ஆட்சித் தலைமையே அதிகாரிகள் குற்றத்திற்கு வழிகாட்டி!

-சாவித்திரி கண்ணன்

சி.பி.ஐ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை ஆகியவற்றை பிளாக்மெயில் அரசியலுக்கே பாஜக அரசு பயன்படுத்தியது! ஆட்சித் தலைமையின் கட்டளைகளுக்காக தவறு செய்த அதிகாரிகள் சும்மா இருப்பார்களா..? அதிகாரிகளின் தவறுகளுக்கு ஆட்சியாளர்களின் தவறுகள் எப்படி பாதை போட்டன… என ஒரு அலசல்;

மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்தில் அதன் துணை மண்டல அதிகாரி அம்ரித் திவாரி அறையில் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி சத்யசீலன் தலைமையிலான அதிகாரிகள்  13 மணி நேரம் சோதனை நடத்தி முடிவடைந்த நிலையில் பல்வேறு முக்கிய ஆவணங்களையும், வருகை பதிவேடுகளையும் கைப்பற்றி உள்ளனர்.

கைது செய்யப்பட்ட  அங்கீத் திவாரியின் வங்கிக் கணக்கு பணப் பரிவர்த்தனை, மெயில் மற்றும் வாட்ஸ் அப் தகவல்கள் குறித்தும், ஆவணங்களில் உள்ள தகவல்கள் மற்றும் அவர் கையாண்ட வழக்குகளின் ஆவணங்களையும் கைப்பற்றினர். மேலும், அங்கீத் திவாரி விவகாரத்தில், லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்திய நிலையில், மற்ற சில அமலாக்கத் துறை அதிகாரிகளின் கள்ளக் கூட்டும் லஞ்சம் வாங்குவதில் இருப்பதால், அவர்ககளுக்கும் சம்மன் அனுப்ப லஞ்ச ஒழிப்புத் துறையினர் திட்டமிட்டிருப்பது தான் தற்போதைய ஹைலட்!

மங்கை சூதகமானால் கங்கையில் குளிக்கலாம்! ஆனால், கங்கையே சூதகமானால் என்ன செய்வது..? என்ற சொல் வழக்கு தான் நினைவுக்கு வந்தது – அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டிருப்பது..?

மாநில அளவினான பெரிய, பெரிய அதிகார மையங்கள், அமைச்சர்கள் எல்லாம் பெயரைக் கேட்டாலே நடுங்கிய ஒரு அமைப்பாக இருக்கும் அமலாக்கத் துறையின் அதிகாரிகள் என்பவர்கள் நெருப்பாக இருக்க வேண்டாமா..? ஏன் இருக்க முடியவில்லை?

எவ்வளவு உயர்ந்த சம்பளம் மற்றும் உயர் சலுகைகள், சமூக மரியதை உங்களுக்கு வாய்த்திருக்கிறது! இவ்வளவும் போதாது என்று மாநில அரசில் எந்தெந்த அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபடுகிறார்கள் என்று மோப்பம்விட்டுள்ளீர்கள்! அது முறைப்படுத்தி, ஒழுங்குபடுத்தவென்றால் கூட வரவேற்று இருக்கலாம்! ஆனால், அந்த முறைகேட்டில் பங்கு கேட்கவென்றால்…!

இப்படித்தான் இந்தியாவில் பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில் மத்திய அதிகார மையங்கள் மட்டுமீறி பிளாக்மெயில் செய்து உண்டு கொழுத்து வருகிறார்கள் என்பது பற்பல செய்திகளில் தெரிகிறது!

