அதிவேகமெடுக்கும் தொழில் மயம், நகர்மயம்! அதற்காக விழுங்கப்படும் லட்சக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள்! வீழ்த்தப்படும் விவசாயம், அழிக்கப்படும் நீராதாரங்கள்..! அகதிகளாக்கப்படும் விவசாயிகள்..! முன் எப்போதும் இல்லாத வகையில் அழிவுப் பாதையில் பயணிக்கும் தமிழகம் குறித்த துல்லியமான அதிர்ச்சி ரிப்போர்ட்!
திமுக அரசு பதவி ஏற்ற இரண்டரை ஆண்டுகளுக்கு உள்ளாக பரந்தூரில் தொடங்கி பழவேற்காடு, கடலூர், கிருஷ்ணகிரியின் உத்தனப்பள்ளி, நாகமங்களம், அயர்னப்பள்ளி, செய்யாறு மேல்மா, வாசுதேவ நல்லூர், கடைய நல்லூர் கெலமங்களம்.. என ஒவ்வொரு நாளும் நிலப் பறிப்பு என்பது நாளும், பொழுதுமாக அரங்கேறி வருகிறது. என்ன தான் அரசு நிர்வாகம் நடக்கிறது தமிழ்நாட்டில் எனத் தெரியவில்லை ! கதறி அழும் விவசாயிகளின் குரல் முதல்வரின் காதை எட்டுவதே இல்லை! வாழ்வாதாரங்களை இழந்த ஏழைகளின் கண்ணீர் நின்றபடில்லை!
பாரம்பரிய தொழிற் கேந்திரங்களாக கோவை, திருப்பூர், ஈரோடு, அம்பத்தூர், கிண்டி சிவகாசி என நம் முன்னோர்களே அவசியமான அளவுக்கு உருவாக்கிவிட்டனர்! 28 தொழிற்பேட்டைகள் என்ற வகையில் சுமார் 40,000 ஏக்கர் நிலங்கள் தொழிற்சாலைகளுக்கு தாரை வார்க்கப்பட்டு, அங்கேயே பல்லாயிரம் ஏக்கர்கள் சரியாக பயன்படுத்தப்படாமல் தான் உள்ளன!
இதைத் தவிர திமுக ஆட்சி வந்த பிறகு மூன்று கட்டங்களாக தொழிற்பேட்டைகளுக்காக நிலம் கையகப்படுத்தல் நடந்துள்ளன!
# 7 இடங்களில் தொழிற்பேட்டைகளை அமைக்க 6,035 ஏக்கர் நிலம்!
# 11 ஊர்களில், 14,695 ஏக்கரில் தொழிற்பேட்டைக்கான பூர்வாங்க பணிகள்!
# 18 இடங்களில் 11,095 ஏக்கரில் ஆரம்பகட்ட கட்ட வேலைகள்!
# இத்தனையும் போதாது என்று மேலும் டிட்கோ பார்க்குகள், எல்காட் பார்க்…என பல இடங்களில் உற்பத்திக்கும், சேவைக்குமாக தொழிற்சாலைகளுக்கு என விளை நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன!
எத்தனை நிலங்கள் கொடுத்தாலும் அடங்காதவர்களாக மேலும், பல இடங்களில் பெரிய தொழிற்சாலைகள் அமைக்க வெவ்வேறு துறைகளின் கீழ் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு அதிரடியாக விவசாய நிலங்கள் விழுங்கப்படுகின்றன!
# தஞ்சை விவசாய பூமியே இன்னும் சில ஆண்டுகளில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் தொழிற்பணிகளுக்காக தாரை வார்க்க சூழ்ச்சி வலை பின்னப்பட்டு வருகிறது.
# தமிழகத்தின் காவிரி பாசன பகுதியில் விழுப்புரம் – கடலூர் மாவட்டத்தையொட்டிய ஆழ்கடல் பகுதியில் 8108 சதுர கி.மீ பரப்பளவிலான ஹைட்ரோகார்பன் திட்டம் உட்பட மொத்தம் 8 திட்டங்களுக்கு மத்திய அரசு ஏலப்புள்ளிகளை கோரியுள்ளதோடு, ஏற்கெனவே 7264 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த 5 உரிமங்களை வழங்கியும் உள்ளது! இவை எல்லாவற்றையும் மாநில அரசு நிர்வாகம் தான் செய்து தருகின்றன!
நெய்வேலியின் காலாவதியாகிப் போன நிலக்கரி மின் தயாரிப்பு நிறுவனத்தின் விரிவாக்கத்திற்காக 26 கிராம மக்களின் 12,125 ஏக்கர் விளை நிலங்களை – முப்போகம் விளையும் பசுமை பூமியை – விவசாயிகளின் பலத்த எதிர்ப்பை மீறி, கதறக் கதறப் பறித்த நிகழ்வுகள் மறக்கக் கூடியதல்ல!
