பறிக்கப்படும் பல்லாயிரம் ஏக்கர் விளை நிலங்கள்!

-சாவித்திரி கண்ணன்

திமுக ஆட்சியில் இரண்டரை ஆண்டுகளில் இரண்டு டஜனுக்கும் மேற்ப்பட்ட இடங்களில் பல்லாயிரம் ஏக்கர்களில் விவசாய நிலப் பறிப்புகள் நடந்துள்ளன! நாளும், பொழுதுமாக விவசாய நிலங்களை பறித்த வண்ணமுள்ள தமிழக அரசின் உண்மையான நோக்கம் என்ன..? விவசாயிகள் மீதான குண்டர் சட்ட வாபஸிலும் ஒரு நாடகமா?

“விவசாயிகள் மீது போட்ட குண்டர் சட்டத்தை வாபஸ் வாங்கிவிட்டோம்” என்கிறார் முதல்வர்! ஆனால், திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் விவசாயிகள் ஜாமின் மனுவையே நிராகரிக்க சொல்லி அரசு வழக்கறிஞர் நீதிபதியிடம் கோர்ட்டில், “குண்டர் சட்டம் விவசாயிகள் மீது ரத்து என எங்களுக்கு எந்த அரசாணையும் வரவில்லை. பத்திரிகை செய்தியைப் பார்த்து நீதிபதியவர்கள் முடிவு எடுக்கக் கூடாது’’ சொல்கிறார் என்றால், என்ன நாடகமய்யா இது!

அப்படியானால் முதலமைச்சர் பெயரில் வேறு யாரேனும் அறிக்கை விட்டார்களா?

‘முதலமைச்சர் பெயரில் பத்திரிக்கையில் வந்த அறிக்கையை நம்ப வேண்டாம்’ என்று ஒரு அரசு வழக்கறிஞர் சொல்லியது முதல்வருக்கு இழுக்கில்லையா?

விவசாயிகளிடம் நயவஞ்சகமாக கையெழுத்து வாங்கிய அமைச்சர் எ.வ.வேலு.

மாவட்ட அமைச்சர் எ.வ.வேலு கைது செய்யப்பட்ட விவசாயிகள் குடும்பங்களை அழைத்து, “நாங்கள் விடுதலை செய்கிறோம். இதில் கையெழுத்து போடுங்கள்” என நைச்சியமாகப் பேசி, அதில் மன்னிப்பு கேட்டது போலவும், ‘விவசாயிகளுக்கு தலைமை தாங்கிய இளைஞர் அருள் ஆறுமுகம் தான் தங்களைத் தூண்டினார்’ என்று நயவஞ்சமாக கையெழுத்து வாங்கியுள்ளார்! இந்த போட்டோவில் உள்ள கைதான தேவராஜனின் அப்பா அறப்போர் இயக்கத்திற்கு தந்த பேட்டியில் கூறியுள்ளார்! இத்தகைய இழிவான ‘போர்ஜரி’ வேலையில் ஒரு அமைச்சர் ஈடுபட முடியும் என்பதை கற்பனை செய்யவே முடிஒயவில்லை. ஆனால், அது தான் யதார்த்தமாக உள்ளது எனும் போது, ‘எப்படிப்பட்டவர்கள் தமிழ்நாட்டிற்கு அமைச்சராக உள்ளனர்’ என்ற உண்மை முகத்தில் அறைந்தார் போல நம்மை உலுக்கி எடுக்கிறது!

குண்டர் சட்டத்தில் கைதாகியுள்ள விவசாயப் போராளி அருள் ஆறுமுகம்.

அருள் ஆறுமுகம் என்பவர் திறமையான மென் பொருள் பொறியாளர்! லட்சக்கணக்கில் சம்பாதித்த வேலையை உதறித் தள்ளிவிட்டு, எட்டு வழிச் சாலை திட்டத்தில் தன்னுடைய பூர்வீக நிலம் கையகப்படுத்தப் படுவதையும், தன்னைச் சுற்றியுள்ள விவசாயிகளின் நிராதரவற்ற நிலைமைக்கு உருகியும் போராட்ட களத்தில் குதித்தவர்! அதைத் தொடர்ந்து அனைத்து விவசாயப் போராட்டங்களிலும் முன் நிற்கிறார்! மேல்மாவில் உள்ள விவசாயிகளின் அழைப்பிற்கு இணங்கியே அவர்களால் வழங்கப்பட்ட ஒரு சிறிய அறையில் தங்கி, விவசாயிகளுக்காக 150 நாட்களாக தலைமை தாங்கி களத்தில் நிற்கிறார்! “அவரது நிலமா பாதிக்கப்படுகிறது? அவருக்கு செய்யாறுவில் என்ன வேலை? அவர் வெளியாள்” என்கிறது தமிழ்நாட்டு அரசு!