ஒரு பிளாக்மெயில் அதிகாரி மாட்டிக் கொண்டால், சாஸ்திரி பவன் தொடங்கி சகல மாவட்டங்களிலும் இருக்கும் அனைத்து அமலாக்கத் துறை அதிகாரிகளும் தொடை நடுங்கி, மத்திய ரிசர்வ் போலீசை படையையும், இந்திய-திபெத் எல்லைப் படையையும் வரவழைத்து பாதுகாப்பு வளையங்கள் அமைத்துக் கொள்கிறார்கள் என்றால்..,

மத்திய அரசின் சாஸ்திரி பவன் அலுவலகம் தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசுக்கு பயந்து ஒட்டுமொத்த அலுவலகத்தையே இழுத்து பூட்டி மத்திய ரிசர்வு போலீஸ் கண்ட்ரோலுக்குள் தன்னை ஒளித்துக் கொள்கிறது என்றால்…,

இது எவ்வளவு அவலம்! மாநில லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை செய்யாமலே இந்த அதிகாரிகள் தங்களைத் தாங்களே அம்பலப்படுத்திக் கொண்டார்கள்…! ஐயோ பாவம்!

இவர்களை பாதுகாக்க படையை அனுப்பி வக்காலத்து வாங்கும் மத்திய ஆட்சியாளர்களின் யோக்கியதையை என்னென்பது! அப்ப மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், அந்த உச்சாணிக் கொம்பர்களாக வலம் வந்து கொண்டுள்ள அமித்ஷாவும், மோடியும் எங்கே ஓடி ஒளிவார்களோ…! காலமெல்லாம் அவர்களே ஆட்சியில் இருந்துவிட முடியுமா என்ன?

இது ஒரு பக்கம் என்றால், இந்த செய்தியை போட்ட தினமலர் ஏடு, கட்டம் கட்டி ஒரு தங்கள் மன அரிப்பை இப்படி வெளிப்படுத்துகிறது;

பொதுவாக அமலாக்கத்துறை அதிகாரிகள் வீடுகளில் மட்டுமே சோதனை நடத்த முடியும் என்ற நிலையில், அமலாக்கத் துறை அலுவலகத்திலும் தங்களால் சோதனை நடத்த முடியும் என திமுக அரசு தன் *பவரைக்* காட்டியுள்ளது! ஏற்கனவே பாஜக அரசுக்கும், திமுக அரசுக்கும் அரசியல் ரீதியாக விரோத போக்கு இருக்கும் நிலையில், ‘எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போல’ சோதனை விவகாரம் சூடு பிடித்துள்ளது.

என சூசகமாக ‘மத்திய அரசின் ஆத்திரம் திமுக அரசு மீது, எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போல அதிகரிக்க உள்ளதாக’ எச்சரிக்கை தந்துள்ளது! அதாவது, நாங்க பெரிய பவர் சென்டர். நாங்க தப்பு செய்யலாம்.. எங்க ஆட்களை நீ பிடிக்கலாமா? எங்க இடத்துக்குள்ள நுழையலாமா? என பச்சையாக கேட்பது போல, இப்படி வெட்கமில்லாமல் ஒரு பெரிய பத்திரிக்கை எழுதுகிறது..!

வீட்டில் மட்டும் சோதனை நடத்த வேண்டுமாம். அலுவலகத்தில் சோதனை நடத்தக் கூடாதாம்! கைது செய்யப்பட்ட அதிகாரி அந்த அலுவலகத்தில் உள்ள மற்ற அதிகாரிகளுக்கும் லஞ்சப் பணத்தை பங்கிட்டுக் கொடுத்துள்ளார் என்ற நிலையில் அவர்களை ஒட்டுமொத்தமாக அந்த அலுவலகத்தில் வைத்து சோதனையிட்டால் தானே முழுமையாக அறிய முடியும். இங்கு யார் பெரிய அதிகார மையம் என்பது முக்கியமில்லை. குற்றம் இழைத்தால், அது இந்திய அரசியல் சட்டப்படி எல்லோருக்கும் ஒரே தண்டனை தான்! யார் செத்தாலும் அந்த செத்த உடலுக்கு பெயர் பிணம் தான்! அவர் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் அந்த பிணத்தை அவர் வீட்டிலேயே கூட வைத்திருக்க முடியாது, அப்புறப்படுத்தியே ஆக வேண்டும். அது போல இது போன்ற ஊழல் அதிகாரிகள் எந்த கவசத்தைக் கொண்டும் தங்களை மறைத்து தப்ப இடமளிக்க முடியாது!

ஆனால், இந்த விவகாரத்தில் தன் விசாரணை அறிக்கையை மாநில போலீஸ் மத்திய அரசிடம் தந்துவிட வேண்டும். அவர்கள் தான் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியும் எனச் சொல்லப்படுகிறது!

