கொடிகட்டிப் பறக்கும் ஊழலில் தமிழக நெடுஞ்சாலைத் துறை!

ஜீவா கணைஷ்

கட்டுக் கடங்கா ஊழல்,கொட்டமடிக்கும் அதிகாரிகள், தட்டிக் கொடுக்கும் தமிழக ஆட்சியாளர்கள்…! இது தான் இன்றைய தமிழக நெடுஞ்சாலைத் துறையின் தற்போதைய நிலைமை! தமிழ் நாடு நெடுஞ்சாலைத் துறையில் நிர்வாக வசதிக்காக தேசிய நெடுஞ்சாலை,  கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, நபார்ட் மற்றும் கிராமச் சாலைகள், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம், சென்னை – கன்னியாகுமரி தொழில் தட திட்டம், திட்டங்கள், பெருநகரம்,  வடிவமைப்பு,  நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம், முதன்மை இயக்குநர் அலுவலகம்  என்று பத்து அலகுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

விதிமுறைகளை மீறிய சதி திட்டங்கள்!

தேசிய நெடுஞ்சாலைப் பிரிவில் சாலைகளை அகலப்படுத்துதல், மேம்பாடு செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்கு மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது. மற்ற பிரிவுகளில் வேலைகளை மேற்கொள்ள மாநில அரசின் நிதி பயன்படுத்தப்படுகிறது. உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற பன்னாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்தும் நிதி பெற்று சாலைகள் மேம்படுத்தப்படுகின்றன. எல்லா பிரிவுகளிலும் மேற்கொள்ளப்படும் பணிகளிலுமே மதிப்பீடுகள் தயார் செய்வதில் தொடங்கி ஒப்பந்தம் இறுதி செய்வது வரை விதி மீறல்கள் நடைபெறுகின்றன.

தேசிய நெடுஞ்சாலைப்   பிரிவில்  மத்திய அரசின் நிதி, மாநில நெடுஞ்சாலைத் துறை  பொறியாளர்களால் பல வழிகளில் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. வாகனப் போக்குவரத்து  குறைவாக இருக்கும் இரு வழிச்  சாலைகள்  நான்கு வழிச் சாலைகளாக அகலப்படுத்தப்படுகின்றன. தேவையற்ற சாலைகளை எந்தக்  காரணமுமின்றி பல கோடி ரூபாய்  செலவில் மேம்பாடு செய்யப்படுகின்றன. இதற்காக தவறான மதிப்பீடுகள் தவறான புள்ளி விவரங்களுடன் தயாரிக்கப்படுகின்றன. தாராளமாகப்  பங்கு தரும் ஒப்பந்ததார்களுக்கு வேலைகள்  வழங்கப்படுகிறது. இவையெல்லாம் மத்திய அரசு வரை தெரிந்து மாநில அரசுக்கு நிதி வழங்குவது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இப்படிப்  பொய்யான வேலைகளின் அடிப்படையில் நிதியினைப்  பெற்று வந்த தேசிய நெடுஞ்சாலை  பிரிவின் தலைமைப் பொறியாளர்  பாலமுருகனால் தொடர்ந்து நிதியினைப் பெற்றுத் தர முடியவில்லை என்பதால் வேறு பிரிவுக்கு மாற்றப்பட்டு சந்திரசேகரன் தலைமைப் பொறியாளராக  வந்த பிறகும் அதே நிலைதான் தொடருகிறது.

சி.பி.ஐக்கு பயந்து விருப்ப ஓய்வு!

கடந்த மார்ச் மாதம்   தேசிய நெடுஞ்சாலை திண்டுக்கல் கோட்டப் பொறியாளர்  முருக பூபதி  ஒப்பந்ததாரரிடமிருந்து பணம் பெற்று மத்திய அரசு அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்தார் என CBI-னால் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளார். எங்கே CBI கரங்கள் தன்  மீது பாய்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் மதுரை தேசிய நெடுஞ்சாலை வட்டத்தின் கண்காணிப்புப் பொறியாளர் கிருஷ்ணசாமி ஆகஸ்ட்  மாதம்  விருப்ப ஓய்வில் சென்று விட்டார். CBI பல்வேறு கோணங்களில் விசாரணையை எடுத்துக்கொண்டு செல்வதாகத்  தெரிகிறது.

