மூன்று மாநில தோல்விக்கு முழு காரணம் காங்கிரசே!

-சாவித்திரி கண்ணன்

நான்கு மாநில ரிசல்டில்  தெலுங்கானாவைத் தவிர மூன்றில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியது! உண்மையில் இங்கெல்லாம் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கான சூழல்கள் இருந்தும், வெற்றி கை நழுவிப் போனது! இன்னும் சொல்வதென்றால், மூன்று மாநிலங்களில் பாஜகவிற்கு காங்கிரஸே வெற்றியை தூக்கி கொடுத்துள்ளது!

மத்திய பிரதேசத்தில் ஐந்தாவது முறையாகத் தொடர்ந்து பாஜகவிடம் வெற்றியை பறி கொடுத்துள்ளது காங்கிரஸ்! பாஜக ஆட்சி குறித்து கடுமையான அதிருப்தி நிலவிய மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கு சாதகமான அம்சங்கள் நிறையவே தென்பட்டன! ஆனால், மக்கள் அதிருப்தியை சிந்தாமல், சிதறாமல் வென்றெடுப்பதில் போதிய முனைப்பு காட்டவில்லை காங்கிரஸ்! தேர்தல் வியூகம் வகுப்பதில் கமல்நாத் கோட்டைவிட்டது தான் தோல்விக்கு காரணமாகும்.

வரைமுறையற்ற ஊழல், அராஜகம், பொருளாதரப் பின்னடைவு, மதச் சண்டைகள், வேலையில்லா திண்டாட்டம், விவசாய வீழ்ச்சி ஆகியவற்றை பரிசளித்த முதல்வர் சிவராஜ் செளகானின் பாஜக ஆட்சி தொடர்ந்து ஐந்தாவது முறையாக அதிகாரத்திற்கு வருவதற்கு மிக முக்கியக் காரணம் எதிர்கட்சிகளிடையே ஒற்றுமையின்மை தான்!

ஜோதிராதித்திய சிந்தியாவும் ,சிவராஜ் செளகானும் இனிப்பு பரிமாறுதல்!

சிறிய கட்சிகளை அரவணைக்க மறுத்த காங்கிரஸ்

குறிப்பாக ‘இந்தியா’ என எதிர்கட்சிகள் ஒன்றிணைந்த கூட்டணி உருவாக்கப்பட்ட பிறகும், அவை மாநில அளவில் தேர்தலில் ஒருவருக்கொருவர் ஒத்துழைக்க மறுப்பதை எப்படி புரிந்து கொள்வது எனத் தெரியவில்லை! குறிப்பாக சமாஜ்வாதி கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும் மத்திய பிரதேசத்தை பொறுத்த அளவில் சிறிய கட்சிகள் என்றாலும், இவை காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெறாமல்  தனித்து நிற்கும்படி தள்ளப்பட்டு பல தொகுதிகளில் காங்கிரசின் தோல்விக்கு காரணமாகிவிட்டன!

உள்ளூரின் காண்ட்வானா காந்தாரா கட்சியும் (GGP) இரண்டு சதவிகித வாக்கு வங்கி கொண்டுள்ள கட்சியாகும் அதையும் காங்கிரசுக்குள் கொண்டு வரமுடியவில்லை.

சென்ற தேர்தலிலேயே காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் வாங்கிய வாக்குகளின் அடிப்படையில் பார்த்தாலுமே கூட மிகச் சிறிய இடைவெளி தான்!

பாஜக வாங்கிய வாக்குகள்; 41.02%

காங்கிரஸ் வாங்கிய வாக்குகள் 40.89%

2018 தேர்தலில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் காங்கிரஸ் 114 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது மற்ற சிறிய கட்சிகள் ஒத்துழைப்பில் தான் ஆட்சிக்கு வந்தது! அப்போதே அனைவரும் சொன்னது என்னவென்றால், சிறிய கட்சிகளுடன் தேர்தலுக்கு முன்பே காங்கிரஸ் கூட்டணி வைத்திருந்தால் அமோக வெற்றியை எளிதில் எட்டியிருக்கும் என்பதே!

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், பகுஜன்சமாஜ் கட்சிக்கு ஐந்து சதவிகித வாக்குகள் இருக்கிறது! அது தனித்து நின்று இரு தொகுதியில் தான் வென்றது. ஆனால், பல தொகுதிகளில் அது பெற்ற கணிசமான வாக்குகள் காங்கிரஸ் தோல்விக்கு காரணமாக அமைந்தன!

சமாஜ்வாடி கட்சியை (எஸ்.பி) பொறுத்த வரை 1.30 வாக்கு வங்கி மட்டுமே உள்ள கட்சி. ஆனாலும் சென்ற தேர்தலில் ஒரு சீட் வென்றது. அந்த இடத்தில் காங்கிரஸ் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. மேலும், ஐந்து தொகுதிகளில் பாஜகவுக்கு அடுத்த இரண்டாம் இடத்துக்கு எஸ்.பி.வந்தது! இது 18 இடங்களில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் கட்சியாக உள்ளது. இந்த தேர்தலில் சமாஜ்வாதி தான் பலமாக கருதும் அந்த ஆறு தொகுதிகளை மட்டும் தான் கேட்டது. அதை தர காங்கிரஸ் தயாரில்லை. இதனால், ”காங்கிரஸ் பெரியண்ணன் போக்கில் உள்ளது ஒரே சிந்தனை போக்கு இருக்கும் கட்சிகளை அரவணைக்க மறுக்கிறது…இது ஒரு வகை துரோகமே” என பொங்கித் தீர்த்துவிட்டார் அகிலேஷ் யாதவ்!

இதே போல GGP கட்சி ஆறு தொகுதிகளில் 30,000 த்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்றது!

