சென்னை மெரீனா காமராஜர் சாலையில் உள்ள தமிழக அரசுக்கு சொந்தமான பிரம்மாண்டமான விவேகானந்தர் இல்லம் தற்போது விவேகானந்தர் பண்பாட்டு மையமாக உள்ளது! ஸ்ரீராமகிருஷ்ணர் மடம் 99 வருஷத்திற்கு மிகக் குறைந்த குத்தகைக்கு எடுத்துள்ள இந்த இடம் இந்துத்துவ அரசியல் கேந்திரமாக்கப்படுவதா..?
ஆன்மீக காரியத்திற்கு பயன்படுத்துவார்கள் என நாம் நம்பிக் கொண்டிருக்கையில் அங்கே ஆர்.எஸ்.எஸ் செயல்பாடுகள் தான் அதிகம் நடக்கின்றன என நண்பர்கள் அடிக்கடி சொல்லி வந்தனர்! தமிழ்நாடு அரசின் பெரும் நிதி உதவியோடு 8000 சதுர அடி பரப்பளவில் 3 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட விவேகானந்தர் பண்பாட்டு மையத்தை அன்றைய முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலமாக 2014 ல் திறந்து வைத்தது நமக்கு நினைவிருக்கலாம்!
சகோதரி சுப்புலக்ஷ்மி அவர்களால் நடத்தப்பட்ட சாரதா வித்யாலயா இந்தக் கட்டிடத்தில் விதவைப் பெண்களுக்கான விடுதி ஒன்றை நடத்தி வந்தது. 1917 இல், இக் கட்டிடம் அரசால் வாங்கப்பட்டு 1922 வரை இந்த இடம் பெண்களுக்கான சேவை இல்லமாக செயல்பட்டு வந்தது.
1922 முதல் 1941 வரை ஆசிரியர்கள் விடுதியாகவும், 1941 முதல் 1993 வரை ஆசிரியர் பயிற்சி பெறும் மாணவர்கள் தங்கும் விடுதியாகவும் செயல்பட்டு வந்தது. அதற்குப் பிறகு இதை ராமகிருஷ்ண மடம் குத்தகைக்கு எடுத்தது. அந்த குத்தகை 2013ல் முடிவுக்கு வந்தது. அதை மீண்டும் தங்களுக்கே குத்தகைக்கு விட ராமகிருஷ்ண மடம் அகில இந்த அளவில் பெரிய அரசியல் ‘லாபி’ செய்தும், பல முன்னணி பத்திரிகைகளில் தங்களுக்கு ஆதரவாக கட்டுரைகள் எழுத வைத்தும் தமிழக அரசிடமிருந்து 99 வருட குத்தகைக்கு எடுத்துள்ளது. இதை இந்துத்துவ ஆதிக்க சக்திகள் ஆன்மீகப் போர்வையில் அபகரிக்க திட்டம் போட்டு, அதை தற்போது சாதித்தும் வருகின்றனர்! ஒரு காலத்தில் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் சஞ்சலத்திற்கே இடமில்லாத தூய துறவிகள் நடமாடினர்! மக்களிடம் அவர்களுக்கு பெரும் மதிப்பும் இருந்தது.
ஆனால், அரசியல் அதிகார அழுத்தம் காரணமாக இன்றைக்கு இருக்கும் ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடம் என்பது ஆன்மீகப் பணி, கல்விப்பணியில் முன்பு போல இல்லை! அது மத அடிப்படைவாதிகளின் கூடாரமாகி வருகிறதோ..என்ற கவலை நடு நிலையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அந்த அளவுக்கு இங்கு ஆர்.எஸ்.எஸ் காரர்களின் நடமாட்டம் பட்டவர்த்தனமாக உள்ளது. கல்விப் பணியும், ஆன்மீகப்பணியும் அதற்கு கேடயமாக பயன்படுத்தப்படுகிறதோ.. என்பது உண்மையிலேயே வருத்ததிற்கு உரியதாகும். மத்திய அதிகார மையம் இங்கேயும் தன் வேலையை காட்டிவிட்டது என்று தான் தோன்றுகிறது. நல்ல ஆன்மீக அமைப்பு முற்றிலும் நாசமாவதற்கு முன்னால் மீட்டு எடுத்தால் நல்லது. அரசியல் கலப்போ, ஒரு குறிப்பிட்ட ஆதிக்க சமூகத்தின் மேலாதிக்கமோ இன்றி விவேகானந்தர் இல்லம் அனைத்து மக்களுக்குமானதாக இருக்க வேண்டும் என்பதே நல்லோர்களின் விருப்பமாகும்.
