கல்விக் கொள்ளைக்கு கதவைத் திறக்கிறதா அரசு?

பேராசிரியர் கி. கதிரவன்

ஏற்கனவே இங்கு அரசு உதவி பெறும் கல்லூரிகள் பல, கொள்ளையடிக்க அங்கீகாரம் பெற்றவர்கள் போல ஏழை, எளிய மாணவர்களை கசக்கி பிழிகிறார்கள்! இந்த லட்சணத்தில், ”இந்தக் கொள்ளை போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா? நிகர் நிலை பல்கலைக் கழகமாக மாறிக் கொள்ளுங்கள்” என அரசே கூறுகிறதென்றால்..?

நெறி தவறிச் செல்கிறது தமிழ் நாட்டு உயர் கல்வித் துறை! இதனால், பறிபோக உள்ளது ஏழை மாணவர்களின் கல்வி கனவு! இது குறித்து கவலையோடு கவனப்படுத்துகிறது இந்தக் கட்டுரை!

கிராமப்புற எளிய மாணவர்கள், தனியார் கல்லூரிகளை நெருங்க முடியாத நிலையில், அரசு உதவி பெறும் கல்லூரிகள் மூலமாக கல்வி கற்கும் வாய்ப்பை தமிழக அரசு சிதைத்து கொண்டிருக்கின்றது. தமிழகத்தின் உயர் கல்வி துறையின் செயலாளர் கார்த்திக் ஐ.ஏ.எஸ் அவர்களின் நவம்பர் 9 ஆம் தேதி கடிதத்தின் வாயிலாக, ‘அரசு உதவி பெறும் கல்லூரிகள், தாங்கள் நிகர் நிலை பல்கலைக்கழகமாக மாற்ற விரும்பினால்,  ‘ஆட்சேபணை இல்லை’ என்ற சான்றிதழை (NOC) அந்த கல்லூரி சார்ந்த பல்கலைக் கழகத்தில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகள் என இயங்கி வருகின்றன! இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு தமிழக அரசு அங்கு வேலை செய்யும் ஆசிரியர்கள், பணியாளர்கள் சம்பளம் மற்றும் நிர்வாகச் செலவு அனைத்தையும் தருகிறது! ஆன போதிலும்,  அரசு உதவி பெறும் கல்லூரிகள் தாங்கள் நினைத்தவாறெல்லாம் தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல், அதிகப்படியான கல்வி கட்டணத்தை வசூலிக்கின்றனர்.

இளங்கலை அறிவியல் , கலை பாடப் பிரிவிற்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.48 தான்!

முதுகலை அறிவியல் மற்றும் கலை படிப்பதற்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.58 தான்!

ஆனால்,விண்ணப்பத்தையே ரூ.200 முதல் ரூ.500 வரை விற்று கல்லா கட்டுகின்றனர்!

கல்வியை கட்டணமின்றி முற்றிலும் இலவசமாகத் தான் தர வேண்டும்! நடைமுறை செலவுக்கு என்று ரூ500 வரை வாங்கலாம்! ஆனால், வாங்குவதோ 5,000 முதல் 25,000 வரை! இது மட்டுமின்றி, பணியாற்ற வரும் ஆசிரியர்களிடமும் லட்சக்கணக்கில் வசூல் வேட்டை நடத்தி தான் வேலை வாய்ப்பு தருகின்றனர். இது குறித்து பல்கலைக் கழக ஆசிரியர் சங்கமும், தமிழ்நாடு உயர் கல்வி பாதுகாப்பு இயக்கமும் தமிழக அரசுக்கு கவனப்படுத்தி, கட்டுபடுத்தக் கோரிய  நிலையில், அரசோ கண்டு கொள்ளவே இல்லை!

இதனால் அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு பெரும்பாலான கிராமப்புற ஏழை, எளிய பின் தங்கியுள்ள மாணவர்கள் செல்ல முடியாத நிலை தோன்றியுள்ளது! இதனால், பெரும்பாலான அரசு உதவி பெறும் கல்லூரிகள் பொருளாதாரத்தில் முன்னேறிய வகுப்பினர் மட்டுமே இருக்கக் கூடிய கல்லூரிகளாக தற்பொழுது வரை இயங்கி வருகின்றன!

இதனால், பெரும்பாலான கல்லூரி நிர்வாகத்தினர் அரசு உதவி பெறும் திட்டத்திலிருந்து விலகி, தனியார் கல்லூரிகள் போல் இயங்கினால் தாங்கள் நினைத்த கல்வி கட்டணத்தை அதிகமாக பெற முடியும் என்ற நோக்கத்தில் தமிழக அரசிடம் தனியார் கல்லூரிகளாக இயங்குவதற்கு ஒப்புதல் கேட்டு கடிதங்களை எழுதி வருகின்றனர். தற்பொழுது உயர் கல்வித் துறை செயலாளர் அறிவித்த இந்த கடிதத்தின் மூலமாக பெரும்பாலான அரசு உதவி பெறும் கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழகமாக மாறுவதற்கு தமிழக அரசு வழி வகுத்துக் கொடுத்திருக்கின்றது.

ஏற்கனவே,  கல்வி கட்டண வசூலிப்பில் தமிழகத்தின் நிகர் நிலை பல்கலைகள் நிகரற்று விளங்குவதை அனைவரும் அறிவோம். ஏனெனில், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் தமிழக அரசு,  பாடத்திட்டங்களையோ அல்லது இட ஒதுக்கீட்டு முறையையோ அல்லது கல்வி கட்டணத்தையோ நிர்ணயம் செய்வதற்கோ அல்லது கட்டுப்படுத்துவதற்கோ எவ்வித அதிகாரமும் கிடையாது. அது போல் தமிழக அரசும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு நிதி உதவியும் அளிக்க தேவையில்லை.

