பிரபாகரன் மகள் துவாரகாவா? உண்மை என்ன?

-சாவித்திரி கண்ணன்

பேசிய பெண் பிரபாகரனின் மகளா? அதை உறுதிபடுத்த பழ.நெடுமாறனும், கவிஞர் காசி ஆனந்தனும் மெனக்கெடுவதின் பின்னணி என்ன? இலங்கை தமிழர்களுக்கு பாஜக அரசின் உதவியை பெற்றுத் தரும் நகர்வுகள் பலனளிக்குமா? இந்திய உளவுத் துறைக்கும் இந்த விவகாரத்திற்கும் என்ன தொடர்பு..?

”விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், அவருடைய மனைவி மதிவதனி, மகள் துவாரகா ஆகியோர் நலமுடன் இருக்கிறார்கள், அவர்கள் உரிய நேரத்தில் வெளிப்படுவார்கள்” என உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் கடந்த பிப்ரவரி மாதம் 13-ம் தேதி தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் தமிழகம் மட்டுமில்லாது, உலக அளவில் கடும் கண்டனத்திற்கு உள்ளானது!

இந்த நிலையில், இந்த அறிவிப்பு குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின்  அரசியல் துறையின் முன்னாள் பொறுப்பாளரும், தற்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான தயா மோகனிடம் பிபிசி தமிழ் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன் பேசியதில் அவர்,

”இது மக்களை குழப்புவதற்கான அறிவிப்பு. சமீபத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது சில நாடுகள் தடைகளை விதித்திருக்கின்றன. தடையை நீட்டிப்பதற்கான முன் முயற்சியாகத்தான் இதை நான் பார்க்கிறேன். 13 ஆண்டுகளுக்கு முன்பாக, பிபிசியின் மூலமாக பிரபாகரன் இறந்ததை நாங்கள் உறுதிசெய்தோம். நாங்கள் போர்க்களத்தில் இருந்தோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நேரமும் தொடர்பில் இருந்தோம். எங்களுக்குத் தெரியாத செய்தி, இந்தியாவில் இருந்த இவர்களுக்கு எப்படித் தெரியுமெனத் தெரியவில்லை.

பிறகு நான் பிபிசி மூலம் அந்தச் செய்தியை அறிவித்தேன். இப்போது அவர்கள் செய்வது மக்களைக் குழப்பும். எதிரியைத் தூண்டிவிடும். இப்போதுதான் கொஞ்சம் மீண்டு, புனர்வாழ்வு பெற்றிருக்கும் அவர்கள் மீது எதிரிப் படையின் கண்காணிப்பை தொடர்ந்து தக்கவைக்கும். அதுதான் இந்த அறிவிப்பின் மூலம் நடந்திருக்கிறது” என்றார்.

”பிரபாகரன் உட்பட அவரது குடும்பத்தினர் அனைவரும் அழிந்து போனதாக கூறினார்கள். இப்போது அவரது மகள் வந்து உலக மக்கள் முன்பாக பேசி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதை அவராக வந்து செய்திருக்க முடியாது. பின்னணியில் பிரபாகரன் இருக்கிறார் என்பது தான் உண்மை. இந்த உரையை கேட்ட மக்கள் எல்லோருக்கும் ஓர் எழுச்சியும், நம்பிக்கையும், புத்துணர்வும் ஏற்பட்டுள்ளது. இளவேங்கை உறுமியிருக்கிறது. சினவேங்கை விரைவில் உறுமும்…”என தெரிவித்தார்!

பிரபாகரன் உயிரோடு இருக்கும் வரை நவம்பர் 27 ஆம் தேதி மாவீரர் உரை ஆற்றி வந்தார்! 1989 முதல் 2008 வரை சுமார் 20 ஆண்டுகள் அந்த உரையை பலரும் கேட்டிருப்பார்கள்! அந்த உரையில் ‘சமகால உலக அரசியல் சூழலில் தமிழ் ஈழப் போராட்டத்தின் திசை வழியும், அணுகுமுறையும் என்ன’ என்பது வெளிப்படும். தற்போது பிரபாகரன் மகளாக தன்னைச் சொல்லிக் கொள்பவரால் குறைந்தபட்சம் ”விடுதலைப் புலிகள் மீதான தடை இந்திய அரசு விலக்கிக் கொள்ள வேண்டும்” என வேண்டுகோள் வைக்கக் கூட துணிவில்லை!