நன்றி; அறப்போர் இயக்கம்

தமிழ்நாட்டில் எங்கு விவசாயி பாதிக்கப்பட்டாலும், அதற்கு ஆதரவளிக்கும் உரிமை, அவர்கள் உற்பத்தி செய்யும் உணவை உண்டு வாழும் எல்லா தமிழனுக்கும் உள்ளது! அருள் ஆறுமுகம் அந்நிய நாட்டவரல்லர்! பக்கத்து மாவட்டத்துக்காரன் மனம் சகவிவசாயிகள் பாதிப்பில் பங்கு பெறுவதை குற்றமாக அறிவிப்பது கேலிக் கூத்தானது! ஏன்? விவசாயிகளின் சோற்றை உண்டு வாழும் நகர்புறத்தில் உள்ளவர்களுக்கும் பாதிக்கப்படும் விவசாயிகளை ஆதரிக்கும் கடமை உள்ளதே! ஆகவே, அப்பழுக்கற்ற பொது நலவாதியான இளைஞர் அருள் ஆறுமுகத்தை எந்த நிபந்தனையுமின்றி தமிழகஅரசு விடுதலை செய்ய வேண்டும். அதற்கு முன்னதாக அவர் மீது போட்ட குண்டர் சட்டத்தை வாபஸ் வாங்க வேண்டும்.

படுவேகமாக அரங்கேறி வரும் விவசாய நிலப்பறிப்புகள்;

பதவி ஏற்ற இரண்டரை ஆண்டுகளுக்கு உள்ளாக பரந்தூரில் தொடங்கி பழவேற்காடு, கடலூர், கிருஷ்ணகிரியின் உத்தனப்பள்ளி, நாகமங்களம், அயர்னப்பள்ளி, செய்யாறு மேல்மா, வாசுதேவ நல்லூர், கடைய நல்லூர்  கெலமங்களம்.. என விவசாய நிலப் பறிப்பு என்பது நாளும், பொழுதுமாக அரங்கேறி வருகின்றன. என்ன தான் அரசு நிர்வாகம் நடக்கிறது தமிழ்நாட்டில் எனத் தெரியவில்லை! இது குறித்து ஏற்கனவே அறம் இணைய இதழில் ஒரு விரிவான கட்டுரை எழுதப்பட்டுள்ளது!

யாருக்காக விளை நிலங்கள் தாரை வார்க்கபடுகின்றன!

ஏற்கனவே பல்லாயிரம் ஏக்கரில் கையகபடுத்தப்பட்ட சிப்காட் நிலங்கள் பயன்பாடின்றி கிடக்க மீண்டும் ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, காஞ்சிபுரம், நாகபட்டினம், தேனி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி உட்பட 11 மாவட்டங்களில் 13,500 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட்களை விரிவாக்கம் செய்ய விவசாய நிலப்பறிப்பு நடக்கிறது என்பதை கவனிக்கும் போது வேதனையே மிஞ்சுகிறது!

செழிப்பான விளை நிலத்தை சீரழித்து சிப்காட்டா..?

பசுமை எழில் கொஞ்சும் செய்யாறு மேல்மா பகுதியில் சிப்காட் வேண்டும் என்ற தேவையே எழவில்லை. ஏனென்றால், இப்போது சிப்காட்டிற்காக நிலம் கையகப்படுத்தும் இடத்திற்கு சற்று தூரத்திலேயே ஏற்கெனவே சிப்காட் தொழிற்பேட்டைக்காக 2000 ஏக்கரில் நிலத்தை கையகப்படுத்தி அதில் 750 ஏக்கர் மட்டுமே பயன்படுத்தியுள்ளனர். மீதமுள்ள 1,250 ஏக்கர் அளவிலான நிலம் காலியாக உள்ளது. ஆக, தேவைக்கும் அதிகமாக ஏற்கனவே விவசாயிகளிடம் வலுக்கட்டாயமாக கையகப்படுத்தி பயன்படுத்தப்படவில்லை! அதை இன்று வரை விவசாயிகளுக்கு திருப்பித் தரவும் இல்லை! எனில், மேலும் 3,200 ஏக்கர் நிலத்தை விவசாயிகளிடம் இருந்து பறிப்பானேன்? இதே மாவட்டத்தில் பல நூறு ஏக்கர்கள், ஏன் பல ஆயிரம் ஏக்கர்கள் கூட வாங்கி குவித்து வைத்திருக்கும் மாவட்ட அமைச்சர் அல்லது ஆளும் கட்சி அரசியல்வாதிகள் அரசின் தொழிற்பேட்டைக்கு தங்கள் நிலத்தை வழங்கலாமே!

