தெலுங்கானாவில் பி.ஆர்.எஸ்சை வீழ்த்தும் காங்கிரஸ்!

-சாவித்திரி கண்ணன்

அமோக வாக்கு பதிவு! பி.ஆர்.எஸ்கடைசி நேர தில்லுமுல்லுவில் ஈடுபட்டது! உண்மையில், மூன்று மாதத்திற்கு முன்பிருந்த நிலை முற்றிலும் வேறு! அது, கேசிஆரை வீழ்த்துவது முடியவே முடியாது என்ற தோற்றம்! ஆனால், இந்த மூன்று மாதத்தில் என்னவோ மாயாஜாலம் நடந்தது போல, காங்கிரசின் எழுச்சி சாத்தியமானது! 

தேர்தலுக்கு முன்னும், பின்னுமான கருத்துக் கணிப்புகளும் காங்கிரசின் வெற்றியை உறுதிபடுத்துகின்றன!

காங்கிரசின் வீரியமான பிரச்சார பலம், கள வேலைகள், அரசியல் ராஜ தந்திரங்கள், வியூகங்கள் போன்றவை மட்டுமல்ல, பி.ஆர்.எஸுமே தனக்குத் தானே தன் செயல்பாடுகள், பேச்சுக்கள் வழியே குழிதோண்டிக் கொண்டது!

ஒரு பக்கம் பாஜகவுடன் ரகசியக் கூட்டு, மறுபக்கம் அதன் பி.டீம்மான ஓவைசியுடன் நேரடிக் கூட்டு என அம்பலப்பட்டுவிட்ட கே.சி.ஆரின் ஆட்டம் முடிவுக்கு வருகிறது…!

வறுமையின் கோரப்பிடியில் உழன்ற மாநிலத்திற்கு பொறுப்பேற்று ஆட்சிக்கு வந்த பி.ஆர்.எஸ் கட்சி 10 ஆண்டுகளில் வளமான மாநிலமாக தெலுங்கானாவை மாற்றிவிட்டதாக மார் தட்டுகிறது. உண்மை தான்! பகட்டான புதுப்புது பணக்காரர்களை நிறையவே உருவாகி இருக்கிறார்கள்! ஏகப்பட்ட கார்கள், பளபளச் சாலைகள், புதுப்புது திட்டங்கள், விழாக்கள்… என அமர்க்களப்படுகிறது தெலுங்கானா!

ஆனால், சராசரி மனிதன் சந்தோஷமாக இல்லை. விவசாயிகள், தொழிலாளிகள், ஏழை, எளியோர் வேதனையில் உழல்கின்றனர். 10 வருடத்தில் ஐந்து லட்சம் கோடி வெளிநாட்டுக் கடன்களை வாங்கி, அதில் பெரும் ஊழல்களை நிகழ்த்தி, தன் குடும்பத்தை பகிரங்கமாக ராஜ வம்சமாக்கி, மக்களை கடனாளியாக்கிவிட்டார் கே.சி.ஆர். அரசு வேலை வாய்ப்புகளை குறைத்துவிட்டார்!

சட்டமன்றத்தில் மெஜாரிட்டி இருந்தும், எல்லா கட்சிகளில் இருந்தும் எம்.எல்.ஏக்களை விலைபேசி தூக்கினார்! அசைக்க முடியாத அதிகார மையமாக தன் குடும்பத்தை அடையாளப்படுத்தினார்! எத்தனை ஊழல், முறைகேட்டில் ஈடுபட்டாலும், அமலாக்கத் துறையை ஏவாமல், மறைமுக ஆதரவு தரும் ரகசியக் கூட்டாளியாக பாஜக இருப்பதை கடைசி வரை காட்டிக் கொள்ளாமல் பாஜக எதிர்ப்பாளராக ஒரு வீரத் தோற்றத்தை உருவாக்கி அவர் வலம் வந்தது கேசிஆரின் மிகப் பெரிய சாதனை தான்!

ஆனால், அதை அதிரடியாக அம்பலப்படுத்தி, கேசிஆரின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டிவிட்டது தான் காங்கிரசின் வெற்றிக்கு பாதை போட்டுவிட்டது!

பாஜகவின் ரகசியக் கூட்டாளி

தேர்தல் பிரச்சாரத்தில் பி.ஆர்.எஸ் தலைவர்களே தங்களையும் அறியாமல் தங்களை அம்பலப்படுத்திக் கொண்டது அதைவிட ஆத்தண்டிகேஷன் ஆயிற்று!

‘’ராகுல்காந்தி எங்களை ஊழல் பேர்வழிகள் என்கிறார்! அது பொய், மத்திய அரசின் மதிப்பீட்டின்படி தெலுங்கானா தான் ஊழல்குறைந்த மாநிலம்” எனப் பேசினார் கே.சி.ஆரின் மகள் கவிதா! இதைவிடக் கூடுதலாக, ‘’நாங்கள் சொல்லித் தான் பாஜக அரசு இதைச் செய்தது, அதை செய்தது, மத்திய ஆட்சியாளர்களுக்கே நாங்கள் தான் முன்மாதிரியாகத் திகழ்கிறோம்’’ என வாய்விட்டார் கே.சி.ஆர்! ஆக, பூனைக்குட்டி வெளியே வந்த கதை தான்!

கேசிஆர் குடும்பம் ஒரு அதிகார மையமாக உருவானது பட்டவர்த்தனமாக அனைத்து அம்சங்களிலும் வெளிப்பட்டது! அது மக்களிடம் அதிருப்தியை வளர்த்தது!