எங்களுடன் தனித்து நின்று போர் புரிய திராணியற்ற சிங்கள அரசு, சக்தி வாய்ந்த நாடுகளை வளைத்து தங்கள் பக்கம் ஈர்த்துக் கொண்டது. போர் நிகழ்ந்த பகுதிகளில் ஆசை வார்த்தை கூறி நம்பிக்கையை ஊட்டிய உலகின் சக்தி வாய்ந்த நாடுகள், ஐ.நா மன்றம் இன்று வரை எங்களுக்கு தீர்வை வழங்கவில்லை. எனச் சொல்லும் அவரால், ‘இந்தியா உள்ளிட்ட நாடுகள் இலங்கை அரசுக்கு உதவியது’ என சொல்ல முடியவில்லை என்பது கவனத்திற்கு உரியது!

‘’எங்களது மக்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தாலும், எமது சுதந்திரத்துக்கான அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான அரசியல் போராட்டம் உயிர்ப்போடு தான் உள்ளது “ என அவர் சொல்லும் போது, விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்தியாவில் தடை செய்வதற்கு இந்திய அரசுக்கு தேவைப்படும் காரணத்தை அவர் ஏற்படுத்திக் கொடுக்கிறார் என்பது தான் முக்கிய செய்தியாகும்.

மேலும் பழ. நெடுமாறனின் சகாவான ஈழக் கவிஞர் காசி ஆனந்தன், ”இந்திய அரசின் உதவி மற்றும் அனுசரணையுடன் தமிழ் ஈழ பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்” என்ற நம்பிக்கையை விதைக்கிறார். இவர் தான் கடந்த பிப்ரவரி மாதம், ”விடுதலைப் புலிகளின் தலைவரின் மனைவி மதிவதனி மற்றும் துவாரகா தங்கள் குடும்பத்தை கவனிக்க சுவிட்சர்லாந்தில் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு நிதி சேர்த்ததாக கூறிய தகவல் எனக்கு வருத்தமாக இருந்தது” எனப் பேசினார். இதைவிட பிரபாகரனையும் அவர் குடும்பத்தையும் இழிவுபடுத்த முடியாது என்பது ஒருபுறம் இருக்க,

இதன் மூலம் நமக்கு எழுகின்ற முக்கிய கேள்விகள் சில; அப்படியானால், விடுதலை புலிகளின் பினாமியாக இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா, நார்வே போன்ற நாடுகளில் பெரும் வியாபார நிறுவனங்கள், பெட்ரோல் பங்குகள், ஷாப்பிங் மால்கள் போன்றவை வைத்து செயல்பட்டவர்கள் இன்று அவர் குடும்பத்தை கூட கவனிக்காமல் பிச்சை எடுக்க விட்டுவிட்டனர் எனச் சொல்வதாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

உலகின் போராளி இயக்கங்களில் மிகப் பெரிய பணபலம், ஆயுத பலம் கொண்டு இயங்கிய இரண்டாவது பெரிய இயக்கமாக சர்வதேச அளவில் அறியப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பல லட்சம் கோடி சொத்துக்களை பராமரித்தவர்கள் இன்று இலங்கையில் சிங்கள அரசின் ஒடுக்குமுறை மற்றும் பாரபட்சத்தால் வறுமையில் உழலும் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றக் கூட உதவத் தயாரற்றவர்களாக உள்ளனரே ஏன்?

இந்தியாவிலேயே கூட, சீனாவால் பாதிக்கப்பட்ட திபெத் அகதிகளுக்கு குடியுரிமை கொடுத்த இந்திய அரசு இங்குள்ள இலங்கை அகதிகள் சுமார் 80,000 பேரை 30 ஆண்டுகளுக்கும் மேலாக குடியுரிமை தராமல், அகதி முகாம்களில் திறந்த வெளிச் சிறையில் வைத்துள்ளதைப் போல நடத்தி வருகிறது! அவர்களுக்கு மனிதாபிமானம் காட்ட வக்கில்லாத – அதற்கு முயற்சி செய்யாத – தமிழர் தலைவர்களாக வலம் வருபவர்கள் இன்னும் விடுதலைப் புலிகள் பெயரால் ஆதாய அரசியலை – அவர்களின் மொழியிலேயே சொல்ல வேண்டும் என்றால், துரோக அரசியலை முன்னெடுப்பது வேதனை தரக் கூடியதாக உள்ளது.

