பச்சோந்தியாய் திகழ்ந்த சில பார்ப்பன எழுத்தாளர்கள்!

-சாவித்திரி கண்ணன்

ஆதிக்க சமூகத்தினர் அதிகார மையங்களோடு நெருக்கம் பாராட்டுவதும், அதை பொது வெளியில் அறிவித்து தானுமோர் அதிகார மையமாக வலம் வருவதும் மன்னர் ஆட்சி தொடங்கி பின்னர் மக்களாட்சி காலங்களிலும் இங்கு தொன்று தொட்டு நிகழ்ந்து கொண்டிருப்பவையே..! இதோ சில உதாரணங்கள்!

சுமார் மூன்று தசாப்தங்களில் இந்த சமூக தளத்தில் தான் எவ்வளவு தலை கீழ் மாற்றங்கள் என்பதை எண்ணிப் பார்க்கையில், இன்றைய தலைமுறை குறித்த பெருமித உணர்வே ஏற்படுகிறது! எழுத்தாளர் இந்துமதி பெருமழை வெள்ளத்தின் போது எழுதிய பதிவைப் படித்து இன்றைய இளம் தலைமுறை சமூக வலைத்தளங்களில் மிக கூர்மையாக அவதானித்து அவரை கிழித்து தொங்கவிட்டனர்! ஆனால், அந்த காலத்தில் இந்துமதியைப் போல பார்ப்பன எழுத்தாளர்கள் ஏராளமாக எழுதி குவித்துள்ளனர்.

இந்துமதி எழுத்தில் அவர் தன்னை எப்படி எல்லாம் எஷ்டாபிளிஸ் பண்ண வேண்டும் என்ற வகையில் அவர் பணக்கார வி.ஐ.பி ஏரியாவில் வசிப்பது, அமைச்சர்களையே தொலைபேசியில் அழைத்து பேசமுடிவது, முதலமைச்சரின் மனைவி துர்கா தனக்கு விழுந்தடித்து உதவியது.. போன்றவற்றை எழுதிய தோரணை தான் எல்லோரையும் எரிச்சல் கொள்ள வைத்துள்ளது. மற்றபடி ஒரு வயதான மனுஷி என்ற வகையில் இயற்கை பேரிடர் நேரத்தில் அவர் உதவி கேட்டதோ, அவர்கள் உதவியதோ கூட நாம் தவறாக கருத இடமில்லை.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், அதிகார மையத்துடன் தனக்கு இருக்கும் நெருக்கத்தை அவர் வலிந்து விலாவாரியாக நிலை நாட்ட விரும்பியது தான் விமர்சனத்திற்கு உள்ளாயிற்று! ஆனால், இதையே 30 ஆண்டுகளுக்கு முன்பு விகடனிலோ, குமுதத்திலோ இந்துமதி எழுதி இருந்தால் அன்றைய தலைமுறை இந்த அனுபவங்களை வியந்து பார்த்து, பிரமிப்பு அடைந்திருக்கும். அப்படித் தான் அன்றைக்கு ‘அக்கிரஹார எழுத்தாளர்கள்’ எல்லாம் எழுதி வந்தனர்.

எந்த காலகாட்டத்தில் யார் பவர்புல்லாக இருக்கிறார்களோ, அவர்களிடம் நெருக்கம் பாராட்டி, எல்லாவித பலாபலன்களையும் பெற்றுக் கொள்வதில் இவரைப் போன்ற பார்ப்பன எழுத்தாளர்கள் சிலருக்கு எப்போதும் கூச்சமே இருந்ததில்லை என்பது மாத்திரமல்ல, அதை பெருமை பொங்க பொதுவெளியில் பிரகடனப்படுத்தி, அதன் மூலம் தங்களையும் ஒரு ‘பவர்புல் சென்டராக’ மாற்றிக் கொள்வதில் அவர்கள் நிகரற்றவர்கள்!

இதற்கு அன்றைய காலகட்டங்களில் சாவி, மணியன், சிவசங்கரி தொடங்கி இன்றைய மாலன், தினமணி வைத்தியநாதன், ரங்கராஜ் பாண்டே வரை பல பேருடைய எழுத்துகளும்,பேச்சுக்களுமே சாட்சியாகும்.

இன்று காலையில் என்னுடைய நெருங்கிய நண்பரான மூத்த ஊடகவியலாளர் ஒருவரிடம் நான் இந்த விவகாரத்தை பற்றிப் பேசியதும் அவர் கடந்த காலத்தில் மேற்படி எழுத்தாளர்கள் எழுதியவற்றையெல்லாம் மீள் நினைவுக்கு கொண்டு வந்தார்! எங்கள் உரையாடல் சுமார் 20 நிமிடங்கள் நீடித்தது! அப்போது நான் அவரிடம், ”நாம் உரையாடியதை இன்றைய தலைமுறையிடம் உள்ளது உள்ளபடியே சொல்லப் போகிறேன்” என்றேன்.

