பாஜகவிற்கு துணை போகிறதா திமுக அரசு?

விவசாயிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! இது விவசாய இயக்கங்கள், சமூக அமைப்புகள், மக்கள் இயக்கங்கள் ஆகிய அனைத்தையும் அணிதிரட்டி விட்டது! செய்யாறு மேல்மா விவசாயிகளுக்காக தமிழகம் முழுக்க போராட்டங்கள் நடக்கின்றன! இது நாள் வரை பாஜகவை மட்டுமே பகையாக பார்த்த மக்கள், தற்போது திமுகவையும் பார்க்கின்றனர்!

முப்போகம் விளையும் பசுமை பூமியை விவசாயிகளிடம் இருந்து பறிக்கும் சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்தப் பகுதி ஏழை, எளிய குடிகள் 124 நாட்கள் அமைதி வழியில் அறப்போராட்டம் நடத்திய போது, அவர்களுக்கு பெரிதாக எந்த ஆதரவும் இல்லை. தனிமைப்பட்டு போராடி வந்தனர்! ஆனால், டெல்லியில் ஓராண்டாகப் போராடிய விவசாயிகள் விவகாரத்தில் மோடி கூட செய்யத் துணியாத குண்டர் சட்டம் எனும் அக்கிரமத்தை, தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் திமுக செய்துள்ளது என்பதை ஜீரணிக்கவே கஷ்டமாக இருந்தாலும், போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தற்போது மக்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்பதே யதார்த்தம்!

இந்தப் பிரச்சினைக்காக மக்கள் அதிகாரம் அமைப்பினர் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர். அந்த வகையில் டிசம்பர்-1 ஆம் தேதி காலை சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் தமிழகத்தின் பிரதான போராளிகள் பத்திரிக்கையாளர்களை சந்தித்து குமுறித் தீர்த்துவிட்டனர். மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் தோழர்.யா.அருள், பச்சைத் தமிழகத்தின் தலைவர் தோழர்.சுப.உதயகுமாரன், ஐக்கிய விவசாயிகள் முன்னணி தமிழ் நாடு ஒருங்கிணைப்பாளர் தோழர்.பாலகிருஷ்ணன், பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் வழக்கறிஞர் தோழர்.வெற்றிச் செல்வன், தோழர்.செபாஷ்டின் ஆகியோர் பேசினர்.

தோழர்.சுப.உதயகுமாரன்;

விவசாய நிலங்களை அழித்தொழித்து, பெரும் மாசுபாட்டையும், சுற்றுச் சூழல் கேட்டையும் உருவாக்கும் சிப்காட் தொழிற்பேட்டைக்கு எதிராக போராடிய எளிய விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றவே அற வழியில் போராடினார்கள்! நவம்பர் 2 ஆம் தேதி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து தங்களின் ஆதார்கார்டு, ரேஷன் அட்டை ஆகியவற்றை ஒப்படைக்க பேரணியாக சென்றவர்களை குற்றவாளிகளைப் போல கைது செய்து, அடைத்து வைத்து மின்சாரம்,மற்றும் தண்ணீரை நிறுத்தி, போராட்ட பந்தலைப் பிரித்து பெரும் அராஜகங்களை நிகழ்த்தியுள்ளது தமிழக அரசு! பிறகு நவம்பர் 4 ஆம் தேதி 22 விவசாயிகளை கைது செய்து, அவர்களில் ஏழு பேர் மீது குண்டர் சட்டம் போட்டு வெவ்வேறு சிறைகளில் அடைத்துள்ளது! அதில் ஆறுபேரின் குடும்பத்தாரை மிரட்டி எதையும் இனி எதிர்க்கமட்டோம் என எழுதி வாங்கி, அவர்களை விடுவித்து தோழர் அருள் ஆறுமுகம் மீது மட்டும் குண்டர் சட்டம் போட்டு பாளையங்கோட்டஒ சிறையில் அடைத்துள்ளனர். இது முற்றிலும் ஜன நாயகத்திற்கு எதிரான, சர்வாதிகாரத்தனமான, கேவலமான செயலாகும். தோழர் அருள் ஆறுமுகத்தின் மீதான குண்டர் சட்டத்தை விலக்கி உடனே அவரை விடுதலை செய்ய வேண்டும்.