தமிழ் நாட்டில் பாஜகவின் செல்வாக்கை அதிகரிக்க இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் கரிசனம் கொண்டவர்கள் போல பாவனை செய்யும் ஒரு அரசியலை முன்னெடுத்து அதற்கான ஆட்களை இயங்க வைத்துக் கொண்டுள்ளது பாஜக என்ற பின்னணியை உணர்பவர்களுக்கு இந்த துவாரகா விவகாரம் எந்த குழப்பத்தையும் உருவாக்க வாய்ப்பில்லை! மேலும், பிரபாகரனின் அண்ணன் மகன் கார்த்திக் மனோகரன் அவர்களே, ”பேசிய பெண் என் தங்கை துவாரகா இல்லை! என் சித்தப்பாவும், சித்தியும் உயிரோடு இல்லை” என உறுதிபடக் கூறியுள்ளதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது!

பிரபாகரன் உயிரோடு இருக்கும்பட்சத்தில் அவர் சர்வதேச ஊடகங்களின் பார்வையில் இருந்து 14 ஆண்டுகள் தப்பி இருக்க முடியாது என்பது மாத்திரமல்ல, அமெரிக்கா, சீனா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளின் உளவுத் துறைகளின் கண்களில் இருந்து அவர் தப்பி இருக்கவே வாய்ப்பில்லை!

இலங்கையிலும் இங்குமுள்ள ஈழத் தமிழ் ஆதரவாளர்கள், ‘நாம் இந்து, பாஜக இந்துக்களை ஆதரிக்கும் கட்சி. ஆகவே பெளத்த மத பின்னணி கொண்ட சிங்கள அரசை எதிர்க்க பாஜகவின் உதவியை பயன்படுத்துவது தான் ராஜ தந்திரம்’ என காய் நகர்த்தி, ஆர்.எஸ்.எஸ் சூழ்ச்சிக்கு பலியாகிக் கொண்டுள்ளார்கள்! ஆனால், இவர்கள் ஒரு உண்மையை உணரத் தவறுகின்றனர். இந்த விவகாரத்தில் இலங்கை தமிழர்களுக்கு உதவுவது என்பதில், தமிழர் என்ற இன உணர்வை அங்கீகரிக்கும் ஒரு மனப் பக்குவம் தேவை! அது பாஜகவிடம் சுத்தமாக இல்லை என்பது மட்டுமல்ல, அது இன உணர்வையே பகையாக பாவிக்கும் கொள்கையுள்ள இந்திய தேசிய மேலாதிக்கச் சிந்தனை கொண்ட கட்சி என்ற யதார்தத்தை மறந்து விடுகிறார்கள் அல்லது மறைத்துப் பேசுகிறார்கள்!

அது ‘இலங்கையைத் தமிழர்களுக்காக துண்டாடினால், அது தமிழகத்திலும் பெரிய எதிர்விளைவை ஏற்படுத்தி, இந்திய தேசியத்திற்கு நெருக்கடி தரும்’ என சிந்திக்கும் தேசியக் கட்சி என்பதை கூட உணர முடியாதவர்கள் அரசியலுக்கே தகுதியற்றவர்கள்!

இது பாஜக அரசின் உளவுத் துறை இயக்கத்தில் நடத்தப்படும் நாடகம். இந்த நாடகத்திற்கு துணை போகுமளவுக்கு அவல நிலை சிலருக்கு ஏற்பட்டுள்ளது! ‘ஐயோ, பரிதாபம்’! தமிழ் இன உணர்வை ஒரு காலத்தில் அரசியல் வெற்றிக்கான சூத்திரமாகப் பயன்படுத்தி, சில கட்சிகள் தமிழர்களை காயடித்தது போல, தற்போது பாஜகவும் செய்யப் பார்க்கிறது! அவர்களுக்கும், அதற்கு துணை போகிறவர்களுக்கும் ”ஐயோ பாவம்” என்பதை சொல்லி வைப்போம்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time