ஆளுநர்களின் அதிகார ஆட்டங்கள்..! முடிவில்லா கதையா?

-சாவித்திரி கண்ணன்

சபாஷ்! அதிகார மமதையில் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிய ஆளுநரை சரமாரியாக கேள்விகள் கேட்டனர் நீதிபதிகள்! அவரது உள் நோக்கங்களை அம்பலப்படுத்தினர் ! சிறந்த முறையில் அறிவுறுத்தல்கள் தந்தனர்… எனத் தற்காலிக சந்தோஷத்தை கடந்து, இந்த வழக்கினால் வேறு முன்னேற்றம் உண்டா? செய்ய வேண்டியது என்ன?

ஆளுநர்கள் அரசியல் சட்டத்தை மீறி, மக்களாட்சியின் மாண்புகளை மீறி செயல்படுவதால், மாநில அரசின் செயல்பாடுகள் முடங்குவதால், விழிபிதுங்கி மாநில அரசுகள் மீண்டும், மீண்டும் உச்சநீதிமன்றத்தில் முறையிடுவதும், மீண்டும், மீண்டும் நீதிபதிகள் ஆளுனருக்கு கண்டனம் மற்றும் அறிவுறுத்தல்கள் தருவதுமாக.. போய்க் கொண்டே இருக்கிறது! இது தான் தெலுங்கானா கவர்னர், கேரள கவர்னர், டெல்லி கவர்னர், பஞ்சாப் கவர்னர், ..என எதிர்கட்சி ஆட்சி செய்யும் எல்லா மாநில கவர்னர் விவகாரத்திலும் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது!

அடிப்படையில் கூட்டாட்சி தத்துவத்தை மத்திய ஆட்சியாளர்கள் ஏற்கவில்லை! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்காமல் தங்கள் நாமினியான கவர்னர் மூலம் முடக்குகிறார்கள் என்பது தான் செய்தி!

தெலுங்கானா, கேரளா, டெல்லி, பஞ்சாப் கவர்னர்கள்!

ஒரு மாநில அரசு தவறாக செயல்படுகிறது என்றால், அதை எதிர்கட்சிகள் தட்டிக் கேட்கலாம், மக்கள் அமைப்புகள் தட்டிக் கேட்கலாம், கவர்னரே கூட அறிவுறுத்தலாம் தவறில்லை! ஆனால், கவர்னரே தவறாக செயல்படும் போது என்ன தீர்வு?

அவரை மாநில அரசுகளை எதிரிகளாக பாவிக்கும் மத்திய ஆட்சியாளர்கள் தான் வழி நடத்துகிறார்கள்! எனவே மாநில அரசுகள் கோர்ட்டில் சென்று மன்றாடுவதைத் தவிர வழியில்லை!  நீதிபதிகளும் கவர்னரை சரமாரியாக கேள்வி கேட்கலாம், கண்டனம் தெரிவிக்கலாம். அதே சமயம் மாநில அரசையே முடக்கும் வண்ணம் அவர் செயல்பட்டதற்கு தண்டனை தர முடியாது! குறைந்தபட்சம் அவரை பதவி இழக்க செய்யக் கூட முடியாது! ஒரு அளவுக்கு மேல் இதில் முன்னேறிச் செல்ல முடியவில்லை!

தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களை இரண்டு வருடம் நிலுவையில் வைத்திருந்தார் ஆளுநர் ரவி. இந்த மசோதாக்களை சட்டசபைக்கு திருப்பியும் அனுப்பவில்லை; இந்த மசோதாக்களை ஜனாதிபதிக்கும் அனுப்பவில்லை; விளக்கமும் கேட்காமல், அழைத்து விபரங்களும் கேட்டுத் தெளிவுபெறாமல், ஆட்சியாளர்களே தேடி வந்து விளக்கம் சொன்னாலும் அதில் முடிவெடுக்காமல், கிடப்பில் போட்டு வைத்தார் ஆளுநர் ரவி. இதற்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி அவசர வழக்கு தாக்கல் செய்தது.

உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச், ”மசோதாக்களை ஏன் நிறுத்தி வைக்க வேண்டும்? அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின் கீழ் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும்” என அறிவுறுத்தியது. இதனால், தம்மிடம் நிலுவையில் இருந்த 10 மசோதாக்களை உடனடியாக தமிழ்நாடு சட்டசபைக்கு ஆளுநர் ரவி திருப்பி அனுப்பினார். அதாவது திருப்பி அனுப்புவதற்கு அவருக்குள்ள உரிமையை பிரயோகிக்காமலே இரண்டு வருடங்களை கடத்திவிட்டு, நீதிமன்ற அறிவுறுத்தலுக்கு பிறகு திருப்பி அனுப்பினார். தமிழ்நாடு அரசும் சட்டசபை சிறப்பு கூட்டத்தைக் கூட்டி அனைத்து மசோதாக்களையும் 2-வது முறையாக நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது.

மாநில சட்டசபைகளில் 2-வது முறையாக மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு அனுப்பினால் ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும் என பல வழக்குகளில் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 2-வது முறையாக அனுப்பப்படுகிற போது, அந்த மசோதாக்களை ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்பும் அதிகாரத்தை ஆளுநர் இழந்து விடுகிறார் எனவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பெஞ்ச் அழுத்தம் திருத்தமாக தெரிவித்திருந்தது. ஆகவே, எந்த முடிவையும் எடுக்காமல் மீண்டும் கிடப்பில் வைத்தார் கவர்னர். அதனால் தமிழ்நாடு அரசு 2-வது முறையாக மீண்டும் நீதிமன்றத்தை அணுகியவுடன், அந்த மசோதாக்களை அவசர அவசரமாக ஜனாதிபதிக்கு ஆளுநர் ரவி அனுப்பி வைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது!

2-வது முறையாக சட்டசபையில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும். ஆனால், இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் உள்துறை அமைச்சகம் மூலமாக ஜனாதிபதிக்கு ஆளுநர் ரவி அனுப்பி வைத்திருப்பதாக தகவல் கிடைத்திருப்பதில் இருந்து கவனருக்கு பின்னணியில் இருந்து மத்திய அரசு, மாநில அரசை முடக்குவது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிய வருகிறது!

ஆளுநருக்கு சட்டத்தை செயலிழக்க வைக்கவோ, முடக்கி வைக்கவோ (Kill the Bill) அதிகாரம் இல்லை. மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதாக இருந்தால் ஆளுநர் முதலிலேயே அனுப்பி இருக்க வேண்டும். மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியாது. ஆளுநர் ஆர்.என். ரவி தரப்பில் குழப்பம் உள்ளது. இந்த விவகாரத்தில் ஆளுநர் தீர்வு காண வேண்டும். இல்லையெனில், நாங்கள் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் அல்லது அவர் முதல்வரை அழைத்து பேசி தீர்வு காண வேண்டும் என தலைமை நீதிபதி தெரிவித்ததானது, கவர்னர் குற்றவாளி எனத் தெரிந்தும் அவரிடமே கெஞ்சி தீர்வு காணச் சொல்வது போலத் தான் அமைந்துள்ளது!

ஒரு வகையில் இது இன்றைய இந்தியாவில் நீதித்துறையின் ஆளுமைத் திறனின் தோல்வி ஆகவும் தெரிகிறது! ‘இந்த மத்திய ஆட்சியாளர்கள் நீதிபதிகளையே பழி வாங்கக் கூடியவர்களாக உள்ளனர்! இங்கே நீதிபதிகளுக்கே பாதுகாப்பில்லை’ என்பது பல சம்பவங்களில் தெரிய வந்துள்ளதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த நேரத்தில் நாம் எதிர்பார்ப்பதெல்லாம் அடுத்து வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், ‘கவர்னர் பதவியை ஒழிப்போம்’ என அனைத்து மாநிலக் கட்சிகளும் ஒருமித்து முடிவு எடுக்க வேண்டும். ‘இதற்கு உடன்படுகிற தேசியக் கட்சிகளுடன் மட்டும் தான் கூட்டணி’ என அறிவிக்க வேண்டும். இதை பாஜகவிடம் நாம் எதிர்பார்க்க முடியாது. ஆகவே, காங்கிரஸ் கட்சி  மக்களுக்கு இந்த வாக்குறுதியைத் தர வேண்டும். அல்லது காங்கிரசிடம் இருந்து அந்த வாக்குறுதி கிடைத்தால் தான் கூட்டணி என இந்தியா கூட்டணியின் மாநில கட்சிகள் சொல்ல வேண்டும்! கவர்னர் பதவி ஒழிந்தால் மட்டுமே கூட்டாட்சி தத்துவம் சிறக்கும்! கவர்னர் பதவியை ஒழிப்பது காலத்தின் அவசிய, அவசரத் தேவையாகும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time