சுரங்க விபத்து இயற்கையின் எச்சரிக்கை மணியே!

sச.அருணாசலம்

சுற்றுச் சூழல் அமைப்புகளின் எச்சரிக்கைகள் புறம்தள்ளப்பட்டன! இமயமலையில் இயற்கையின் விதிகளை மீறி சுரங்கப் பாதை அமைக்கும் பணி இந்துக்களின் புனித தளங்களை இணைக்கும் சாகஸமாக கருதப்பட்டதே அன்றி, இயற்கைக்கு எதிரானதாக உணரப்படவில்லை! இந்த ஒரு விபத்தோடு இது முடியப் போவதுமில்லையாம்..!

உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே, சில்க்யாரா – பர்கோட் இடையே 4.5 கி.மீ. இந்த சுரங்கப் பாதை என்பது இந்துக்களின் நான்கு புனித தலங்களான கேதர் நாத், பத்ரி நாத், யமுனோத்ரி, கங்கோத்ரி ஆகிய நான்கு கோவில்தலங்களை ஒன்றோடு ஒன்று இணைப்பதற்கான திட்டமே!

ஊரெல்லாம் உற்சாகமாக தீபாவளி பண்டிகையை கொண்டாடிய நவம்பர் 12ந்தேதி அதிகாலையில் உத்தர காசியில் உள்ள ‘சில்க்யாரா  சுரங்கப்பாதை ‘ தோண்டும் பணியிலிருந்த  41 தொழிலாளர்கள் , சுரங்கப்பாதை நொறுங்கி விழுந்ததால் இடிபாடுகளுக்கிடையே மாட்டிக்கொண்டனர் . கடந்த பத்து நாட்களாக அந்தகார இருட்டிற்குள் , உண்ண உணவின்றி, குடிக்க தண்ணீரின்றி தவிக்கின்றனர். உயிருக்குப் போராடி வருகின்றனர்.

12  நாட்களுக்குமேல் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் இந்த தொழிலாளர்களை இந்திய அரசோ, இந்திய ஊடகங்களோ பெரிதாக கண்டு கொள்ளவில்லை. உலக் கோப்பை பற்றியும், ஐந்து மாநிலத்தேர்தல்கள் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதே ஒழிய இந்த தொழிலாளர்களின் துயரத்தை பற்றியோ, அவர்களின் உயிர்கடகு நேர்ந்துள்ள அபாயம் பற்றியோ, மீட்பு நடவடிக்கைகள் நீண்டு கொண்டு போவது பற்றியோ ஊடகங்கள் கேள்வி எழுப்பவில்லை. மோடி அரசும் , உத்தரகாண்ட மாநில அரசும் மந்த கதியில் இயங்கி கொண்டிருந்தன.

இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடி கொண்டிருக்கும் தொழிலாளர்களின் சகாக்கள்

தேசீய நெடுஞ்சாலை மற்றும் கட்டுமான வளர்ச்சிக் குழுமத்திற்கெதிராக (NATIONAL HIGHWAYS AND INFRASTRUCTURE DEVELOPMENT CORPORATION LIMITED) ஆர்ப்பாட்டங்கள் நடத்திய பிறகு மீட்பு பணிக்கு வெளிநாட்டு நிபுணர்களை வரவழைத்துள்ளனர். நேற்றைய தினம்தான் 6″ பைப் மூலம் மாத்திரை மருந்துகள், உணவுப் பொட்டலங்கள் , தண்ணீர் பாட்டில்கள் அனுப்பப்பட்டன. அறுவைச்சிகிச்சையில் பயன்படுத்தும் சிறிய காமிராவை அனுப்பி சிக்கியுள்ள தொழிலாளர்கள் முகத்தை பார்க்க முடிந்தது

சோர்வுடன் இருந்த அவர்களது இந்த நிலைமைக்கு கட்டுமானப்பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனமும் அதிகாரிகளும்தான் காரணம் என சக தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

” பாதுகாப்பு முன்னேற்பாடுகளை ” இந்த அதிகாரிகள் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

ஆனால் ஊடகங்கள் அரசு எடுத்துவரும் மீட்பு பணியில் ஏற்பட்டுள்ள தொய்வுகளையும் , முயற்சிகளையும் பற்றி பேசிவருகிறதே ஒழிய , இந்த விபத்து ஏன் நடந்தது? என்ன காரணம் ?

அரசு செய்யத்தவறியது என்ன? தொழிலாளர்களின் இழப்பிற்கு அல்லது அவர்களது உயிருக்கு யார் உத்தரவாதம்? ஏன் இத்தகைய தடைகள் நிறைந்த பணிகளுக்கு ஏழை தொழிலாளர்களே எப்பொழுதும் பலி ஆக வேண்டுமா?. இதற்கு மாற்றே கிடையாதா? என்ற கேள்விகளை கேட்கவே இல்லை.

சுமார் 40-50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே தோன்றிய இமய மலை த்தொடர் மிக இளமையானது அதே சமயம் மிகவும் நொறுங்கும் தன்மையுள்ள மண்டலமாக உள்ளது.

இந்திய மற்றும் யுரேஷிய டெக்டோனிக் தட்டுக்கள் இன்றும் ஒன்றுடன் ஒன்று மோதுவதால், இம்மலைப்பாறைகள் சுரங்கப்பாதைகள் அமைப்பதற்கோ, துளையிடுவதற்கோ, பாறைகளை தகர்த்து பெரிய பெரிய சாலைகள் அமைப்பதற்கோ உகந்த இடமல்ல என்பதை தலைசிறந்த சூழல் வல்லுனர்களும் , வாடியா ஆராய்ச்சி நிறுவனமும் பலமுறை அரசிற்கு தெரிவித்துள்ளன.