1987 காலகட்டத்தில் டெல்லி அரசியலிலும், தமிழக அரசியலிலும் கொடி பறந்தவர் அந்த தஞ்சை பண்ணையார் அரசியல்வாதி! அவருடைய தொடர்பால் சிவசங்கரி இந்திராகாந்தியை பேட்டி எடுத்து எழுதினார். ராஜிவ்காந்தி காந்தியுடன் சுற்றுப்பயணம் செய்து எழுதினார்! இதன் மூலம் அவருக்கு ரொம்பவே நெருக்கமானார். அவருக்கும் தனக்குமான நெருக்கத்தை விளக்க குமுதத்தில் மிக விரிவாகவே ஒரு கட்டுரை எழுதினார்!

அந்தக் கட்டுரையில் அந்த அரசியல்வாதியின் பூர்வீகம், மேனரிசம் உள்ளிட்டவற்றை அணுவணுவாக விவரித்து, ‘அவர் டெல்லியில் இருந்து புறப்படும் போதே தனக்கு போன் பண்ணி சொல்லிவிடுவா’ர் என்றும், ‘சென்னை ஏர்போர்ட்டில் அவரை வரவேற்க குழுமியுள்ள காங்கிரஸ் தொண்டர்களிடமும், நிர்வாகிகளிடமும் ‘ஹாய்,ஹாய்’ என கை ஆட்டிவிட்டு, தன் வீட்டிற்கு தான் வருவார்’ என்றும், ‘அவருக்கு என்னென்ன டிபன் வகைகள் பிடித்தாமானவை என எனக்குத் தெரியும். அவற்றை நான் பிரத்தியேகமாக சமைத்து நானே அவருக்கு பாரிமாறுவேன். நாங்கள் இருவரும் டெல்லி அரசியலை விடியவிடியப் பேசிக் கொண்டிருப்போம்..’ என்றெல்லாம் எழுதியுள்ளார்.

இதைத் தொடர்ந்து அந்த பவர்புல் தலைவரிடம் காரியம் சாதித்துக் கொள்ள விரும்பும், அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும் சிவசங்கரியை நாடியதெல்லாம் கூட நடந்துள்ளது. சிவசங்கரி வழியாகத் தான் மாலனுக்கு கலைஞர் தொடர் கிடைத்தது! குமுதத்தில் இருந்து மாலன் வெளியேற்றப்பட்ட போது, கலைஞர் தான் குங்குமத்தில் மாலனுக்கு அடைக்கலம் தந்தார். சன் டிவியிலும் வாய்ப்பு பெற்றுத் தந்தார்.

இதே சிவசங்கரி ஜெயலலிதா நடிக்கும் காலத்திலேயே அவருக்கு பழக்கமானவர் தான் என்றாலும், ஜெயலலிதா அரசியலுக்கு வந்ததும் சிவசங்கரியோடு பழகுவதை தவிர்த்துவிட்டார். பாம்பின் கால் பாம்பறியும் அல்லவா?

சிவசங்கரிக்கு இந்த மாதிரி விவகாரத்தில் முன்னோடியாகத் திகழ்ந்தவர்கள் சாவியும், மணியனும் தான்! சாவி கலைஞருக்கு மிக நெருக்கமாக தன்னை காட்டிக் கொள்வார். தனக்கும் கலைஞர் கருணாநிதிக்கும் இருக்கும் நெருக்கம் குறித்து அந்த நாட்களில் அடிக்கடி தான் ஆசிரியராக இருந்த தினமணிக் கதிரிலும், சாவியிலும் எழுதியுள்ளார். அதில் அவர் தன் வீட்டுக்கு கலைஞரை அழைத்து தான் உபசரித்ததையும், அவர் எதையெல்லாம் விரும்பி சாப்பிட்டார் என்பதோடு, அதை எடுத்து தனக்கே ஊட்டிவிட்டதாகவும் சொல்லி உள்ளார். தினமணிக் கதிரில் சாவிக்கு வேலை போனதும் கலைஞரிடம் வந்து உதவி கேட்டதில் அவருக்காக உருவானது தான் குங்குமம் வார இதழ்! கலைஞரிடம் காட்டிய நெருக்கத்தின்  மூலம் திமுக அமைச்சர்கள் பலரிடமும் ஏகப்பட்ட ஆப்ளிகேஷன்களை நிறைவேற்றிக் கொண்டவர். “இப்படியாக கலைஞர் ஆட்சியில் தனக்கும், தன்னைச் சார்ந்தவர்களுக்கும் ஏகப்பட்ட காரியங்களை சாதித்துக் கொண்டவர் சாவி” என்று மூத்த பத்திரிகையாளர்கள் பலரும் சொல்வார்கள்!

