உயர்வு, தாழ்வு, சாதி பேதங்களற்ற நிகழ்வாக நடக்க வேண்டிய கோவில் திருவிழாக்கள் பட்டவர்த்தனமாக பாகுபாட்டை வெளிப்படுத்தும் விழாவாக மாறி வருவது சமீபத்திய அதிர்ச்சி! ஆந்திராவின் திருப்பதி, கேரளாவின் சபரிமலை ஆகிய தளங்களில் கூட இல்லாத ஒரு அநீதி, தமிழ்நாட்டில் மட்டும் சாத்தியமாவது ஏன்?
தமிழ்நாடு ஒரு போலீஸ் ஸ்டேட்டாக மாறிக் கொண்டிருக்கிறதோ என்ற ஐயப்பாடு சமீபத்தில் திருவண்ணாமலை மகா தீபத் திருவிழா சென்ற அனைவருக்குமே ஏற்பட்டது! சமீப காலங்களில் தீபத் திருவிழா நிகழ்வில் காவல்துறை கெடுபிடிகள் அதிகரித்து வருவதை எல்லோரும் உணர முடிந்தாலும், திமுக அரசு பதவி ஏற்றது முதல் தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை நகரம் மற்றும் கோவிலை சுற்றி காவல்துறை கெடுபிடிகள் மிக அதிகமாக கொடி கட்டிப் பறக்கிறது என்பதே பக்தர்களின் அனுபவமாக உள்ளது!
இது தொடர்பான புகார்கள் மாவட்ட அமைச்சர் எ.வ.வேலுவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவருமே கூட, தீபத் திருவிழா ஆலோசனை கூட்டத்தின் போது ”திருவிழாவின் போது பொதுமக்களுக்கு இடையூறாக போலீஸ் வாகனங்கள் அடிக்கடி குறுக்கும், நெடுக்குமாக சென்று வருவதை தவிர்க்க வேண்டும்’’ என்று வேண்டுகோள் வைத்த போதிலும், சிறிதளவு கூட எந்த மாற்றமும் இன்றி, ஆண்டுக்காண்டு கெடுபிடிகள் அதிகரித்து வருவதாகவே பக்தர்கள் வேதனைப்படுகின்றனர்!
வடக்கு மண்டல ஐ.ஜி கண்ணன் தலைமையில் 4 டி.ஐ.ஜி!
27 போலீஸ் சூப்பிரண்டுகள்! 12 ஆயிரம் போலீசார்!
ஒவ்வொரு உயர் அதிகாரிக்கும் பாதுகாப்புத் தர அவர்களது வாகனத்தின் பின்புறம் சென்ற அதிரடிப் படை வீரர்களின் அதிவேக வாகனங்கள்!
எல்லா பகுதிகளிலும் சாலையை மறிக்கும் பேரிகார்டுகள்!
எங்கெங்கு காணினும் காக்கி சட்டைகள்!
எதற்காக இத்தனை போலீசார் குவிப்பு!
ஏன் பார்க்கும் இடங்களில் எல்லாம் பேரிகாடுகள்!
அத்தியாவசிய தேவைக்காக உள்ளூர் மக்கள் இருசக்கர வாகனங்களில் சென்று வர முடியாத அளவிற்கு ஆங்காங்கே தடுப்பு அமைக்கப்பட்டு ஏகக் கெடுபிடிகள்!
காவல்துறையும், அதிகார வர்க்கமும் மட்டுமே சுதந்திரமாக நடமாட முடிகிறதென்றால், மக்களின் மனதில் எழுந்த கேள்வி நடக்கும் திருவிழா என்பது மக்களுக்கானதா? அதிகாரிகளுக்கானதா? என்பதே!
வார்த்தைக்கு வார்த்தை ”தமிழகம் அமைதி பூங்கா” என்கிறார்கள் தமிழக ஆட்சியாளர்கள்! எனில், இங்கே கடவுளுக்கும், பக்தனுக்கும் இடையில் காவல்துறைக்கு என்ன வேலை?
மக்களுக்கு பாதுகாப்பு காவல்துறை என்பது போய், கடவுளை பாதுகாக்க காவல்துறை என்ற முஸ்தீபில், காவல்துறையினர் அதிக அட்வாண்டேஜ் எடுத்துக் கொண்டு கடவுளையே தங்களுக்கானவர் என்றாக்கி, தாங்களும் தங்கள் குடும்பம் உறவினர்களுக்கே அனைத்து வாய்ப்புகளும் என்று திருவிழாவின் போக்கையே திசை திருப்பிக் கொள்கின்றனர்.
இவை குறித்து அவர்களிடம் சிறிதளவு கூட குற்றவுணர்வு இல்லை! மாநில அரசால் – அந்த மண்ணுக்கான அமைச்சரால் கூட – இவர்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை! முதலமைச்சர் செல்லுக்கு அனுப்பட்ட புகார்களுக்கு எந்த மதிப்பும் இல்லை!