மத்திய அரசு அதிகாரிக்கு லஞ்சம் கைமாறியதற்குப் பின்னால் ஓவு ரெட்டி என்பவர் இருக்கிறார். இவரும்  CBI-னால் கைது செய்யப்பட்டார். இவர் தேசிய நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளராகப்  பணி புரிந்தவர். சில முறைகேடுகளில் ஈடுபட்டதற்காக 2015ல் ஓய்வு பெறும் நாளன்று சஸ்பென்ஷன் செய்யப்பட்டவர். இவர் குடும்ப உறுப்பினர்களை இயக்குநர்களாக நியமித்து JR Consultancy Services Private Limited என்கிற ஒப்பந்த நிறுவனம் நடத்துகிறார். பெரும்பாலான தேசிய நெடுஞ்சாலை வேலைகளுக்கு  கன்சல்டன்டாக இந்த நிறுவனம் நியமிக்கப்படுகிறது. மத்திய தேசிய நெடுஞ்சாலை அமைச்சகத்திற்கும் தமிழ்நாடு தேசிய நெடுஞ்சாலை பிரிவிற்கும் பாலமாகவும் புரோக்கராகவும் இந்த ஓவு ரெட்டி  செயல்படுகிறார்.  எனவே கொள்ளையடிப்பதற்காகவே வருடந்தோறும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதியை இவர் மத்திய அரசிடமிருந்து பெற்றுக் கொடுத்துக் கொண்டு இருந்தார். 2020 மார்ச்சில் இவர் லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பின்பு இவரால் செயல்பட முடியவில்லை. எனவே இந்த வருடம் மத்திய அரசு ஒதுக்கீடு சில நூறு கோடி ரூபாய் என சுருங்கி விட்டது.

ஓவு ரெட்டி மீது செப்டம்பர் மாதத்தில் CBI மற்றொரு வழக்கு பதிவு செய்துள்ளது. இரண்டு வேலைகளுக்கு மூன்று கோடி ரூபாய் அனுமதிக்க நாகர்கோவிலைச் சேர்ந்த ஒரு ஒப்பந்ததாரரிடம் இவர் பத்து லட்சம் ரூபாய்  பெற்று  மத்திய அரசு அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்ததற்காகவே இந்த வழக்கு.

சென்னை தேசிய நெடுஞ்சாலை வட்டத்தின் கண்காணிப்புப் பொறியாளர் சீனிவாச ராகவன் திடீரென்று விடுப்பில் சென்றுள்ளார். விசாரித்தபோது ஒப்பந்தங்களை மேலிடம் சொன்னபடி முடித்துக் கொடுக்காததால் கோபமடைந்ததாகவும் தனக்கு வேறு பிரச்னை வந்து விடுமோ என்று பயந்து கொண்டு இருந்த நிலையில்  விடுப்பில் செல்ல கட்டாயப்படுத்தப் பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனிவாச ராகவனிடம் உதவிக் கோட்டப் பொறியாளராக இருந்த பெரியண்ணன் இரவோடு இரவாக வேறு பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.

களவாடுவதற்கு திட்டம் தரும் கன்சல்டண்ட்கள்!

தேசிய நெடுஞ்சாலைகளில் நடைபெறும் பணிகளுக்கான மதிப்பீடுகள் ஓவு ரெட்டி போன்ற கன்சல்டன்ட்களால் தயாரிக்கப்படுகின்றன. கன்சல்டன்ட்கள்  தனியார் ஒப்பந்தக்காரர்கள் ஆவார்கள். துறை எப்படி எதிர்பார்க்கிறதோ  அப்படியே மதிப்பீடுகளை தயாரித்து கன்சல்டன்ட்கள் வழங்குகிறார்கள். அந்தப் பணியை எந்த ஒப்பந்தக்காரருக்கு வழங்குவது  என்பதை  பணிகளை ஒப்பந்தம் செய்வதற்கு முன்னாலேயே இறுதி செய்யப்பட்டு விடுவதால் அந்த ஒப்பந்தக்காரர்கள் சொல்லுகிறபடிதான் கன்சல்டன்ட்கள்   மதிப்பீடுகளைத்  தயாரிக்கிறார்கள்.