சிப்காட் தொழிற்பேட்டைகளால் இத்தனை ஆயிரம் பேர்களுக்கு நேரடி வேலைகள், மறைமுக வேலைகள் என்பதாக பொத்தாம் பொதுவாக முதல்வர் அறிக்கை தருகிறார்! அதில் உண்மை இல்லை. அது நம்பகத்தன்மையாகவும் இல்லை என்பதே யதார்த்தமாக உள்ளது! சிப்காட்டின் மூன்றாம் கட்டத்தை நிறைவேற்றிவிட்டால் அங்கே பாலாறும், தேனாறும் ஓடும் என்பதைப் போன்ற போலித் தோற்றங்கள் ஏற்படுத்தப்படுகிறது! ஆனால், உண்மையில் இயற்கை பேரழிவும், மாசுபாடுகள், சூழலியல் தொற்று நோய்கள் ஆகியவையே மக்கள் சந்திக்க வேண்டியதாக உள்ளது. இப்படி பரந்தூர், மேல்மா என்று விவசாய நிலங்களை பறித்து அழித்துக் கொண்டே சென்றால், மக்களின் சோற்றுக்கு என்ன வழி? அடிப்படைத் தேவையான உணவுக்கு முக்கியத்துவம் தந்து விவசாய பூமியை அழித்து தொழிற்சாலைகள் கொண்டு வருவதை தமிழக அரசு தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தி சொல்கிறோம்.

கூடங்குளம் மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை எல்லாம் திமுக ஆட்சிக்கு வந்தால் தள்ளுபடி செய்வோம் என எங்களுக்கு வாக்குறுதி தந்து ஆட்சிக்கு வந்த ஸ்டாலின் எதையும் செய்யவில்லை. 63 வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இளைஞர்களின் எதிர்காலமே பாதிக்கப்பட்டுள்ளது. எனவே வாக்குறுதிப்படி அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் என தமிழக அரசை வற்புறுத்துகிறோம்’’ என்றார்.

தோழர்.பாலகிருஷ்ணன்;

நாங்கள் மூன்று விவசாயச் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் ஓராண்டாக கடும் போராட்டம் நடத்தியுள்ளோம். அப்போது கூட மோடி அரசு பல சிரமங்களை ஏற்படுத்திய போதிலும் எங்கள் மீது குண்டர் சட்டத்தை பிரயோகித்தது இல்லை. ஆனால், தன் வாழ்வாதரத்திற்கு என போராடிய விவசாயிகளின் மீது திமுக அரசு குண்டர் சட்டத்தை பிரயோகித்தது மோடி கூட செய்யத் துணியாத பாசிஸச் செயலாகும்! தன் வாழ்வாதரத்தை காப்பாற்றிக் கொள்ள போராடுவது விவசாயிகளின் உரிமை. அதுவும் முப்போகம் விளையும் பூமியை எந்த காரணத்தைக் கொண்டும் அழிக்கக் கூடாது என சட்டம் உள்ளது! அதுமட்டுமின்றி, இதை அழிப்பதால் ஏற்படும் இழப்புகள், சூழலியல் சீர்கேடுகள், அதற்கான தீர்வுகள், விவசாயிகளுக்கு என்ன மாற்று? முறையான பேச்சுவார்த்தைகள் எதுவுமே நடக்கவில்லை. அடாவடியாக நிலத்தை பறிப்பது, ஆளும் கட்சி ஆதரவாளர்களைக் கொண்டு கருத்துக் கேட்பு கூட்டத்தை திசைமாற்றுவது, காவல்துறை அடக்குமுறைகளை பிரயோகிப்பது போன்றவை எல்லாம் நங்கள் தோழமையாக பாவிக்கும் திமுக அரசிடம் இருந்து வெளிப்படுவது தான் வேதனையாக உள்ளது! ஏற்கனவே பக்கத்தில் உள்ள சிப்காட்டில் ஆயிரம் ஏக்கர் நிலம் பயன்படுத்தாமல் இருக்கும் போது அங்கே மேலும் ஏன் விவசாய நிலத்தை அபகரிக்கும் தேவை எழுந்தது என்பதற்கு வெளிப்படைத் தன்மையுடன், பொறுப்பான பதில் முதல்வரிடம் இல்லை. மத்திய பாஜக அரசுக்கு உதவுவதற்காகவே இதை திமுக அரசு கமுக்கமாக செய்கிறதோ என்ற சந்தேகமே எங்களுக்கு வலுக்கிறது!