Wadia Institute of Himalayan Geology என்ற நிறுவனம் இதை பல்வேறு ஆதாரங்களை ஆவணப்படுத்தி எர்த் சிஸ்டம்ஸ் என்ற சர்வதேசத் தரம் வாய்ந்த சஞ்சிகையில் வெளியிட்டுள்ளது.

இதையெல்லாம் கண்டு கொள்ளாத மோடி அரசு , 2016ம் ஆண்டு சார்-தம் என்றழைக்கப்படும் இந்துக்களின் “புனித பகுதிகளை – கேதர் நாத், பத்ரி நாத், யமுனோத்ரி, கங்கோத்ரி ஆகிய நான்கு கோவில்தலங்களை இணைத்து நெடுஞ்சாலை அமைக்க சுமார் 1000 கோடி மதிப்பில் திட்டம் தொடங்கியது. உத்தர காசி பகுதியில், யமுனோத்ரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சில்க்யாரா-பார்கோட் சுரங்கப்பாதையில் தான் விபத்து நடந்துள்ளது.

இத்தகைய -தோண்டுதல் , மலையைக் குடைதல் , காடுகளை அழித்தல் போன்ற – செயல்கள் இயற்கைக்கு விரோதமானது!

இது நிலம் உள்வாங்குவதிலும் (land subsidence) நிலச்சரிவிலும்  ( land slide) சென்று முடிந்து மிகுந்த உயிர்சேதம் ஏற்படும் என்பதை அனைத்து மக்களும் அறிவர்! ஆயினும் அரசு அதை செய்ய முயலும்பொழுது பெரும்பாலோர் வாய்மூடி இருந்தனர் என்பது உண்மை.காரணம், கோவில்களை இணைக்கத் தானே பாதை போடுகிறார்கள் என பக்தி சிரத்தையுடன் பார்த்தார்களே தவிர, இயற்கை மீதான கொடூர தாக்குதலை நிகழ்த்துகிறோம் என உணரவில்லை!

2018ம் ஆண்டு  இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் உத்தராகாண்டு மாநிலப் பகுதியும் இமய மலை மண்டலமும் , மனிதர் வாழத் தகுதியற்றதாக மாறிவிடும் அபாயமுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில்  பல வல்லுனர்களும் சமூக ஆர்வலர்களும் வழக்கு தொடுத்தனர். எனவே, இத்திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் அல்லது திருத்தியமைக்க வேண்டும் என முறையிட்டனர், ஆதாரங்களை அடுக்கி வாதிட்டனர் . ஆனால் ‘அவை செவிடன் காதில் ஊதிய சங்காக ‘ முடிந்தது!

இது இவ்விபத்தின் ஒரு கோணம் என்றால், மற்றொரு கோணம் இதில் பலியாகும் ஏழை தொழிலாளர்களும் அவர்களது குடும்பங்களும் சந்திக்கும் அவலங்கள்தான்.

சொற்ப கூலிக்காக, பேரிடர் விளைவிக்கும், உயிர்ப்பலி வாங்கும் இத்தகைய பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களின் உயிருக்கு பாதுகாப்பும் அவர்களது குடும்பங்களுக்கு ஆதரவும் தர வேண்டியது அரசின், சமூகத்தின் கடமையில்லையா? இத்தகைய பணிகளில் மனிதப்பங்கை குறைத்து , இயந்திரங்களின் செயலை கூட்ட வழியில்லையா என்ற கேள்வி

நியாயமானதுதானே. இதை எந்த அரசாவது அல்லது எந்த தனியார் நிறுவனமாவது ஆலோசித்துள்ளதா?

இந்த விபத்து நடப்பதற்கு மூன்று மாதங்கள் முன்பு மகாராஷ்டிர மாநிலம், தானே மாவட்டத்தில் இதே போன்று ஒரு விபத்து நடந்தது. நாக்பூர்- மும்பையை இணைக்கும் சம்ருத்தி அதிவேகச்சாலை -SAMRUDDHI EXPRESSWAY – இல் உள்ள சுரங்கப்பாதை விபத்தில் 20 தொழிலாளர்களும் பொறியியல் வல்லுனர்களும் உயிரிழந்தனர் . அங்கு பணியில் இருந்த கிரேன் நொறுங்கி விழுந்ததினால் நடந்த விபத்திற்காக அந்த பணியில் உள்ள ஒப்பந்தக்கார்ர் மீது வழக்கு பதிவு செய்து FIR போடப்பட்டது.

 

அந்த ஒப்பந்தப்பணியில் ஈடுபட்டிருந்த நிறுவனத்தின் பெயர் நவயுகா இன்ஜீனியரிங் கம்பெனி ஆகும்.

நரேந்திர மோடி முன்னின்று நிறைவேற்றும் சார்- தம் நெடுஞ்சாலை திட்டத்தில் உள்ள சில்கயாரா சுரங்கப்பாதை கட்டுமான ஒப்பந்தக்கார கம்பெனியும் அதே நவயுகா இன்ஜீனியரிங் கம்பெனி லிமிட்டெட் தான் என்பது சிலருக்கு ஆச்சர்யாயமாக இருக்கலாம்.

ஆனால் உண்மை அதுதான்! அது பற்றிய தனிக் கட்டுரையே எழுதலாம்.எழுதுகிறேன்!

கட்டுரையாளர்;ச.அருணாசலம்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time