இந்த முறை பகுஜன் சமாஜ் கட்சியும் GGP கட்சியும் சேர்ந்து 230 தொகுதிகளில் போட்டியிட்டன! இவை 100 தொகுதிகளில் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் சக்தி கொண்டவை!

இதே போல, ஆம் ஆத்மி கட்சியும் மத்திய பிரதேசத்தில் கணிசமான செல்வாக்கு கொண்ட  கட்சியாகும். அதற்கு மத்திய பிரதேசத்தின் உள்ளாட்சிகளில் ஒரு மேயர், 52 கவுன்சிலர்கள்,118 கிராம பஞ்சாயத்துகள், 10 மாவட்டங்களில் 25 மாவட்ட உறுப்பினர்கள் உள்ளனர்! இதையும் காங்கிரஸ் கூட்டணிக்குள் இழுக்க முடியவில்லை!

இந்த நிலையில் இந்த கட்சிகள் எதனுடனும் காங்கிரஸ் தேர்தல் கூட்டணி காண முடியாதது தான் பாஜகவின் ‘ஜாக்பாட்’ வெற்றிக்கு காரணமாகிவிட்டது. இது தவிர, காங்கிரசின் மிகப் பெரும் தளபதியாக அறியப்பட்ட ஜோதிராதித்திய சிந்தியா சென்ற முறை காங்கிரஸ் கட்சி பெற்ற வெற்றிக்கு பிரதான காரணமாக இருந்தார். அவரை கமல்நாத்திற்காக இழந்தது காங்கிரஸ். அவர் விட்டுச் சென்ற இடத்தை இது வரை இன்னொருவரால் நிரப்ப முடியவில்லை. இதுவும் காங்கிரஸ் பின்னடைவுக்கு முக்கிய காரணமாகும்!

ராஜஸ்தானில் காங்கிரஸ் தோல்வி;

இதே நிலை தான் ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சி மீதான அதிருப்திகளை சரிப்படுத்தவல்ல ஒரு கூட்டணியை அமைக்க தவறி விட்டது. அங்கும் ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய அனைவரையும் மட்டுமல்ல, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் கூட காங்கிரஸ் கூட்டணிக்குள் சேர்க்கவில்லை. ராஜஸ்தானில் சி.பி.ஐ 12 இடங்களிலும், சி.பி.எம் 17 இடங்களிலும் நின்று காங்கிரஸ் வாக்குகளை பிரிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டன! அத்துடன் ‘அசோக்கெலாட் மீண்டும் முதல்வராக வரக் கூடாது’ என்பதில் சச்சின் பைலட் உறுதியாக இருந்தார்.

சச்சின் பைலட்டின் உள்குத்து அரசியலும் காங்கிரஸ் வீழ்ச்சிக்கு ஒரு காரணமாயிற்று! சச்சின் பைலட்டை சரியாக கையாளத் தெரியவில்லை அசோக்கெலாட்டிற்கு! பாஜகவின் ஊழல் பேர்வழிகள் மீது அசோக்கெலாட் அரசு காட்டிய கரிசனமும், ‘இண்டியா’ கூட்டணியை அரவணைக்க முடியாததும் காங்கிரஸ் தோல்விக்கு பாதை சமைத்தது.

சட்டிஸ்கரில் ஏற்பட்ட சரிவு;

சட்டிஸ்கரில் சென்ற முறை மொத்தமுள்ள 90 தொகுதிகளில் காங்கிரஸ் 68 இடங்களை பெற்றது. ஆனால், தற்போது அதில் கிட்டத்தட்ட பாதியைத் தான் காங்கிரஸ் பெற்றுள்ளது. இங்கும் சி.பி.ஐ, சி.பி.எம், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி ஆகியவை தனித்து களம் கண்டன!

மத்திய பிரதேசத்தில் பாஜக ஐந்தாவது முறையாக ஆட்சிக்கு வர முடிகிற போது, ராஜஸ்தானிலும், சட்டிஸ்கரிலும் இரண்டாவது முறை கூட வெற்றி பெற முடியவில்லை என்றால், சென்ற முறை மக்கள் தந்த தீர்ப்பை, சரியான வகையில் பயன்படுத்தி காங்கிரஸ் ஆட்சி சேவை செய்யத் தவறிவிட்டது என்று தான் பொருளாகும்!

தோல்வி அறிவிப்பால் துவண்டு அழுத பூபேஷ் பாகல்!

பூபேஷ் பாகாலை பொறுத்த வரை நேர்மையான ஆட்சியை கொடுக்கத் தவறியது மட்டுமல்ல, இன்னொரு பாஜகவை போலவே, இந்துத்துவ காங்கிரஸ் அரசை தலைமை தாங்கி வழி நடத்தினார்!

தெலுங்கானாவில் புதிய இளைஞர் சக்தியாக ரேவந்த் ரெட்டி வந்தார். சர்வாதிகாரமான கேசிஆர் அரசை எதிர்த்து தைரியமாக களம் கண்டார். ஆளம் கட்சி ஊழல்களை சளைக்காமல் அம்பலப்படுத்தி மக்களின் ஒவ்வொரு பிரச்சினைக்கும் போராடினார். காங்கிரஸ் மீதான நம்பிக்கையை வென்றெடுத்தார். அதனால் தன் அங்கு வெற்றி சாத்தியமானது. ராகுல் காந்தி, பிரியங்கா பிரச்சாரங்களும் வெற்றிக்கு கை கொடுத்தன! ஆகவே, உள்ளூர் தலைமையை ஒழுங்குபடுத்தாமல் காங்கிரஸ் வெற்றி என்பது சாத்தியமல்ல!

சாவித்திரி கண்னன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time