தேவையில்லாத சாலைகளைப்  போக்குவரத்தை அதிகமாகக்  காட்டி அகலப்படுத்துவது,  கனரக வாகனங்கள் போகாத சாலைகளை கனரக வாகனங்கள் போவதாகக்  காட்டி தார் கலவையின் கனத்தை அதிகமாக மதிப்பீட்டில் சேர்ப்பது என்று  மதிப்பீட்டின் தொகையை பல மடங்கு உயர்த்தி   அதனால் வரும் தொகையை அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் ஒப்பந்தகாரர்கள் பங்கு பிரிப்பது அண்மைக்காலத்தில் மிகவும் அதிகமாகி விட்டது

இப்படி மதிப்பீடுகளைத்  தயாரிக்கவே துறையில் பணியாற்றி குற்ற  நடவடிக்கைக்காக   சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஓவு ரெட்டி பல பணிகளுக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். முடிக்கப்பட்ட பணிகளை முழுமையாக ஆய்வு செய்தால் மத்திய அரசு பணம் நூற்றுக்கணக்கான கோடிகள் சூறையாடப்பட்டது வெட்ட வெளிச்சமாகும்.

வைகையே சாட்சி!

மதுரை நகருக்குள் திண்டுக்கல் பைபாஸ் அமைக்கப்பட்டிருக்கிறது. வைகை ஆற்றில் கரை ஓரமாக தேவையின்றி கட்டப்பட்டுள்ள மேம்பாலமும் தடுப்புச் சுவரும் தேசிய நெடுஞ்சாலைத் துறை  எப்படி மக்கள் பணத்தை பங்கு போட்டுக் கொண்டிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டும் சாட்சிகள்.

மத்திய அரசு நிதியில் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலை வேலைகளில் தவறு நடந்தது தெரிய வந்தாலே  ஊழல் குற்றம் சாட்டப்பட்டு அதிகாரிகள் சஸ்பென்ட்   செய்யப்படுகிறார்கள். அல்லது வேறு பிரிவிற்கு மாற்றப்படுகிறார்கள்.

மாநில அரசு பணிகளில் நெடுஞ்சாலைத்  துறையில் ஊழலே இல்லையா என்பதைக் கவனிக்க வேண்டும். மத்திய அரசு நிதியில் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலை வேலைகள்  மட்டுமல்ல,  தமிழ்நாட்டில் நடைபெறும் எல்லா நெடுஞ்சாலைப்  பணிகளிலும் ஊழல் ஆறு கரை புரண்டு ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. தமிழக அரசுக்கு ஊழல் அதிகாரிகள் தான் பிடிக்கும்! அவர்களை கண்ணைப் போல பொத்தி பாதுகாக்கிறது. கொரோனா நோயால் உலகமே அரண்டு போன நிலையிலும் தமிழக அரசின்  நெடுஞ்சாலைத் துறை 12000  கோடி ரூபாய்க்கு   மதிப்பீடுகள்  தயார் செய்து வேண்டியவர்களுக்கு  ஒப்பந்தங்களை  வழங்கியுள்ளது. இந்த உச்சபட்ச கொள்ளையை தட்டிக் கேட்க தமிழகத்தில் நாதியே இல்லை என்பது தான் சோகம்!

லஞ்ச ஒழிப்புத் துறையா? லஞ்ச ஒளிப்பு துறையா?

மத்திய அரசு நிதி செலவிடப்படுகிற இடங்களில் ஊழல் குற்றச்சாட்டு வந்தால்  CBI விசாரிக்கிறது.   ஆனால் மாநில  அரசு பணிகளில் குற்றச்சாட்டு வந்தால் மாநில  அரசு கட்டுப்பாட்டில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை  (DVAC)  விசாரிக்கிறது. எத்தனை புகார்கள் என்றாலும் எவ்வளவு ஆதாரங்கள் இருந்தாலும் DVAC வழக்கு பதிவு செய்வதில்லை. முதற்கட்ட விசாரணை என்ற பெயரில் நெடுஞ்சாலைத் துறைக்கு புகாரை அனுப்பிவிடுவார்கள்.  ஊழல் அதிகாரிகள் பதவி உயர்வு பெற்று பல மடங்கு ஊழலில் ஈடுபடுவார்கள்.