கேசிஆரை பொறுத்த வரை அவர் எல்லோருக்கும் பொதுவானவர் போல ஒரு தோற்றத்தை காட்டியதும் பொய்யாகிவிட்டது! இஸ்லாமியர்கள் மீது பாசமுள்ளவர்கள் போலப் பேசினார். ஆனால், தேவையில்லாமல் இஸ்லாமியர்களை கண்டபடி கைது செய்து சிறைச் சாலைகளை நிரப்பினார்! ”மாநிலத்தில் 13 சதவிகிதமாக உள்ள இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு கண்டிப்பாகத் தருவேன்” என்றார். ஆனால், பத்தாண்டுகள் ஆட்சியில் தொடர்ந்தும் அது குறித்து சிறிதும் முயற்சியின்றி கைவிட்டுவிட்டார்! அதே போல, ‘தலித்துகளை நேசிப்பவர் போல’ தோற்றம் காட்டி, அவர்களை அதிகமாகவே ஒடுக்கினார். ’17 சதவிகிதம் உள்ள தலித்துகளுக்கு அவர் ஆட்சியிலும் சரி, கட்சியிலும் சரி போதுமான முக்கியத்துவம் இல்லை’ என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிந்துவிட்டது.

போராட்டங்கள் மூலமே தன்னை வளர்த்துக் கொண்ட கேசிஆர், மக்கள் போராட்டங்களை ஒடுக்கி மாநிலத்தை ஒரு போலீஸ் ஸ்டேட்டாக மாற்றி, மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியாமல் செய்தார்!

அதனால் தான் தற்போது இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருமனதாக காங்கிரசை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது.

காங்கிரசின் எழுச்சி!

ரேவந்த் ரெட்டி காங்கிரஸ் தலைவராக்கப்பட்டதில் இருந்து காங்கிரஸ் மிகுந்த உயிர்ப்புடன் மக்களுக்கான போராட்டங்களை அறித்து களமாடும் கட்சியாக மாறியது. தங்களுக்கான கட்சியாக மக்கள் காங்கிரசை அடையாளம் காணுமளவுக்கு காங்கிரசின் செயல்பாடுகள் அமைந்தன! அத்துடன் பாஜகவில் இருந்த சக்தி வாய்ந்த ரெட்டி சமூகத்து தலைவர்கள் எல்லாம் கூண்டோடு காங்கிரசுக்கு தாவினார்கள்! இது ஒரு வகையில் பொருளாதார ரீதியாகவும், சமூக அங்கீகார வகையிலும் காங்கிரசுக்கு பலம் சேர்த்தது என்றாலும், ரெட்டி சமூகத்தின் மேலாதிக்கம் கொண்ட கட்சி என்ற தோற்றத்தை உருவாக்கி இருப்பதும், அதன் விளைவாக 52 சதவிகிதம் உள்ள பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தின் சார்பில் காங்கிரசில் 23 வேட்பாளர்கள் மட்டுமே நிறுத்தப்பட்டிருப்பதும் ஒரு பின்னடைவாக உள்ளது.

இதன் தொடர்ச்சியாக பாஜகவில் இருந்து விஜயசாந்தி போன்ற பிரபல நட்சத்திர அரசியல்வாதி காங்கிரஸுக்கு வந்ததும், காங்கிரஸ் இமேஜை உயர்த்திக் காட்டியுள்ளது. காங்கிரசின் கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகள் மக்களிடையே வாக்குகளை அள்ளுவதற்கானதாக உள்ளதை புறந்தள்ள முடியாது என்றாலும், நடைமுறையில் அவற்றில் எத்தனை சதவிதத்தை சாத்தியப்படுத்த முடியும் என்பது பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது.

பி.ஆர்.எஸ்சின் சறுக்கல்;

கடந்த இரண்டு சட்டமன்றத் தேர்தல்களில் மக்களின் அபரிமிதமான ஆதரவை பெற்று இருந்த பி.ஆர்.எஸ் தலைமை, அதிகார மமதையில் ஆடாத ஆட்டத்தை எல்லாம் ஆடித் தீர்த்துவிட்டது. ஒரு பாஜக ஆட்சி எப்படி இருக்குமோ, அதை நடைமுறையில் நடத்தி காண்பித்தது தான் கே.சி.ஆரின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது! உயர்சாதியினருக்கு சலுகைகள், பிராமணர்களுக்கு அதிமுக்கியத்துவம், கோயில் சடங்குகள், நிகழ்வுகளுக்கு அபரிமிதமான செலவுகள், ஜோதிடம், ஜாதகம், பூஜை, புனஸ்காரங்களில் அளவுக்கதிகமான ஈடுபாடு ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்ந்தது பி.ஆர்.எஸ் கட்சி!

இத்துடன் நில்லாமல் காலேஷ்வரம் பாசனத் திட்டத்தில் 40,000 கோடிகள் ஊழல், ரிங் ரோடு முறைகேடுகள், மியாபூர் நில மோசடிகள், பிரஜா தர்பார் திட்ட மோசடி, மிஷன் காகித்தியா போலி பில் ஊழல் என ஊழலுக்கு மேல் ஊழல்! ‘எங்கும் ஊழல், எதிலும் ஊழல்’ என ஊழல் சாம்ராஜ்ஜியத்தின் மன்னாக வலம் வந்தார் கேசிஆர்!  காங்கிரஸ் எழுச்சி பெற்றுவிடக் கூடாது என்பதற்காக பாஜக கேசிஆரை அனுசரித்து ஆட்டம் போட அனுமதித்தது பாஜக! ஆனால், அதையே தன் வெற்றிக்கு சாதகமாக்கிக் கொண்டது காங்கிரஸ்! தோற்கப் போவது பி.ஆர்.எஸ் மட்டுமல்ல, பாஜகவும் தான்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time