சங்கத் தமிழிலும், சரித்திரத்திலும் வாழும் சேரிகள்!

-சமரன் நாகன்

சேரி என்பதை அவலத்தின் குறியீடாகப் பார்ப்பது அறியாமை!  சங்கத் தமிழிலும், சரித்திரம் நெடுகிலும் சேரி பற்றிய குறிப்புகள் கொட்டிக் கிடக்கின்றன! எத்தனையோ சித்தர்களும், யோகிகளும், ஞானிகளும் வாழ்ந்த இடமே சேரி!  தில்லை நந்தனார் தொடங்கி, இளையராஜா வரை சொல்லலாம்..!

உலகம் முழுவதிலும் சேரிகள் இருக்கின்றன. இருந்தாலும், தமிழகத்தில் மட்டும் தான் அது தலித்கள் வாழுகின்ற பகுதியாகவும், அவலத்தின் குறியீடாகவும் மேட்டிமைவாதிகளால் அடையாளப்படுத்தப்படுகின்றது.

“விஜயநகர பேரரசுக்கு பிறகு தான் சேரி என்பது குல விலக்கம் செய்யப்பட்டவர்களின் கூடாரமாகவும், ‘தலித்’கள் வாழுகின்ற பகுதியாகவும் மாற்றப்பட்டது. இன்றைக்கு  நாம்,  சேரி என்ற சொல்லுக்கு, கையாளும் பொருள் ஈடுசெய்ய முடியாத இழுக்காகும். ஆனால் சேரி என்றால் மன்றம், வழக்காடுமிடம், போதனைச் சாலை, அவை, அரசவை, கோட்டை என்றெல்லாம் பொருள் தந்து சேரியை உயர்த்தி பிடிக்கிறது தமிழ்.

ஊரும் சேரியும் உடன் இயைந்து அலர் எழஅகம் 220/1

இதன் பொருள்; ஊரின் கண்ணும், சேரியின் கண்ணும் ஒருங்கே சேர்ந்து அலர் எழ என்கிறது சங்கத் தமிழ்!

சேரிமக்கள் துணங்கை, குறவை ஆகிய கூத்துக்களை ஆடுவர் என்கிறது பழந்தமிழ் இலக்கியம்!

துணங்கை அம் தழூஉவின் மணம் கமழ் சேரி – மது 329

துணங்கைக் கூத்தினையும், அழகிய குரவைக் கூத்தினையும் உடைய சேரியானது மணம் கமழ்ந்து இருந்ததாம்! பல திறமை மிக்க கைத் தொழில் வினைஞர்கள் வாழும் இடம் சேரி! இவர்கள் இயல்பிலேயே புத்தி கூர்மை உள்ளவர்கள்! அச்சமற்றவர்கள்!

பறைச்சேரி என்பது  ஆச்சாரம் மிக்க, பற்றற்று வாழும், பரயோகம் கண்ட சுய ஒழுக்கம் நிறைந்தோர் சேர்ந்து வாழுகின்ற குடியிருப்பின் தனித்த அடையாளம் தான் சேரி. அதனால் தான் ‘சேரிக்குள் பிராமணன்  நுழைந்தால், அவனை துரத்திச் சென்று, அவன் மீது மீது சாணிச் சட்டியை உடைக்கின்ற வழக்கம் இருந்தது’ என்பதிலிருந்து, சேரி தள்ளி வைக்கப்பட்டதன்று; தனித்து வாழும் குடியிருப்பு என்றறியலாம்.

”என்ன Slum மாதிரி பேசுறே’’

”சேரி லாங்கு வேஜ் பேசுறே’’

என்றெல்லாம் சேரியை மட்டம் தட்டி, தாங்கள் மேட்டிமை தனத்தை காட்டிக் கொள்ளும் மூடர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இன்றும் தமிழ் உயிர்ப்போடு இருப்பது சேரிகளாலும் சேரிக்காரர்களாலும் மட்டும் தான். சேரி தான் தமிழை தமிழனின் வரலாற்றை அடைக்காத்து நிற்கிறது. தூய தமிழ்ச் சொற்களெல்லாம் சேரிகளில் தான் செம்மார்ந்து வாழ்கின்றது!