உதாரணத்திற்கு 2014 முதல் 2016 வரை நடந்த தார் ஊழல். இந்த ஊழல் மூலமாக  ஏறக்குறைய ஆயிரம் கோடி ரூபாய்  அரசு பணம் சுருட்டப்பட்டுள்ளது. சமூக செயற்பாட்டாளர் RTI பாலாஜி என்பவர் ஆதாரங்களுடன்   புகார் கொடுத்தும்  நடவடிக்கை இல்லாததால் உயர் நீதிமன்றம் வரை சென்ற பிறகு  உயர் நீதி மன்றத்தின் அறிவுருத்தல்படி வழக்கு பதியப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்குப்  பிறகும் விசாரணை  நடைபெற்றுக்கொண்டிருப்பதாக DVAC பாசாங்கு செய்து கொண்டிருக்கிறது. இந்த ஊழலில் ஈடுபட்டவர்கள் பதவி உயர்வுகள் பெறுவதையும் ஓய்வு பெற்று எவ்விதக்  குற்ற உணர்வுமின்றி வீட்டுக்குச் செல்வதையும் DVAC வேடிக்கை பார்த்துக்  கொண்டிருக்கிறது.

தஞ்சாவூர்,  காஞ்சிபுரம், பொன்னேரி ஆகிய இடங்களில் பாலங்கள் சரியான முறையில் கட்டப்படாமல் ஒப்பந்ததாரருக்குப்  பில் போட்டவுடனேயே பழுது அடைந்தன. உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரவி கொடுத்த இந்த புகார்கள் மீதும் இதுவரை DVAC நடவடிக்கை எடுக்கவில்லை.

மத்திய அரசின் ‘மாநிலக் கணக்காயர்’ அலுவலகத்தால் நடத்தப்படும் நெடுஞ்சாலைத் துறைக்கான கோட்டக்கணக்கர் தேர்வில் மாநிலக் கணக்காயருக்கு பணம் கொடுத்து ஏராளமான பேர் தேர்வு ஆகியுள்ளனர் என்பது  தெரியவந்ததும் அவர்களுடைய விடைத்தாள்கள் ஹைதராபாத்தில்  உள்ள புலனாய்வு ஆய்வகத்திற்கு அனுப்பி பரிசோதிக்கப்பட்டு ஊழல் நிரூபணம் ஆனதை  CBI தெரிவித்த பிறகும் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு வழக்கறிஞர் ரவி அனுப்பிய புகாரும்  கிடப்பில்   போடப்பட்டுள்ளது. முதலமைச்சரின் தலையீடு தான் இதற்கெல்லாம் காரணம் என தெரிய வருகிறது!

நெடுஞ்சாலைத் துறையில் CBI என்றால் அஞ்சுவதும், DVAC (மாநில லஞ்ச ஒழிப்புத் துறை) என்றால் தைரியம் கொள்வதும் ஏன் என்று நமக்குப் புரிகிறது. இப்பொழுது கூட கிசான் சம்மான் நிதியை கோடிக்கணக்கில் தகுதியற்ற பெயர்களில்  மத்திய அரசு  நிதியை கொள்ளை அடிக்கும் செயல்  வெளிப்பட்டவுடன்  CBI வந்துவிடக்கூடாது என்பதற்காக மாநில அரசு கட்டுப்பாட்டிலுள்ள  CB-CID நடவடிக்கை எடுப்பது போல காட்டிக் கொள்கிறது. கொலை போன்ற குற்றங்களில் போஸ்ட் மார்ட்டம் என்பது முக்கியமான ஆவணம். போஸ்ட் மார்ட்டம் செய்பவர்கள் தேர்ந்த மருத்துவர்கள். அவர்களால்தான் இறப்பிற்கு  காரணம் என்ன என்று துல்லியமாகச்  சொல்ல முடியும். அதை வைத்துதான் நீதிமன்றம் சரியானத்  தீர்ப்பை வழங்கமுடியும். அதே போன்றுதான் நெடுஞ்சாலைத் துறை  பணிகளில் ஊழல் குற்றச்சாட்டு வந்தால் ‘தேர்ந்த பொறியாளர்கள்’ பணியினை மறு ஆய்வு செய்தும்  மதிப்பீடுகளையும் ஒப்பந்த ஆவணங்களையும் நன்கு ஆய்வு செய்தும்  வழங்குகிற  அறிக்கையின் அடிப்படையில்  தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கினை நடத்தி ஊழல் குற்றவாளிகள் தண்டிக்கப் படுவதற்கு வகை செய்ய வேண்டும். இதெல்லாம் மூத்த காவல் துறை அதிகாரி தலைமையில்  இயங்கும் தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்பு துறைக்குத்  தெரியாதா… தெரியும். ஆனால் ஆட்சியாளர்களின் கொள்ளைகள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் அவர்களுக்கு அப்படியொரு அக்கறை!  இந்த கொள்ளைக்கு தீர்வு எப்போது ஏற்படும் எனத் தெரியவில்லை!

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time