உக்கிரமடையும் சிப்காட்டுக்கு எதிரான போராட்டம்

பஞ்சைப் பராரிகளாக ஏதோ ஒரிரு ஏக்கர் நிலங்களில் உழவு செய்து அதையே வாழ்வாதாரமாகக் கருதி பல தலைமுறைகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஏழை,எளிய விவசாயிகள் நிலம் என்றால், உங்களுக்கு தொக்காகிவிட்டது! சுலபமாக நிலத்தை எடுப்பீர்கள்! அவர்கள் போராடினால், குண்டர் சட்டத்தில் கைது செய்கிறீர்கள்!

எதற்காக இந்த நிலம் கையகப்படுத்தப்படுகிறது என்ற உண்மையை முதலமைச்சர் வாய் திறந்து பேச வேண்டும். மணீப்பூர் விவகாரத்தில் மோடி நீண்ட நாட்கள் மெளனம் சாதித்ததை ஸ்டாலின் முன்மாதிரியாக பின்பற்றி வருவது அவர் பேசும் திராவிட மாடலுக்கு அழகல்ல!

உண்மையில் இது எட்டு வழித்திட்டத்திற்கு எடுக்கப்படும் ஒரு முன்மாதிரி நடவடிக்கை எனச் சொல்லப்படுவதற்கு முதலமைச்சர் ஆம் என்றோ, இல்லை என்றோவாவது சொல்ல வேண்டும். பேசா மடந்தையாக, அழகு பதுமையாகவே முதலமைச்சர் பதவி காலம் முழுமையும் உங்களால் கடந்துவிட முடியாது! உங்களது இந்த மெளன அணுகுமுறை பெரிய கொந்தளிப்பைத் தான் மேலும்,மேலும் அதிகப்படுத்தும்.

இன்று ( நவம்பர் 21) மேல்மா விவசாயிகளுக்காக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராடி கைதாகி உண்ணாவிரதம் இருக்கும் விவசாய தலைவர்கள்!

மத்திய பாஜக அரசின் கட்டளைக்காகத் தான் இந்த ஆட்சியாளர்கள் மறைமுகமாக பலவற்றை நிறைவேற்றி வருகின்றனர்! அவர்கள் சொல்லித் தான் செய்கிறோம் என்றால், அவர்களை எதிர்ப்பதை போல நடைக்கும் உங்கள் பாசாங்குத் தனம் அம்பலப்பட்டுவிடும் என அஞ்சியே இதை செய்கிறீர்கள்! இதனால், இங்கே உள்ள பாஜகவினருக்கும் உங்களை எதிர்த்து அறிக்கைவிட்டு அரசியல் செய்ய செளகரியமாகிவிட்டது! ஆக, நீங்கள் யாருக்காக இந்த மிகப் பெரிய அநீதிகளை துணிந்து செய்து மக்களின் அதிருப்திகளை அள்ளி வருகிறீர்களோ.. அவர்களே உங்களை ஆதரிக்கவோ, காப்பாற்றவோ முடியாத நிலைமைக்கு உங்கள் பாசாங்குத்தனம் உங்களை தண்டிக்கிறது! அதிமுக தன் ஆதரவை வெளிப்படையாகத் தெரிவித்து நடந்து கொண்டதால், பாஜக அவர்களுக்கு பக்கபலமாக இருந்து பாதுகாப்புத் தந்தது!

ஒருவகையில் தன் அவசரக் குடுக்கை ஆத்திர நடவடிக்கையால் திமுக அரசு தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த விவசாய இயக்கங்களையும் ஒரணியில் சேர்த்து, மேல்மா விவசாயிகளுக்கு பலத்த ஆதரவை திரட்டித் தந்துள்ளது! கடந்த 160 நாட்களாக தமிழக மக்கள் போராடி வருகின்றனர்! தமிழக அரசு அவர்கள் மீது இது வரை அநியாயமாக ஐந்து வழக்குகளை போட்டுள்ளது! கடந்த மாதத்தில் இருந்து 20 விவசாயிகளை கைது செய்து சிறையில் அடைத்திருக்கும் விவகாரம் எல்லாம் இதற்கு பிறகே தெரிய வருகிறது மக்களுக்கு!

இன்று வள்ளுவர் கோட்டத்தில் அனைத்து விவசாய இயக்கத் தலைவர்களும் மேல்மா விவசாயிகளுக்காக போராடி, கைதாகி உண்ணாவிரதம் இருந்தனர். விவசாயிகள் விவகாரத்தில் இது வரை ஆர்வம் காட்டாமல் இருந்த தமிழக மக்கள் தற்போது தான் இந்த விவகாரத்தின் கொடூரம் தெரிந்து தங்கள் பேராதரவை தந்து வருகின்றனர்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time