இவர்களை எல்லாம் விஞ்சியவர் மணியன். இவர் எம்.ஜி.ஆரிடம் மிகுந்த நெருக்கம் பாராட்டி ஆனந்த விகடனிலும், இதயம் பேசுகிறது இதழிலும் அவ்வளவு அதிகமாக எழுதியுள்ளார்! தனக்கும், எம்.ஜி.ஆருக்குமான நெருக்கம் குறித்து வண்டிவண்டியாக எழுதியுள்ளார். இதன் மூலம் எம்.ஜி.ஆர் ஆட்சியில் ஒரு ‘பவர்புல் அதிகார மையமாகவே’ இருந்தார் எனக் கேள்விப்பட்டுள்ளேன். மணியன் எழுதியதையெல்லாம் இன்றைய தலைமுறை படிக்க நேர்ந்தால், மணியனை கிழித்து தொங்கவிட்டு இருப்பார்கள்!

இதோ இன்றைக்கு வைத்தியநாதன் தினமணிக் கதிரில், ‘பிரணப்தா என்கிற மந்திரச் சொல்’ என 160 வாரங்களுக்கும் மேலாக எழுதி வருகிறார். இதில் இவருக்கும் பிரணாப் முகர்ஜிக்கும் இருக்கும் நெருக்கத்தை மட்டுமின்றி, வட நாட்டின் பிரபல அரசியல்வாதிகள் பலரிடமும் தனக்கு இருக்கும் நெருக்கத்தை மிகைப்படுத்தி இஷ்டத்துக்கு கதைவிட்டுக் கொண்டிருக்கிறார். அவர்களில் சிலர் உயிருடன் இல்லை. உயிருடன் இருப்பவர்கள் பலருக்கு தமிழ் தெரியாது. ஆகவே, தான் விரும்பிய வகையில் எல்லாம் கதைவிட்டுக் கொண்டிருக்கிறார்.

இவர்  ‘நியூஸ் கிரைப்’ என்ற பெயரில் ஒரு நியூஸ் ஏஜென்ஸி நடத்திய போது சூர்யா என்ற இந்தி பத்திரிக்கை ஒன்றுக்கு ஜெயலலிதாவை பேட்டி எடுத்தது போல தானே கற்பனையாக பேட்டியை சிருஷ்டித்து எழுதி அனுப்பியதில் அது பிரசுரமாகிவிட்டது! அதை யாரோ ஜெயலலிதா கவனத்திற்கு கொண்டு வந்துவிட்டனர். ஜெயலலிதா அந்த பத்திரிகைக்கு, ‘என்னை சந்திக்காமலே எழுதப்பட்ட பேட்டி இது’ என காட்டமாக கடிதமும் எழுதிவிட்டார்! அதன் பிறகு வைத்தி அந்த நியூஸ் ஏஜென்ஸியே நடத்த முடியாமல் இழுத்து மூடிப் போனதெல்லாம் பழைய கதைகள்!

இந்தக் கட்டுரையை வாசிப்பவர்கள் எல்லா பார்ப்பன எழுத்தாளர்களும், பத்திரிகையாளர்களும் இப்படித்தானோ..? என எண்ண வேண்டாம். ராஜம் கிருஷ்ணன், சூடாமணி, இந்திரா பார்த்தசாரதி, கோமல் சுவாமிநாதன், பெ.சு.மணி, சி.சு.செல்லப்பா, பி.எஸ்.ராமையா, ந.பிச்சமூர்த்தி, ஐராவதம் மகாதேவன், சுந்தர ராமசாமி.. போன்ற மதிப்புக்குரிய எழுத்தாளர்களும் அந்த சமூகத்தில் கணிசமாகவே உள்ளனர். கட்டுரையின் நோக்கம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தையே இழிவாக நோக்க வைப்பது அல்ல! அவ்வளவு ஏன்? மகாகவி பாரதியார் தானே நம்மில் பலருக்கு முன்னோடியும், வழிகாட்டியும்!

காமராஜர், டி.எஸ்.சொக்கலிங்கம்

இதே தினமணியின் முதல் ஆசிரியர் டி.எஸ்.சொக்கலிங்கம்! உண்மையிலேயே இவர் பெரிய மனிதர். இவர் காமராஜருக்கு மிக நெருக்கமாக இருந்தார்! காமராஜர் இவரிடம் ஆலோசனை பெரும் அளவுக்கு அறிவிலும், குணத்திலும் மிக உயர்ந்த மனிதராகத் திகழ்ந்தவர். ஆயினும் காமராஜருக்கும், தனக்குமான நெருக்கம் குறித்து பொது வெளியில் அவ்வளவாக காட்டிக் கொள்ளமாட்டார். தன்னுடைய நெருக்கத்தால் மக்கள் பிரச்சினைகளை காமராஜர் கவனத்திற்கு கொண்டு சென்று பல பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டவர். அதாவது ஒரு பிரபல பத்திரிகையாளரோ. எழுத்தாளரோ தனக்கு அதிகார மையங்களிடம் ஏற்படும் தொடர்பை சமூக நலனுக்கு பயன்படுத்துதல் என்பதே சரியான அணுகுமுறையாகும்!  நாம் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டியது சொக்கலிங்கம் போன்றவர்களைத் தான்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time