இதனால் தமிழக அரசுக்கு நிதி சுமையும் குறையும் என்ற நோக்கத்தின் காரணமாக, தன் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளை தனியார் மயமாக்குவதற்கு தமிழக அரசு ஊக்குவிக்கின்றது. இச்செயல் தமிழக அரசு தனது சமூக நீதிக் கொள்கையில் இருந்து விலகி சென்று கொண்டிருப்பதையும், கல்வி வணிகத்திற்கு வழிகோலுவதையுமே காட்டுகின்றது. இப்படி அரசே வழிகாட்டினால் பெரும்பாலான அரசு உதவி பெறும் கல்லூரிகள் நிகர் நிலைப் பல்கலைக் கழகங்களாக மாற்றப்படும்.

தற்பொழுது பள்ளிக் கல்வியிலிருந்து வருடந்தோறும் கிட்டத்தட்ட ஒன்பது லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள்  உயர் கல்வி நோக்கி செல்கின்றனர். இதில் அரசு கல்லூரிகளில் ஒன்றரை லட்சத்திற்கு குறைவாகத் தான் இடங்கள் உள்ளன! மீதமுள்ள 8 லட்சம் மாணவர்கள் அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளையே நாடி செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தற்பொழுது அரசு உதவி பெறும் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாறினால், இவர்களின் அடாவடி கட்டணத்திற்கு ஏழை, எளிய  மாணவர்களால் பணம் செலுத்த இயலாத சூழ்நிலை ஏற்படும். புதிய நிகர் நிலைப் பல்கலைக் கழகங்களின் வரவால், அடித்தட்டு மாணவர்கள் தங்கள் கல்வி கனவை துறந்து, அன்றாட கூலி வேலைகளுக்கு செல்ல நேரிடும்! இதனால்  அவர்களின் கல்வி கனவு சிதைக்கப்படும். காசு, பணம் உள்ளவர்கே கல்வி என்பது எழுதப்படாத சட்டமாகிவிடும்.

மேலும் தமிழகத்தில் இட ஒதுக்கீடு முறை கடந்த 100 வருடங்களாக செயல்பட்டு வருகின்றது  நிகர் நிலை பல்கலைக் கழகங்களில் இட ஒதுக்கீடு முறை கடைபிடிக்கப் படுவதில்லை! இதனால் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின பழங்குடியின மாணவர்கள் வருங்காலங்களில் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள்! அது போல் நிகர் நிலை பல்கலைக்கழகங்களை கட்டுப்படுத்துவதற்கு எவ்வித அதிகாரமும் தமிழக அரசிடம் இல்லை. ஆகவே, நிகர் நிலை பல்கலைக் கழகங்களின் வேந்தர்கள் வசூல் வேந்தர்களாகி விடுவர்.  இதன் காரணமாக நடுத்தர குடும்பங்கள் இதுநாள் வரை தாங்கள் சேமித்த வாழ் நாள்  சேமிப்புகளை இழப்பதோடு, கல்விக்காக கடனாளியாகி அல்லல்படுவார்கள்!

அரசு உதவி பெறும் கல்லூரிகள் நிகர் நிலை பல்கலைக் கழகங்களாக மாற்றப்படும் பொழுது தற்பொழுது அங்கு பணியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் வேலை கேள்விக் குறியாகும் நிலை உள்ளது. தற்பொழுது வரை இவர்களுக்கு தமிழக அரசு நிதி அளித்து வருகின்றது. ஆனால்,  நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக இக்கல்லூரிகள் மாறும் பொழுது அரசு நிதியை நிறுத்திக் கொள்ளும். இதன் காரணமாக கல்லூரிகளின் நிர்வாகிகள்  ஆசிரியர்கள் மற்றும்  ஊழியர்களின் ஊதியத்தை குறைப்பார்கள் அல்லது குறைந்த சம்பளத்தில் தகுதி அற்றவர்களை நியமிப்பார்கள்! இதன் காரணமாக கல்வித் தரம் குறைந்து, மாணவர்கள் பாதிக்கப்படுவர்.

தமிழக அரசு மாணவர்களின் எதிர்காலத்தையும், நாட்டு நலனையும் மனதில் கொண்டு, அரசு உதவி பெறும் கல்லூரிகளை நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாற்றும் முடிவை கைவிட வேண்டும். தமிழக அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் அரசு கல்லூரிகளுக்கு நிதி அளிப்பது என்பது வருங்கால இந்தியாவை கட்டமைப்பதற்கு உதவக் கூடியதாகும். இதை மற்ற செலவினங்களை போல் கருதாமல், தொடர்ந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு நிதி அளிக்க வேண்டும். மேலும், தற்பொழுதுள்ள அரசு கல்லூரிகளின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக உயர்த்த வேண்டும். இதை நிறைவேற்றினால் தான், தமிழகத்தில் நல்ல கல்விச் சூழலும், சமூக நீதியும் காப்பாற்றப்படும்.

கட்டுரையாளர்; கி.கதிரவன்

முனைவர்,

தலைவர், தமிழ்நாடு பல்கலைக் கழக & கல்லூரி எஸ்.சி / எஸ்.டி ஆசிரியர் சங்கம்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time