வழக்கறிஞர் வெற்றிச் செல்வன்;

வெளிநாட்டு நிறுவனங்களை அழைத்து இங்கே தொழில் தொடங்க வைப்பது என்ற திட்டத்தில் சுமார் 45,000 ஏக்கர் விவசாய நிலங்களை எடுக்க திட்டமிட்டு உள்ளனர். ‘இதோ மிகப் பெரிய நிலவங்கி எங்களிடம் உள்ளது! இங்கே வந்து தொழில் செய்யுங்கள்’ என அன்னிய நிறுவனங்களை அழைக்கும் நோக்கத்திற்காக இன்னும் கூட இது போன்ற நிலப்பறிப்புகள் நடக்கும் எனத் தெரிகிறது. ஏற்கனவே 35,000 ஏக்கர் நிலத்தில் 24 தொழிற்பேட்டைகள் உள்ளன! அதிலேயே நிறைய நிலங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளன! இந்த நிலையில் நல்ல விளை நிலங்களை வலுக்கட்டாயமாக பறித்து வருவது தேவையற்றது.

யா.அருள்;

திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் போது விவசாயிகள் போராட்டத்தை ஆதரிப்பதும் , ஆளும் கட்சியாக இருக்கும் போது விவசாய போராட்டத்தை ஒடுக்குவதும் நல்ல ஆட்சிக்கு அழகல்ல. எதிர்கட்சியாக இருந்த போது எட்டு வழிச்சாலை, ஹட்ரோ கார்பன் திட்டம், பழவேற்காட்டில் அதானி துறைமுகம் போன்றவற்றை எதிர்த்தவர் முதல்வர் ஸ்டாலின். ஆனால், ஆளும் கட்சியானவுடன் எல்லாவற்றையும் ஆதரிக்கிறார், வாழ்வாதாரத்திற்காக போராடும் விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தை ஏவி  ஒடுக்குவதன் மூலம் சர்வாதிகார ஆட்சியை நோக்கி செல்கிறதா திமுக?

நிலம் என்பது விவசாயிகளின் உயிர். அதை ஒருபோதும் விவசாயிகள் உயிரே போனாலும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். சிப்காட் என்ற பெயரில் நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிராக போராடிய விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்தது கண்டிக்கத்தக்கது. மக்களின் போராட்ட உணர்வுக்கு மதிப்பளித்து விவசாயிகளின் கோரிக்கைக்கு செவிமடுக்க வெண்டும்.

குண்டர் சட்டத்தில் சிறை வைக்கப்பட்டிருக்கும் அருள் ஆறுமுகம் ஒரு சாப்ட்வேர் எஞ்சினியராக லட்சக்கணக்கில் சம்பளம் பெறும் வேலையில் இருந்தவர். தற்போது தன் சொந்த நிலத்தில் விவசாயம் செய்வதற்காக அதை துறந்துள்ளவர். அவர் என்ன குண்டரா? ரவுடியா? இல்லையே! எட்டு வழிச்சாலைக்கான போராட்டத்தில் இன்றைய முதல்வர் ஸ்டாலினும் அவரும் ஒரே மேடையில் பேசியுள்ளனர். பக்கத்திலேயே ஒரு சிப்காட் தொழிற்பேட்டை போதுமான அளவு பயன்படுத்தப்பட்டமல் இருக்க, உண்மையிலேயே தற்போது நிலப்பறிப்பு சிப்காட்டிற்கு தானா என்பதே தெரியவில்லை. திமுக அரசிடம் வெளிப்படைத் தன்மை இல்லை. அருள் ஆறுமுகம் மீது குண்டர் சட்டம் போட்டது உள்ளிட்ட திமுக அரசின் பற்பல அணுகுமுறைகளைப் பார்க்கும் போது இவர்கள் பாஜக அரசின் கட்டளைக்கு இப்படி செய்கிறார்களா..? என்ற சந்தேகம் தான் ஏற்படுகிறது.

அதுமட்டுமின்றி, மக்கள் விரோத அடியாட்களை தூண்டிவிட்டு, மேல்மாவில் சிப்காட் வேண்டுமென விவசாய மக்களே கூறுவது போல போராட்டம் நடத்தி உள்ளனர். இது முழுக்க, முழுக்க திமுக அரசின் செட் அப் ஆகும். திமுக அரசு தன் போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால், மக்கள் இயக்கங்களின் கடும் எதிர்ப்புகளை சந்திக்க நேரிடும். விரைவில் மேத்தா பட்கர் இங்கே வந்து அனைத்து இயக்கங்களையும் ஒருங்கிணைத்து களம் காண உள்ளார். எங்கள் போராட்டங்கள் மேன்மேலும் வலுப்படும்.

தொகுப்பு; சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time