இது வரை எடுத்ததற்கெல்லாம் மத்திய ஆட்சியாளர்கள் அமலாக்கத் துறையைக் காட்டி மாநில அரசுகளை பயமுறுத்தி வந்தனர்! ஆனால், அந்த அமலாக்கத் துறை அதிகாரிகளே இவ்வாறு தவறு இழைக்கிறார்கள் என்றால், அவர்களின் அரசியல் தலைமையின் யோக்கியதையைத் தான் முதலில் குற்றம் சாட்ட வேண்டும்.

ஏனென்றால், இது வரை மிகப் பெரிய ஊழல்வாதிகளின் வீடுகளில் பலகட்ட சோதனைகளை நடத்தி, பல உண்மைகளை கண்டறிந்த போதிலும் அதை மக்கள் மன்றத்தில் வெளிப்படுத்தாமல், கமுக்கமாக பல ஆயிரம் கோடிகள் பேரம் பேசி ஊழல்வாதிகளை காப்பாற்றி உள்ளனர் மத்திய ஆட்சியாளர்கள்! முன்னாள் அதிமுக அமைச்சர்கள், தேசியவாத காங்கிரசின் அஜித்பவார் உள்ளிட்ட முக்கியஸ்தர்களே இதற்கு சாட்சி! இன்னும் பல மாநிலங்களில் ஊழல் அரசியல்வாதிகளை காப்பாற்ற தங்கள் கட்சிக்கு அவர்களை இழுத்துள்ளது பாஜக!

அதாவது ஒவ்வொரு ஊழல் அரசியல்வாதியையும் கைது செய்ய பல மாதங்கள் அவரை கண்காணித்து, தகவல்கள் சேகரித்து, அவரது நடமாட்டம் மற்றும் தொலைபேசி அழைப்புகள் வழியே பினாமிகளைக் கண்டறிந்து பல வீயூகங்களை வகுத்து, பெரும்படை திரட்டி பல இடங்களில் ஒரே நேரத்தில் முற்றுகையிட்டு, மணிக்கணக்கில் சோதனைகளை நடத்தி ஆவணங்களைக் கைப்பற்றி, சொத்து விபரங்களை சேகரித்து, பணம், நகை முதலானவற்றை கைப்பற்றி மத்திய ஆட்சியாளர்களிடம் அமலாக்கத் துறை தந்தால்..,

அதன் விளைவாக அந்த ஊழல் அரசியல்வாதி தண்டிக்கப்பட்டு, அரசின் கஜானாவிற்கு இத்தனை ஆயிரம் கோடிகள் சேர்க்கப்பட்டன பாஜக அரசின் நடவடிக்கைகள் நேர்மையாக நடந்திருந்தால், அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் நேர்மையை நாம் எதிர்பார்க்கலாம்!

ஒரு பெரிய கொள்ளைக்காரனுக்காக, சிறிய கொள்ளைக்காரனை பிடித்து, அவனிடம் ஒப்படைத்த கதையாகவே அனைத்து உழைப்பும் வீணாகிறது என்றால், அந்த துறையின் அதிகாரிகள் யாருக்குத் தான் நேர்மையாக இருக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்?

இந்த நிலையில் தான் அமலாக்கத் துறை அதிகாரிகள் தமிழ்நாடு, டெல்லி, ராஜஸ்தான் பெரிய திமிங்கலங்களுக்கு ஏற்ற உணவை அவர்கள் சப்ளை செய்த பிறகு தங்கள் பசிக்கு சிறிய சிறிய திமிங்கலங்களை பிடித்து லஞ்சம் வாங்குகிறார்கள் என்று தான் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது! மேல்மட்டத்தின் தவறுகள் அடிமட்டம் வரை பிரதிபலிக்கிறது! ஆக, திருந்த வேண்டியது அதிகார மையத்தின் உச்சணிக் கொம்பில் உள்ள மத்திய ஆட்சியாளர்கள்! அவர்கள் சரியாக இருந்தால் நாடே ஒழுங்காகிவிடும்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time