சேரிகள் அழுக்கானவை. அசுத்தமானவை, அங்கே வாழ்கிறவர்கள் பொறுக்கிகள், ரவுடிகள், கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள் என சினிமாக்களின் வழியாக சித்தரிக்கப்பட்டு வருவதோடு, சேரிக்காரன் இழிவானவன், சேரி வாழ்க்கை கேவலமானது, சேரிப் பேச்சு கொச்சையானது எனும் கற்பிதங்களும் கட்டுக் கதைகளும் பெரும் திட்டமிடுதலோடு பொது வெளிகளில் பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை அதுவல்ல;

பறைச்சேரி, பாணச்சேரி பார்ப்பனச்சேரி, இடைச்சேரி, பள்ளச்சேரி, உமண்சேரி, கம்மாளச்சேரி ஆலஞ்சேரி, என தமிழ் இலக்கியங்கள் முழுக்க காணக் கிடைக்கின்றன சேரிகள்.

மார்பில் பூநூல் அணிந்து சேரியில் வாழ்ந்தவர்கள் குறித்து ’புரிநூல் மார்பர் உறைபதி’ – என்று புறஞ்சேரி பற்றி விவரிக்கிறது சிலப்பதிகாரம்.

சேர்ந்து வாழும் குடியிருப்பு என்ற பொருளிலேயே ‘சேரி’ என்ற சொல் சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பல்வேறு குடிகளை, அவர்களது வாழ்வியல் கூறுகளை, வழிப்பாட்டு முறைகளை ஒரு சேரக் கொண்டது தான் சேரி. அங்கே பார்ப்பனனும் வாழ்ந்தான் பாணனும் வாழ்ந்தான். பறையனும் வாழ்ந்தான். ஆதித்த கரிகாலனைக் கொலை செய்த பிராமணர்களான சோமன், ரவிதாசன், பரமேஸ்வரன் ஆகியோரின் தம்பி ரேவதாச வித்தன் வாழ்ந்த ஊரின் பெயர் ‘பாப்பனச் சேரி’ என்பது குறிப்பிடத்தக்கது.

சோழர்கள் கால கல்வெட்டுகளில் பறைச் சேரியும் கம்மாணங் சேரியும் ஊரின் நடுவே குளமும் புலத்திற்கு யமுனங்கரையும் இவ்வூர் திருவடிகள் என்று குறிப்பிடப்படுகின்றது. கம்மாளர்கள் வாழ்ந்த சேரியும் பறையர்கள் வாழ்ந்த சேரியும் அருகருகே இருந்தன என்பதற்கு இக் கல்வெட்டுகள் சான்று.. குறுந்தொகை பாடலொன்றில் தலைவி வாழுமிடத்தைக் குறிக்க சேரி எனும் சொல் கையாளப் படுகின்றது.

பலகுடி சேர்ந்தது சேரி, பல பொருள் தொக்கது தோட்டம் என்று விளக்கம் தந்து சேரி என்பது தாழ்ந்தவர் குடியிருப்பும் அல்ல; ஊர் என்பது உயர்ந்தவர் குடியிருப்பும் அல்ல என்பதை நமக்கு தெள்ள தெளிவாக உறுதிப்படுத்துகிறது தொல்காப்பியம்.

அதாவது,

சேர்ந்து வாழ்கின்ற இடம் சேரி.

மக்கள் ஊர்ந்து வாழ்கின்ற இடம் ஊர்.

பார்ப்பனர்கள் வாழ்ந்த இடம் பார்ப்பனச்சேரி, பாணர்கள் வாழ்ந்த இடம் பாணச்சேரி. இதுதான் இன்றைய பாண்டிச்சேரி.