பெரிய போலீஸ் அதிகாரிகள் தங்கள் ஜபர்தஸ்சை பொதுவெளியில் நிலை நாட்ட தங்களுக்கான பாதுகாப்பு என்ற பெயரில், ஒவ்வொருவருக்கும் தலா 25 ஆயுதப்படை காவலர்கள் சூழ வந்தது தான் கொடுமை!
ஆணவத்தை தொலைத்துவிட்டு அடைக்கலமாக வேண்டிய இறை சன்னிதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட வந்ததையே மறந்தவர்களாக அதிகாரிகள் அதிகாரத் தோரணை செய்வதை என்னென்பது? இது போன்ற அதிகாரிகளை கட்டுப்படுத்தத் தான் ஆட்சியாளர்கள்! ஆனால், ஆட்சியாளர்கள் அதிகாரிகளை கட்டுப்படுத்தி வழி நடத்த முடியாதவர்களாக உள்ளனரா? தமிழகத்தை பொறுத்த வரை காவல்துறை என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? இல்லையா? என்ற சந்தேகம் தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகளில் வெளிப்பட்ட வண்ணமாக உள்ளது! வரவர தமிழகம் உத்திரபிரதேசம், குஜராத் ஆகியவற்றை நினைவு கூறத்தக்கதாக மாறி வருகிறது!
முந்தைய காலங்களில் பரணி தீபம் மற்றும் அர்த்தநாரீஸ்வரர் காட்சி தருவதை தரிசிக்க சாதாரண பக்தர்கள் எந்தக் கெடுபிடியுமின்றி அனுமதிக்கப்பட்டு வந்தனர். பின்னர், மத்தியில் பாஜக ஆட்சி வந்தது தொடங்கி அதன் எதிரொளியாக கடந்த சில ஆண்டுகளாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது! யதார்த்தத்தில் கட்டளைதாரர் மற்றும் உபயதாரர் சுமார் 150 லிருந்து 200 பேர் வரை இருக்கலாம். ஆனால், இவர்களைக் கூட அனுமதித்ததாகத் தெரியவில்லை. சுமார் 2,500 பேர் வரை அதிகார வர்க்கத்தை சார்ந்தவர்களே இங்கே அனுமதிக்கபடுகின்றனர். ‘ஆன்லைனில்’ கட்டணம் செலுத்தி வந்தவர்களை மிக குறுகலான கயிறு கட்டப்பட்ட வரிசையில் மணிக்கணக்கில் காக்க வைக்கப்பட்டு அலைக்கழித்தனர்!
Also read
ஆக, ஏழை, எளிய, நடுத்தர வர்க்க பக்தர்களுக்கு மகா தீப தரிசனம் என்பதை அருகிருந்து பார்ப்பது எட்டாக்கனியாகிவிட்டது என்பது மட்டுமல்ல, அவர்கள் அங்கே ஒரு ஜந்துவைப் போல அதிகாரவர்க்கம் டிரீட் பண்ணுவது தான் பக்தர்களை புண்படுத்துகிறது! இறைவனின் சன்னிதி என்பது அனைவருக்கும் பொதுவானதாக இல்லாமல் போய்விட்டது என்பதே பக்தர்களின் வேதனை குரலாக உள்ளது. அதே சமயம் முக்கிய பிரமுகர்கள் ராஜ மரியாதையுடன் சென்று பார்ப்பதை சகல பாதுகாப்பும் தந்து எளிமைபடுத்தி இருக்கின்றனர்! சமூக நீதி என்பது கோவிலிலேயே இல்லாவிட்டால், சமூகத்தில் எப்படி சாத்தியமாகும்?
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
இந்த அரசு பாவம்
போலீஸ் ராஜ்யம் நடக்கிறது. அரசு ஆதரவின்றி இது சாத்தியமில்லை. ஆதிக்க மனப்பான்மை கொண்ட அரசு என்பது அனைத்திலும் வெளிப்படுகிறது.பி.ஜே.பி.க்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம். அரசு அடக்குமுறை கருவி என்பதை நிரூபிக்கின்றன ரஷ்.
அரசியல். லாபத்திற்காக அலையும் சிலரின்
மூலம் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை.
நல்லவரெல்லாம்
நலம் பெறவே
அண்ணாமைலையார்
எங்கே உதவுகின்றார்?
பொய்யும் புரட்டும்
மோசடியும்
புரிவோரே இங்கு
வாழ்கின்றார்.
மெய்யும் ஞானமும்
வேண்டுபவர்
மேனிகெட்டு மனம்
நொந்தார்
அய்யா…….அண்ணாமலையாரே!
எங்கே உண்மையாய்
உள்ளா யோ?…………..!!??
