முயற்சித்தது என்றால், திமுக அரசோ, மொத்ததில் எங்கள் அதிகாரங்களை பறிக்கவே தனிசட்டத் திருத்தம் நிறைவேற்றி, எங்களை கையாளதாவர்களாக ஆக்கிவிட்டது. இதனால் பஞ்சாயத்து கிளர்க்குகளை இடமாற்றம், இடை நீக்கம் அல்லது அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை என எதையும் ஊரட்சித் தலைவரக்ள் மேற்கொள்ள முடியாது. பி.டி.ஒக்கள் மட்டுமே செய்ய முடியும்! இது உள்ளாட்சிகளுக்கு அதிகாரமளிப்பதே கழக ஆட்சியின் லட்சியம் என்ற திமுகவை தோற்றுவித்த அறிஞர் அண்ணாவின் கனவை சிதைக்கும் செயலாகும்! இந்த விவகாரத்தில்  நமது  மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மோடியை பின்பற்றுகிறாரோ என உள்ளாட்சித் தலைவர்கள் வேதனைப்படுகிறோம்.

எல்லாவற்றையும் அரசு அலுவலர்கள், அதிகாரிகள் தான் தீர்மானிக்க முடியும் என்றால், எதற்கு உள்ளாட்சி தேர்தல்கள்? எதற்கு மக்கள் ஓட்டுப் போட்டு எங்களை தேர்ந்தெடுத்தார்கள்? காந்தி விரும்பிய கிராம சுய ராஜ்ஜியத்தை, அண்ணா நடைமுறைப்படுத்த எண்ணிய உள்ளாட்சிகளுக்கு அதிகாரமளித்தலை, ராஜிவ்காந்தி கண்ட கிராம பஞ்சாயத்து கனவுகளை சிதைத்து பாஜக வழியில் உள்ளாட்சி தலைவர்களை ஒடுக்க துடிப்பது திராவிட மாடல் ஆட்சிக்கு அழகும் இல்லை, நியாயமும் இல்லை.

இந்திய ஜனநாயகத்தின் அதிகார கட்டமைப்பு! நன்றி; இந்து தமிழ் திசை

அடிப்படையில் ஊராட்சித் தலைவர், அரசு அலுவலர் இணைந்து செயல்பட்டால் மட்டுமே ஓர் ஊராட்சி வளர்ச்சிப் பாதையில் நடக்க இயலும். கவர்னர் முதல்வரோடு ஒத்துழைக்க மறுப்பது போல பிடிஓக்கள் செயல்பட்டால் கிராம நிர்வாகம் சீர்குலைந்துவிடும். இந்த சீர்குலைவை நிகழ்த்தி, உள்ளாட்சித் தலைவர்களை அதிகாரமற்றவர்களாக்கி, திமுக அரசு சாதிக்க துடிப்பது தான் நம்ப முடியாத நிகழ்வாகி உள்ளது! இதனால் எளிய பின்புலத்தில் இருந்து வந்துள்ள உள்ளாட்சிகளின் 56 சதவிகிதம் பெண் தலைவர்கள், இளைய தலைமுறையினர் மக்கள் பணியாற்ற முடியாமல் செய்வதறியாது திகைத்து உள்ளனர்!

இது நாள் வரை கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு கட்டுப்பட்டு நடந்த கிளர்க்குகளை தற்போது கிராம நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து முற்றாகத் தூக்கிய தமிழக அரசு, பஞ்சாயத்து தலைவர்களிடம் இருந்த அதிகாரங்களை அவருக்கு தாரை வார்த்து அவருக்கு கீழ் செயலாற்ற எங்களை நிர்பந்திப்பது உள்ளபடியே சற்றும் ஏற்க முடியாத ஜனநாயகத்திற்கு புறம்பான கொடூர அணுகுமுறையாகும். ஊராட்சி அமைச்சராக இருந்துள்ள இன்றைய முதல்வர் ஸ்டாலினே இது போன்ற அநீதிகளை அரங்கேற்றுகிறார் என்பது தான் கொடுமையிலும் கொடுமை!

இதை எதிர்த்து நாங்கள் மாநில தழுவிய அளவில் ஒன்று சேர்ந்து பெரிய போராட்டம் நடத்த உள்ளோம். தமிழகம் தழுவிய முறையில் ஊராட்சி உரிமை மீட்பு பயணம் நடத்த உள்ளோம். கவர்னருக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றது போல, நாங்களும் உயர்நீதி மன்றக் கதவுகளை தட்ட உள்ளோம். அதிகார பரவலாக்கம் என்ற உன்னத லட்சியத்தை விரும்பும் ஜனநாயக சக்திகள் எங்களோடு கைகோர்க்க வேண்டும்” என்றனர்.

சாவித்திரி கண்ணன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time