மீன் சீவும் பாண்_சேரியொடுமது 269மீன் சீவும் பாண் சேரி – புறம் 348/4

உப்பு வணிகர்கள் வாழ்ந்த பகுதி உமணச்சேரி என தொழில் அல்லது குழுக்களின் பெயரோடு சேர்த்தே சேரி என்ற சொல் வழங்கப்பட்டதை இலக்கியங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன.  கிரேக்கர், அரேபியர், ரோமர்கள் என்று வெளி நாட்டவர் வாழ்ந்த யவனச்சேரி  குறித்து மணிமேகலையும் பெருங்கதையும் பேசுகின்றன.

நன்றி, ஒவியம்; ம.செ

சென்னையே ஒரு காலத்தில் மிகப் பெரிய சேரிதான்.  இன்னும் சொல்வதென்றால், ஆதிகுடிகளான மீனவர்களின் குப்பம் தான்! அந்த குப்பத்தில் இருந்து உதித்தவர் தான் சிந்தனை சிற்பி சிங்காரவேலர்! திரையுலக மேதை சந்திரபாபுவும் மீனவக் குப்பத்தில் இருந்து வந்தவரே!

கடலையொட்டி ஆதிகுடிகளான மீனவர் வாழ்ந்த பகுதிகள் சேரிகள் என்றே அழைக்கப்பட்டன!

உரவு கடல் உழந்த பெரு வலை பரதவர்

மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண்

கல்லென் சேரி புலவர் புன்னை

விழவு நாறு விளங்கு இணர் அவிழ்ந்து உடன் கமழும்நற் 63/1-4

வலிமை மிக்க கடலில் சென்று பெரிய வலைகளைக் கொண்டு மீன் பிடித்து வாழ்ந்த பரதவர் குலதவர்கள் உறையும் இடங்கள் சேரி என்றழைக்கப்பட்டன!

மிகுதியாகப் பெற்ற மீன்களைக் காயவைத்த புதிய மணற்பரப்பாகிய அவ்விடத்தில்

மிகுந்த ஆரவாரத் தன்மையுள்ள சேரியை அடுத்த புலால்(மீன்கள் காய வைக்கும்) நாறும் இடத்திலுள்ள புன்னையின் விழாவுக்குரிய மணம் விளங்கும் பூங்கொத்துகள் உடன் மலர்ந்து மணங்கமழும் இடமே சேரி எனக் குறிப்பிடப்பட்டது.

நாகை அருகே, பார்ப்பனச் சேரி என்ற ஊர் இன்றும் உள்ளது. வேலூர் காவேரிப்பாக்கம் அருகே ஒரு ஊராட்சியின் பெயரே சேரிதான்.

ஆக, சேரி என்பது தமிழர்கள் வாழும் பகுதிக்கான ஒரு பெயரேயாகும்!

நவீன இந்தியாவில் பொருளாதாரத்தில் பின் தங்கிய உழைக்கும் உதிரித் தொழிலாளி வர்க்கத்தின் உறைவிடமாக சேரிகள் உள்ளன! அங்கே அடிப்படை வசதிகள் கூட செய்து தராமல், அப் பகுதிகளை வாழத் தகுதியற்ற இடமாக மாற்றி வைத்துள்ளது அவர்களின் அவலமன்று! நமது ஆட்சியாளர்கள் மற்றும் சமூகத்தின் அவலம் தான்! உண்மையில் இங்கு தான் மனிதநேயம் உயிர்ப்போடுள்ளது!

கட்டுரையாளர்; சமரன் நாகன்

எழுத்தாளர், ஊடகவியலாளர்.

‘திருவிடரா? திராவிடரா?’ நூலின் ஆசிரியர்.

முகப்பு ஒவியம்;  நன்றி, ஒவியர் மாருதி

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time