திருவண்ணாமலை கார்த்திகை தீப விழாவில் போலீஸ் கெடுபிடி என்ற கருத்து படும்படியான கட்டுரை படித்ததும் என்னுள் எழுந்த எண்ணம்:
கோயில் வளாகத்தில் சமூகநீதி இல்லை என்ற விதத்தில் கட்டுரை முடிக்கப்பட்டுள்ளது.
என்னை பொருத்த மட்டில் சமூக நீதி முக்கியமாக தேவைப்படும் இடங்கள் என்னவென்றால் கல்வி வாய்ப்பு, , வேலைவாய்ப்பு. மக்கள் பிரதிநிதித்துவம்.
இதைத் தவிர வேறு எங்கும் சமூக நீதி தேவையில்லை. மற்ற இடங்களில் தேவை என்று சொல்லப்படும் பட்சத்தில் இந்த சமூக நீதியின் முக்கியத்துவம், பொருள் வலுவிழந்து நீர்த்துபோய் விடும்.
கோவில் என்பது மூடநம்பிக்கையின் கூடாரம். அத்தகைய கூடாரத்திற்கு எல்லோரும் முண்டியடித்துக் கொண்டு போவது என்பது அபத்தத்திலும் அபத்தம். கோவில் எனும் மூடநம்பிக்கை கூடாரத்திற்கு போகிற அத்தனை பேரும் பேராசை பிடித்தவர்கள் மற்றும் வாழ்க்கை பயம் கொண்டவர்கள். இவர்களிடையே உழைக்கும் பாமர மக்கள் போய் சிக்குண்டு அவதிப்படுவது அவர்களது அறியாமைக்கு கிடைக்கும் தண்டனை.
அதை அவர்கள் அனுபவித்து தான் ஆக வேண்டும்.
கூட்டம் கூடாமல் இருந்தால் போலீஸ் கெடுபிடிக்கு வேலை இல்லை. திருவண்ணாமலையை பொறுத்தவரையில் ஒரு மூட நம்பிக்கை உண்டு. .திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி கிட்டும் என்று.
இதை நம்புகிறவர்கள் ஏன் திருவண்ணாமலைக்கு நேரில் செல்ல வேண்டும்? வீட்டில் இருந்து நினைத்தாலே போதுமே அவர்களுக்கு வேண்டிய முக்தி மற்றும் இதர பயன்கள் எல்லாம் கிட்டுமே அதை ஏன் அவர்கள் செய்வதில்லை? ஆக எந்த கடவுள் நம்பிக்கை மீதும் அவர்களுக்கு முழு நம்பிக்கை இல்லை. அடுத்ததாக 365 நாளும் கோயில் கூட்டம் இன்றி இருக்கும் அல்லவா. அப்பொழுது ஒரு நாள் செல்லலாமே. இந்த அறிவு எல்லாம் இல்லாமல் செயல்படுபவருக்கு நாம் வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிறோம். தேவையில்லாமல் அரசை சாடி வருகிறோம். கூட்டம் இல்லாமல் போனால் போலீசுக்கு வேலையில்லை, ஆயுதப்படைக்கு வேலை இல்லை. கூட்டம் கூடுவதால் தான் இந்த பிரச்சனைகள் எல்லாம்.
வேலை வாய்ப்பு தேடி, கல்வி வாய்ப்பு தேடி கூட்டம் கூடினால் அதை ஆதரிக்கலாம்.
.அதை விட்டு கடவுளை தேடிச் செல்லும் மனிதர்களுக்கு வக்காலத்து வாங்கும் கட்டுரைகள் தேவை இல்லை என்று தான் நினைக்கின்றேன். மக்களின் முட்டாள்தனத்தை தான் நாம் சாட வேண்டும். போலீஸ் படையை விட மக்கள் கூட்டம் அதிகம்தானே, அவர்கள் ஒன்று கூடி போலீஸ் அராஜகத்தை தட்டி கேட்கலாமே. மக்கள் வெகுண்டு எழாத வரை அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் கொட்டம் அடங்காது.
எரிகிறதை பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும். கோவிலுக்கு செல்வதை நிறுத்தினால் கோவிலை வைத்து பிழைப்பு நடத்துவோரின் கொட்டம் அடங்கி உழைப்பதற்கு வெளியே வருவார்கள். மூடநம்பிக்கை தவிர்த்து அறிவுடன் செயல்படும் மக்களுக்கு அறிவுறுத்துவோம்.
மூடநம்பிக்கை சார்பாக விழாக்கள் கூட்டங்கள் இவற்றை தவிர்த்தாலே அரசின் கவனம் மக்களுக்கான ஆக்கபூர்வமான திட்டங்களுக்கு செலவிட பயன்படும். மக்கள் திருந்த வேண்டும் திருந்தினாளால் அரசாங்கம் திருந்தும்.