ஆனால், ஆர்.எஸ்.எஸ்சின் அரசியல் செயல்பாடுகள், பண்பாட்டு செயல்பாடுகள் இங்கே நடப்பது ஏற்புடைதல்ல! மேலும், இராமாயண, மகாபாரத சொற்பொழிவுக்கான பஜனை மடமாகவும் இதை மாற்றிவிட்டனர்! இதையெல்லாம் செய்யத்தான் எத்தனையோ கோவில்கள், பஜனை மடங்கள் உள்ளனவே! இந்த காரியத்திற்காகவா விவேகானந்தர் கேந்திரம் பயன்பட வேண்டும்…?
சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் சொற்பொழிவை நிகழ்த்திவிட்டு திரும்பியதில் 1897 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை இந்தக் கட்டிடத்தில் தங்கியிருந்தார். 1963இல், விவேகானந்தரின் பிறந்தநாள் நூற்றாண்டு சென்னையில் கொண்டாடப்பட்ட போது அன்றைக்கு அமைச்சராக இருந்த பக்தவச்சலம் இந்த இடத்திற்கு ‘விவேகானந்தர் இல்லம்’ எனப் பெயர் சூட்டி அறிவித்த போது, யாரும் நினைத்திருக்கமாட்டோம், வருங்காலத்தில் இது ஆர்.எஸ்.எஸ் அடிப்படைவாதிகளின் கைகளுக்கு போகுமென்று!
இன்றைக்கு அங்கே என்ன நடக்கிறது என்பதற்கு இந்த போஸ்டரே சாட்சி! சர்ச்சைக்குரிய சனாதனம் குறித்தும், இந்து அற நிலையத் துறையை (இந்த விவேகானந்தர் இல்லத்தை போல) தனியார் அபகரிக்க வேண்டும் என்ற விவாதமோ, 2024ல் வரவுள்ள தேர்தலில் பி.ஜே.பி வெற்றிக்கு வியூகம் வகுக்கவோவான உரையாடல்களை இங்கே எப்படி நடத்தலாம்..? ஒரு அரசியல் நோக்கத்திற்காக செயல்படும் அமைப்பு, இந்த இடத்தை எப்படி பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது எனத் தெரியவில்லை. இது ஒரு சாம்பிள்!
Also read
இந்த மையத்தில் நடக்கும் விழாக்களுக்கு எப்படியானவர்களை அழைத்து இந்த துறவிகள் பேச வைக்கின்றனர் என்பதற்கு மேற்காணும் புகைப்படத்தில் பத்திரிகையாளர்கள் போர்வையில் உள்ள அரசியல் தரகர்கள் குருமூர்த்தி, வைத்தியநாதன், பாஜக பிரச்சாரகர் மாலன், தினமலர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உதாரணங்களாகும்.
வழக்கமான யோகா, ஆன்மீக சொற்பொழிவுகளோடு இங்கே பெருமளவு பாஜக அரசியல் ஆதரவு செயல்பாடுகள் நடப்பது வருத்ததிற்குரியது! விவேகானந்தர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மேலாதிக்கத்தை தூக்கி பிடிக்கும் இந்த மதவெறியர்களுக்கானவர் அல்ல! மக்கள் அனைவருக்கும் பொதுவானவர்! தற்போதைய தமிழக அரசு எப்படி இதை வேடிக்கை பார்க்கிறது..? மாற்றம் வருமா?
சாவித்திரி கண்ணன்
விவேகானந்தரையே சூத்திரன் என்று இகழ்ந்ததாக வாசித்திருக்கிறேன்.
இப்போது விவேகானந்தர் பெயர் மத அடிப்படைவாதிகளுக்கு பயன்படு பொருளாகவும் இது.
வழக்கம் போல் குழு அமைத்து பின் முடிவுக்கு வரும் இந்த அரசு