மத்திய பாஜக அரசு நிர்பந்தத்தில் இந்தியாவிலேயே இப்படி தொழிற்சாலைகளுக்காக அதிக விளை நிலங்களை அபகரித்து தரும் ஒரே மாநில அரசு திமுக அரசு தான்! தேவையில்லாத சுற்றுச் சூழலை அழிக்கும் அதிக தொழிற்சாலைகள் கொண்ட ஒரே மாநிலம் தமிழ்நாடு தான்! பாஜகவின் கொள்கைகளை எதிர்ப்பதாக தொடர்ந்து பேசி வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் – மத்திய பாஜக அரசின் நாசகரமான செயற்திட்டங்களை உறுதிப்பாட்டுடன் எதிர்ப்பை வெளிப்படுத்தி, தடுத்து நிறுத்தாமல் – அதிமுக அரசைப் போலவே நிறைவேற்றித் தந்த வண்ணம் உள்ளார் என்ற யதார்த்தம் நமக்கு பேரதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் ஏற்படுத்தக் கூடியதாகும்!
இதனால் தான் முன்பு நெற் களஞ்சியமாக திகழ்ந்த தமிழகம் இன்று அரிசிக்காக வெளி மாநிலங்களில் கையேந்தும் நிலை தோன்றிவிட்டது!
இந்தக் கண்மூடித்தனமான தொழிற்பேட்டைகள் உருவாக்கம், விரிவாக்கங்கள் ஏறத்தாழ விவசாயத்தை முழுமையாக விழுங்கி ஏப்பம்விட்ட வண்ணமுள்ளன!
இந்த மட்டிலும் கூட நிற்காமல் சாலைகள் விரிவாக்கம், புதுப்புது பைபாஸ் சாலைகள் என அதற்கும் விவசாய நிலங்கள் விழுங்கப்படுகின்றன!
இவற்றையும் கடந்த பேரூராட்சிகளை நகராட்சி என்றும், நகராட்சிகளை மாநகராட்சிகள் என்றும் விரிவுபடுத்தி, அதிலும் விவசாய விளை நிலங்கள் எல்லாம் ரியல் எஸ்டேட் விலை நிலங்களாக மாற்றி அழிக்கபடுகின்றன!
இத்தகு மாபாதகங்களை எதிர்ப்புகளை மீறி அரங்கேற்றத் தோதாகத்தான், அரசு நிர்வாகத்திற்கு வாகாகத்தான் உள்ளாட்சி அதிகாரங்களை எல்லாம் பறித்து அதிகாரிகள் வசம் தந்து உள்ளாட்சித் தலைவர்களை அரசுக்கு அடிமையாக்கி ஆட்டி வைக்கிறது மாநில திமுக அரசு!
நிலம் இழந்த விவசாயி போராடினால் குண்டர் சட்டம் போட்டு அடக்க துடிப்பது மக்களாட்சிக்கு அழகா? லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கி மென்பொருள் பொறியாளர் வேலையை உதறி எறிந்து விவசாயியாக களத்திற்கு வந்து விவசாயிகளுக்காக போராடிய இளைஞர் அருள் ஆறுமுகத்தை குண்டர் என முத்திரை குத்தி சிறையில் வைப்பது கொடுமையிலும் கொடுமை முதல்வர் அவர்களே!
உயர்ந்த கான்கிரீட் கட்டிடங்கள், பளபளக்கும் சாலைகள், கண்ணைக் கவரும் மின் விளக்குகள், விதவிதமான உணவகங்கள், பிரம்மாண்ட மால்கள், நுகர்வு கலாச்சாரத்தை வளர்த்தெடுக்கும் ஹேப்பி ஸ்ரிட்ஸ் விழாக்கள்! அநீதிகளை மறைத்து அரசைக் கொண்டாட ஊடகங்களுக்கு பக்கம், பக்கமாக விளம்பரங்கள்…!
Also read
மறுபக்கம் அழிக்கப்படும் வாழ்வாதரங்களால் நிலம் இழந்த விவசாயிகளின் அவலங்கள், சுற்றுச் சூழலை அழிக்கும் பிரம்மாண்ட தொழிற்சாலைகள்! மாசுபடுத்தப்பட்ட ஆறுகள்! மரங்களில்லா நவீன சாலைகள்! காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் களவாடி தண்ணீர் உருவாக்கும் இயந்திரங்கள்! நச்சுமயமாக்கப்பட்ட உணவுப் பொருட்கள்!
விவசாயத்தை வீழ்த்தி அழித்துவிட்டு எழுப்பப்படும் எந்த பிரம்மாண்டத்திலும் அர்த்தம் கிடையாது! கல்லையும், மண்ணையும் சாப்பிட்டு வாழ முடியாது! உணவுத் தேவைக்காக அந்நியர்களிடம் கையேந்துவது அவமானம்! நமக்கான உணவை, நாமே உற்பத்தி செய்வதில் தான் காப்பாற்றப்படும் தன்மானம்!
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
முகப்பு படம்; நன்றி;விகடன்
இந்த அளவு கடந்த தொழில் மயத்தால் தமிழ்நாடு மற்றும் அதன் மண்ணின் மைந்தர்கள் ஆகிய தமிழர்கள் அடைந்திருக்கும் சீர்கேடுகள் கொஞ்சநஞ்சமல்ல. மக்கள் உண்ணக்கூடிய அரிசியில் கணிசமான அளவு பக்கத்து மாநிலங்களில் இருந்து வருகிறது. நாளை அவர்கள் நிறுத்திவிட்டால்? எங்கிருந்தோ வரக்கூடியவர்களுக்கு வேலை கிடைக்க மண்ணையும் அதன் மைந்தர்களையும் முடமாக்கும் வேலையை திராவிட அரசியல் செய்து வருகிறது. இந்த அளவுக்கு தொழில்மயம் தேவையில்லை.